செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஆந்திர மாநில அரசை கண்டித்து திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் நூதன போராட்டம் வங்கியை முற்றுகையிட முயன்ற 18 பேர் கைது..

திருச்சி,
திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆந்திர அரசை கண்டித்து நூதன போராட்டம் நடத்தினார்கள். வங்கியை முற்றுகையிட முயன்றபோது 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
நூதன போராட்டம்திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை வெட்ட சென்ற தமிழக கூலி தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் நாள்தோறும் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திருச்சி புறநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினார்கள். துப்பாக்கி குண்டு பாய்ந்து உடலில் ரத்தம் வடிவது போல் சாயம் பூசியபடி நான்கைந்து பேர் தரையில் படுத்து கிடந்தனர். அதன் அருகில் நின்று கொண்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமையில் கோஷம் போட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், ஆந்திர அரசில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பாலு, குணா, அன்பழகன் உள்பட பலர் பேசினார்கள்.
18 பேர் கைதுதிருச்சி சாலை ரோட்டில் ஆந்திரா வங்கி உள்ளது. இந்த வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக புதிய தமிழகம் கட்சியினர் நேற்று மதியம் திடீர் என புறப்பட்டு சென்றனர். வங்கி முன்பு அவர்கள் வந்த போது மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர், புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக