ஞாயிறு, 24 மே, 2015

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரம் வெளியிட வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேட்டி.....


அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரம் வெளியிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று மதியம் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–
மாநாடு
தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை தாக்குவது, அவர்களுக்கு எதிராக வன்கொடுமைகளை ஏவி விடுவது போன்ற காரணங்களால் 150–க்கும் மேற்பட்ட கவுரவ கொலைகள் நடந்து உள்ளன. மத்திய, மாநில அரசுகள் இது போன்ற கவுரவ கொலைகளை தடுக்க வலுவான சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும் அரசுகள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததாக தெரியவில்லை.
எனவே இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் தெரிவிக்கும் வகையிலும், மத்திய– மாநில அரசுகளுக்கு இதை பற்றிய ஒரு சிந்தனையை தூண்டும் வகையிலும் தேசிய அளவிலான ஒரு மாநாட்டை சென்னையில் ஆகஸ்டு மாதம் 6–ந் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் நடத்த உள்ளோம்.
வெள்ளை அறிக்கை
இந்திய அளவில் 2010–ம் ஆண்டு கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை, எளிய மாணவர்களை சேர்க்க வேண்டும். கடந்த வாரம் இந்த கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.95 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே ரூ.95 கோடியை அரசு, தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கும் பட்சத்தில், எந்தெந்த பள்ளியில், எவ்வளவு மாணவர்கள், எந்தெந்த வகுப்பில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்று அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக