செவ்வாய், 5 மே, 2015

கருணாநிதியுடன் டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு அரசியல் சார்பற்ற புதிய இயக்கத்திற்கு ஆதரவு கேட்டார்..

சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, அரசியல் சார்பற்ற புதிய இயக்கத்திற்கு ஆதரவு கேட்டார்.
கருணாநிதியுடன் சந்திப்புதி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
பின்னர் வெளியே வந்த டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அண்டை மாநில பிரச்சினைதமிழ்நாடு அண்டை மாநிலங்களுடன் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. ஆந்திராவுடன் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது மற்றும் செம்மர கடத்தல் பிரச்சினைகளையும், கர்நாடகாவுடன் காவிரியின் குறுக்கே அணை கட்டும் பிரச்சினையையும், கேரளாவுடன் முல்லைப்பெரியாறு பிரச்சினையையும் சந்தித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இது தொடர்பாக போராட்டங்கள் நடத்துவதோடு விட்டுவிடுகின்றன. எனவே, தமிழர்கள் நலன் காக்க ஒருங்கிணைந்த அரசியல் சார்பற்ற அமைப்பு அவசியம் என்பதை உணர்ந்து புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.
கருணாநிதி ஆதரவுஅதற்கு ஆதரவு திரட்டும் வகையில் முதல் முயற்சியாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினேன். அவரும் இந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற இயக்கம் அவசியம் என்று கூறி என்னை பாராட்டினார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களையும் தொடர்ந்து சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளேன்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு சட்டத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அண்டை மாநில பிரச்சினைகள் மட்டுமல்லாது இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்த்தும் புதிய இயக்கம் போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பதில்களும் வருமாறு:–
தேர்தல் பற்றி பேசவில்லைகேள்வி:– தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அதுபற்றி எதுவும் பேசினீர்களா?.
பதில்:– புதிய இயக்கத்திற்கு ஆதரவு கேட்கத்தான் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தேன். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது.
கேள்வி:– புதிய இயக்கம் தொடங்குவதாக சொல்கிறீர்கள். செயல்பாடு எப்படி இருக்கும்?.
பதில்:– இந்த புதிய இயக்கத்தில் பிரச்சினைகளுக்கு சட்டப்படி தீர்வுகாண குழு அமைக்கப்படும். அவர்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
பதவி விலக வேண்டும்கேள்வி:– தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று கூறியிருக்கிறீர்களே?.
பதில்:– தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அரசு அதிகாரிகளே கீழுள்ள அதிகாரிகளை மிரட்டி தற்கொலைக்கு தூண்டுகிறார்கள். தற்போது, அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. எனவே, ஆட்சியாளர்களும், தமிழக ஆளுநரும் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக