வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

எழுதப்படாத சரித்திரம் ...{1}


‘‘மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!’’ ..எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு நன்றி .. ..தை’ முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாகக் கொண்டாடச் சொல்கிறது அரசு. நமக்கு அதில் மாறுபாடில்லை. தமிழர் வரலாற்றில் பொங்கல் நாள், உழவர் நாளாகவே இருந்து வந்திருக்கிறது. உழவர் நாள், ‘மள்ளர்’ நாள் என்றால் அது இன்னும் கூடுதல் பொருத்தமாகவே இருக்கும்.
மள்ளர்களைப் பள்ளர்கள் என்று பிற்கால, நாயக்கர் காலத்துச் சிற்றிலக்கியங்கள் சொல்கின்றன. சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இன்று பள்ளர் என்று தவறாகக் கூறப்படும் மக்களுக்கு, ‘மள்ளர்’ என்ற பெயரே இருந்திருக்கிறது. அண்மைக்காலமாக இந்த மக்கள், தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அழைக்கப்படுகிறார்கள். அதன் வரலாற்றை ஆராய்வோம். தமிழர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள். தங்கள் வாழ்நிலங்களை நான்கு வகையாகப் பிரித்தார்கள். மலை மற்றும் மலைசார்ந்த நிலப்பரப்பைக் குறிஞ்சி என்று அழைத்தார்கள். அந்த நிலத்தில் மலரும் பூக்களில் சிறப்பு பொருந்தியது குறிஞ்சிமலர். மலையைவிட்டு, வாழ்வாதாரம் தேடிக் கீழே வந்தவர்கள், காட்டுப்பகுதியைக் கண்டடைந்தார்கள். அந்நிலத்துச் சிறந்த பூவின் பெயரால் அது முல்லை என்றாயிற்று. கடற்கரை மக்கள், தங்கள் பகுதிக்கு அந்நிலத்து நெய்தலைக் கண்டு, அதற்கு நெய்தல் நிலம் என்று பெயர் கொண்டார்கள்..
காட்டை அடுத்துள்ள, சமதளமும், ஆற்றங்கரைக்கு அழகாகவும் உள்ள பூமியை அங்கே அடர்ந்து வளர்ந்துள்ள மருத நிலத்தின் பெயரால் வழங்கினார்கள். ஆற்றுப் பாசனத்தின் உதவியுடன், நெல் விவசாயத்தை மருத நிலத்துக்குக் குடி பெயர்ந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். மனித குல முன்னேற்றத்தைச் சாத்தியமாக்கியது மூன்று கண்டுபிடிப்புகள். முதலில் நெருப்பு, இரண்டாவது சக்கரம், மூன்றாவது விவசாயம். நிலத்தை உழுது நெல் விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றார்கள். விவசாயத்துக்குச் செயற்கை மற்றும் ரசாயன உரங்களைக் கொடுத்து நிலங்களை அழிக்கும் அரசுகள் அந்தக்காலத்தில் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒரு மணி நெல், பத்து மணிகளைத் தந்தது. நெல்லை, நாணயமாகத் தந்து மீன் மற்றும் பலசரக்கு வாங்கிக் கொண்டார்கள்.
நெல் விவசாயம், இன்றுபோல அறுபது, தொண்ணூறு நாள் அவசரப் பிண்டமாக இல்லை. ஏழு, எட்டு மாதப் பயிர்கள் அவை. சுமார் 35 அல்லது 40 வகை நெல் வகைகளை அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த உழவர்கள், உலகுக்கு அச்சாணிபோல இருந்து உணவு வழங்கும் பெரும்பணியைச் செய்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் அல்லது கூட்டத்துக்கும் அவர்கள் உழைப்பினால், நிறைய நெல் மற்றும் மாடுகள் இருந்தன. மாடு என்றாலே, ‘செல்வம்’ என்று அர்த்தம், தமிழில். இந்தச் செல்வம் பகைக்குக் காரணமும் ஆயிற்று. விவசாயம் மற்றும் பால்வளம், மற்றும் இறைச்சி உணவுக்குக் காரணமாக மாடு பிடிக்கும் போர்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கூட்டம், மாடு பிடிக்கும் சண்டையில் இறங்க, மறுகூட்டம் மாடு மீட்கும் போரில் இறங்க, சண்டையும், சச்சரவும், தினவாழ்க்கை ஆயிற்று. ஆகவே, உழவர்கள் தங்கள் உடமைகளைக் காத்துக்கொள்ள போர் வீரர்களாகவும் மாற வேண்டி இருந்தது. அந்த வகையில் உருவான உழவு வீரர்களே மள்ளர்கள் எனப்பட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக