வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

எழுதப்படாத சரித்திரம் ...{2}


‘‘மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!’’ ..எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு நன்றி ...மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.
‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது.
இந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். ‘மள்ளன்’ என்பதே ‘மன்னன்’ ஆகி இருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த ‘வேந்தன்’, பின்னால் வந்த மள்ளர்களால், உழவர்களால் வணங்கப்பட்டவனாகிறான். ‘வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புவை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கிறது. ‘மேய’ என்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத் (தீம்புவைஆற்றங்கரை நிலம்) தகுதியான ஆட்சியாளன் ‘வேந்தன்’ என்கிறது தமிழ் இலக்கணம். இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். ‘வேந்தன்’ என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்-. மற்றவர்கள் ‘வேளிர்’, ‘மன்னன்’, ‘கோ’ என் பெயரிலும் ‘அரசன்’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள்.
‘வேந்தர்’ என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள்.
நம் உழவர்ப் பெருங்குடியினராகிய மள்ளர்கள், தேவேந்திரர் எனவும் தேவேந்திர குல வேளாளர் எனவும் குறிப்பிடப்பட என்ன காரணம்?.....

1 கருத்து: