ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

தேவேந்திர குல மக்களை ஒன்றிணைப்பேன்: ஜான்பாண்டியன்

தேவேந்திர குல மக்களை ஒன்றிணைப்பேன்: ஜான்பாண்டியன்



கொலை வழக்கில் தண்டனை ரத்தானதைத் தொடர்ந்து ஜான்பாண்டியன் சேலம் மத்திய சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனார். அவரை வரவேற்க தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் தேவேந்திர குல பொதுமக்கள் திரண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவரும், தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்க தலைவருமான ஜான்பாண்டியன், கோவையைச் சேர்ந்த நிதிநிறுவன அதிபர் விவேக் என்கிற விவேகானந்தன் என்பவர் கடந்த 17.8.1993 அன்று படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கோவை ஆர்.எஸ்.புரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜான்பாண்டியன் உள்பட 9 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதில் முதல் குற்றவாளியான மில் அதிபர் வெங்கட்ராமன் கோவை மத்திய சிறையில் கடந்த ஆண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே போல உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் போதே பாளையங்கோட்டை சிறையில் இருந்த பிரின்ஸ்குமார் என்பவர் இறந்து விட்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 3-ந் தேதி தீர்ப்பு கூறியது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஜான்பாண்டியன் உள்பட 5 பேரை விடுதலை செய்தும், பவுன்ராஜ், குமார் என்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் தீர்ப்பு கூறியது.
ஜான்பாண்டியன் சேலம் மத்திய சிறையில் இருந்தார். அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உத்தரவு சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு கருப்பண்ணணுக்கு நேற்று வந்தது. இதையடுத்து ஜான்பாண்டியன் நேற்று காலை விடுதலை செய்யப்பட்டார். ஜான் பாண்டியன் விடுதலை ஆகும் தகவல் அறிந்து உறவினர்கள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானவர்கள் நேற்று அதிகாலை முதலே சேலம் மத்திய சிறை முன்பு குவிய தொடங்கினார்கள். நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் சிறை முன்பு திரண்டார்கள். இதனால் அந்த பகுதி போக்குவரத்து ஸ்தம்பித்து பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக ஏற்காடு ரோடு வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. வாகனங்கள் அனைத்தும் கன்னங்குறிச்சி ரோடு வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. சேலம் மாநகர போலீஸ் கமிசனர் சுனில் குமார் சிங் உத்தரவுப்படி, ஏராளமான போலீசார் மத்திய சிறை முன்பு நிறுத்தப்பட்டார்கள். அதே போல சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜான் நிக்கல்சன் தலைமையில் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சரியாக காலை 10.30 மணிக்கு ஜான்பாண்டியன் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது சிறை வாசல் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகத்தில் கோசமிட்டனர். அதே போல பட்டாசுகள் வெடித்தும், மாலைகளையும் பூவையும் தூவி அவரை வரவேற்றார்கள். ஜான் பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அவர் காரில் ஏறி சேலம் தொங்கும் பூங்கா அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சென்றார். அங்கு அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
8 ஆண்டுகளுக்கு பிறகு நான் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ளேன். சில அரசியல் நிர்பந்தங்களால் நான் பழி வாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இனி வரும் காலங்களில் எனது அரசியல் பணி சிறப்பாக இருக்கும். இங்கிருந்து நான் நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்கு சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளேன். நெல்லை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கால் வைக்க உள்ளேன். இனி மாவட்டந்தோறும் கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களையும், பொது மக்களையும் சந்தித்து அவர்களின் மேம்பாட்டிற்காக உழைப்பேன். அனைவரையும் ஒன்றிணைத்து பணியாற்றுவேன். இன்று நான் விடுதலையானால் தேவேந்திர குலத்தினர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து என்னை வரவேற்க திரண்டு உள்ளனர்.
இனி எனது அரசியல் பணி தெளிவாக இருக்கும். முதலில், தேவேந்திர குல மக்களை ஒன்றிணைப்பேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. மக்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில் எனது முடிவு இருக்கும். நான் சிறையில் இருந்த காலங்களில் என்னை பார்க்க ஏராளமானவர்கள் வந்தார்கள். நான் இல்லாமல் என் சொந்தங்கள் தவித்து போனார்கள். இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார். இதைத்தொடர்ந்து தொண்டர்கள் படை சூழ பயணத்தை தொடங்கினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக