செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
சீமானிடம் இதையா எதிர்ப்பார்த்தோம்?
முதல் முறையாக மும்பையில் சீமானை இரண்டு ஆண்டுகளுக்கு(சரியாக நினைவில்லை, மூன்று ஆண்டுகளாக கூட இருக்கலாம்) முன்பு தொலைவில் இருந்து ஒரு அரங்கில் உரையாற்றியதை கண்டேன் ,கேட்டேன்.....
“தமிழன் இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டானே, வேற்று மொழியில் பெண் கொடுத்து பெண் எடுக்க தயங்காதவன், தன் தாய்மொழி பேசும் நபர்களோடு திருமண உறவு கொள்ள தயங்குகிறானே? மொழி, இன பற்றை விட சாதி பற்று தமிழனிடத்தில் என்று ஆட்கொண்டதோ அன்றே தமிழன் வீழ்ந்தான், வந்தவனெல்லாம் ஏறி மிதித்து போய்க் கொண்டே இருக்கிறான்.”
தமிழனிடம் இருக்கும் சாதிய பிரச்சினைகளை பேச, பகுத்தறிவு சிந்தனைகளை பரப்ப இப்படியொரு ஆளா? அதுவும் திரைப்படத்துறையிலிருந்தா? என்று பிரம்மித்துதான் போனேன், எனக்கு அப்பொழுது 21 வயதுதான் இருக்கும். அதிகம் புரிதல் இல்லா நேரம், பெரியார் அப்பொழுதுதான் அறிமுகமாயிருக்கிறார். பெரியாரை அப்பொழுதுதான் படிக்க தொடங்கியிருக்கிறேன்....புரட்சிகர கருத்துக்கள் சீமானின் சிந்தையில் இருந்ததா இல்லையா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால், சொற்களில் இருந்தன.
“ புரட்சி என்பது காய்ந்த சருகு போன்றது, யார் முதலில் தீக்குச்சி ஆவது என்பதுதான் இங்கே கேள்வி.”என்று அவர் சொற்களை உதிர்த்து கொண்டே போனார். அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என்னுள் இருக்கிறது. அந்த தாக்கம்தான் பெரியார் என்னும் பெரும் தலைவனை எனக்குள் ஆழமாக விதைத்தது.....பெரியாரை படிக்க தொடங்கியது உலகத்தில் உள்ள விடுதலைச்சிந்தனைகளை தேடி தேடி படிக்க வைத்து, தேடலை விரிவுப்படுத்தியது......தேடல் தொடர்கிறது
இவரை மேடையில் பார்த்தபின்பு அவரின் சீமானின் தம்பி திரைப்படம் பார்க்க நேரிட்டது. படத்தில் மாதவன் தன்னுடைய குடும்பத்தில் வீட்டிலிருக்கும் காட்சி வந்தது, பெரியாரின் படம் வந்தது, பாரதிதாசன் படம் வந்தது, கூடவே முத்துராமலிங்கம் என்ற சாதி வெறியனின் படமும் அந்த திரைப்படத்தில் வந்தது...அதிர்ச்சியுற்றேன்...தோழர்களோடு இதை பகிர்ந்து கொண்ட பொழுது மிகவும் வருத்தமடைந்தடைந்தனர்..ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சீமானோடு அப்பொழுது தொடர்பு கொண்டு எனது தோழர் ஒருவர் கேட்டதற்கு அது பிழையாக நடந்துவிட்டது...என்று கூறியிருக்கிறார்...பேச்சுனூடாக இன்னும் சாதி வெறியை கக்கி கொண்டிருக்கும், தமிழன் என்ற உணர்வேயில்லாமல் சாதிய வெறி கொண்டு சகதமிழனை ஒடுக்கும் சாதி வெறியர்களையும் சீமான் கண்டித்ததாக தொடர்பு கொண்ட தோழர் கூறினார்....
அது தற்செயலாக நடந்தது. இனி அதை தவிர்த்து விடுகிறேன் என்று கூறியவுடன் விமர்சனங்களையும், அதன் மீதான தனது நிலைப்பாட்டையும், தவறிருந்தால் திருத்திக் கொள்ளும் மனப்பான்மையும் இவருக்கு இருக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தேன்.
அதோடு மட்டுமில்லாமல் கீற்றுவில் அவரது நேர்காணலையும் படித்தேன் அதில் சாதியை குறித்து அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுருந்தார்..
கேள்வி: தமிழ் சினிமா சாதியை எப்படி கையாளுது. சாதியை எதிர்த்து வந்த படங்கள் கூட அதைத் தீவிரமா செய்யலை. சாதியை எதிர்த்து ‘வேதம் புதிது’ன்னு பாரதிராஜா ஒரு படம் எடுத்தார். அதிலயும் கடைசியில் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்து போறமாதிரி தான் எடுத்திருப்பார்...
மார்க்சிஸ்டுகள், பெரியாரிஸ்டுகளைத் தவிர வேறு யாருக்கும் சாதியைக் கடந்து மக்களை மீட்கணுங்கிற நோக்கம் கிடையாது. இங்க சாதி, மதம்னு எல்லாம் எதுவும் கிடையாது. அது ஒரு உணர்வு அவ்வளவுதான். கடவுள், கற்பு இதெல்லாம் எப்படிக் கற்பிதமோ சாதியும் அப்படி ஒரு கற்பிதம். ஒரு உருவகம். வேதங்கள் சொல்லுது, தர்மங்கள் சொல்லுதுன்னா அதையே நாமக் கொளுத்தணும். ஆனா சாதியை அடிச்சு நொறுக்கணுங்கிற நோக்கத்தில இங்க யாரும் எதையும் படைக்கலை. அந்த உணர்ச்சிகளையும் வைச்சு காசு சம்பாதிக்கணுங்கிற நோக்கத்தில் தான் திரைப்படங்கள் படைக்கப்படுது.
கேள்வி:நீங்க சாதியைப் பத்திப் பேசறதால இங்க ஒரு கேள்வி கேட்க விரும்புறோம். முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது.?
கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கைரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்.
கீற்று நேர்காணல் இணைப்பு
அதற்கு பிறகு அவரை சமீபத்தில் விழித்தெழு இளைஞர் இயக்கத்தின் சார்பாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில்தான் அவரை சந்தித்தேன். அவரை கண்டு வியந்து போனேன், கூர்ந்து கவனித்த பொழுது தன்னலமில்லா, கள்ளமில்லா உள்ளமும் கொண்டவர் என்றே இதுவரை நினைத்து வருகிறேன். இன்னமும் குழந்தை உள்ளத்தோடு இந்தச்சமூகத்திற்கு ஏதாவது செய்துவிட முடியாதா? என்ற ஏக்கமும் அவரிடம் என்னால் காண முடிந்தது....
ஆனால்,எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் அவரின் தவறான அரசியல் நிலைப்பாடுகளை எப்படி ஆதரிக்க இயலும்......
பெரியாரின் பேரன் முத்துராமலிங்கம் என்ற சாதிவெறி பிம்பத்திற்கு சீமான் மாலை அணிவித்ததைத்தான் குறிப்பிடுகிறேன்.
ஈழத்தில் சிங்கள இனவெறி தமிழர்கள் மீது ஏவிவிட்ட அடக்குமுறைக்கு எதிராக முழங்கும் தமிழ்த்தேசியவாதிகள் தமிழகத்திலேயே சம மரியாதை இல்லாமல் சக தமிழன் சாதியின் பெயரால் மிகக்கொடுமையாக ஒடுக்கப்படும் கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பதில்லையே என்ற ஆதங்கம் எமக்கு இருந்தாலும் அதை தருணம் கருதி ஈழப்பிரச்சினையின் தற்காலத்திய முக்கியத்துவம் கருதி, குரல் கொடுக்க வேண்டிய தேவை கருதி அதைப்பற்றி விரிவாக விவாதத்திற்குள் உட்புகவில்லை...ஆனால், சாதிய ஒழிப்புதான் தமிழர்களை அணிதிரட்டும் என்பதில் மாறுபடாமல் இருந்தோம்.....
“ஈழத்தில் நடக்கும் கொடுமைக்கு தீண்டாமை கொடுமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இனியாவது உணர்வார்களா என்றால் அதுதான் நடக்கவில்லை....என்ன ஒரே வேறுபாடு..ஈழத்தில் ஒடுக்குபவன் சிங்களவன், தமிழகத்தில் தமிழன்”
ஈழக்கொடுமை கண்டாவது விழிப்புணர்வு பெற்று தமிழர்கள் சாதி வெறிக்கெதிராக வரமாட்டார்களா? என்ற ஏக்கம்தான் காரணம்..
பெரியார் திராவிடர் கழகம் “இனி என்ன செய்யப்போகிறோம்”என்ற குறுந்தகட்டை பிரதி எடுத்து மும்பையில் தமிழர்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்து வந்த வேளையில் ஒரு நபர் என்னை அணுகினார்..
“ஈழக்கொடுமையெல்லாம் சரிதான்....ஆனால், அதில் வரும் பெரியாரின் படத்தை எடுத்து விட்டு தாருங்களேன்.” என்று கூறினார். அங்கு வெளிவந்தது சாதிய திமிர் என்னும் பூனை...பெரியாரின் சாதிக்கு எதிரான கொள்கையின் வீரியம் அங்கே நினைவுக்கு வந்தது......
சாதி வெறிக்கெதிராக தமிழகத்தில் இயங்குவதற்கு பெரியார்தான் கருவி என்பதை நான் அன்று நன்கு புரிந்து கொண்டேன்...இதையே தமிழர்களோடு சமூக தளத்தில் இயங்கிய பொழுது பல நிகழ்வுகள் இதையே வலுவாக உறுதி செய்தன.
முத்துராமலிங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பது சாதிக்கு ஆதரவாக இயங்குவதாகத்தான் போய் முடியும்.என்பதையும் சேர்த்தே உணர்த்தியது...
தமிழர்களாக அணிதிரட்ட கிளம்பியிருப்பதாக கூறும் பெரியாரின் பேரனாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் சீமான் சாதி ஒழிப்பிலிருந்துதானே தொடங்கியிருக்க வேண்டும்...ஆனால், அதை விடுத்து பெரியாரை சாதி வெறி தேவர் பூசை கொண்டாட்டத்தில் கொண்டு போய் விட்டு விட்டு சாதியை தூக்கி பிடிக்கும் மக்களிடம், அவர்களிடம் வைக்க வேண்டிய நேர்மையான விமர்சனங்களை வைக்காமல் முத்துராமலிங்கத்திற்கு மாலை போட்டு வந்ததுதான் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது...
“அவர்களும் தமிழர்கள்தானே அவர்களை புறக்கணிப்பது சரியா? என்று என்னதான் சமாதானம் கூறினாலும்...” அது
“ராஜபக்சேவும், பிரபாகரனும் எனக்கு நண்பர்கள்தான்” என்று சொல்வதுபோல்தான் முடியும்..
இனத்திற்கு தலைவனாக விரும்புவன் மக்களிடம் சமரசம் செய்து கொண்டால் சமரச சாதாரண பிழைப்புவாத அரசியல்வாதிதான் ஆக முடியும், மாறாக மக்களிடம் பரப்ப வேண்டிய கொள்கைகளை பரப்புரையின் மூலமாக தம் பின்னே அணி திரள வைப்பவன்தான் நேர்மையான அரசியல்வாதியாக,இந்த இனத்திற்கான விடிவாக வர முடியும்
சீமான் செய்ய வேண்டியது தமிழர்களிடையே இருக்கும் சாதியை ஒழிப்பதற்கு களம் காண்பதுதான்..சாதி ஒழிப்பை மறந்தாலோ, சிறுது நாட்களுக்கு ஒதுக்கி வைத்தாலோ, சாதிய ஆதிக்க வாதிகளிடம் அடங்கி போனதாய்தான் முடியும்.
கால ஓட்டத்தில்
நாம் தமிழர் என்பது போலி முழக்கமாகிவிடும்...
ஏனென்றால்....சாதி ஒழியாத வரை தமிழகத்தில்
“தமிழ் தேவர், தமிழ் பறையர், தமிழ் பள்ளர், தமிழ் கோனார்,தமிழ் பிள்ளைதான் இருப்பார்களேயொழிய...”
தமிழர்களாக தமிழகத்தில் எவனும் சீமானுக்கு கிடைக்கமாட்டான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக