புதன், 11 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்

 

தூத்துக்குடி, ஜன. 11-
தமிழக தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவரும், தலித் தலைவர்களில் ஒருவருமான பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, தென் மாவட்டங்களில் பதற்றம் நீடித்துள்ளது.
தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் செவ்வாய்க்கிழமை இரவு திண்டுக்கல் – கரூர் சாலையில் நந்தவனம்பட்டியில் உள்ள தனது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும், பசுபதி பாண்டியனின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் பசுபதி பாண்டியன். அவருடைய மனைவி வழக்கறிஞர் ஜெசிந்தா பாண்டியன். திண்டுக்கல்லை சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பசுபதி பாண்டியனுக்கும் மூலக்கரை பண்ணையார் குடும்பத்தினருக்கும் பழிக்கு பழியாக நடந்த மோதல்களில் பலர் உயிர் இழந்துள்ளனர். அந்த முன்விரோதமே இப்போது பசுபதி பண்டியனின் மரணத்திற்கும் காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறு.
தூத்துக்குடி மேலஅலங்காரதட்டையைச் சேர்ந்த சிதம்பரம் மகன் பசுபதி பாண்டியன். 1990ம் ஆண்டில் அந்த பகுதியில் இரு பிரினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக 31-8-90ல் சிலுவைபட்டி மிக்கெல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதன் முதலாக பசுபதி பாண்டியன் சேர்க்கப்பட்டார்.
25-12-90ல் தூத்துக்குடி அருகே கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்ற வாலிபர் கொலை வழக்கிலும் பசுபதி பாண்டியன் பெயர் சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களிடையே பசுபதி பாண்டியன் பெயர் பிரபலமானது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பசுபதி பாண்டியன் மீது 18 வழக்குகள் பதிவாகின. இதில் 9 கொலை வழக்குகள் ஆகும். பசுபதி பாண்டியன் கடந்த 97ம் ஆண்டு தூத்துக்குடி பின்னிங் மில் தொழிற்சங்க தலைவர் பால்ராஜை கொலை செய்த வழக்கிலும் தொடர்புடையவர். மேலும் 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் இவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
1990களில் பழைய காயல் அருகே புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களும், மூலக்கரை பண்ணையார் சிவசுப்பிரமணிய நாடார் என்பவருக்கும் உப்பளத்திற்கு தண்­ர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு நடந்து வந்தது. இதில் பசுபதிபாண்டியனின் புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
மேலும் பசுபதி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் 24-1-93ல் சிவசுப்பிரமணிய நாடார் மகன் அசுபதி பண்ணையாரை கொலை செய்தனர். இவர் சுபாஷ் பண்ணையாரின் தந்தையும், வெங்கடேஷ் பண்ணையாரின் சித்தாப்பாவும் ஆவார்.
இதற்கு பழி வாங்கும் நோக்கில் 21-4-93ல் தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரத்தில் பசுபதி பாண்டியனை கொலை செய்ய முயற்சி நடந்தது.
இதில் அவரது நண்பர் பொன்இசக்கி பலியானார். படுகாயங்களுடன் பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார். 8-7-93ல் சிவசுப்பிரமணிய நாடாரை பசுபதிபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர். மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே அடுத்தடுத்து மோதல்கள் நடந்தன. இதில் இரு தரப்பிலும் பலர் உயிர் இழந்தனர்.
கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மனைவியுடன் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்த போது, எப்போதும் வென்றான் அருகே வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டதில் ஜெசிந்தா பாண்டியன் இறந்தார். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப்பின்னர் பழிக்குப் பழியாக பசுபதி பாண்டியன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது பசுபதி பாண்டியனைக் கொன்றது பண்ணையார் ஆதரவாளர்களா அல்லது வேறு குரூப்பா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தென் மாவட்டங்களில் பதற்றம்…
பசுபதி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல்லில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன். சில தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளின் மீது கல்வீசித் தாக்கப்பட்டதால் திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் பாதுகாப்பு காரணங்களுக்காக பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பேருந்து நிலையங்களில் பயணிகள் தவிக்கும்நிலை ஏற்பட்டது.
தென் மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில், பதற்றமான இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து பிரதேச பிரிசோதனைக்குப் பிறகு, பசுபதி பாண்டியனின் உடல், அவரது சொந்த ஊருக்கு இன்று காலை 11 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக