செவ்வாய், 17 டிசம்பர், 2013

தென்காசி மத மோதல்-அரசு மெத்தனம்: கிருஷ்ணசாமி

 தென்காசி: தென்காசியில் கடந்த 3 வருடங்களாகவே மத மோதல்கள் நடந்து வரும் நிலையில் அரசு மெத்தனமாக இருப்பது கண்டனத்துக்குரியது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். தென்காசியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் அகில இந்திய சமூக நீதி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தென்காசியில் கடந்த 2,3 ஆண்டு காலமாகவே தொடர்ந்து மத மோதல்கள் இருந்து வருவது வருத்தம் அளிக்கிறது. மத, ஜாதி மோதல்கள் எவ்விதத்ததிலும் சமுதாயத்திற்கு முன்னோற்றம் அளிக்காது. இரு பிரிவு மோதல்களை நிரந்தரமாக தீர்க்காமல் இந்த அரசு காவல்துறையை வைத்து தீர்க்க நினைப்பது அறிவுபூர்வமானது அல்ல. அரசின் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது. நிரந்தர தீர்வு ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்கைவில்லையெனில் புதிய தமிழகம் அந்த பணியை செய்யும். வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று கோஷமிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தென் தமிழகத்தை தேய வைத்து விட்டார்கள். தமிழகத்தில் புதிதாக 39 தொழிற்சாலைகள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் திருச்சிக்கு தெற்கே எதுவும் இல்லை. தென் மாவட்டத்தில் புகழ் பெற்ற தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க நடைபெறும் சட்ட மன்ற தொடரிலேயே அறிவிக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும். பல்வேறு வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த அரசு அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. வாக்குறுதியை அரசியல் சாசன முறைபடி நிறைவேற்ற வேண்டும். அதுதான் நாணயமான செயல். தென்காசி எம்பியாக உள்ள அப்பாத்துரை பல வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவரும் நிறைவேற்றவில்லை. விரைவில் தென்காசி மாவட்ட மக்களுக்காக மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்க உள்ளேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக