வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

எழுதப்படாத சரித்திரம் ...{3} ‘‘மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!’’ ..எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு நன்றி

.....................................யார் இந்த தேவேந்திரன்?....
உழவுக்குக் கடவுள் மழையே. தமிழ் மரபில் மழைக் கடவுளாக வேந்தன் இருந்திருக்கிறான். விவசாயம் சார்ந்த சடங்குகளுக்குக் கடவுளும் வேந்தனாகவே இருந்திருக்கிறான். ஆரியக் கலப்பு, தமிழ் பூமியில் ஏற்பட்டு இந்து மதம் கட்டமைக்கப்பட்டபோது, தமிழ் வேந்தனும், ஆரிய தேவவேந்திரனும் ஒன்றிணைக்கப்படுகிறான். தமிழ் முருகனும், வட நாட்டு சுப்பிரமணியனும் ஒன்றிணைந்தபோது, இதுவும் நடந்தது. தமிழ்க் கொற்றவை, சிவனுக்குச் சக்தியாக மாற்றப்படும்போது இதுவும் நடந்திருக்கிறது. ஆக, மள்ளர்களான உழவர்களுக்கு ஆதிக் கடவுள் வேந்தன், பிறகு தேவேந்திரானாகி(தேவ+ இந்திரன்), அவன் வெள்ளாமைக்குக் கடவுளாகி, வெள்ளாமை செய்த உழவர்களான மள்ளர்கள், அவன் நினைவில் தேவேந்திர குல வெள்ளாளராகிறார்கள். பெயர்கள் எதுவானாலும், அவர்கள் பூர்வ, பழைய தமிழர்கள். உழவர்கள். வேளாண்மை செய்தவர்கள்.
வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவே, அவன் மழை தந்தமைக்காகப் போகித் திருநாள் கொண்டாடுகிறோம். ‘
மறுநாள் பொங்கல் என்று இன்று நாம் சொல்லும் நாள், அறுவடை நாள் ஆகும். புதிய மகசூலைப் பொங்கலாக்கி, சூரியனுக்குப் படைக்கும் நாள், பொங்கல் நாள் ஆகும். ஒரு பக்கம் அறுவடை மறுபக்கம் புது உழவுக்குத் தொடக்க நாளும் ஆகும். வேந்தன் நெறிப்பட்ட தமிழர் மழை வணக்கமும், வேத நெறிப்பட்ட இந்திர வணக்கமும் ஒன்றையொன்று கலந்து, இந்திர விழாவில் முடிந்தன. சங்க காலத்தில் அறிமுகமான இந்திரன், மரியாதைக்குரிய மழைக் கடவுளாக மாறச் சுமார் முந்நூறு ஆண்டுகள் தேவைப்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலமான 1800 ஆண்டுகளுக்குப் பிந்தைய (கி.பி.2ம் நூற்றாண்டு) கால அளவில் இந்திர வணக்கம் தமிழ்ச் சமுதாயத்தில் வேர் ஊன்றியது. இந்திரவிழா பற்றிச் சிலம்பிலும், மணிமேகலையிலும், சான்றுகள் இருக்கின்றன. மள்ளர் ஆட்சி சிறக்கவும், பசி, பிணி, பகை நீங்கவும் இந்திரனுக்குப் பலிகொடுத்துப் பூசிக்கும் வழக்கம் உருவாயிற்று. கோவலன் மாதவி பிரிவே, ஒரு இந்திர விழாவில்தான் நடந்திருக்கிறது.
சங்க காலத்துக்கும் முந்தைய தமிழ் உழவர்களாகிய மள்ளர்கள், பழந்தமிழ் வேந்தன் காலத்திய சடங்குகளை இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இது மள்ளரிய நாகரிகத்தின் ஒரு முக்கியச் செயல்பாடு. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா சுத்தமான தமிழர் சடங்காகும். வேத நெறியில் விவசாயம் சிறப்பிடம் பெற்றதாக வரலாறு இல்லை.

நாற்று நடவுத் திருவிழா மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா ஆகிய அந்தப் பிரிவுகள்.
நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.
பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது.
சரி. மிகப் பெரும் வழக்கத்திலிருந்த இந்திர வணக்கம், தமிழர் வாழ்வில் ஏன் மறைந்து போனது? சைவ, வைணவம்போல் அது நீடிக்காமைக்கு என்ன காரணம்? மேலும், நெல் விவசாயத்திற்கும் மள்ளர் என்கிற தேவேந்திரர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது-?
சரித்திரம் தொடர்கிறது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக