ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 3 நவம்பர், 2010

எழுதப்படாத சரித்திரம் - 12

தமிழர் வரலாறு பற்பல ரூபங்கள் காட்டும் மாயக்கண்ணாடியாக இருக்கிறது. ஓர் உண்மையின் மேல் விழுந்து பல பொய்கள் மறைகின்றன. ஆதாரங்கள், தகவல்கள் கிடைக்காமை காரணமாக வரலாறு புலப்படவில்லை என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கிடைத்திருக்கிற வரலாறுகூட சாதிக்கழிப்புகள், சாதி மேலாண்மை காரணமாக அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போகும் நிலைமை இன்றும் நீடிக்கிற அவலமாகத் தொடர்கிறது. ஆங்கிலேயக் கும்பனி ஆட்சியைந் எதிர்த்த தொடக்க காலப் போராட்ட வரலாற்றில் மேலெழுந்து வருகிற சில தலைவர்கள் புலித் தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்றவர்களுடன் அவர்க-ளுக்கு நிகராகத் தகத்தகாயத் தியாகங்கள் செய்து தம் உயிரையும் ஈந்து, போதிய வெளிச்சமற்றுப்போன மாபெரும் தியாக வீரர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

அவர்களில் முதலில் வருகிறவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கரின் தளபதியாக வாழ்ந்தவர் அவர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையமும் கட்டபொம்முவும் கும்பனி ராணுவத்தால் அழித்தொழிக்கப்படுவதற்கு முன்னால், அவர்களைக் காத்து அம் முயற்சியில் தம் உயிரைத் தந்தவர் சுந்தரலிங்கம். ஆதிக்க ஆங்கிலேயரை எதிர்த்து முதல் சுதந்திரப் போராட்ட முயற்சிகள், எழுச்சிகளாகவும், புரட்சியாகவும் முளைத்தது தமிழகத்தில்தான் என்பேதே உண்மையான வரலாறு.

‘சிப்பாய் புரட்சி’ என்று சொல்லப்பட்ட, இந்தியாவின் வட மாநிலங்களில் நிகழ்ந்த 1857 போரே , இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று வரலாறு தெரியாதவர்கள் (சாவர்க்கர் எழுதியதையும் சேர்த்தே சொல்கிறேன்) எழுதிய தவறுகளுக்கு மாறாக, பிரிட்டிஷ் கும்பனியை எதிர்த்த ஆதிப் போராட்டங்கள், போர்கள் தமிழ் மண்ணிலேயே நடந்துள்ளன. இந்தியாவின் ஆதிச் சுதந்திரப் போராளிகளில் ஒருவரே சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள சுவர்னகிரியில் பிறந்தவர் சுந்தரலிங்கம். தந்தை கட்டக் கருப்பணத் தேவேந்திரர். தாயார் முத்தம்மாள். சுந்தரலிங்கம் பிறந்த ஆண்டு ஏறக்குறைய 1771 என்று நம்பப்படுகிறது. மனைவி சண்முகவடிவு. தம்பதிகளுக்கு இரு மகன்கள் உண்டு. ஒரு ‘நதி நீர்ப் பங்கீட்டில்’தான் சுந்தரலிங்கத்தின் அரசியல் வரலாறு தொடங்கி இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சிக்குச் சொந்தமான ஆற்றிலோடைக் கண்மாய் நீரை எட்டயபுரத்தைச் சேர்ந்த தருவைக்குளம் கண்மாய்க்குத் திருப்ப எட்டயபுரத்து அதிகாரம் ஆற்றிலோடைக் கண்மாயின் குறுக்கே கரை எழுப்பியபோது, அதைத் தடுத்து எட்டயபுரத்தார்களை விரட்டியடித்த வீரச் செயலால் புகழடைந்தார் சுந்தரலிங்கம். பாஞ்சாலங்குறிச்சிக்கு அவர் செய்த முதல் தொண்டு அது. இதைத் தொடர்ந்து, சுந்தரலிங்கம், கட்டபொம்முவின் படைப்பிரிவில் முக்கியப் பொறுப்பில் சேர்க்கப்பட்டுத் தன் அர்ப்பணிப்பு மிக்க வீரச் செயல்களால் தளபதி என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

மதுரையை மையமாகக் கொண்டு விசாலமான தமிழ்நாடு-திருவிதாங்கூர் உள்ளிட்ட பூமியை ஆண்ட விசுவநாத நாயக்கன் (1529-1564) நிர்வாக வசதிக்காக, தமிழ்நாட்டு நிலப்பரப்பை 72 பாளையங்களாகப் பிரித்தார். அதில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி பாளையம். இப்பாளையம் கட்டபொம்முவின், ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு தோக்குலவார் பிரிவு, முன்னோர்களுக்குத் தரப்பட்டது. அந்த வழியில் வீரபாண்டிய கட்டபொம்மன் வருகிறார். இவர் காலத்தில் நிலவரி, வசூலிக்கும் பொறுப்பு ஆங்கிலக் கும்பனிக்கு வந்து சேர்ந்தது. பெரும்பாலான பாளையங்கள் ஒழுங்காகக் கப்பம் கட்டித் தம் விசுவாசத்தைக் கும்பனிக்குக் காட்டிய காலத்தில், கட்டபொம்மு கப்பப் பணம் தர மறுத்தார். மறுத்தமைக்கான காரணங்கள், ஆங்கிலேயரின் அணுகுமுறை. வரம்பு மீறிய அதிகாரக் கொடுங்கோல் முறையில் சுதேச மன்னர்கள் என்று மக்களால் கருதப்பட்ட பாளையக்காரர்கள் மேல் ஆங்கிலேயர் செலுத்திய அவமரியாதைப் போக்குகள். இரண்டாவது காரணம், ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து அரும்பிக் கொண்டிருந்த சுதந்திர உணர்வு.

கும்பனிக்கு 1972 முதலே ஆறு ஆண்டுகளாகக் கட்டபொம்மு வரிகட்ட மறுத்துக் கொண்டிருந்தார். இந்தச் சூழலில் திருநெல்வேலி, இராமநாதபுரத்தின் ஆட்சியராக 1797-ல் நியமிக்கப்பட்ட ஜாக்சன், 26.10.1797 அன்று,‘உடனடியாக வரி செலுத்த வேண்டும் என்றும், தூத்துக்குடியில் முகாம் இட்டிருந்த இராணுவ அதிகாரி டேவிட்சனுக்கு உணவுக்காக ஆடுகள் அனுப்ப வேண்டும்’ என்றும் கட்டபொம்மனுக்குத் தாக்கீது பிறப்பித்தான். கட்டபொம்மன், இதைப் புறக்கணித்தான். அடுத்து ஜாக்சன் எழுதிய, ‘பாளையம் பறிமுதல் செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்த இரண்டு கடிதத்தையும் கட்டபொம்மு கசக்கித் தூர எறிந்தான். இந்தக் காலத்தில், கும்பனிக்கு எதிராக இதர பாளையக்காரர் மனதில் சுதந்திர வேட்கை உருவாகிக் கொண்டிருந்தது. இறுதியில் கட்டபொம்மு ஜாக்சனைச் சந்திக்கப் புறப்படுகிறார். உடன் சுந்தரலிங்கமும், ஊமைத்துரையும் பாதுகாப்புக்குச் செல்கிறார்கள். பேட்டிக்கு வரச் சொன்ன ஜாக்சன், சுமார் 23 நாட்கள் 400 மைல்கள் அவர்களை அலையவிட்டு அவமானப்படுத்திக் கடைசியில் 10.9.1798 - அன்று மாலையில் சந்திக்கிறான். கட்டபொம்மனை நிற்க வைத்தே பல மணிநேரம் பேசி, அவரை மேலும் அவமானப்படுத்துகிறான். டர்ரென்று நாற்காலியை ஸ்டைலாக இழுத்துப் போட்டு சிவாஜி கணேசன் உட்காருவார். சிவாஜிதான் அமர்ந்தார். நிஜக் கட்டபொம்மு நின்றுகொண்டிருந்தார். தன்னைக் கைது செய்யும் சூழல் உருவாவதை கட்டபொம்மு உணர்கிறார். தண்ணீர் குடித்துவிட்டு வருவதாகக் கீழே வருகிறார். ஆங்கிலச் சிப்பாய்கள் அவரை மடியைப் பிடித்து இழுக்கிறார்கள். சில சிப்பாய்கள் கட்டபொம்மனையும், ஊமைத் துரையையும் நோக்கிச் சுடுகிறார்கள். கோட்டைக்கு வெளியே நின்றிருந்த சுந்தரலிங்கம், தன் வீரர்களுடன் கட்டபொம்மனைப் பாதுகாக்க வருகிறார். அப்போது ராணுவத் துணைத் தளபதி கிளார்க், கட்டபொம்மனைக் கொல்ல பாய்ந்து வருவதைக் கண்ட சுந்தரலிங்கம், தன் வாளால் அவனை வெட்டிச் சாய்த்தார்.

கட்டபொம்மு அப்போது தப்பித்தது, சுந்தரலிங்கத் தேவேந்திரரால்தான். ஓரளவு அமைதி திரும்பும் சூழ்நிலையில், எட்டையபுர நாயக்கர் கட்டபொம்மு மீது, கும்பனிக்குப் புகார்க் கடிதம் அனுப்புகிறார். கட்டபொம்முவுக்கும், எட்டப்ப நாயக்கருக்கும் முன்னரே இருந்த எல்லைத் தகராறும், எட்டப்பரின் கும்பனி விசுவாசமும் இப்படிப்பட்ட பல புகார்களைக் கொடுக்க வைத்தன. அதே காலத்தில் ஊத்துமலை பாளையக்காரர், சிவகிரிப் பாளையக்காரர் முதலான பலரும், கட்டபொம்மனின் மேல் கும்பனிக்குப் புகார் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். மற்றொரு பாளையத்தில் பிரவேசிப்பது, அழிம்பு செய்வது, பயிர்களை நாசமாக்குவது அல்லது களவாடுவது, மாடு பிடிப்பது போன்ற சின்னச் சின்ன வரம்பு மீறுதலை எல்லோருமே எல்லா பாளையக்காரர்களுமே செய்தவர்கள்தான். கட்டபொம்முவும் செய்தார். எரிச்சலடைந்த கும்பனி ஆட்சி, பாஞ்சாலங்குறிச்சியின் மேல் படையெடுத்தது.

இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றை எழுதியவர்களில், சுந்தரலிங்கத் தேவேந்திரரின் பங்களிப்பைத் தனியாகப் பிரித்து எழுதி, அவருக்குரிய மரியாதையை ஏற்படுத்திய வரலாற்று ஆசிரியர் தமிழவேள் அவர்களைப் பாராட்ட வேண்டும். ‘பாஞ்சாலங்குறிச்சி படைத் தளபதி சுந்தரலிங்கத் தேவேந்திரர்’ என்னும் பெயர் கொண்ட அவரது ஆய்வு நூல், மிகுந்த முக்கியத்துவம் உடையது. இந்த நூல் மூலம் பல மறைக்கப்பட்ட செய்திகள் வெளியாகி உள்ளன. அவைகளில் முக்கியமான ஒன்று, பாஞ்சாலங்குறிச்சிப் போரில், கட்டபொம்மனின் தோளுடன் தோளாக நின்று, கடைசிவரை அவருடன் சேர்ந்து போராடித் தம் உயிரைத் தந்தவர்கள் தேவேந்திரர்களும் பகடைகளுமே ஆவர். காலாடிகளையும், பகடைகளையும் தம் பிள்ளைகள் போலக் கருதிக் கட்டபொம்மு வளர்த்தான் என்கிற முக்கியச் செய்தியைத் தமிழவேள் பல ஆதாரங்கள் மூலம் தந்துள்ளனர். இந்தக் கட்டுரையில் பல முடிவுகளை அந் நூலில் இருந்தே நான் எடுத்துக் கொண்டேன்.

5.9.1799 -ம் தேதி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகை இடப்பட்டு அன்றே தாக்கப்பட்டது. சுந்தரலிங்கத் தேவேந்திரர் தலைமையில் காலாடிக் கருப்பத் தேவேந்திரர், வீரமல்லு நாயக்கர், கந்தன் பகடை, பொட்டிப் பகடை முதலான துணைத் தளபதிகளின் வழிகாட்டுதலில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கும்பனிப்படை வீரர்களுடன் மோதினார்கள். மிகவும் உக்கிரமாக நடைபெற்ற முதல் நாள் போரில் ஐந்து முக்கிய ஆங்கிலத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். ஆங்கிலப் பகுதிக்குப் பெரும் சேதம் விளைந்தது.

மறுநாள் 6-ம் தேதி இரவு கட்டபொம்மன், தன் தம்பி ஊமைத்துரையோடு கோட்டையைவிட்டு வெளியேறி, படை திரட்டும் பொருட்டுக் கோலார்பட்டிக்குச் செல்கிறார். மறுநாள் கோட்டை இடித்துத் தள்ளப்படுகிறது. அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.

மன்னர்கள் காலத்திலே இருந்து பாளையக்காரர்கள் வரை, ஆங்கிலேயர்கள் மற்றும் ஆதிக்கச் சக்திகளிடம் தோற்றமைக்குக் காரணம், தமிழ்நாட்டு வீரர்கள் அவர்கள் தமிழர்களோ, கம்பளத்தார்களோ யாராக இருந்தாலும் ஒழுங்கான படைப் பயிற்சியும் போதுமான ஆயுதங்கள் இல்லாமையும், ஆயுதங்கள் நவீனமானதாய் இல்லாமையும், எல்லாவற்றுக்கும் மேலே துரோகத்தாலும் வீழ்ந்தார்கள். ஆயிரக்கணக்கான தேவேந்திரர்கள், அதே அளவு அருந்ததியர்களின் வீரத்தில் பழுதில்லை. தாய் பூமிப் பற்று மற்றும் விசுவாசம் அல்லாமல் வேறு எதுவும் அவர்களிடம் இல்லை.

கோலார்பட்டியில் இருந்து கொண்டு படைதிரட்டிக் கொண்டிருந்த கட்ட பொம்மனையும் ஊமைத் துரையையும் எட்டயபுரம் படையும், ஆங்கிலேயர் படையும் சுற்றிக்கொண்டது. கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தப்பித்து வெளியேறினர். தாளாபதிப்பிள்ளை கைது செய்யப்படுகிறார். சுந்தரலிங்கம் தலைமறைவாகிறார்.

கட்டபொம்மனைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. தமிழவேள் மிகுந்த ஆவண ஆதாரங்களுடன் இக்குறிப்புகளை எழுதுகிறார். ஒற்றர்கள் மூலம் கட்டபொம்முவும், ஊமைத்துரையும் புதுக்கோட்டையில் சந்திப்பதாகத் தகவல் அறிந்த பாளர்மேன், புதுக்கோட்டை தொண்டைமானுக்குத் தகவல் அனுப்பி, கட்டபொம்மன் குழுவினரைக் கைதுசெய்ய உதவும்படிக் கேட்டுக்கொள்கிறான். சிவகங்கை வட்டத்தைச் சேர்ந்த திருக்களம்பூர் அருகில் கலியபுரம் எனும் இடத்தில் 23.9.1799 அன்று தொண்டைமான் ஆட்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை, மைத்துனர்கள் இருவர் மற்றும் மூன்று பேருடன், ஆக ஏழுபேரைக் கைது செய்கிறார்கள். 5.10.1799 அன்று அவர்கள் கயத்தாறு கொண்டுவரப்பட்டு 16.10.1799 வரை சிறையில் வைக்கப்படுகிறார்கள். 16.10.1799 அன்று காலை கட்டபொம்மு மீது விசாரணை நடத்தப்படுகிறது. தீர்ப்பை எழுதிவைத்துக்கொண்டு, விசாரணையைத் தொடங்குகிறார் பாளர்மேன். ஐந்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். ‘ஏதேனும் கூற விரும்புகிறாயா?’ என்று கட்டபொம்மனிடம் கேட்கிறான் அவன். பாளர்மேனை அலட்சியப்படுத்துகிறார் கட்டபொம்மன். வேடிக்கை பார்க்க வந்த கும்பனி விசுவாசிகளான எட்டயபுரம், சிவகிரிப் பாளையக்காரர்களை மிக ஏளனத்துடன் பார்க்கிறார். தூக்குமேடைக்கு மிகுந்த வீரத்துடன் நடந்து செல்கிறார் கட்டபொம்மன். கயத்தாறு பழைய கோட்டைக்கு எதிரே உள்ள புளிய மரத்தில், கட்டபொம்மன் தன் உயிரைச் சுதந்திரத்துக்கு விலையாகக் கொடுத்தார்.

பாஞ்சாலங்குறிச்சி போரின் அடுத்தகட்டம், ஊமைத்துரையோடு ஆரம்பமாகிறது. உண்மையில் இந்தக் காலகட்டத்தில் கதாநாயகன் சுந்தரலிங்கத் தேவேந்திரன்தான். பாளையங்கோட்டைச் சிறையில் அகப்பட்டு, தூக்குக்குக் காத்திருந்த ஊமைத்துரையையும் மற்றும் உள்ள பாஞ்சை வீரர்களையும் மிகப் பெரிய சாகசம் செய்து தப்பிக்கச் செய்தவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். அந்த வீரம் செறிந்த வரலாற்றை அடுத்துக் காண்போம்.

-சரித்திரம் தொடர்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக