ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

பரமக்குடி படுகொலைகள் : உண்மையறியும் குழுவினரின் அறிதல்கள்

(பரமக்குடி படுகொலைகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்ட ஓவியர் சந்துரு, பேராசிரியர்கள் டி.தருமராஜன், சி.லட்சுமணன், அன்புச்செல்வம், ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்கள் யாழன் ஆதி, ஆதவன் தீட்சண்யா, யுவபாரதி, கவின்மலர், சந்திரா, முத்துக்கிருஷ்ணன், ஜெகன்னாதன், வழக்குரைஞர்கள் பால்ராஜ், பகத்சிங், ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர்கள் பிரேமா ரேவதி, வையவன் உள்ளிட்ட உண்மை அறியும் குழுவினரின் அறிதல்களின் (Findings) அடிப்படையில்...)
2011 செப்டம்பர் 11ம் நாள் பரமக்குடியில் காவல்துறை நிகழ்த்திய கலவரத்தினை முழுமையாக ஆராய்வதற்காக கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் பரமக்குடியில் பாதிக்கப்பட்ட கிராமங்கள், பாதிக்கப்பட்ட மக்கள், அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்துத் திரட்டிய செய்திகளின் அடிப்படையில் கீழ்கண்ட தரவுகளும், பரிந்துரைகளும் முன் வைக்கப்படுகின்றன.
21.09.11 காலை 11 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பிற்காக வெளியிடப்படும் சுருக்கமான அறிக்கை இது. பரமக்குடியில் காவல்துறை நடத்திய வன்முறை குறித்து ஊடகங்களும், அரசாங்கமும் வெளியிட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை அல்லது மேலோட்டமானவை என்பதை எங்களின் ஆய்வின் மூலம் கண்டோம். ஜான்பாண்டியன் அவர்களைக் கைது செய்ததால் அவரது ஆதரவாளர்கள் 1000 பேர் சேர்ந்து மறியல் செய்து போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு செய்து கலவரங்களில் ஈடுபட்டனர் என்று கூறுவது முழுக்க கட்டுக்கதை கற்பனை என்பதை நேரடியான சாட்சியங்கள் (மக்கள், உள்ளூர் தலித் அமைப்புகள், வீடியோ மற்றும் புகைப்பட சாட்சியங்கள்) மூலம் அறிந்தோம். ஜான் பாண்டியனை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சுமார் 20லிருந்து 30 பேர் மட்டுமே. ஆர்ப்பாட்டம் நடக்கும்போது அஞ்சலி செலுத்தும் பல்வேறு அமைப்பினர் வாகனங்களில் சென்றும் வந்தும் கொண்டிருந்தனர். அதேபோல் இம்மானுவேல் குரு பூஜைக்காக போக்குவரத்து வேறுபாதையில் திருப்பிவிடப்பட்டு குறிப்பிட்ட அச்சாலை குருபூஜைக்கான பயன்பாட்டில்தான் இருந்து வந்தது. எனவே அன்றைக்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பெரும் திராளனவர்கள் என்று சொல்வதோ, போக்குவரத்திற்கு இடையூறு செய்தவர்கள் என்று கூறுவதோ காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்த வலிந்து சொல்லப்படும் பொய் என்றே அறிகிறோம். மறியல் செய்தவர்களைக் கலைப்பதற்கான முன்னெச்சரிக்கை சமிஞ்க்ஞைகள் எதையும் செய்யாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதை களத்தரவுகள் நிரூபிக்கின்றன. முதல் சூடு நெற்றியை நோக்கியே செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான உடல்களில் குண்டு காயம் இடுப்புக்கு மேலேதான் உள்ளது. காலை சுமார் 11.30 மணியளவில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதும் கூட்டம் சிதறியது. ஆனால் மாலை 5 மணி வரை காவல்துறை துப்பாக்கி சூட்டை மீண்டும் தனித்த முறையில் நடத்தியிருக்கிறது. அதில் மறியலோடு தொடர்பில்லாமல் கையில் கிடைப்போரையெல்லாம் சுட்டதோடு, அவர்களை பிடித்து வந்து கடுமையாகத் தாக்கவும் செய்துள்ளனர் (வீடியோ ஆதாரம்) இவ்வாறு மாலை 4 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்த தீர்ப்புக்கனி என்ற டிப்ளமோ படித்த 21 வயது இளைஞரைப் பிடித்து அடித்தே கொன்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
ஊடகங்களில் வெளியானது போல் காவல் துறையினரது வஜ்ரா வாகனம் பிற வாகனங்களும் மக்களால்தான் கொளுத்தப்பட்டன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. தங்களது துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்த விரும்பிய காவல் துறையினரே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்பதைப் பலரின் சாட்சியங்கள் மூலம் சந்தேகமாக கருதுகிறது. ஏனெனில் வஜ்ரா வாகனம் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் மக்கள் சிதறி ஓடிவிட்டதால் முழுக்க முழுக்க காவல்துறை கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதை தக்க சான்றுகள் மூலம் அறிகிறோம். சட்டபேரவையில் முதலமைச்சரும், ஊடகங்களும் தெரிவித்ததைப் போல இது இனக்கலவரம் அல்ல. மாறாக எளிமையாக கையாண்டிருக்கக் கூடிய விசயத்தை சிக்கலாக மாற்றிய காவல்துறையின் வன்முறை என்றே சொல்ல முடிகிறது. ஒடுக்கப்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களின் அரசியல் எழுச்சியை மட்டுப்படுத்துவது அதன் மூலம் இம்மானுவேல் குருபூஜைக்காக திரளும் அந்த வகுப்பார் மீது சாதிக் காழ்ப்பு கொண்டு செயற்படும் ஆதிக்க வகுப்பினரைத் திருப்திபடுத்துவது என்பதே அரசாங்கம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் நோக்கம் என்பதை அறிக்கையின் மூலம் தெரிகிறது. துப்பாக்கிச் சூட்டிலும், காவல்துறையின் தாக்குதலாலும் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை. உரிய சிகிச்சையும் உடனடியாக அளிக்கவில்லை. தாக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய தகவல்களை அளிக்கவில்லை என்று அலைக்கழிக்கப் பட்டுள்ளனர், ஒருவரை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அறியாமலேயே பிணவறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூடு, தாக்குதல் போன்றவற்றோடு நில்லாத காவல்துறை பல்வேறு கிராமங்களிலுள்ள தலித்துகள் மீது பொய் வழக்குகள் புனைந்து அவர்களை கைது செய்யத் தேடிக் கொண்டிருப்பதால் எந்த கிராமத்திலும் இப்போது ஆண்கள் இல்லை. பெண்களும், குழந்தைகளும் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதை எங்கள் குழுவினர் அறிந்தோம். தலித் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும் பொருட்டு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எச்.பரளை என்ற கிராமத்தில் 18.09.2011ம் நாளில் பயிற்சி என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட போலீசார் தெருவுக்குள் இறங்கி, கற்களை வீசுதல், டயர்களை எரித்தல், இரு தரப்பு மோதல் என்றெல்லாம் இரண்டு மணி நேரமாக முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இருந்த நிலையில் அச்சமூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறையாளர்கள் சுட்டதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் சுடப்பட்ட பேரில் ஒருவர் கூட ஜான்பாண்யன் ஆதரவாளர்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டோர் மற்றும் காயமுற்றோர் குறித்த முழுமையான தகவல்களைச் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கோ பத்திரிகைகளுக்கோ இதுவரை காவல்துறை அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கவில்லை. மாறாக அலைக்கழிப்பை ஏற்படுத்துகிறது. கலவரத்திற்கு காரணமாக தமிழக அரசு கூறும் பள்ளப்பச்சோரி சம்பவம் முழுக்க இட்டுக்கட்டப்பட்டது. அச்சம்பவத்திற்கும் பரமக்குடி வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே எம்குழுவின் ஆய்வு. பள்ளப்பச்சேரியில் தேவரை இழிவுப்படுத்தி எழுதியதாக கூறப்படுவதற்கும், பழனிக்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை இழிவு படுத்தி எழுதியதையோ, எழுதியவரையோ கண்ணுற்றவர் எவருமில்லை. மேலும் எழுதியதாகக் கூறப்படும் இடம் முழுக்க முழுக்க தேவர் வகுப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள இடம். எனவே இச்சம்பவத்திற்கும் பரமக்குடி வன்முறைக்கும் தொடர்பில்லை. ஜான்பாண்டியனை தக்க பாதுகாப்போடு குருபூஜைக்கு காவல்துறையினர் அழைத்து வந்திருக்க முடியும்.
பரிந்துரைகள்
1. காவல்துறையின் தாக்குதலால் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் வழக்குகளுக்கு பயந்து மருத்துவமனையில் சேர்ந்து உரிய சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். எனவே தலித்துகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். 2. தாக்குதலில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கு பதிவு செய்தால் அதை SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு மாற்றி பாதிக்கப்பட்டோருக்கு அதனடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும். 3. இறந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் நிவாரணமும், தகுதியானோருக்கு தகுதியான அரசுப் பணிகளையும் வழங்க வேண்டும். 4. இத்தாக்குதல் குறித்து விசாரிக்க அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. எனவே சி.பி.ஐ விசாரணை வேண்டும். 5. விரிவான பொது விசாரணை வேண்டும்.

வியாழன், 29 செப்டம்பர், 2011

மாவீரர் இம்மானுவேல் சேகரனின் குருபூஜையில் நடந்தது என்ன ?

வணக்கம் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை தமிழ் மனம் மறந்து நீண்ட நாள் ஆகிவிட்டது. என்றாலும் அங்கே நடந்தது என்ன என்று அறிய விரும்புகிறவர்கள் ஒரு சிலராவது இருக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் இந்தக் காணொளி : http://youtu.be/A75mvm7NBuw

துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து உண்ணாவிரதம் நடத்த அனுமதிக்க வேண்டும்

: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தேனி பகவதி அம்மன் கோயில் மைதானம் அல்லது கனரா வங்கி அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு எஸ்.பி.யிடம் மனு அளித்தோம். ஆனால், உள்ளாட்சித் தேர்தல் விதி நடத்தையில் இருப்பதால் உண்ணாவிரதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி அனுமதி வழங்க எஸ்.பி மறுத்துவிட்டார் என்று தேனி மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் பாலு மகேந்திரன் ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானம் அருகே தர்ணா போராட்டம் நடத்த அனுமதி கோரி, தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையரிடம், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் குரு விஜயன் மனுத் தாக்கல் செய்திருந்தார். மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடத்த அனுமதி கோரி, ஆதி தமிழர் பேரவை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த 3 மனுக்களும் நீதிபதி சுதாகர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் கோவிந்தன் ஆஜராகி, “உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், ஆர்ப்பாட்டம், பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது. அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது‘ என்றார். நீதிபதி, “பேரணி நடத்தினால்தான் பிரச்னை உருவாகும், உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்கலாம். தனித்தனி இடத்தில் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக ஒரே இடத்தில் நடத்தலாம். எந்த இடத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்பதை அரசு வக்கீல், கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்‘ எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தார். ஜான்பாண்டியன் மனு விசாரணை ஒத்திவைப்பு பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூற அனுமதி கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி மாலா முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவத்து நீதிபதி உத்தரவிட்டார்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அதிகாரிகளை "சஸ்பெண்ட்' செய்யக்கோரி மனு

சென்னை: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, கலெக்டர் மற்றும் ஏழு போலீஸ் அதிகாரிகளை "சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு: ஆதி திராவிட மற்றும் சமூக அமைப்புகளுக்கு, இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பரமக்குடியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனை, ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல், மாவட்ட கலெக்டர் தடுத்தார் என்கிற தகவல் பரவியது. அவர், தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். சிலர், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மத்தியில் தடியடி நடத்தாமல், துப்பாக்கியால் சுட்டனர். ஜான் பாண்டியனின் அமைப்பு உள்ளிட்ட ஆதிதிராவிடர் அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை மதிப்பதற்குப் பதில், ஆதி திராவிட மக்களுக்கு மத்தியில் கிளர்ச்சி ஏற்பட, போலீஸ் அதிகாரிகள் தான் பொறுப்பு. அஞ்சலி செலுத்த வந்த ஆதி திராவிடர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு பேர் இறந்தனர். இவர்களின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான சம்பவத்துக்கு, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தான், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணம். அவர்களை "சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணை, நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' க்கு மாற்றப்பட்டது.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் பலி: உண்மை அறியும் குழு அறிக்கை

| | பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் பலி: உண்மை அறியும் குழு அறிக்கை பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் பலி: உண்மை அறியும் குழு அறிக்கை 21.09.2011 மதுரை கடந்த செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச்சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 6 தலித்கள் கொல்லப்பட்டும், சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது. உறுப்பினர்கள் 1. பேரா.அ.மார்க்ஸ் - மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை. 2. கோ.சுகுமாரன் - மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி 3. வழக்குரைஞர் ஏ. முஹம்மது யூசுப், NCHRO – தமிழ்நாடு 4.வழக்குரைஞர் ரஜினி, PUHR, மதுரை 5. பேரா. ஜி.கே.ராமசாமி மக்கள் ஜனநாயக மன்றம் (PDF), கர்நாடகா 6. வழக்குரைஞர் கார்த்திக் நவயான் - தேசிய தலித் முன்னணி (NDF), ஆந்திர மாநிலம் 7. ரெனி அய்லின், தேசிய ஒருங்கிணைப்பாளர், NCHRO, கேரளம் 8. பேரா.பிரபா.கல்விமணி - மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம் 9. பி.எஸ்.ஹமீது - SDPI, தமிழ்நாடு 10. பேரா.சே.கோச்சடை - மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி 11. ஏ. சையது ஹாலித் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இராமநாதபுரம் 12. மு.சிவகுருநாதன் - PUHR, திருவாரூர் 13. கவிஞர் குட்டி ரேவதி - ஆவணப்பட இயக்குநர், சென்னை 14. முனைவர் தி.பரமேஸ்வரி - கவிஞர், காஞ்சிபுரம் 15. கு.பழனிச்சாமி – PUHR, மதுரை 16. வழக்குரைஞர் முஹம்மது சுஹைப் செரீஃப் – NCHRO,கர்நாடகம் 17. வழக்குரைஞர் தய்.கந்தசாமி – தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப்பூண்டி 18. தகட்டூர் ரவி - PUHR, கல்பாக்கம் இக்குழு செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் பரமக்குடி, சுற்றுவட்ட கிராமங்கள், இராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களையும், அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து, விரிவாக அவர்களிடம் பேசி அவற்றை ஒலி - ஒலி நாடாக்களில் பதிவு செய்து கொண்டது. முதல் தகவல் அறிக்கைகள், காவலில் வைக்கப்பட்டோருடைய விவரங்கள் ஆகியவற்றையும் தொகுத்துக் கொண்டது. பின்னணி பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் முதலானவை சாதி முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள பகுதிகள். கடந்த 50 ஆண்டுகளாகவே இங்கு பல கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. 1957ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்போது கொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரன் அப்பகுதி தேவேந்திரகுல வேளாளர்களின் வணக்கத்திற்குரிய பெருந்தலைவராக (icon) உருப்பெற்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எப்படி தேவர்கள் மத்தியில் ஒரு திருஉருவாக உருப்பெற்றுள்ளாரோ அதே வடிவில் தேவேந்திரர்களுக்கு இம்மானுவேல் சேகரன் உருவாகியுள்ளார். முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை அவர்களது சமூகத்தவர்களால் அவரது பிறந்த நாளன்று பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. ‘தெய்வத்திருமகனார்’ என அவர் வழிபடப்படுகிறார். இப்பகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தேவேந்திரர்கள் வசிக்கின்றனர். கல்வி முதலிய வளர்ச்சிகளின் விளைவாக இம்மானுவேல் சேகரனின் காலம் தொடங்கி அமைப்பு ரீதியாக ஒருங்கு திரளும் போக்கு இவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. ஒடுக்குமுறையை ஏற்காத மனநிலையும், அடையாளத்தை உறுதி செய்துகொள்ளும் சுயமரியாதைப் போக்கும், அதற்குரிய வகையில் வரலாற்று உருவாக்கமும் நடைபெற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை இதுகாறும் ஆதிக்கம் செய்து வந்த சாதியினரும், அரசு எந்திரமும் சகித்துக்கொள்ளாத நிலையின் விளைவாக சமூக முரண்கள் கூர்மையடைகின்றன. கல்வி மற்றும் ஜனநாயக உணர்வுகள் வளர்வதன் ஊடாக மேலெழும் அடித்தள மக்களின் அடையாள உறுதிப்பாட்டை ஆதிக்க சமூகமும், ஆதிக்க சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அரசும் ஏற்காததன் உச்சகட்ட வெளிப்படையாகவே இன்று இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. 1987 முதல் பூ. சந்திரபோஸ் அவர்களின் தலைமையிலான ‘தியாகி இம்மானுவேல் பேரவை’ என்கிற அமைப்பு இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை (செப்டம்பர் 11) கொண்டாடத் தொடங்குகிறது. ஆண்டுக்காண்டு கூடுகின்ற கூட்டத்தின் அளவும் அதிகரிக்கிறது. 1995 - 97ல் தென்மாவட்ட சாதிக்கலவரங்கள் ஏற்படுகின்றன. ‘புதிய தமிழகம்’ கட்சியும் இங்கே வேர் பதித்துச் செயல்படத் தொடங்குகிறது. இப்பகுதியில் தேவேந்திரர்களின் முக்கியத் தலைவர்களாக ஜான்பாண்டியன் முதலானோர் உருப்பெறுகின்றனர். இதே காலகட்டத்தில் தேவர் குருபூஜை, அரசே பங்கேற்று நடத்தக்கூடிய விழாவாக மாறுகிறது. 2007ல் தேவருடைய மறைவின் 50வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்திற்கு அருகில் வசித்துக் கொண்டிருந்த சுமார் 100 தேவேந்திரர்களின் குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அரசே முன்னின்று இதைச் செய்தது. இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளும் இதேபோல பெரிய அளவில் கொண்டாடப்படுவதை ஆதிக்க மனங்கள் ஏற்க மறுத்தன. தங்களைப் போலவே தேவேந்திர குலத்தினரும் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை ‘குருபூஜை’ என அழைப்பதையும் அவர்கள் ஏற்கவில்லை. 2007 தொடங்கி ஆகஸ்ட் - செப்டம்பர் - அக்டோபர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு வன்முறையை தேவேந்திரர்கள் மீது ஏவும் போக்கு இருந்துள்ளது. 2007ல் வின்சென்ட் என்பவரும் 2009ல் அறிவழகன் என்பவரும், சென்ற ஆண்டு (2010 ஆகஸ்ட் 30 ) “குருபூஜைக்கு அணி திரள்வீர்” என சுவரெழுத்துக்கள் எழுதிய கொந்தகை அரிகிருஷ்ணனும் ஆதிக்கச் சாதியினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேவேந்திரர்களின் அரசியல் கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாள் சிறையிலிருந்த ஜான்பாண்டியனும் விடுதலையடைந்தார். இவையெல்லாம் தேவேந்திரர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை வேறெப்போதைக் காட்டிலும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு (2010) இம்மானுவேல் சேகரனின் குரு பூஜையில் பங்கேற்ற அ.இ.அ.தி.மு.க தலைவர் நயினார் நாகேந்திரன் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக நடத்துவோம் என அறிவித்ததும், 2010 அக்டோபர் 9 அன்று இம்மானுவேல் சேகரனின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டதும் தேவேந்திரர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும் நிறைந்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஆதிக்க சாதியினர் இதை மிகவும் வெறுப்புடன் பார்த்து வந்தனர். ஆப்ப நாடு மறவர் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் இவ்வாறு இம்மானுவேல் சேகரனின் குருபூஜை முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்குச் சமமாக மேலெழுந்து வருவதைத் தடுக்க வேண்டுமென கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. பூலித்தேவனுக்குச் சமமான மன்னராக ஒண்டி வீரனை அருந்ததியர்கள் முன்னிறுத்துவதை நடராஜன் (சசிகலா) முதலானோர் கண்டித்து வருவது இத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது. இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 9ம் தேதியன்று கமுதிக்கு அருகில் உள்ள மண்டல மாணிக்கம் கிராமத்தை ஒட்டிய பள்ளப்பச்சேரி எனும் தலித் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற 16 வயது தேவேந்திரர் குலச் சிறுவன் கொடுமையாக வெட்டிக் கொல்லப்பட்டான். இது தொடர்பாக தேவர் சாதியைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜான்பாண்டியன் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார். இதே நேரத்தில் (செப்டம்பர் 7 ) அரசுப் போக்குவரத்து கழக பட்டியல் சாதித் தொழிற்சங்கத்தினர் “தேசியத் தலைவர் தெய்வத் திருமகனார்” என இம்மானுவேல் சேகரனை விளித்து, பிளக்ஸ் போர்டு ஒன்றை பரமக்குடி நகரத்தில் வைத்தனர். உடனடியாக இதனை எதிர்த்து ‘மறத்தமிழர் சேனை’ என்கிற அமைப்பும் தேவர் சாதியைச் சேர்ந்த வழக்குரைஞர்களும் களம் இறங்கினர். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர்.தெய்வத்திருமகனார் என்கிற அடைமொழியைத் தேவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இம்மானுவேல் சேகரனுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் புகார் செய்தனர். இது பட்டியல் சாதியினரின் சட்டப்பூர்வமான உரிமை என்று கூறி பாதுகாப்பளித்திருக்க வேண்டிய ரெவின்யூ நிர்வாகமும், காவல் துறையும் பட்டியல் சாதி அமைப்பினரை வரவழைத்து, அந்த ஃப்ளக்ஸ் போர்டிலுள்ள இவ்வார்த்தைகளை நீக்க வேண்டுமென வற்புறுத்தின. அவர்களும் பணிந்து அச்சொற்களை நீக்கினர். இது தேவேந்திரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தவே தெய்வத் திருமகனார் என இம்மானுவேல் சேகரனை விளித்து பல பிளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் நிறுவினர். இதைக் கண்டு இப்போது ஆதிக்க சாதியினர் மட்டுமல்ல, காவல் துறையும் அரசு நிர்வாகமும் சேர்ந்து ஆத்திரமடைந்தது. பரமக்குடியிலுள்ள எந்த ஃப்ளக்ஸ் போர்டு அச்சகமும் இதுபோன்ற ஃப்ளக்ஸ் போர்டுகளை அச்சிடக் கூடாதென காவல்துறை மிரட்டியது. இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையில் முரண்பாடு எழுந்து, துப்பாக்கிச் சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பலியாகவும், ஏராளமானோர் படுகாயமடையவும் நேரிட்டது. செப்டம்பர் 11 துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் அறிந்த உண்மைகள் 1. துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி துப்பாக்கிச் சூட்டை விடவும் கொடுமையான மொழியில் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா இரண்டு தவறான தகவல்களைக் கூறியுள்ளார். அவை: (அ) முத்துராமலிங்கத் தேவரை இழிவு செய்து மண்டல மாணிக்கம் கிராமச் சுவற்றில் எழுதியதாலேயே பழனிக்குமார் கொல்லப்பட்டான் என்றது. இது உண்மையல்ல. மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஒரு ஊர். இதன் காரணமகவே இந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயில்கிற தேவேந்திரர் குலப் பிள்ளைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்கின்றனர். 2010-11 கல்வியாண்டில் மண்டல மாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 28 தலித் பிள்ளைகளில் இவ்வாண்டு 23 பேர் இவ்வாறு டி.சி. பெற்றுச் சென்றுள்ளனர். இக்கிராமத்திற்குள் தலித் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக உலவக்கூட முடியாத நிலையில் வேற்றூரில் படிக்கக்கூடிய 16 வயது சிறுவன் பழனிக்குமார் அங்கு சென்று ஏழரை அடி உயரமுள்ள ஒரு சுவற்றில் தேவரை இழிவு செய்து எழுதினான் என்று சொல்வதை யாரும் ஏற்க இயலாது. (ஆ) ஜான் பாண்டியன் இந்த கிராமத்திற்கு படை திரட்டிச் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தது என்பது முதல்வர் சொன்ன இரண்டாவது பொய். ஜான் பாண்டியனைப் பொருத்தமட்டில் அன்று தூத்துகுடியில் நடைபெற்ற ஒரு பூப்பு நீராட்டு விழாவிற்கு வருகிறார். இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அவர் செல்லக்கூடாதென இராமநாதபுரம் ஆட்சியர் தடையுத்தரவு இட்டதை அறிந்து அவர் திரும்பவும் திருநெல்வேலி செல்கிறார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சிப் பள்ளியில் வைக்கப்படுகிறார். எவ்வகையிலும் நிர்வாகம் மற்றும் காவல் துறையின் உத்தரவுகளை மீறுவது என்கிற முனைப்பு ஜான்பாண்டியனிடம் இருக்கவில்லை என்பதே உண்மை. தடையை மீறி அவர் படைதிரட்டிச் சென்றதாக முதல்வர் கூறியுள்ளது, அதிகாரிகளின் கூற்றை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டதையே காட்டுகிறது. 2. செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு முழுக்க முழுக்கக் காவல் துறையின் திட்டமிட்ட செயலாகத் தெரிகிறது. தேவேந்திரர்களின் ஓர் அடையாளத் திருவிழாவாக மாறிப்போன ஒரு நாளில், அஞ்சலி செலுத்த வந்த அவ்வினத் தலைவர் ஒருவரைத் தடுத்தது ஒரு முட்டாள்தனமான செயல் மட்டுமல்ல; கலவரத்தைத் தூண்டக்கூடிய செயலும் கூட. தவிரவும், தடுத்தவுடன் பணிந்து திருப்பியவரைக் கைது செய்து, இது குறித்த செய்தி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மத்தியில் பரவக் காரணமாக இருந்தது இன்னொரு மிகப்பெரிய வன்முறையைத் தூண்டும் செயலாக அன்று அமைந்துள்ளது. 3. டி.ஐ.ஜி சந்தீப் மிட்டல், ஐந்து முக்கில் பொறுப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை அடையாறு காவல் துறை ஆணையர் செந்தில்வேலன், பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் அன்று தேவேந்திரர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாடம் புகட்டியே தீரவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்து நின்றதாகவே தெரிகிறது. தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைத் தலைவர் பூ.சந்திரபோஸ் அவர்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன் அதிகாரிகளை அணுகி ஜான் பாண்டியனை அன்று கைது செய்தது நல்லதல்ல எனவும், அவரை விடுதலை செய்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிய போது, “சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேச வேண்டாம்; முதலில் அவர்களைக் கலைந்து போகச் சொல்லுங்கள்” என சந்தீப் மிட்டல் கூறி எந்தவித சமாதானத்திற்கும் வாய்ப்பளிக்காமல் நடந்துள்ளார். 4. , ஐந்து முக்கில் அன்று குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினரின் எண்ணிக்கை சுமார் 2000 என நேரில் பார்த்த பலரும் எங்களிடம் கூறினர். சாலை மறியலுக்கு அமர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 தொடங்கி அதிகபட்சமாக 200 அல்லது 300 என்ற அளவிலேயே இருந்துள்ளது. கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து அவ்வழியே போக்குவரத்து முன்னதாகவே தடை செய்யப்பட்டது என்பதை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராயே எங்களிடம் ஒத்துக்கொண்டார். தவிரவும் அவ்வழியே இதர மக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வரவும் அவ்வழியே வந்த வாகனங்கள் சென்று வரவும் சாலை மறியலால் எவ்விதத் தடையும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 2000 ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் கூடியிருந்த 200 மக்களை, அவர்கள் உண்மையிலேயே கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டிருந்தால் கூட இலேசான தடியடி அல்லது கண்ணீர்ப்புகையைப் பிரயோகித்துக் கலைத்திருக்க முடியும். ஆனால் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச்சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்றுள்ளனர் சந்தீப் மிட்டல், செந்தில்வேலன், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இருந்த காவல் துறையினர். 5. செந்தில் வேலன் ஐ.பி.எஸ் ஏற்கனவே இதே பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர். அவர் இங்கு பணியாற்றியபோது இதேபோல இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை நியாயமற்ற முறையில் கைது செய்து (2008 செப்டம்பர் 11) தலித் விரோத அதிகாரி என்கிற பெயரை ஈட்டியவர். இவரை அடையாறில் இருந்து இங்கு கொண்டு வந்து அன்றைய தினத்தில் ஐந்து முக்கில் நிறுத்தியதும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகவே தெரிகிறது. 6. காவல் துறையின் ‘வஜ்ரா’ வாகனத்தைக் கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வதையும் நம்ப இயலவில்லை. ஐந்து முக்கில் சாலை மறியல் செய்து கொண்டிருந்தவர்களைக் கலைப்பதற்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட காவல் துறையினர் மதுரை- இராமநாதபுரம் சாலையில் நீளவாக்கில் நின்றிருந்தனர். தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டவுடன் மக்கள் எதிரே உள்ள முதுகுளத்தூர் சாலையில் ஓடுவது மட்டுமே அன்று சாத்தியமாக இருந்தது. இந்நிலையில் காவல் துறை அணிவகுப்பிற்குப் பின்னால் வந்து நின்ற வஜ்ரா வாகனத்தை கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வது ஏற்கத்தக்கதாக இல்லை. 7. துப்பாக்கிச் சூட்டின்போது அங்கு நின்று நெற்றிப்பொட்டில் குண்டடிபட்டு, இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணிக்கம், குண்டடிபட்டு இறந்த ஒருவரை தூக்கிச் சென்று காப்பாற்ற முயன்ற மணிநகர் அம்பேத்கர் இளைஞர் மன்றச் செயலாளர் சுரேஷ், கடுமையாக அடிக்கப்பட்டு இன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலரும் எம்மிடம் நேரில் கூறியதிலிருந்து, அன்று எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி தண்ணீர் பீய்ச்சியடித்தல், கண்ணீர்ப்புகை பிரயோகம் முதலிய முன் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் திடீரென்று துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். அதே நாளில் மதுரை சிந்தாமணி அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து இன்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்களால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 19 வயதான டி.ஜெயபிரசாந்தும் அவ்வாறே கூறினார். துப்பாக்கிச்சூடு நடந்து ரொம்ப நேரத்திற்கு பிறகு உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த செய்தி மூலமாகவே தான் அதைத் தெரிந்து கொண்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல நிமிடங்கள் கழித்தே தானும் தெரிந்து கொண்டதாகத்தான் இராமநாதபுர மாவட்ட ஆட்சியரும் எங்களிடம் தெரிவித்தார். 8. துப்பாக்கிச் சூட்டையும் தடியடியையும் மேற்கொண்ட காவல் துறையினரும் அதிகாரிகளும் கடும் தலித் விரோதப் போக்குடன் இருந்துள்ளனர். சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய வண்ணமே அவர்களை அடித்தும் சுட்டும் வீழ்த்தியுள்ளது பற்றி எம்மிடம் பலரும் முறையிட்டனர். இது அரசு நிர்வாகத்தின் மேல்சாதி ஆதரவு மனப்பான்மை, தலித் விரோதப் போக்கு, தலித்கள் என்றாலே கலவரம் செய்யக்கூடியவர்கள் என்கிற எண்ணத்துடன் அவர்கள் செயல்படுவது ஆகியவற்றிற்குச் சான்றாக உள்ளது. 9. துப்பாக்கிச் சூட்டில் பல்லவராயனேந்தல் கணேசன் ( 55), வீராம்பலைச் சேர்ந்த பன்னீர் செல்வம் ( 50), மஞ்சூரைச் சேர்ந்த ஜெயபால் ( 19), கீழ்க்கொடுமாநல்லூர் தீர்ப்புக்கனி ( 25), காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்த முத்துகுமார் ( 25), காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ( 55) ஆகிய ஆறு பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கணேசன், வெள்ளைச்சாமி, ஜெயபால் ஆகிய மூவரின் இல்லங்களுக்கும் சென்று அவர்களது உறவினர்களைச் சந்தித்தோம். இவர்கள் அனைவருமே அந்த நேரத்தில் அங்கு வந்து சிக்கிக் கொண்டவர்களே அன்றி, அஞ்சலி செலுத்தும் நோக்குடன் வந்தவர்களோ ஜான் பாண்டியனின் அமைப்பைச் சேர்ந்தவர்களோ அல்ல. கணேசன் தன் மகளின் திருமண அழைப்பிதழை விநியோகிக்கச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைக் கலகம் செய்ய வந்தவர்கள் என காவல் துறை கூறுவதை ஏற்க இயலாது. பெரும்பாலான துப்பாக்கிச் சூடு இடுப்புக்கு மேலேயே நடத்தப்பட்டுள்ளது. மாணிக்கம் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டுள்ளார். 10. சுடப்பட்டவர்களில் சிலர் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இன்று இறந்து போயுள்ள தீர்ப்புக்கனி உயிரிருக்கும் போதே பிணவறையில் கொண்டுவந்து போடப்பட்டுள்ளார். பிணவறையில் உயிருடன் ஆட்கள் இருப்பதை அறிந்து புகார் செய்தபின் உயிருடன் இருந்த குமார் என்பவர் காப்பாற்றப்பட்டுள்ளார். அதற்குள் தீர்ப்புக்கனி இறந்துள்ளார். தவிரவும் கொல்லப்பட்டவர்களில் குறைந்தபட்சம் இரண்டு பேரேனும் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டுப் பின்னர் சுடப்பட்டுள்ளனர் என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. வெள்ளைச்சாமியின் உடலைக் கொண்டு வந்த காவல் துறையினர் அவரின் உடலை விரைவாக எரிக்கச் சொல்லி உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களும் அச்சத்தில் அவ்வாறே செய்துள்ளனர். அவரின் உடலில் குண்டுக்காயம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை எனவும் அவருடைய உறவினர்கள் எம்மிடம் தெரிவித்தனர். இறந்துபோன ஜெயபாலின் காலிலும் கூட துப்பாக்கிக் கட்டையால் அடித்து உடைத்தது போன்ற காயம் இருந்ததாக அவரது மாமியார் குறிப்பிட்டார். இவையெல்லாம் மக்களின் சந்தேகத்தில் உண்மை இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. 11. குண்டடிபட்டு இறந்துபோன ஜெயபால் மற்றும் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயபிரசாந்த் ஆகியோருக்கு குண்டுகாயம் முதுகுப்புறத்திலிருந்தே தொடங்குகிறது. அவர்கள் தப்பி ஓடும்போது காவல் துறையினர் சுட்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது. 12. காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நெற்றியில் குண்டடிபட்ட மாணிக்கம், ஜெயபிரசாந்த் ஆகியோர் இதை எம்மிடம் கூறினார். ஸ்கேன் எடுப்பது முதலான ஒவ்வொன்றிற்கும் ஜெயபிரசாந்த்திடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. “வைகோ அய்யா தான் என் மகனின் உயிரைக் காப்பாற்றினார்” என்று அவரது பெற்றோரக்ள் எம்மிடம் புலம்பினர். நீதிமன்றத்தை அணுகி இன்று மாணிக்கம், கார்த்திக் ராஜா ஆகிய இருவரும் மதுரை அப்பல்லோவில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்... 1. சுமார் 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரை வேண்டுமானாலும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யத்தக்கதாக இந்த முதல் தகவல் அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. 1500 பேருக்கு மேல் கைது செய்ய இருப்பதாக காவல் துறை திட்டமிட்டுச் செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஊட்டுகிறது. தவிரவும், அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று பேருந்து முதலிய பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்காக கைது செய்ய ஆட்களைக் கொடுங்கள் எனவும் காவல் துறையினர் மிரட்டுகின்றனர். பரளை என்ற கிராமத்திலிருந்து வந்த நாகவல்லி, ரேணுகாதேவி உள்ளிட்ட பெண்கள் செப்டம்பர் 18ம் தேதியன்று ஒரு போலிஸ் வேனில் வந்த காவல் துறையினர் இவ்வாறு மிரட்டியதை எம்மிடம் குறிப்பிட்டனர். தவிரவும், சாதாரண உடையில் வந்த போலிசார் சீருடையில் இருந்த போலிசாரை நோக்கிக் கற்களை வீசித்தாக்குவது போல பாவனை செய்து வீடியோ படம் எடுத்ததாகவும் எம்மிடம் குறிப்பிட்டனர். நயினார்கோயில், பரமக்குடி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் இரவில் ஆண்கள் பயந்து வீட்டில் தங்காத நிலை இன்று உள்ளது. எஸ்.காவனூர் என்கிற ஊரில் இருந்த அடிப்பட்ட ஒருவரைக் காண இரவு 8 மணி வாக்கில் நாங்கள் வாகனங்களில் சென்றதைக் கண்ட அக்கிராமத்திலுள்ள அத்தனை ஆண்களும், வருவது காவல்துறையோ என அஞ்சி ஓடியதை நாங்கள் நேரில் கண்டோம். 2. தொடக்கத்தில் இரவு நேரத்தில் இவ்வாறு கிராமங்களுக்குச் சென்று மிரட்டினோம் எனவும், பின்னர் அதை நிறுத்திக் கொண்டதாகவும் எம்மிடம் விரிவாகப் பேசிய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண்ராய் கூறினார். ஆனால் மறுபடியும் பேருந்துகள்மீது கல்வீச்சுகள் நடந்ததால் அப்படிச் செய்ய வேண்டி இருந்தது எனவும், இனி அப்படி நடக்காது எனவும் அவர் எங்களிடம் குறிப்பிட்டார். 3. 21 பேர் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பலர் பிடித்துச் செல்லப்பட்டு, அடித்துப் பின்னர் விடப்பட்டுள்ளனர். மற்றபடி நகர்ப்புறங்களில் 144 தடை உத்தரவு இருந்த போதிலும் பெரிய கெடுபிடிகள் இல்லை. எங்கள் குழு சென்று வருவதற்கும், மக்களைச் சந்திப்பதற்கும் பெரிய தடை எதுவும் இருக்கவில்லை. எனினும், பெரிய அளவில் பரமக்குடி பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருப்பது, வருவோர் போவோர் அனைவரும் வீடியோவில் பதிவு செய்யப்படுவது முதலான நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது. 4. இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 இலட்சம் மட்டும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000 கொடுக்கப்பட்டுள்ளது. பலர், அந்தத் தொகை இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என எங்களிடம் குறிப்பிட்டனர். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க சார்பாக 1 இலட்சமும், காங்கிரஸ் கட்சி சார்பாக ரூ. 50,000மும் கொடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் 1. சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திப் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் தலித் விரோதப்போக்குடனும், உயர்சாதி ஆதிக்க ஆதரவுப் போக்குடனும் அது வெளிப்பட்டுள்ளது. இது தலித் மக்கள் மத்தியில் தமக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்காது என அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. முதல்வர் தம் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து, அதைத் திரும்பப் பெற வேண்டும். பாதிக்கப் பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த இது உதவும். 2. துப்பாக்கிச் சூடு குறித்து அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை வெறும் கண்துடைப்பே. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. பணியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். 3. தாக்குதல் நடத்திய போலிஸ் அதிகாரிகளிடமே புலன் விசாரணையை அளித்திருப்பது கேலிக்குரியது. சி.பி.ஐ விசாரணை ஒன்று உயர்நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். 4. சந்தீப் மிட்டல், செந்தில் வேலன், சிவக்குமார் ஆகிய காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும். 5. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வெறும் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு கேலிக்கூத்தாக உள்ளதை அரசியல் தலைவர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த இழப்பீட்டுத் தொகையை 10 இலட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். அது, சத்துணவு உதவியாளர் என்பது போன்ற வேலைகளாக அல்லாமல் வேறு உயர்ந்த வேலைகள் அளிக்கப்பட வேண்டும். 6. காயமடைந்தவர்களுக்கு அவர்களது காயத்திற்குத் தகுந்தாற்போல, குறைந்தபட்சம் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 7. தலித் கிராமங்கள் பலவும் கடுமையாக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையை நாங்கள் நேரில் கண்டோம். எடுத்துக்காட்டாக, கொல்லப்பட்ட பழனிகுமாரின் பள்ளப்பச்சேரி கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி ஏதுமில்லை. சாதி இறுக்கம் மிகுந்த மண்டல மாணிக்கம் ஊரின் வழியாகவே வெளியூர் செல்லக்கூடிய நிலை மாற்றப்பட்டு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. அரசு இவற்றில் உரிய கவனம் செலுத்த வேண்டும். 8. மண்டல மாணிக்கம் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தலித் குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்று வெளியேறுவது மிகவும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. இது குறித்த விசாரணை ஒன்றை மாவட்டக் கல்வி அலுவலரும், ஆதி திராவிட நலத்துறையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 9. பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, உளவுத்துறை ஆகியவற்றிலுள்ள அதிகாரிகளில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர், தலித்கள் எவ்வளவு பேர் என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும். இந்தத் துறைகள் ஒவ்வொன்றிலும் போதிய அளவில் இப்பகுதிகளில் தலித் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். 10. இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அல்லது பிறந்த நாளை அரசு அங்கீகரித்து விழா எடுக்க வேண்டும். இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் உள்ள சாலை அகலப்படுத்தித் தூய்மை செய்யப்பட வேண்டும். 11. அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் மத்தியில் தலித் விரோத மன நிலையும், ஆதிக்கச் சாதி ஆதரவுப் போக்கும் உள்ள நிலைக்கு எதிராக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். திருமதி. சிவகாமி ஐ.ஏ.எஸ். ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளராக இருந்தபோது, அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தலித் பிரச்சனைகளில் உணர்வூட்டுதல் என்ற பயிற்சியைத் தொடங்கினார். எனினும், அது விரைவில் நிறுத்தப்பட்டு விட்டது. அரசு இதைத் தொடர வேண்டும். அருண்ராய் போன்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமே தலித் தலைவர்கள் என்றால் ரவுடிகள் என்பது போன்ற ஒரு பார்வையும், ஆதிக்கச் சாதிக்குச் சமமாக அடித்தள மக்கள் உரிமை கோரும்போது, அது சட்டப்பூர்வமானதாக இருப்பினும் பொறுப்பற்ற செயல் என்பதாகக் கருதும் போக்கும் இருப்பது கவலையளிக்கிறது. 12. துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்துள்ளன. சாதிக் கட்சிகள், குறிப்பாக முக்குலத்தோர் சார்ந்த சாதிக் கட்சிகள் கண்டிக்காதது வருந்தத்தக்கது. துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ள அரசியல் கட்சிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த அழுத்தத்தைத் தொடர்ந்து அரசுக்கு அளிக்க வேண்டும். 13. பாதிக்கப்பட்டோருக்காக நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிவரும் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பசுமலை, ரஜினி ஆகியோரை இக்குழு பாராட்டுகின்றது. தொடர்பு முகவரி: பேரா. அ.மார்க்ஸ் 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர் அடையாறு, சென்னை - 600 020. செல்: 94441 20582 வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுப் 142, வடக்கு வெளி வீதி, 2வது மாடி, யானைக்கல் மதுரை - 625 001. செல்: 94898 71185

பரமக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை

புதுடெல்லி : பரமக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுமாறு டெல்லியில் ப.சிதம்பரத்திடம் லோக் ஜனசக்தி தலைவர் ராமவிலாஸ் பஸ்வான் மனு கொடுத்துள்ளார். மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் படுகொலைகள்

செப்டம்பர் 11 சாதி எதிர்ப்பு போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நினைவு நாளையொட்டி, இராமநாதபுரம் பரமக்குடியில் காவல்துறை பலத்த பாதுகாப்பு போடுவது வழக்கம் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்பு போடப் பட்டது. இந்த ஆண்டு காவல் துறை சட்ட ஒழங்கு காரணம் காட்டி பல கெடுபிடிகளை விதித்தனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, ராஜபாளையம் பகுதியிலிருந்து அஞ்சலி செலுத்த வருவோர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனூர் வழியாக பரமக்குடி செல்ல வேண்டும். திறந்த வாகனத்தில் செல்லக் கூடாது. பிறர் மனதை புண்படுத்தும் முழக்க எழுப்பக் கூடாது. டூவிலரில் மூன்று பேர் செல்லக்கூடாது. ஆயுதங்கள் வைத்திருக்கக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. இதை காண்காணிக்க விருதுநகர் மாவட்டத்தில் 20 இடங்களில் (போலீஸ் செக் போஸ்ட்கள்) காவல் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன சோதனையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட்டனர். கடந்த 9.9.11 அன்று இமானுவேல் சேகரன் நினைவு நாள் சுவரொட்டி கமுதி அருகே உள்ள மண்டலமாணிக்கம் பச்சேரி கிராமத்தை சேர்ந்த தங்கவேலின் மகன் பழனிகுமார்(16). இவரும் இவருடைய நண்பர் முனியாண்டியின் மகன் பழனிக்குமாரும் இரவு ஒரு மணி அளவில் சம்பவம் நடந்த பகுதியில் வந்தபோது, கடந்த 9.9.11 அன்று இமானுவேல் சேகரன் நினைவு நாள் சுவரொட்டி ஒட்டி வந்தனர் இவர்களை ஒரு கும்பல் வழிமறித்துள்ளது. அதனைக் கண்டு மு.பழனிக்குமார் தலை தெறிக்க ஓடியுள்ளார். அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவைச் சேர்ந்த அந்தக் குழு, த.பழனிகுமாரை ஆயுதங்கள் மூலம் தாக்கி கொலை செய்துள்ளது. 19.9.11 அன்று காலை த.பழனிக்குமார் மீட்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். அவருடைய உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். இருப்பினும், அதிகாரிகள் அவர்களுடன் சமரசம் பேசி, கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை அடுத்து உடலைப் பெற்றுக் கொண்டு சென்றனர். இறுதி நிகழ்ச்சிக்கு திரு. ஜான் பாண்டியன் வருவதாகவும் செய்தி பரவியது. இதனை காரணம் காட்டி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஜான் பாண்டியன் 11.9.11 அன்று காலை தூத்துக்குடியில் உள்ள தனது கட்சியின் தொண்டர் ஒருவர் வீட்டில் சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 11 மணி வாக்கில் பரமக்குடியில் நடக்கும் இமானுவேல் சேகரன் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக தனது தொண்டர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தார். வல்லநாடு அருகே ஜான் பாண்டியனும், அவரது வாகனங்களும் வந்தவரை தூத்துக்குடி மாவட்ட போலீசார் வழி மறித்தனர். அவர்களிடம் எதற்காக என்று ஜான் பாண்டியன் கேட்டபோது, நீங்கள் இன்று பரமக்குடியில் நடக்கும் இமானுவேல் சேகரன் குரு பூஜையில் செல்லுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று எடுத்துச்சொல்லி அவரையும் அவரது தொண்டர்களையும் மாவட்டத்தைவிட்டு வெளியேறாமல் வல்லநாட்டில் போலீஸ் தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் ஜான்பாண்டியன் கைதை கண்டித்து ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் பரமக்குடி ஐந்து முக்கு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்கள் மீது தூப்பாக்கி சூடு நடத்தியபின் மக்கள் காவல் துறை திருப்பி தாக்க அரம்பித்தனர் அதன் பின் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. போராட்டம் கலவரமாக மாறியது. போலீசார் தொடர்ந்து தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதனால் நகர் முழுவதும் பெரும் கலவரமாக மாறியது. இதில் 6 தாழ்த்தப்பட்ட மக்கள் பலியானார்கள் 50 க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமணையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். காவல் துறை அதிகாரி அளித்த பேட்டியில்... அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், காவல் துறையின் அறிவுரையை மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இருப்பினும், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பெருமளவு வன்முறையில் ஈடுபட்டு, காவல் துறையின் வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வண்டிக்கு தீ வைத்தனர். இதனை யடுத்து, காவல் துறையினர் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வன்முறையாளர்கள் தொடர்ந்து வீசியதால், தற்காப்புக்காகவும், பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலும், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று காவல் துறை வழக்கம் போல் தன் பொய் செய்திகளை பரப்பினர். காவல் துறை நடத்திய வன்செயலைபல்வேறு கட்சித் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். தி.மு.க.வின் தலைவர் மு. கருணாநிதி அவர்கள் அரசும் காவல் துறையும் நினைத்து இருந்தால் இந்த துப்பாக்கிச் சூட்டை தடுத்து இருக்க முடியும். ஆனால், இதற்கு அரசும் காவல் துறையும் முன்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். பா.ம,க நிறுவனர் இராமதாசு அவர்கள் காவல்துறை திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு நீதி விசாரணை வேண்டும் உயிர் இழந்த குடும்பங்களுக்கு 10 இலட்சம் வழங்க வேண்டும் கோரிக்கை வைத்தார். ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ அவர்கள், பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிர் இழந்தனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், கவலையும் தருகிறது. துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம் தெரிவிப் பதுடன் இது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் மதுரை துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றவர்கள் பூரண சுகம் அடையும் வகையில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றார். அதைப்போல், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இந்தப் படுகொலையைக் கண்டிக்காமல் இந்த வெறியாட்டம் நடத்தியவர்கள் மீது நீதிவிசாரணை அமைத்ததற்காகவும், ஒரு லட்சம் நிதி கொடுத்ததற்காகவும் "அம்மா'விற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறார். இதை என்னவென்று சொல்வது..? மேலும், இ.பொ.க தலைவர் தா.பாண்டியன், இ.பொ.க(மா) ஜி.இராமகிருஷ்ணன், தே.மு.தி.க.வின் பண்ருட்டி ராமச்சந்திரன், தொல்.திருமாவளவன், க.கிருஷ்ணசாமி, மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வன்மையாக கண்டித் துள்ளனர். காவல் துறையும், தமிழக முதலமைச்சர் செயலலிதாவும் வன்முறைக்கு மக்களை குற்றம் சாட்டி பேசுவதும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இதற்கு முன்னர் அம்மையார் ஆட்சியில் கொடியங்குளம் வன்முறையும், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தாமிரபரணி ஆற்றில் 17 பேரை கொலை செய்ததும் நம் நினைவுக்கு இப்போது வருகிறது. காவல் துறை திட்டமிட்டு நடத்தும் இந்த வன்முறையை, படுகொலையை சனநாயகத்தில் நம்பிக்கை யுள்ளவர்கள் ஒன்று சேர்ந்துகுரல் கொடுக்க வேண்டும். காவல் துறையின் அதிகாரப் போக்கையும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்! காவல் துறையின் வன் செயலை வன்மையாகக் கண்டிப்போம்!

பரமக்குடி துப்பாக்கி சூடு : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

சென்னை: பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் டிஜிபி, கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை கோரி வக்கீல் புகழேந்தி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எலிப்பி தர்மராவ் மற்றும் வேணுகோபால் இன்று விசாரித்தனர். மனுதாரர் சார்பாக வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 6 பேர் இறந்துள்ளனர். இதற்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி ஆகியோர்தான் காரணம். துப்பாக்கி சூடு நடத்தப்படும்போது முதலில் வானத்தை நோக்கிதான் சுட வேண்டும். பின் கலவரக்காரர்களின் கால்களுக்கு கீழே தான் சுட வேண்டும். இப்படி பல நிபந்தனைகள் உள்ளன. இவை அனைத்தும் மீறப்பட்டுள்ளன. எனவே துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக டிஜிபி, கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: கலெக்டர்-போலீஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

சென்னை, செப். 27- தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற ஜான்பாண்டியனை கடந்த 11-ந்தேதி போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் 13-ந்தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜான்பாண்டியனை காவலில் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜான்பாண்டியன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- அரசும், போலீசாரும் எனது வளர்ச்சியை பொறுக்காமல் என்னை தடுத்து வருகின்றனர். இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பரமக்குடி செல்ல இருந்த என்னை வல்லநாட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். 2 நாட்கள் சட்ட விரோதமாக காவலில் போலீசார் என்னை தடுத்து வைத்திருந்தனர். இதற்காக அரசு ரூ.10 லட்சம் நஷ்டஈடு கொடுக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் மகாராஜன் ஆஜராகி வாதாடுகையில், பரமக்குடியில் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் ஜான்பாண்டியன் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். இதில் எந்த சட்ட மீறலும் இல்லை என்றார். இந்த வழக்கை நீதிபதிகள் 3 வார காலத்துக்கு தள்ளி வைத்தனர். இதற்கிடையே பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோரை சஸ்பெண்டு செய்ய கேட்டு வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்த மனு நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு அரசுக்கும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

பரம‌க்குடி து‌ப்பா‌க்‌கி சூடு- கலெ‌க்டரு‌க்கு எ‌‌திரான மனு ‌விசாரணை‌க்கு ஏ‌‌ற்பு

பரம‌க்குடி து‌ப்பா‌க்‌கி சூடு- கலெ‌க்டரு‌க்கு எ‌‌திரான மனு ‌விசாரணை‌க்கு ஏ‌‌ற்புதிங்கள், 26 செப்டம்பர் 2011( 15:28 IST )பரம‌க்குடி து‌ப்பா‌க்‌கி சூடு ‌நிக‌ழ்வு‌க்கு காரணமான காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள், மாவ‌ட்ட ஆ‌‌ட்‌சிய‌ரை ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட பொதுநல‌ன் மனுவை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌விசாரணை‌க்கு ஏ‌ற்று‌க் கொ‌ண்டு‌ள்ளது. வழ‌க்க‌றிஞ‌ர் புகழே‌ந்‌தி எ‌‌ன்பவ‌ர் தா‌‌க்க‌ல் செ‌ய்த மனு‌வி‌ல், பர‌ம‌க்குடி‌யி‌ல் காவ‌ல்துறை அவ‌சிய‌மி‌ன்‌றி து‌ப்பா‌க்‌கி சூ‌டு நட‌த்‌தியதா‌ல் 6 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்ததாக கூ‌றியு‌ள்ளா‌ர். இ‌ந்த ‌நிக‌ழ்வு‌க்கு காரணமான மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர், காவ‌ல்துறை அ‌திகா‌ரிகளை ப‌ணி ‌‌நீ‌க்க‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் மனு‌‌வி‌ல் வ‌லியுறு‌த்‌தி இரு‌ந்தா‌ர். இ‌ந்த மனுவை இ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌விசாரணை‌க்கு ஏ‌ற்று‌க் கொ‌ண்டு‌ வழ‌க்கை த‌ள்‌ளிவை‌த்து‌ள்ளது. பர‌ம‌க்குடி‌யி‌ல் கட‌ந்த 11ஆ‌ம் தே‌தி காவ‌ல்துறை‌யின‌ர் நட‌த்‌திய து‌ப்பா‌க்‌‌கி‌ச் சூ‌ட்டி‌ல் 6 ப‌ே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது

பரமக்குடி துப்பாக்கி சூடு தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்

மதுரை : பரமக்குடி துப்பாக்கிசூடு நடந்த இடத்தை லோக் ஜனசக்தி அமைப்பின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இமானுவேல் சேகரன் குருபூஜை தினத்தன்று பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 6 பேரையும், அதற்கு முன்னதாக சிறுவன் பழனிக்குமாரையும் தமிழகஅரசு கொன்றுள்ளது. 100 பேர் திரண்டிருந்த கூட்டத்தை அடக்க முடியாமல் கலவரத்தை கட்டவிழ்த்து கண்மூடித்தனமாக திட்டமிட்டே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. ஜனாதிபதி பிரதீபாபாட்டீலிடம் 5 அம்ச கோரிக்கை மனுவை அளித்துள்ளேன். அதில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சமும், காயம்பட்டவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வளவு நடந்தும் சம்பவ இடத்தை ஜெயலலிதா இன்னும் நேரில் சென்று பார்வையிடவில்லை. அவர் எப்படி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறார் என புரியவில்லை. தனக்காக நாக்கை வெட்டிக்கொண்ட பெண்ணுக்கு அரசு வேலையும், ரூ.5 லட்சம் நிவாரணமும் வழங்கிய ஜெயலலிதா, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் வழங்குவது எந்த வகையில் நியாயம். எங்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வரும் செப்.28ல் நாக்பூரில் அனைத்து தலித் தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன்பிறகும் கோரிக்கை ஏற்கபடவில்லையென்றால் தலித்துகளுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி நவம்பர் 30ம் தேதி 10 லட்சம் பேரை திரட்டி பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார். விசாரணை கமிஷன் மீது நம்பிக்கை இல்லை&திருமாவளவன் துப்பாக்கி¢ச்சூட்டில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை திருமாவளவன் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில், ‘அதிமுக அரசு இருசமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரணை கமிஷன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் அதில் தமிழக அரசின் தலையீடு இருக்கும். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தலித்துகள் மீது வன்முறையும், அடக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதுகுறித்து தேசிய தீண்டாமை ஒழிப்பு அமைப்பின் சார்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் மனு கொடுக்க உள்ளோம். தியாகி இமானுவேல் சேகரனுடைய நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது‘ என்றார்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கி சூடு - தொடரும் தேவேந்திரகுல இனப்படுகொலைகள்

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை நிறுத்தப் போராடுதல், கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்துப் போராடுதல் இவை இரண்டையும் விட இக்காலகட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, பரமக்குடி கலவரத்திற்கு நாம் எல்லோரும் பொறுப்பேற்பதும், இக்கலவரத்தில் கொல்லப்பட்ட உயிர்களுக்காக நாம் என்னவிதமான நிலைப்பாட்டினை எடுக்கிறோம், நாம் யாருக்காக நிற்கிறோம், குரல் கொடுக்கிறோம் என்பதும்! தமிழக அரசியலில் ஊழல் புரிந்தவர்கள் ரவுடித்தனம் செய்பவர்கள், ஆதிக்க சாதி வன்முறையைத் தொடர்ந்து மேற்கொள்பவர்கள் ஆகியோர் அனைவரையும் நம்முடைய மனசாட்சியால் எந்த வித வேறுபாடுமின்றி ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர் தலைவராக வரும்போது, அவர் அமைதியானவராகவும், வன்முறை செய்யாதவராகவும் தன்னுடைய சாதியைக் காட்டிக்கொள்ளாதவராகவும், எல்லோருக்கும் அடங்கிப்போகக் கூடியவராகவும் இருக்க விரும்புகிறோம். தோழர் ஜான்பாண்டியன், எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராகவே இருந்து வந்திருக்கிறார். ஆனால், சமூகம் அவரை ஒரு தலைவராக ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அமைச்சர்களும், முதல் அமைச்சர்களும், செய்யாத காரியத்தை ஒன்றும் இவர் செய்யவில்லை. ஆனாலும், இவர் மட்டுமே தொடர்ந்து வன்முறையாளராக சித்திரிக்கப்படுகிறார். தமிழக அரசியல் வரலாற்றில் ஆதிக்க சாதியை எதிர்த்து நேரடியாகக் குரல்கொடுக்கும் தலைவர்களில் முக்கியமானவர் இவர்! சமூகநீதியையும், சம உரிமையையும் யாருக்கும் ஏற்றத் தாழ்வு இல்லை என்பதை அவருடைய மொழியிலேயே அவர் விளக்கும்போது, அவர் வன்முறையாளராகச் சித்திரிக்கப்படுகிறார். 1980 – களில், போடிக்கலவரத்திலும், தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திலும், அவர் பேசியதால் கலவரம் உண்டாயிற்று என்று அரசும் பொது மக்களும் உலகுக்கு தங்கள் வாதங்களை முன்வைத்தனர். ஆனால், ஜான் பாண்டியன் இரு சாதி சமூகங்களுக்கு இடையில் திருமண ஒப்பந்தங்களும், கொடுக்கலும் வாங்கலும் இருக்கவேண்டும் என்பதைத் தன்னுடைய மொழியில் கூறினார். ஆனால், இதை சமூகத்தின் எந்த ஒரு பகுதியினரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பெருங்கலவரங்களுக்குக் காரணம், தோழர் ஜான் பாண்டியனே என்று கோஷமிட்டனர். இந்தப் பின்னணியிலேயே, செப்டம்பர் 11, 2011 பரமக்குடியில் நிகழ்ந்த கலவரத்தையும் பார்க்கவேண்டும். 1. பசும்பொன் கிராமத்தில் அரசு அதிகாரத்தின் ஆதரவுடன் தேவர் ஜெயந்தி நடைபெறும்போது, மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் எண்ணற்ற வன்முறைச் செயல்கள் நடைபெறுகின்றன. அன்றைய நாள் முழுவ‌துமே, பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழமுடியாத தன்மை ஏற்படுகிறது. நாம் ஒரு நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே நினைக்கத் தோன்றும். கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. பொதுமக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர். பாதசாரிகள் மரண பீதியில் வலம் வருகின்றனர். ஆனால், ஒவ்வொரு வருடமும் இப்படி நடைபெறும் வன்முறைச் செயல்களுக்கு எந்த அரசும் பொறுப்பேற்பதில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் எதுவும் பேசுவதில்லை. காவல் துறையினர் எல்லா வெறிச் செயல்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். பசும்பொன் கிராமத்திற்குச் செல்லும் எந்த ஒரு தலைவரும் வழிமறிக்கப்படுவதில்லை. கைது செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு வருடமும் வன்முறைகள் நிறைந்திருக்கவே அந்த நிகழ்வு அரங்கேறுகிறது. இதையெல்லாம் நாம் புரிந்து, உணர்ந்து கொண்டால் தான் பரமக்குடிக் கலவரத்திலும் நம்முடைய நிலைப்பாட்டினை எடுக்கமுடியும்! 2. 50–களில் நடந்த முதுகுளத்தூர் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நடந்த மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டத்தில், பசும்பொன் முத்துராமலிங்கம், தன்னிலும் மிக வயது குறைந்த இம்மானுவேல் சேகரனைத் தனக்குச் சமமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களின் மாபெரும் தலைவரான பேரையூர் பெருமாள் பீட்டர், தன்னை விட வயதில் மிகக் குறைந்த இம்மானுவேல் சேகரனை தன்னுடைய தலைவன் என்று அறிவித்தார். பின்பு, சமூக நீதி பற்றியும், சம உரிமை பற்றியும், தீண்டாமைக் கொடுமைகள் பற்றியும் மாபெரும் அரசியல் போராட்டங்களை முன் எடுத்த இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். அன்றிலிருந்து ஆதிக்க சாதித் தலைவரை நேரடியாக எதிர்த்தவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. இதிலிருந்து அறுபது வருடமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன இனக்கலவரங்கள். நீண்ட காலமாக அ.தி.மு.க.வின் பின்னணியில் இருக்கும் ஆதிக்க சாதி அணிவகுப்புகள், இம்மானுவேல் சேகரன் விழாவைக் கொண்டாடுவதை எப்போதுமே விரும்பியதில்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளவர்கள் இம்மானுவேல் சேகரனுக்கு எதிரான நிலைப்பாட்டையே எப்போதுமே எடுத்திருக்கிறார்கள்! 3. தற்பொழுது பரமக்குடியில் நடைபெற்ற கலவரங்களுமே இதன் தொடர்ச்சி தாம்! எந்தவித வன்முறையும் இன்றி, அமைதியாக நடந்து முடிந்திருக்கவேண்டிய இம்மானுவேல் சேகரன் விழாவை அரசே வன்முறையாக மாற்றிவிட்டது. தோழர் ஜான் பாண்டியனைக் கைது செய்யவேண்டிய அவசியமே இல்லை. அவர் பாட்டுக்கு வந்து அவர் பாட்டுக்கு மரியாதை செய்து திரும்பியிருப்பார். அவர் வந்தால் கலவரம் ஏற்படும் என்றால் அந்தக் கலவரத்தைச் செய்பவர்கள் யார்? நிச்சயமாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை. ஆதிக்க சாதியினரே கலவரத்தை உண்டுபண்ணுவார்கள் என்று அரசு நினைக்கிறது. அதனால் தான் ஜான் பாண்டியனைக் கைது செய்கிறார்கள். உண்மையில் கலவரத்தை உண்டுபண்ணக்கூடிய ஆதிக்க சாதியினரைத்தானே கைது செய்யவேண்டும்! தேவையற்ற கைதினாலேயே கலவரம் மூண்டது! அதற்கு இரண்டாயிரம் வருடங்கள் பின்னணி உள்ளது. எந்த நியாயமும் இன்றி, தாழ்த்தப்பட்ட மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அதற்கும் இரண்டாயிரம் வருடம் பின்னணி உள்ளது! ஆறு பேர் கொல்லப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது ஏழாகியுள்ளது. அரசு காட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நிச்சயம் உண்மையில்லை. நமக்குத் தெரியவேண்டியவை, இந்தக் கலவரத்துக்குப் பின்னால் உள்ள காவல் துறை அதிகாரிகளின் சாதி குறித்த விவரங்களும், உண்மையான நீதியுமே! ஓய்வு பெற்ற நீதிபதிகளின் விசாரணைக் கமிஷன்கள் மூலம் நமக்கு ஓய்வு பெற்ற நீதியே கிடைக்கும்!

பரமக்குடி படுகொலைகள் - அரசதிகார ஆதிக்கத்தின் கொடூர முகம்

வெகு நாட்களுக்கு முன்பாக நான் தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்தபோது ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டேன். அனைத்து தலைவர்களின் சிலைகளும் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு இருந்தன. அண்ணல் அம்பேத்கர், காமராசர், அண்ணா, தந்தை பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல் சேகரனார், எம்ஜிஆர் என அனைவரும் விலங்குகள் கூட தங்க மறுக்கும் இரும்புக் கூண்டிற்குள் அடைக்கப்பட்டு கிடந்தார்கள். மக்களின் தலைவர்களுக்கு மக்களால் ஆபத்து என்ற நிலையில் அந்த சிலைகளின் இருப்பு அந்த நிலத்தின் கொடும் சாட்சிகளாக விளங்கிக் கொண்டு நின்றன. வெறும் கல்லால் ஆன சிலைகள் மட்டும் அல்ல அவை என யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். அந்த சிலைகளில் இருந்துதான் அதிகாரத்திற்கான வேட்கையும், அதற்கான அரசியலும் பிறக்கின்றன.

சிலைகளைத் திறப்பதும், பிறகு அவற்றையே அவமதிப்பதும், அதன் வாயிலாக கலவரங்களுக்கு வழிவகுத்து உயிரைப் பிடுங்குவதுமாக பல்வேறு வேடங்களில் உலா வருகிறது சாதீயத்தின் இழிவான அரசியல். இறந்துபோன தலைவர்களுக்கு இடையே அந்தக் காலக்கட்டத்தில் நிலவிய வன்மத்தின் வெப்பத்தினை நாளது தேதி வரை பொத்தி பொத்தி பாதுகாப்பதில் தான் இருக்கிறது தனிப்பட்ட சிலருக்கான சில்லறை அரசியல். சாதீயத்தின் கூர்முனைகளை தீட்டாமலிருக்க யாருக்கும் விருப்பமில்லை. சாதீயத்தின் பேரில் நடக்கும் அரசியலையும், கிடைக்கும் அதிகாரங்களையும் எந்த சாதீயத்தலைவரும் இழக்க விரும்புவதில்லை. சாதீய கட்டுமானங்களின் அடிப்படையாகத் திகழும் சுயசாதிப் பெருமிதம் என்ற உணர்வே சாதீயக் கட்சிகளின் மூலதனமாக‌ விளங்குகின்றது. அரச அதிகாரத்தில் இருப்பவர்களும் சாதீயத்தின் முனை கூர்மழுங்காமல் பாதுகாப்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். சொல்லப் போனால் பரமக்குடிகள் போன்ற பல ஊர்கள் முளைப்பது அரச அதிகாரத்திற்கும், சுயலாப அரசியலின் இழிவான சாட்சிகளாக இருக்கும் சாதீயக் கட்சிகளுக்கும் தேவையாக இருக்கின்றன. அரச அதிகாரங்களை பாதுகாக்கும் மிக முக்கிய அரணாக சாதி இருக்கிறது. சாதி இழிவினைப் போக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த‌ தந்தை பெரியாரின் வழி வந்ததாக சொல்லிக் கொண்டு அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதன் மூலம் சாதீய இழிவினைப் போக்கலாம் என்பது போன்ற மாய்மால வார்த்தைகளை உதிர்த்துத் தோன்றிய திராவிட அரசியல் கட்சிகளே கடந்த பல ஆண்டுகளாக சாதீயத்தினைப் பாதுக்காக்கும் அமைப்புகளாக செயல்படுகின்றன. திராவிடம் என்ற சொல்லில் தான் பெரியாரியம் முழுவ‌தும் அடங்கி இருக்கிறது என்பது போன்றான புனைவுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி திராவிடர்களின் நல வாழ்விற்கான உண்மையான கட்சி திமுக என இன்று வரை பேசிக்கொண்டிருப்பதிலிருந்தே இதை நாம் புரிந்து கொள்ளலாம்.

மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்ட பிறகு, நமக்கும்-தெலுங்கனுக்கும், நமக்கும்- மலையாளிக்கும், நமக்கும்-கன்னடனுக்கும் நதிநீர் உட்பட பல முனைகளில் முரண்கள் தோன்றும்போது திராவிடம் என்ற சொல்லுக்கான அவசியம் குறித்து தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் வினா எழுப்புகையில், இந்த சாதீயம்தான் அவர்களுக்கு எதிரான முனையாக முன்நிறுத்தப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லுக்கு அப்பாலும் பெரியாரியம் பரந்து விரிந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது. தமிழனின் சாதி இழிவைப் போக்க, தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைய, தமிழர்களின் ஒற்றுமைக்காக, பெண்ணுரிமைக்காக என பல தளங்களில் மூர்க்கமாக போராடிய அந்த கிழவனைத்தாண்டி இந்த மண்ணுக்கான தத்துவங்கள் ஏதுமில்லை. ஆனால் அவர் வழி வந்ததாக சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகளின் அரச அதிகாரத்தில்தான் சாதீயத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. சொல்லப் போனால் திராவிடக் கட்சிகளின் அரச அதிகாரம் தான் சாதியைப் போற்றி, பராமரித்து, பாதுகாக்கின்ற அரணாகத் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.

ஒட்டுமொத்த இன ஒற்றுமையை உரத்துப் பேசும் தமிழ்த் தேசியர்கள் இது போன்ற சமூக உட்குழு பிணக்குகளில் பெருத்த பின்னடைவினை சந்திக்கின்றனர். பண்பாட்டு பெருமிதங்கள் மூலம் கட்டமைக்கப்படும் இனத்தின் ஒற்றுமையை சமூக உட்குழுவான சாதி சிதைப்பது தமிழ்த் தேசிய கருத்தின் பலத்தினை குறைக்கும். எனவே சாதி முரண்களால் மற்றவர்களை விட அதிகம் பாதிக்கப்படுபவர்களாக தமிழ்த் தேசியர்கள் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. காலங்காலமாக ஆதிக்கச் சாதியின் இறுக்கத்தினில் இருந்து வெளியேற ஒடுக்கப்பட்ட சாதிக்கு என்றைக்கும் அரசியல் துணை நின்றதில்லை. துவக்கத்தில் அரசியல் மூலம் மாற்றத்தினை கொண்டு வர விழைந்த அண்ணல் அம்பேத்கர்கூட, இறுதியில் சமூக வழி செயலான மத மாற்றத்தினைத்தான் தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய லாபங்களுக்காக தனி நபர்கள் சுயசாதி பெருமிதத்தின் மீது கட்டமைக்கும் அரசியல் இதுவரை எவ்விதமான விளைவினையும் இங்கே ஏற்படுத்திவிடவில்லை என்பது உண்மையானது.

தேர்தல்களில் சாதி மக்களின் எண்ணிக்கையை காட்டி சாதிக்கட்சிகள் தங்களின் கூட்டணி தலைமையிடம் இடங்களுக்காக நிற்கின்றன. சாதி ஒழிப்பிற்காக, பிற்படுத்தப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, சமூக நீதிக்காக தோன்றிய திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கூட தேர்தல்களில் பெருமளவு சாதி பார்த்து, இடம் பார்த்துதான் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. தமிழனின் சமூக நுகர்வில் சாதிக்கான இடம் மிகப் பெரியது. இந்தப் புள்ளிதான் இன ஒற்றுமையை நிறுவ முயலும் தமிழ்த் தேசியர்களுக்கான உண்மை சவால்.

பரமக்குடி படுகொலைகளின் மூலம் அரச அதிகாரம் ஆதிக்க உளவியலில் இருந்து பிறந்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டது. திரண்ட மக்களின் உணர்வெழுச்சியான வன்முறை போக்கிற்குத் தீர்வாக காவல் துறை தூப்பாக்கிகளைக் கையாண்டது எதன் பொருட்டும் ஏற்கக் கூடியதல்ல. மக்களுக்காகத்தான் அரசு. எனவே அவர்களை மீறி, அவர்களைக் கொன்று அந்த நாளில் காவல் துறை காப்பாற்றியது எவற்றை என்பதை நாம் ஆராயும்போது அரச அதிகாரத்தின் ஆதிக்க சாதி முகத்தினை நாம் நேரிடையாக சந்திக்கிறோம். பார்த்தவுடன் பதற வைக்கிறது பரமக்குடி. மக்களாட்சி தத்துவத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டு அரச வல்லாத்திக்கத்தின் கோர முகம் தெரிகிறது.

வரையறுக்கப்பட்ட, திட்டமிட்ட செயல்களால் பெருகி வந்த வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் என்ற வாய்ப்பு இருந்தும் துவக்குகளையும், ரவைகளையும் தீர்விற்கான வழிகளாக காவல்துறை நம்பியது கண்டிக்கத்தக்கது. அரச பயங்கரவாதம் நிகழ்த்திய வன்முறைகளுக்கு காரணம் ஒரு குறிப்பிட்ட சாதி சார்பு என இவற்றை நாம் குறுக்கி விட இயலாது. மாறாக அரசதிகாரம் தந்த ஆணவமும், வரையறையற்ற அதிகாரமும் இவற்றிற்கான காரணங்கள். இந்த வன்முறையில் பலியானவர்கள் குறித்த தகவல்களை அறியும்போது வேதனையாக இருக்கிறது. நிகழ்ந்த சம்பவங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத எளிய மனிதர்கள் சுடப்பட்டு இருக்கின்றார்கள். அதிகாரம் தந்த ஆணவத்தினால் கக்கிய காவல்துறையின் துப்பாக்கிக் குழல்களுக்கு எவ்வித பாகுபாடும் இல்லை. சுடப்படுபவர் வன்முறையாளரா என்ற வரைமுறை இல்லை. ஆதிக்கத்தின் துப்பாக்கி குழல்களுக்கு தேவை வீழ்த்த ஒரு உடலம். அவ்வளவே. காரண, காரியங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆதிக்க சாதி, அரசியல் கட்சி நிகழ்ச்சிகளின்போது நிகழும் வன்முறைகளை இயல்பாக அனுமதிக்கும் அரச அதிகாரம், ஒடுக்கப்பட்ட மக்கள் சிறிய கிளர்ச்சி செய்தால் உயிரைப் பறிக்க துவக்குகளைத் தூக்குகிறது. இராணுவத்திற்கு எதிராக கல்லெறிந்து போராடி வரும் காஷ்மீர் மக்களைக் கூட அந்த அரசாங்கம் சுட்டுக் கொல்வதில்லை.

பல்வேறு சாதி மக்கள் வாழக்கூடிய ஒரு நிலத்தில், பெரும்பான்மை சாதிக்குழுவின் முக்கிய ஆளுமையின் விழா நாளில் ஏற்படும் விபரீதங்கள் அதற்கு இணையான, எதிரிடையாக இருக்கும் மற்றொரு சாதிக்குழுவின் மீது சாட்டப்படுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. மறைந்த தலைவர்களின் விழாக்களின்போது பதட்டம் ஏற்படுவதை சாதீயக்கட்சிகளின் தலைவர்கள் விரும்புகிறார்கள். இதன் மூலம் விளையும் பதட்டம்தான் அடுத்த ஒரு வருடத்தின் அரசியலுக்கான மூலதனம். சாதீயத்திற்கு எதிராக, இன ஒற்றுமையை வலியுறுத்தும் தமிழ்த்தேசியர்களை இதில் வலுக்கட்டாயமாக வம்புகிழுப்பதில்தான் இருக்கிறது கடைந்தெடுத்த அயோக்கியதனம்.

சாதிதான் பெரிதென்றால் சுயசாதிப் பெருமிதத்தினை, சாதி பேரில் திரளும் மக்களை வைத்து அரசியல் நடத்தியிருக்கலாம். ஆனால் இன ஒற்றுமையையும், அதன் வாயிலாக சாதீய ஒழிப்பினையும் சிந்திக்கும் தமிழ்த் தேசியர்கள் மூன்றாம் தர சொல்லாடல்களால் விமர்சிக்கப்படுவது எதன் பொருட்டும் நியாயமல்ல. தமிழ் உணர்வாளர்கள் பாகுபாடின்றி மறைந்த தமிழ் ஆளுமைகளின் விழாக்களிலும் கலந்து கொள்வதை மோசடியாக புனைய துடிப்பவர்கள் அதன் மூலம் நிகழும் பொதுமை உணர்ச்சியை நிகழ விடாமல் தடுக்க எண்ணுகிறார்கள். சாதிகளுக்கு அப்பாற்பட்டு நம் இனத்து ஆளுமைகளை அவர்களுக்குள் அக்காலத்தில் நிலவிய முரண்களுக்கு அப்பாற்பட்டு பார்க்கின்ற பொதுமை உணர்ச்சி நிகழ்கால அமைதி வாழ்வின் பாற்பட்டது.

ஒரு சமூகத்தின் இரு தலைவர்கள் அன்று நிலவி வந்த சாதீயச் சூழல் காரணமாக, ஆண்டான், எதிர்ப்போன் என பிளவுபட்டு கிடந்தார்கள். அவர்கள் இறந்தார்கள். அவர்களின் பிள்ளைகள் இதே சாதியை இறுகப் பிடித்துக் கொண்டு, அடித்துக் கொண்டு செத்தார்கள். அவர்களின் பிள்ளைகள் இன்றைக்கும் தலைவர்களின் பேரால் அடித்துக் கொண்டு சாகிறார்கள். இந்தப் பகையை, இந்த வன்மத்தினை இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு கொண்டு போகப் போகிறோம் என்று கேட்டாலே சாதி வெறியன்களாக சித்திரித்து விடுவது அரச பயங்கரவாதத்தினை விடக் கொடுமையானது. தமிழ்த் தேசியர்களை இழித்துப் பேசுவதன் மூலம் தங்களைத் தாங்களே சொறிந்து கொண்டு, தங்களின் குற்ற உணர்ச்சியை மற்றவர்களின் மீது பழி போடுவதன் மூலம் தணித்துக் கொண்டு சுகம் காணும் ‘இணையத்தளப் போராளிகளை’ நாம் இச்சமயத்தில் சரியாக இனம் காணுவோம்.

பரமக்குடி சம்பவங்களில் நிகழ்ந்த ஏழுத் தமிழர்களின் படுகொலைகளுக்கு எதிராக அய்யா.பழ.நெடுமாறன், அண்ணன் தொல்.திருமாவளவன், அண்ணன் சீமான் போன்ற தமிழுணர்வு கொண்ட தலைவர்களும், மே 17 போன்ற இயக்கத்தினரும் அறிக்கைகள் வெளியிட்டிருப்பதை கவனிக்கலாம். யாராலும் ஏற்க இயலா, குறிப்பாக தமிழ்த் தேசியர்கள் முற்றிலும் எதிர்க்கிற பரமக்குடி கொலைகளை, திட்டமிட்டு இன நலனிற்காக போராடிவரும் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு எதிராக நிறுத்துவது அருவருப்பான செயல். முகநூலில் போகிற போக்கில் முகப்புப் பக்கத்தில் தமிழ்த் தேசியர்களைப் பற்றியும், தமிழ் அமைப்புகள் குறித்தும் நஞ்சாய் இந்த 'இணையத்தளப் போராளிகள்’ கக்கியிருக்கின்ற மூன்றாம் தர விமர்சனங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. கணினித் திரைக்கு அப்பால்தான் உலகம் இருக்கிறது என்பதை அறிய மறுக்கிற இவர்களின் விமர்சனங்கள் நாகரீகமற்றவை. மேலும் காலங்காலமாய் பகைமை கொண்டிருக்கும் இரு குழுக்களிடையே நிலவும் வன்மத்தினை கொஞ்சமும் குறைய விடாமல் பாதுகாப்பதில் தான் இவர்களின் அரசியலே இருக்கிறது. நடந்து முடிந்த பரமக்குடி படுகொலைகளை எந்த தமிழ்த்தேசிய அமைப்பாவது ஆதரித்திருக்கிறதா என்றால் இவர்களிடத்தில் பதிலில்லை. அப்படி இருக்கையில் எதற்காக இத்தனை விமர்சன அம்புகள் என்றால்.. சமீப காலமாக இந்த மண்ணில் ஏற்பட்டிருக்கிற, மக்களிடம் தோன்றியிருக்கின்ற 'நாம் ஒரு இனம்’ என்ற உளவியல். தேசியத் தலைவர் பிரபாகரன் தான் எம் இனத்தின் ஒரே தலைவர் என்ற உளவியல். ஈழம் போலவே சாதிகளற்ற சமூகம் இந்த மண்ணிலும் விளைய வேண்டும் என்ற உளவியல். இந்த உளவியல் போக்குகளே மூன்று தமிழர் உயிர் காக்க தமிழக வீதிகளில் போர்க் குரல்களாய் மூண்டெழுந்தன. இந்த உளவியல் போக்குகள் தான் எப்போதும் ஊரை பிரித்துப் பார்த்து ரசிக்கும் இந்த இரண்டகன்களுக்குப் பிடிக்கவில்லை.

தமிழ்த் தேசியர்கள் அழிந்த தம் இனத்தின் வலியை சுமந்து நிற்கிறார்கள். ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழனுக்காக தீக்குளித்து, தன்னுயிரைத் தந்த கொலுவைநல்லூர் முத்துக்குமார், பெரம்பலூர் அப்துல்ரவூப் எந்த சாதி, மத மக்களுக்காக ஈகை செய்தார்கள்?- இனத்தின் மேன்மைக்காக, இனத்தின் ஒற்றுமைக்காக தியாகம் செய்த அந்த மாவீரர்களை சாதியின் பேரால் நிகழும் இழிவான அரசியல்களால் அவமானப்படுத்துகிறோம். மூன்று தமிழர்களின் தூக்குதண்டனைகளுக்கு எதிராக மூண்டெழுந்த தமிழினம் ஏழு தமிழரை பறிகொடுத்து விட்டு எழுபதாக பிரிந்து கிடக்கின்றது. அதிகாரத்தின் உதடுகளில் தோன்றும் நமுட்டுச் சிரிப்பினை உணர்ந்து ஒன்றாகக் கிளம்ப வேண்டிய தருணம் இதுவாகும். எடுத்துக்காட்டாக நாம் இங்கே சாதியாய் பிளவுற்று செத்துக் கொண்டிருக்கையில், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசு நீர்வழிப் பாதையை ஆய்வு செய்து முடித்து விட்டது. இன்னமும் ஈழப் போரின்போது நடைபெற்ற சிங்கள பேரினவாத குற்றங்களுக்கு நமக்கு உலக சமூக நியாயம் கிடைக்கவில்லை. கூடங்குளம் அணுமின் உலையை மூடச் சொல்லி 15,000/- தமிழர்கள் சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். தூக்கு மேடையில் நிற்கும் மூன்று தமிழர்களின் உயிருக்கு உள்ள ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கியபாடில்லை. இந்நிலையில் தமிழர்களின் உள்ளங்களில் மூண்டிருக்கிறது சா’தீ’. திசைதிருப்பல்கள் மூலமாகவே திசையற்றுப் போனான் தமிழன்.

பரமக்குடி சம்பவங்கள் இன்றைய ஆட்சியாளர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனையல்ல. ஏனெனில் ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் வாழ்வும், அவர்கள் மீதான கொலைகளும் எல்லா ஆட்சிகளிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு உயிருக்கு விலை ஒரு லட்சம் அல்ல. விலை மதிப்பில்லா மனித வாழ்வினைப் பறிகொடுத்த ஏழு தமிழின சகோதரர்களின் குடும்பங்களை அரசே பராமரிப்பதுதான் ‍ இப்போதைக்கான இயன்ற தீர்வாக இருக்க இயலும்.

சாதீய முரண்கள் களையப்பட வேண்டுமானால், சுயசாதிப் பெருமிதம் சாக வேண்டும். சுயசாதிப் பெருமிதம் அழிய வேண்டுமானால் அதற்கு நேர் எதிராக, முரணாக நிற்கும் ஒட்டுமொத்த இனம் சார்ந்த, மொழி சார்ந்த சிந்தனைகள் மேலோங்க வேண்டும். தமிழ்த் தேசிய அமைப்புகளின் வளர்ச்சியும், எழுச்சியுமே பிளந்து கிடக்கும் இனத்தினை ஒற்றுமைப்படுத்தும். சாதிக்க வேண்டிய தமிழினம் சாதிக்காக நின்றால் இழப்புகள் இன்னும் அதிகமாகும்.

மூன்று தமிழர் உயிர் காக்க தன்னுயிர் தந்த செங்கொடியின் தியாகம் நிகழ்ந்து ஒரு மாதம் கூட ஆகாத இடைவெளியில் ஏழு தமிழினச் சகோதரர்களை அரச வல்லாத்திக்க துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கி விட்டு அமர்ந்திருக்கிறோம். விலங்குகளை சுட்டுக் கொன்றால் தண்டனை விதிக்கும் இந்த நாட்டில் மனித உயிர்களுக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்பதுதான் அவலமான முரண்.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மையறியும் குழு அறிக்கை

வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உண்மை அறியும் குழு செப்டம்பர் 19-20 தேதிகளில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டது. 700 கிலோமீட்டர்களுக்கு மேலாக பயணம் மேற்கொண்ட குழு, பலியானவர்கள் அனைவரது குடும்பத்தினர், பொதுமக்கள், தலித் அமைப்புகளின் தலைவர்கள், காவல்நிலையங்கள், மாவட்டக் காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், சம்பவம் நடந்த இடங்கள் அனைத்தையும் பார்வையிட்டு கருத்தறிந்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் சென்ற குழுவில், டி.சங்கரபாண்டியன் (எஅய்சிசிடியு மாநிலத் துணைத்தலைவர்), ஆவுடையப்பன் (அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர்), திவ்யா (அகில இந்திய மாணவர் கழக மாநிலக் குழு உறுப்பினர்), சி.மதிவாணன் (மதுரை மாவட்டச் செயலாளர்), ஜீவா (சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்), கே.ஜி.தேசிகன் (ஒருமைப்பாடு ஆசிரியர்குழு உறுப்பினர்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

1. செப்டம்பர் 11 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு நடவடிக்கைகள் எதுவும் காவல்துறை சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்கு விதிகளின் படி நடத்தப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் கையாளப் படவில்லை. பல்வேறு ஆதாரங்கள், வாக்குமூலங்கள், நிகழ்ச்சிவிவரங்கள் அனைத்தும் உறுதிப் படுத்துவது, அமைதி, ஒழுங்கை ஏற்படுத்துவதற்கு மாறாக அச்சம், பீதியை ஏற்படுத்தும் வன்மத்துடனும் முன்முடிவுடனும் பரமக்குடியிலும் மற்ற பிற இடங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

2. பரமக்குடி 5 முக்கு சாலையில் திரண்டிருந்தவர்களை அமைதிப் படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளோ மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களோ முயற்சி எதுவும் எடுக்கவில்லை. மாறாக தியாகி இமானுவேல் சேகரன் பேரவையின் மாநிலத்தலைவர் சந்திரபோஸ், சாலைமறியலை கைவிடச் செய்யவும் நிலமையை கட்டுக்குள் கொண்டுவரவும் கூறிய அனைத்து ஆலோசனைகளையும் கூட காவல் துறை உயர் அதிகாரி சந்தீப் பட்டீல் முரட்டுத்தனமாக மறுத்துவிட்டார். இதன்மூலம், உயர்அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவதையே குறியாகக் கொண்டிருந்தது உறுதியாகிறது. கூட்டத்தைக் கலைப்பதற்கு தண்ணீர் பீச்சியடிப்பதற்கென்று நிறுத்தப்பட்டிருந்த வஜ்ரா வாகனம் பயன்படுத்தப்பட வில்லை. கலைப்பது நோக்கமல்ல, சுடுவதே நோக்கம் என்பது தெளிவாகிறது.

3. தடியடியும் துப்பாக்கிச்சூடும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. எனவே தடியடி பயனளிக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்ற காவல்துறை கூற்றும் முதலமைச்சரின் அறிக்கையும் உண்மைக்கு மாறாக உள்ளன. துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்கள் பலர், நெற்றியிலும், மார்பிலும் வயிற்றிலும் குண்டுபாய்ந்து பலியாகி உள்ளனர். இது கூட்டத்தைக் கலைப்பதற்கு நடத்தப்படும் துப்பாக்கிச்சூடாக அல்லாமல் குறி பார்த்து சுட்டு உயிரைப்பறிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டிருக்கிறது.

4. ஐந்து முக்கு சாலையில் திரண்டிருந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எனும் காவல்துறை கூற்று உண்மைக்கு புறம்பானது. மாறாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னரே திரண்டிருந்தவர்கள் கல்வீசுவது போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் சிதறிய பின்னரும் துப்பாக்கிச் சூடு மாலை வரை பலமுறை நடத்தப் பட்டிருப்பதும் 5 முக்கு சாலை சந்திப்பை மாலைவரை காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததும் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு யாரும் செல்ல முடியாது என்ற நிலமையை ஏற்படுத்துவதற்கென்றே செய்யப்பட்டிருக்கிறது. *மாலை 4 மணிக்கு மேல் இரண்டுஇளைஞர்கள் பிடிக்கப் பட்டு கொல்லப் பட்டிருக்கின்றனர் என்பதை நேரடி சாட்சியங்கள் உறுதிப் படுத்துகின்றன. இவர்கள் காவல் துறையினரால் அடித்தோ அல்லது சுட்டோக் கொல்லப் பட்டிருக்கின்றனர் என்பதும் தங்களைக் காத்துக்கொள்ள, பொதுமக்களை காக்க, வேறுவழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையும் சட்டமன்றத்தில் முதலமைச்சரும் கூறியதும் தவறு என்பது நிரூபணமாகிறது.

5. ஜான்பாண்டியனுக்கு முதலில் அனுமதி அளித்துவிட்டு பின்னர் கைது செய்து தடுத்து நிறுத்தியதற்காக கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அவரது பயணப்பாதையையும் நேரத்தையும் முன்கூட்டியே முடிவு செய்து போதிய போலிஸ் காவலுடன் அவரது வருகையை சச்சரவற்ற ஒரு நிகழ்ச்சியாக நடத்தியிருக்கமுடியும். மாறாக நினைவு நிகழ்ச்சிக்கு கூடியிருப்பவர்களை ஆவேசமடைய செய்யவும் ஆத்திர மூட்டுவதற்காகவுமே ஜான்பாண்டியனது வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சற்றேறக்குறைய அதே நேரத்தில், 25-30 பேர்கள் மட்டுமே கூடியிருந்த மதுரை சிந்தாமணியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது! இவை அனைத்தும் பரமக்குடியை நோக்கி அணிதிரள்பவர்களை ஆங்காங்கே தடுத்து திருப்பி அனுப்புவது, தலித் சமூகத்தினரை ஆத்திரமூட்டுவது, துப்பாக்கிச்சூடு நடத்தி இமானுவேல் சேகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சியை தடுத்து நிறுத்துவது என்ற முன்முடிவுடன் செய்யப்பட்டிருக்கிறது.

6. தனியாக சிக்கியவர்களை, குண்டடிபட்டவர்களை, பலியானவர்களை, பலியானவர்களின் உறவினர்களை காவல்துறை நடத்தியவிதம் மனிதத் தன்மையற்ற கொடூர சம்பவங்களாகவே உள்ளன. தனியாக சிக்கிய முதியவர்கள் பலரும் கொடூரமாக அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் இருவர் பலியாகி இருக்கிறார்கள். 20 பேர் கூடிய இடத்தில் 200 பேர் மீது வழக்கு, 500 பேர் கூடிய இடத்தில் 1000க்கு மேற்பட்டோர் மீது வழக்கு, இரவு நேர தேடுதல் வேட்டை போன்ற அடக்குமுறை நடவடிக்கைகள் தொடருகின்றன. இவை பரமக்குடியை சுற்றியுள்ள தலித் இளைஞர்கள், தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை நிரந்தரமான அச்சத்தில் ஆழ்த்தவும் அடுத்தடுத்து அணிதிரளாமல் செய்யவுமான திட்டத்துடன் செய்யப்பட்டு வருகிறன்றன.

7. துப்பாக்கிச்சூடு, தடியடி, உள்ளிட்ட அனைத்தையும் உள்ளூர் போலிசே முன்னின்று நடத்தியுள்ளனர். ‘அனுபவம் வாய்ந்தவர்கள்’ என்று கூறப் படுவோரான, கடந்தகாலத்தில் சாதிய பாரபட்சத்துடன் தலித்துகள்மீது வன்முறை நடத்திய அனுபவம் உள்ள அதிகாரிகள் செந்தில்வேலன், இளங்கோ, சிவக்குமார் போன்றவர்களின் தலைமையிலேயே அனைத்தும் நடந்துள்ளன.

8. உள்துறைப் பொறுப்பை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், லட்சக் கணக்கான தலித் மக்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான இந்த விவகாரத்தில் பொறுப்பற்ற முறையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமலும் முழுக்க முழுக்க காவல் துறையிடம் விட்டு விட்டதாகவே தெரிகிறது. காவல்துறை உயர் அதிகாரிகள், ஆட்சித்தலைவர்களின் கூட்டத்தை முன்கூட்டியே கூட்டி அமைதி குலையாமல் இருக்கவும், இமானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சி அமைதியாக நடக்கவும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாணவர் பழனிக் குமார் திட்டமிட்ட கொலை, இமானுவேல் சேகரன் குருபூஜை நிகழ்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் ஆப்பநாட்டு மறவர் சங்கம் நடத்தியக்கூட்டம் இவற்றை முன்கூட்டியே அறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கத்தவறியுள்ளது. மாறாக, நினைவுநிகழ்ச்சியை சீர்குலைக்க விரும்புவோரது திட்டத்தை நிறைவேற்றுகிற வகையில் அனைத்தும் அரங்கேறுவதற்கு காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது.

பரிந்துரைகள்:

1. தலித் மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களிடம் நம்பிக்கையைக் கொண்டுவரும் வகையில், செப்டம்பர் 11 அன்று பரமக்குடிக்கு அழைக்கப்பட்டிருந்த சந்தீப் பட்டீல் உள்ளிட்ட காவல்துறை உயர்அதிகாரிகள் ஆய்வாளர்கள் மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட மாவட்ட காவல்துறை தலைவர்கள் மீது வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்யவேண்டும். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யவேண்டும். அரசாங்கம் அறிவித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்ட ஒரு நபர் கொண்ட விசாரணைக் கமிஷனுக்குப் பதிலாக பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் பல உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக்கமிஷன் அமைத்திட வேண்டும். செப்டம்பர் 11 நிகழ்வை ஒட்டி, முதலமைச்சர் பொறுப்பிலுள்ள உள்துறை அமைச்சகத்தின் செயல்பட்டவிதம் குறித்தும் விசாரணைக் கமிஷன் விசாரிக்க வேண்டும்.

2. தலித்துகள் வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள், இனக் கலவரத்தை தூண்டுபவர்கள் என்றவகையில் தலித்துகளை தனிமைப் படுத்துகிற வகையிலும் இழிவுபடுத்துகிற வகையிலும் காவல்துறையின் மிருகத்தனமான வன்முறைகளை நியாயப் படுத்துகிற வகையிலும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதை திரும்பப்பெற வேண்டும். சட்டமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கப் பட வேண்டும்.

3. மருத்துவமனைகளில் உள்ளவர்களுக்கு உயர்மருத்துவ வசதியை அரசே தன் முழுப்பொறுப்பில் செய்திட வேண்டும். சிறையிலுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும். அடக்குமுறை, அச்சுறுத்தல் நோக்கத்துடன் பெண்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் மீது போடப் பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். போலீஸ் தேடுதல் வேட்டை காரணமாக இருவர் இறந்துள்ள நிலையில் இது போன்ற தேடுதல் வேட்டைகளை உடனடியாக நிறுத்திட வேண்டும்.

4. நேர்த்திக் கடனாக நாக்கை வெட்டிக் கொண்ட தனது கட்சிக்காரப் பெண்ணுக்கு ரூ 5 லட்சமும் அரசாங்கவேலையும் வழங்கும் அளவுக்கு ‘தாராள’ மனது படைத்த முதலமைச்சர், காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பழனிக்குமார் உள்ளிட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ 25 லட்சமும் அரசாங்க வேலையும் அளித்திடவேண்டும். தலித் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் பச்சேரி கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்திட வேண்டும். புதிய சாலை அமைத்து தர வேண்டும். வேலை இல்லாமலிருக்கும் அந்த கிராம மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் உடனடியாக வேலை வழங்கிடவேண்டும்.

5. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்யவேண்டும். கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஜனநாயக நடவடிக்கைகளை அனுமதிக்கவேண்டும். தலித் அமைப்புகளின் தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைவதற்குள்ள தடையை நீக்க வேண்டும்.

6. தேவர் ஜெயந்தி ஆண்டு தோறும் அரசாங்க விழாவாகக் கொண்டாடப் பட்டு வரும் நிலையில் தலித் மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இமானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியை அரசாங்க விழாவாக அறிவிக்கவேண்டும்.

7. ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கோட்பாட்டின்படி அரசாங்கம் இயங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தலித்துகள் மீதான அரசாங்க வன்முறையும் காவல்துறை வன்முறையும் (கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி) அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர், அரசாங்க அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படுவது அவசியம். எனவே தலித்துகள் மீது அரசாங்க இயந்திரங்கள் தாக்குதல், வன்முறை நடத்தும் விசயங்களில் அவர்களை விசாரித்து உரிய தண்டனை வழங்கும் வகையில் வன்கொடுமை தடைச்சட்டம் 1989 விதிகள் 1995 திருத்தப்பட மத்திய/மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேச்சுவார்த்தை நடத்தி விட்டு ஏமாற்றி விட்டனர்: அதிமுக மீது டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

மதுரைசில் (24.09.2011) செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி,

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனியாக போட்டியிடும். வருகிற திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தென்மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்துவோம்.

புதிய தமிழகம் கட்சிக்கு, கிராமப்புறங்களில் அதிக செல்வாக்கு உள்ளது. எனவே மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் பதவி, கிராம ஊராட்சி தலைவர் பதவிகளில் வெற்றி பெறுவோம். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோமா என்பதை அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும்.

அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் தனித்து தான் போட்டியிட போகிறது, கூட்டணி கிடையாது என்று எங்களிடம் ஏற்கனவே கூறியிருந்தால் நாங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து இருப்போம். ஆனால் கடைசி வரை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு ஏமாற்றி விட்டனர்.

பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை காக்கும் முயற்சியில் அரசு ஈடுபட கூடாது. பரமக்குடி சம்பவம் போல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, அனைத்து சமூகத்தினர் கலந்து கொள்ளும் சமூக நல்லிணக்க உண்ணாவிரதம் முதுகுளத்தூரில் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இமானுவேல் சேகரனின் பிறந்த நாளான அக்டோபர் 9ந் தேதி, பரமக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

முத்துராமலிங்கத்திற்கு வக்காலத்து! பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம்! பெ.தி.கவின் இரட்டை வேடம்!

பெரியார் திராவிடர் கழகம் (பெ.தி.க) நடத்தி வரும் மரணதண்டனை ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை இராயப்பேட்டையில் செப்டம்பர் 20 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் பேரா.தீரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, மதிமுக வைகோ, கொளத்தூர் மணி (பெ.தி.க), காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட பலர் அக்கூட்டத்தில் பேசினர். அக்கூட்டத்தில் பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி பேசியதில் இருந்து:

“ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் பொய்வழக்கு சோடனை செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரிக்க ஆரம்பிக்கும் முன் நான் இவ்வாறு சொன்னேன். 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் கைதாகி இருந்தார். அவ்வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக 100 அரசு சாட்சியங்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழக்கை மதுரையிலோ ராமநாதபுரத்திலோ வைத்து நடத்த இயலாத சூழ்நிலை. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்தது. நாடே எதிர்பார்த்த வழக்கு அது. முத்துராமலிங்கத் தேவருக்கு தூக்கு தண்டனைதான் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அரசு தரப்பில் பப்ளிக் ப்ராசிக்யூட்டராக பாரிஸ்டர் எத்திராஜ், எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் ஆஜரானார். அவர் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டார். நீதிபதியைப் பார்த்து, ‘இந்த வழக்கு பொய் வழக்கு. சாட்சிகள் எல்லாம் அரசால் ஜோடிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களில் இருவர் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் ஆவர். எனவே இந்தப் பொய்வழக்கில் இருந்து தேவரை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அரசு தரப்பே அவ்வழக்கைப் பொய் வழக்கு எனச் சொன்னதால் வழக்கு தேவருக்கு ஆதரவாகத் தீர்ப்பானது.. ஆகவே நீதிபதி அவர்களே, எப்படி தேவர் வழக்கை ஜோடித்தார்களோ அதே போல பொய்களால் புனையப்பட்ட இந்த வழக்கினையும் ஜோடிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டும் என நான் வாதாடினேன்”

இப்பேச்சினை அடுத்துப் பேசிய கொளத்தூர் மணி, துரைசாமியின் இந்தக் கருத்தை மறுத்து ஏதும் பேசவில்லை. வைகோவும் இதைக் குறிப்பிடவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, இப்பேச்சின்போது மேடையில்தான் இருந்தார். அவரிடமும் எதிர்ப்பேதும் வரவில்லை.

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்க வந்த தாழ்த்தப்பட்டோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஜெயா அரசு 7 பேர் உயிரைப் பறித்தெடுத்துள்ளது. இதைக் கண்டித்தும் பெரியார் தி.க அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் இவர்களின் மூத்த உறுப்பினரும், நாடறிந்த வழக்கறருமான துரைசாமி இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கையே பொய் வழக்கு என பகிரங்கமாக பேசுகிறார். அதைவிட இந்த வெட்கம் கெட்ட விசயத்தை வைத்து மூவர் தூக்கையும் எதிர்க்கிறார்.

ஆக இம்மானுவேல் சேகரனை பகிரங்கமாக ஆள்வைத்துக் கொன்ற முத்துராமலிங்கத்தை ஒன்னுமே தெரியாத அப்பாவி என்பதுதான் பெ.தி.கவின் நிலைப்பாடா? அது உண்மையெனில் இப்போது பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து அவ்வியக்கத்தினர் பேசுவது நாடகமா? சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கட்டும். என்னதான் சாதி எதிர்ப்பு, தலித் ஆதரவு என்று பேசினாலும் உண்மை என்னவோ இப்படி பச்சையாக வெளிவருகிறதே? பெ.தி.க சுயவிமரிசனம் செய்து கொள்ளுமா? பேசியவரை கண்டிக்குமா? பேசியவரை கண்டிக்காமல் மேடையில் அமைதி காத்த பெருந்தலைகளை கண்டிக்குமா?

அ.தி.மு.க. ஆட்சியில் பரமக்குடி துப்பாக்கிசூடு ///தி.மு.க ஆட்சியில் தாமிரபரணிபடுகொலை...

பரமக்குடி கலவர காட்சிகள்

.....

தாமிரபரணி நதிக் கரையில் நின்று போலீஸ் போட்ட வெறி​யாட்டம் பற்றிய கடந்த

இதழ் கட்டுரையை கடைசி நிமிடத்தில் அச்சேற்றியபோது என்ன பயந்தோமோ... அதுவேதான் நடந்து, தமிழகத்தைப் பெருந்துயரில் ஆழ்த்திவிட்டது!

ஆம்... வெள்ளிக்கிழமை மூன்றாக இருந்த உயிர்ப் பலிகள், 17 ஆக உயர்ந்திருக்கிறது. தேடத் தேட ஆற்றுக்குள் இருந்து கிடைத்த உடல்களைக் கண்டு, நெல்லை நகரமே பதைபதைத்துப்போனது.

திங்கட்கிழமை 'பந்த்' என்று 'புதிய தமிழகம்' முதலில் அறிவித்து இருந்த​போதிலும், நெல்லை வந்து சோகத்தில் பங்கெடுத்த மூப்பனார், ''பந்த் வேண்டாம். இதை ஒரு கறுப்பு தினமாக துக்கம் அனுஷ்டிப்போம்...'' என்று சொல்லிவிட்டார்.

பந்த் என்ற பெயரில் புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள், போலீஸார் மீது தாக்குதல் நடத்திப் பழிவாங்கக்கூடும் என்று பரவியிருந்த அச்சம், இதன் மூலம் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டது.

இறந்த 17 பேரில் 11 பேர் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள். 'வேறு மாநில டாக்டர்களைக்கொண்டு போஸ்ட்​மார்ட்டம் செய்யாவிட்டால், இந்த உடல்களைப் பெற்றுக்கொள்ள மாட்டோம்' என்று அக்கட்சியினர் விடாப்பிடியாகச் சொல்வதால், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், போதிய குளிர்சாதன வசதி இல்லாத மார்ச்சுவரியில் அந்த உடல்கள் 'டீ-கம்போஸ்' ஆகி சிதையத் துவங்கி உள்ளன. இன்னும் இரண்டொரு நாட்களில் உடல்களைப் பெறாவிட்டால், அரசே தகனம் செய்துவிடவும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடக்கிறது.

எதிர்பாராத விதமாக போலீஸ் நிகழ்த்திய இந்தப் படுகொலைகளால், நிலைதடுமாறிப் போயிருக்​கும் தமிழக அரசு, சட்ட அமைச்சர் ஆலடி அருணாவையும் கூடுதல் டி.ஜி.பி-யான குமார​சாமியையும் நெல்லையிலேயே முகாமிடச் செய்து பதற்றம் தணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

நடக்கப்போகும் விசாரணையில், 'எங்கள் மீது தவறு இல்லை' என்று போலீஸ் சொல்லக்கூடும். ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்த நிருபர்களுக்கு இன்னமும் பதற்றம் அடங்கவில்லை.

ஊர்வலத்தினர் தங்கள் மீது கல் எறியத் துவங்கியதும், போலீஸ் அவர்களைத் துரத்தித் தாக்கியபோது தாமிரபரணி தண்ணீர் முழுக்க மனிதத் தலைகள்தான். தண்ணீரில் தத்தளித்தவர்கள் கரைக்கு வர முயல, தண்ணீரிலும் சில போலீஸார் நீண்ட லத்திகளை வீசி மண்டையைப் பிளந்தனர். நீச்சல் தெரிந்த ஆண்களும், சில பெண்களும் மறு கரைக்கு நீந்தித் தப்பித்துவிட, மற்றவர்கள் தண்ணீர் குடித்தே மூழ்கிவிட்டனர்.

தன் கண் முன்னே அடிபட்டவர்கள் தண்ணீருக்குள் மூழ்கிச் சாக, அதிர்ஷ்ட​வசமாக மீண்டு வந்திருக்கும் மாஞ்சோலை டீ எஸ்டேட் பெண் தொழிலாளி விக்டோரியா படபடப்புடன் நம்மிடம் பேசினார். ''நீச்சல் தெரியாத நான் தண்ணீரைக் குடிச்சுட்டே இருந்தேன். மூச்சு வேற வாங்குது. நல்லபடியா ஒரு படிக்கல் கிடச்சப்போ அதைப் பிடிச்சுக்கிட்டேன். அதுக்குள்ள தத்தளிச்ச ஒரு பொண்ணை கேமராக்காரர் குதிச்சுக் காப்பாத்தினார். கட்சிக்காரங்க சிலரும் பெண்களைக் காப்பாத்திக் கரையில் போட்டாங்க. எனக்கும் ஒருத்தர் கை கொடுத்தார். அவரை என் வயித்துல ரெண்டு மூணு முறை இடிக்கச் சொன்னேன். அதுக்கப்புறம்தான் குடிச்சிருந்த தண்ணி எல்லாம் வெளியே வந்து எனக்கு சுவாசிக்கவே முடிஞ்சது!'' என்றார்.

சென்ற இதழில், இரண்டு வயதுக் குழந்தை​யைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்த பெண்ணின் புகைப்படம் வந்திருந்ததே... அந்தப் பெண்மணியைத் தேடிப் பிடித்துப் பேசினோம். மாஞ்சோலையைச் சேர்ந்த அவர் பெயர் பார்வதி. ''முதுகுல அடிபட்ட உடனேயே தண்ணியில குதிச்சுட்டேன். எனக்கு நீச்சல் தெரியும் உடனே நீந்தி கரைக்கு வந்துட்டேன். அப்போ ஒரு பெண் மூழ்கிட்டிருக்க... யாரோ ஒரு ஆள் அவர் கையில் இருந்த குழந்தையைப் பிடுங்கிக் கரைக்குத் தூக்கிப் போட்டார். இதைப் பார்த்த நான் குழந்தையைக் கையில் தாங்கிப் பிடிச்சுக்கிட்டேன். குழந்தை கையில் இருந்ததால், போலீஸ்காரங்க என்னை அடிக்கலை. 'குழந்தையைக் கொண்டுட்டு ஓடுடீ'னு விரட்டினாங்க. அப்புறம் பெண் போலீஸார் வந்து என்னை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்​பினாங்க. போற வழியி​லேயே அந்தக் குழந்தை விக்னேஷ் இறந்துட்டான். இன்னிக்குத்தான் அந்தக் குழந்தையின் தாய் ரத்தினமேரியும் இறந்துட்டாங்கன்னும், அவங்க பாட்டி மேரி என்கிற மாரியம்மாள் ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்துட்டு வர்றதும் தெரிஞ்சது...'' என்று கண் கலங்கினார். குழந்தையின் தந்தை மாரியப்பன், கடந்த மாதம் நடந்த மாஞ்சோலை டீ எஸ்டேட் போராட்டத்தில் கைதாகி திருச்சி சிறையில் இருக்கிறாராம்.

இரண்டாவது நாள் மீட்புப் பணியின்போது, ஐக்கிய ஜமாத் அமைப்பைச் சேர்ந்த கெய்சரின் உடல் கிடைத்தபோது, ஆரூண் எம்.எல்.ஏ. கலங்கிவிட்டார். ஐக்கிய ஜமாத்தின் சென்னை அலுவலகத்தைக் கவனித்தவர் கெய்சர். ராமநாதபுரத்துக்காரர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாம். அவர் அணிந்திருந்த ஒமேகா வாட்ச் உடலோடு சேர்ந்து ஒரு நாள் முழுக்க மூழ்கிக்கிடந்தும் ஓடிக்கொண்டே இருந்தது. அண்மைக் காலமாக ஆர்ப்பாட்டம், ஊர்வலம் எது நடந்தாலும் அவற்றை வீடியோ எடுக்கும் போலீஸார், இந்த முறை ஒன்றுக்கு மூன்றாக கேமராக்களை வைத்து ஊர்வலம், தடியடி எல்லாவற்றையும் 'ஷூட்' பண்ணினார்கள். மதுரையில் இருந்து வந்த தென் மண்டல ஐ.ஜி-யான விபாகர் ஷர்மா இந்த வீடியோ டேப்பைப் போட்டுப் பார்த்து அதிர்ந்துவிட்டார்.

அரணாக நின்று போலீஸாரைச் சுற்றி வளைத்துக்கொண்டு, தலைவர்கள் ஜீப்பை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கும்படி தொண்டர்கள் கோஷம் போடுகிறார்கள். அப்போது யாரோ சிலர் அங்கே நின்றுகொண்டு இருந்த ஒரு பெண் போலீஸைத் தொட போலீஸ் வெறிகொள்கிறது. அங்கே நின்று இருந்தவர்களைக் கலைக்க முதலில் கலவரத் தடுப்புப் படை லத்தியைச் சுழற்றுகிறது. அந்தப் பகுதியில் இருந்து நதிக் கரையை நோக்கி ஓடியவர்கள் கற்களை வீச, போலீஸ் மீதும் எதிர்ப் புறம் நின்ற மக்கள் மீதும் கற்கள் விழுகின்றன. தலைவர்கள் நின்று இருந்த ஜீப் அருகே நின்ற பெண்கள் கூட்டத்தில் இருந்தும் சிலர் போலீஸாரை நோக்கிக் கற்களை வீச, அதன் பிறகுதான் ஒட்டுமொத்தமாக இரண்டாவது கட்டத் தடியடி... போலீஸாரும் கற்களைத் தூக்கி மக்கள் மீது விட்டெறிகிறார்கள். கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்ட அதே நேரத்தில், விண்ணை நோக்கியும் இரண்டு முறை போலீஸார் துப்பாக்கியால் சுடுகிறார்கள். மேலப்பாளையம் நோக்கி விரையும் தலைவர்கள் ஜீப்புக்குப் பின்னாலேயே ஒரு பெண் ஓடுகிறார். அதிரடிப் படையினர் அந்த ஜீப்பை நோக்கியும் கற்களை வீசிய காட்சி வீடியோவில் பதிவாகி இருக்கிறது!

மக்களின் கல்லெறியில் இருந்து தப்ப சுவர் ஏறிக் குதித்து ஓடியும், நெஞ்சில் காயம்பட்டு மயங்கி விழுந்த பெண் போலீஸ் ஒருவர் பி.ஆர்.ஓ அலுவலகத்துக்குள் கொண்டு​செல்லப்பட்டு அவருக்கு முதல் உதவி செய்யப்​பட்டது.

தூத்துக்குடி டி.எஸ்.பி-யான மாரியப்பன் முகத்தில் கல் பட்டு ரத்தம் சொட்ட... இன்னொரு போலீஸ்காரரின் தலையிலும் கல் பட்டு ரத்தம் கொட்டியது. துணை கமிஷனர் சைலேஷ் குமார் யாதவின் கையில் கல்லடி பட்டாலும், கையை உதறிக்கொண்டே திரும்பி, கல் எறியும் போலீஸாரைத் தடுக்கிறார் அந்த வீடியோ காட்சியில். ஐ.ஜி. விபாகர் ஷர்மா இந்த வீடியோ காஸெட்டுகளை அப்படியே காப்பி எடுத்து சென்னைக்கு அனுப்பியதுடன், ''மூன்றாவதாக ஆற்றுக் கரையிலும் ஓடிச் சென்று தடியடி நடத்தாமல் பொறுமை காத்திருந்தால், இத்தனை சாவுகள் நடந்திருக்காதே...'' என்று அதிகாரிகளிடம் கோபம் கொட்டினார். இந்த காஸெட்டுகளை எடிட் பண்ணாமல் அப்படியே கமிஷன் முன்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று த.மா.கா., புதிய தமிழகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசைக் கேட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்த சாவுகள் குறித்து மனித உரிமை கமிஷனுக்கும் புகார் செய்யப்படுகிறது.

கலெக்டர் தனவேல் மற்றும் கமிஷனர் பொறுப்பு வகிக்கும் டி.ஐ.ஜி-யான ராஜேந்திரன் இருவர் மீதும் முக்கியமாகக் குற்றம்சாட்டுகிறார்கள் தொண்டர்கள்.

இதுபற்றி நாம் டி.ஐ.ஜி-யிடம் கேட்ட​போது, ''நான் கமிஷனர் அலுவலகத்​தில் இருந்துகொண்டு, 'மைக்'கை வாட்ச் பண்ணியபடியே இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டுதான் இருந்தேன். அதனால்தான் ஸ்பாட்டுக்கு வர முடியவில்லை. தலைவர்கள் போலீஸ் தடுப்பை மீறிச் செல்ல ஜீப்பைக் கிளப்பியபோது, டென்ஷனான தொண்டர்கள் மறுபக்கமும் சூழ்ந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்ததால்தான், தடியடி நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தலைவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால், இந்தச் சோகம் நிகழ்ந்திருக்காது...'' என்றார்.

ஏற்கெனவே டி.ஐ.ஜி-க்கும் உதவி கமிஷனர் சைலேஷ்குமார் யாதவுக்கும் இருந்து வந்த கருத்து வேறுபாட்டால் இரண்டு பேருமே சரிவரக் கலந்தாலோசித்துச் செயல்படவில்லை. அதனால் வந்த வினைதான் அத்தனையும் என்றும் சிலர் பேசிக்கொள்கிறார்கள். டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கைப்படி நீதி விசார​ணை நடத்தப்பட்டால், டி.ஐ.ஜி. தலை​தான் அதிகம் உருளும் என்கிறது போலீஸ் வட்டாரம்.

மனதைப் பிசையும் கடைசிச் செய்தி: இது வரையிலும் 17 உடல்கள் கிடைத்தாலும் 40 முதல் 50 பேரை இன்னமும் காணவில்லை என்று கிராமப்புறங்களில் இருந்தும் மாஞ்சோலைப் பகுதியில் இருந்தும் தகவல் வந்திருப்பதாக கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் சொல்கிறார். காணாமல் போனவர்களின் பட்டியலையும் தயாரித்துத் தருவதாகச் சொல்லி இருக்கிறார்!

கட்டுரை, படங்கள்: அ.பால்முருகன்

நிருபர்களும் சிக்கினர்!

பத்திரிகை புகைப்படக்காரர்​களுக்குக் கல்வீச்சில் லேசாகக் காயம் ஏற்பட்டதையும் பொருட்படுத்தாது அவர்கள் தடியடியைப் படம் எடுத்துக்​கொண்டு இருக்க, தனியார் டி.வி. நிருபர் ஒருவர் போலீஸாரால் தாக்கப்​பட்டார். தடியடி ஓய்ந்து, ஆற்றில் மூழ்கிய குழந்தையைப் படம் எடுக்கப்போன இன்னொரு பத்திரிகை நிருபரைப் 'படம் எடுக்காதே' என்று சொல்லியபடியே இரண்டு போலீஸார் சுற்றி வளைத்துத் தாக்கியதில், அவரது கேமரா 50 அடி தூரத்தில் பறந்து சென்று விழுந்தது. வயிற்றில் பூட்ஸ் காலால் எட்டி மிதித்தனர். முதுகில் லத்தித் தழும்புகள். பின்பு, அவர்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆக... கலெக்டர், டி.ஐ.ஜி. உட்பட அதிகாரிகள் சென்று பார்த்து, வருத்தம் தெரிவித்தனர்!

பந்த் ரத்தான கதை...

ஞாயிற்றுக்கிழமை நெல்லை வந்த மூப்பனார், பாளையங்​கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவ​மனைக்குச் சென்று உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடைசியாக, ஒன்றரை வயதுச் சிறுவன் விக்னேஷின் உடலுக்கு மலர்வளையம் வைத்தபோது, அவர் கண்கள் கலங்கிவிட்டன.

எம்.ஜி.ஆர். சிலை முதல், தடியடி நடந்த பி.ஆர்.ஓ. அலுவலகம் வரை நடந்தே சென்று பார்த்தார். அங்கு குவிந்துகிடந்த செருப்புகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு, அவசர அவசரமாகத் தண்ணீர்விட்டு கழுவிவிடப்பட்டு இருந்தது. இதைப் பார்த்துக் கொதித்துப்போன மக்கள், ''இங்கே ரத்தக்காடாக் கிடந்தது ஐயா... எல்லாத்தையும் தண்ணி ஊத்திக் கழுவிவிட்டிருக்காங்க...'' என்று கொதிப்புடன் முறையிட்டனர்.

பின்பு, அவர் ஐக்கிய ஜமாத் அமைப்பைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறினார். உயிரிழந்த ஷாநவாஸ் என்பவரின் அம்மா மும்தாஜ் பேகம், ''இப்போதானே ஐயா அவன் சம்பாதிக்க ஆரம்பிச்சான்... அதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சே...'' என்று கண்ணீர்விட்டு அழுதார். விதவையான அவருக்கு இரண்டு பையன்கள். இரண்டாவது பையனுக்குப் 12 வயதுதான் ஆகிறது!

பின்பு நிருபர்களை சந்தித்த மூப்பனார், ''இந்தப் போராட்டத்துக்குச் சாதிச் சாயம் பூசுவது தவறு. இது முழுக்க முழுக்கத் தொழிலாளர் பிரச்னை. ஆகவேதான் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தி இருக்கின்றன. போலீஸாரின் அத்துமீறலுக்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும்...'' என்று கோபம் கொப்பளிக்கச் சொல்ல... உறுதியான தி.மு.க. எதிர்ப்பு நிலையை அவர் எடுத்துவிட்டார் எனப் புரிந்துகொண்டனர் அங்கு இருந்தவர்கள்......