ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 29 ஜனவரி, 2011

தூத்துக்குடியில் சர்ச்சையில் வீரன் சுந்தரலிங்கம் சிலை!






சிலைகளுக்கும் தென்மாவட்டங்களுக்கும் ‘ரத்த’ பந்தம் உண்டு என்பது விவரமறிந்த எல்லாருமே அறிந்ததுதான். அந்த வகையில் இப்போது தூத்துக்குடியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது வீரன் சுந்தரலிங்கம் சிலை. வீரன் சுந்தரலிங்கம், கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவர். சுதந்திரப் போராட்டத்தில் தற்கொலைப் படை வீரராக மாறி, ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை அழித்தது மட்டுமல்லாமல் தன்னையும் நாட்டுக்காக அழித்துக்கொண்டவர்.



தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு, பின் தமிழக அரசால் மூடப்பட்ட வீரன் சுந்தரலிங்கம் சிலையை ஜனவரி 16ம் தேதி உத்தரபிரதேச பகுஜன் சமாஜ் எம்.பி., பிரமோத் குரில் திறந்துவைத்தார். மறுநாளே தமிழக அரசு, சிலைக்கு மீண்டும் சீல் வைக்க… வெடித்திருக்கிறது பிரச்சினை.



இதையடுத்து 17ம் தேதி காலையே அங்கு பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா தலைமையிலான அதிகாரிகள் சிலைக்கு மீண்டும் சீல் வைக்க முயன்றபோது, புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குபேர பாண்டியன் தலைமையில் திரண்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மக்கள் உரிமை இயக்க குழு தலைவர் வக்கீல் அதிசயகுமார் உள்ளிட்டோரும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்கனவே திறந்த சிலையை மீண்டும் மூடி சீல் வைத்தனர் அதிகாரிகள். இதையடுத்து அப்பகுதி மக்கள் சிலை, முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். மேலும் இது தொடர்பாக பிரமோத் குரில் எம்.பி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முதன்மை பொதுச்செயலாளர் ஜீவன்குமார் உள்ளிட்ட 12 பேர் மீது புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முதன்மை பொதுச்செயலாளர் ஜீவன் குமாரிடம் இதுபற்றி பேசினோம். “தமிழகத்தில் தலித் தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டு திறக்கப்படாமலேயே இருப்பது குறித்து எங்கள் தலைவர் மாயாவதிக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதினோம். இந்த நிலையில் தமிழ்நாட்டில் கட்சியின் அமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், திறக்கப்படாமல் உள்ள சிலைகளை திறப்பதற்காகவும் கடந்த 16ம் தேதி தூத்துக்குடிக்கு எம்.பி., பிரமோத் குரில் வருகை தந்தார். அப்போது காசிலிங்கபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு ஏற்பட்டுள்ள அவலத்தை அவரிடம் காட்டினோம். அதற்கு அவர், “தனியார் நிலத்தில் அமைக்கப்பட்ட சிலைகளை திறக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. இந்தியா முழுவதும் காந்தி, நேரு, இந்திராகாந்தி உள்ளிட்டோர்களின் சிலைகள் பெரும்பாலும் அனுமதி பெறாமல் அரசு நிலத்திலேயே உள்ளது. குறிப்பாக, அதிக இடங்களில் காந்தியின் சிலை அனுமதி பெறாமலேயே உள்ளது ” என்று கூறி, அவரே அந்த பகுதி மக்கள் முன்னிலையில் சிலையை திறந்து வைத்தார். அதன் மேல் உள்ள தூசிகளை துடைத்து சிலைக்கு மாலையும் அணிவித்தார்.



இதையடுத்து அவர் மேல் வழக்கு போட்டிருக்கிறது போலீஸ். ராஜ்யசபா எம்.பி.யான பிரமோத்குரில் மீது வழக்கு தொடரவேண்டுமானால் நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். இதையெல்லாம் பின்பற்றவில்லை போலீஸ். இதன் மூலம் இந்த பிரச்சினையை இந்திய அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது தமிழக அரசு. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் எம்.பி.யான பிரமோத் குரில் வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வீரன் சுந்தரலிங்கத்துக்கு நாடாளுமன்ற வளாகத்திலேயே சிலைவைக்க வேண்டுமென்று பேசவுள்ளார்.



தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளமாக உள்ள டாக்டர் அம்பேத்கர், வீரன் சுந்தரலிங்கம், தியாகி இமானுவேல் சேகரன் உள்ளிட்டவர்களின் சிலைகள் இன்னும் தமிழகத்தில் ஏராளமாக திறக்கப்படாமல் உள்ளன. அவற்றை அரசு உடனே திறக்க வேண்டும். இல்லையெனில் பிரமோத் குரில் மீண்டும் வந்து திறக்காமல் உள்ள அனைத்து சிலைகளையும் திறந்து வைப்பார்” என்றார் ஆவேசமாக.



போராட்டத்தில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் குபேர பாண்டியனிடம் பேசினோம். “5 வருடத்திற்கு முன்பு நிறுவப்பட்ட சிலைக்கு அனுமதி இல்லை என்று தி.மு.க. அரசு சீல் வைத்தது. இதற்காக பலமுறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். 2009ல் நடைபெற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலின் போது இந்த பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த துணை முதல்வருக்கு இது தொடர்பாக கறுப்புக்கொடி காட்டினோம். அதையடுத்து, ‘தற்சமயம் தேர்தல் நடக்க உள்ளதால் இந்த சிலையை திறக்க முடியாது. தேர்தல் முடிந்தவுடன் நானே வந்து சிலையை திறந்து வைக்கிறேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். ஆனால், ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பிறகு எங்களை மறந்து விட்டார். ஆனால், இப்போது திறந்த சிலையை தமிழக அரசு மீண்டும் மூடி சீல் வைத்தது தேவேந்திரகுல மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திரகுல மக்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற தி.மு.க. அரசு எங்களை திட்டமிட்டே புறக்கணிக்கிறது. இதற்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டுவோம்” என்றார்.



பிரச்னைக் குறித்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தாவிடம் பேசினோம். “குறிப்பிட்ட அந்த தனியார் இடத்தில் வெண்கலத்தில் சுந்தரலிங்கம் சிலை அமைக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். அது நிலுவையில் உள்ள நிலையில்… அனுமதி இன்றி சிமென்ட் சிலையை திறந்துவிட்டனர். எனவே சிலையை ஏற்கனவே இருந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம்” என்றார்.



தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்கான வழிமுறைகளாக மாறும் சிலைகள்… மற்ற நேரத்தில் அரசு எந்திரத்துக்கு வெண்கலமாகவும், சிமென்ட்டாகவும் தெரிவது வியப்பான வேதனை!

டாக்டர் கிருஷ்ணசாமி தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம்






புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.



புதிய தமிழகம் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடவுள்ளது. கடந்த தேர்தலில் தேவேந்திரர்கள் ஓட்டுகளால் அமோக வெற்றி பெற்ற தி.மு.க., ஆட்சி அமைத்ததிலிருந்து தேவேந்திரர் சமூகத்திற்கு துரோகம் இழைத்ததுதான் மிச்சம். இந்நிலையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ள புதிய தமிழகம் கட்சி எப்படியும் இந்த தேர்தலில் தி.மு.க.விற்கு பதிலடி கொடுக்க தீவிரமாக களமிறங்கியுள்ளது. டாக்டர் கிருஷ்ணசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆலோசனைகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இன்று(27-01-11) தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசித்து வருகிறார். ஒட்டப்பிடாரம், புளியங்குடி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் பிரச்சினை டாக்டர் கிருஷ்ணசாமி

தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் பிரச்சினை குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் கமிசன் குறித்து கருத்து கூறிய டாக்டர் கிருஷ்ணசாமி, ரோஜாவை ரோஜா என்று அழைப்பதற்கு ஒருநபர் கமிசனாம் என்று கூறினார்.




இதுகுறித்து இன்று(28-01-11) ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்கள், புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து கிருஷ்ணசாமி கூறியதாவது:-



தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளான குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகியவற்றை ஒன்றிணைத்து “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. ஏறத்தாழ முப்பது வருடங்களாக வைக்கப்பட்டு வரும் கோரிக்கையாகும். தேவேந்திர குல சமூகத்தின் எந்த இயக்கமானாலும், எந்த கட்சியானாலும் நடத்தும் மாநாடு மற்றும் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் முக்கிய தீர்மானமே இதுவாகத்தான் இருக்கும். குறிப்பாக புதிய தமிழகத்தின் சார்பில் பல்வேறு தருணங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இவ்வளவு காலமும் இருந்திருக்கிறது.



சென்ற சட்டமன்ற தேர்தலில் தேவேந்திரர்களின் வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்ற தி.மு.க. அரசு, ஆட்சியமைந்தவுடன் தேவேந்திரர்களை மறந்தது. தேவேந்திர குலத்தின் மாவீரனான, வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதியும், சுதந்திர போராட்ட வரலாற்றின் முதல் தற்கொலைப் போராளியுமான வீரன் சுந்தரலிங்கத்தை ஆதிதிராவிடர் என்று கூறி அவமானப்படுத்தியதும் தி.மு.க. தலைவர் கருணாநிதிதான். தி.மு.க. அரசில் தேவேந்திரர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் ஏராளம். குறிப்பாக உமாசங்கர் ஐ.ஏ.எஸ். பழிவாங்கப்பட்டது மற்றும் இ.கோட்டைப்பட்டியில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்ற இளைஞர் பலியானது இப்படி கூறிக்கொண்டே போகலாம். சில நாட்களுக்கு முன்னர் கூட தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தில் வைக்கப்பட்டிருந்த வீரன் சுந்தரலிங்கம் சிலையை தமிழக அரசு மூடி சீல் வைத்துள்ளது. இதனால் தேவேந்திர குல மக்கள் தி.மு.க. மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது தேவேந்திரர்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக கருணாநிதியின் முயற்சிதான் இது. 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் கமிசன் அமைக்காத கருணாநிதி, தேர்தல் வருகிறது என்றவுடன் கமிசன் அமைத்து உத்தரவிட்டுள்ளார். கமிசனை தேர்தல் வரை இழுத்தடித்து விட்டு தேவேந்திரர்களை ஏமாற்றி ஓட்டுக்களை பெற்று விடலாம் என்று முதல்வரின் எண்ணம் நிறைவேறாது. ஒரு நபர் கமிசன் அமைக்கப்பட்டது ரோஜாவை ரோஜா என்று அழைக்க கமிசன் அமைப்பது போன்றது. இவ்வாறு அவர் கூறினார்.

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற கோரிக்கை: நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் குழு




செய்திக்குறிப்பில், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும் என்றும்; அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண்டும் என்றும்; தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் ம. தங்கராஜ் அளிக்கப்பட்ட கோரிக்கை கடையநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் மூலமாக தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.



இந்தக் கோரிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில், நிதியமைச்சர் அன்பழகன், உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் ஆ. தமிழரசி, பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், எஸ். பீட்டர் அல்போன்ஸ், எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர், ஆதி திராவிடர் நலத் துறைச் செயலாளர், ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.







இந்தக் கோரிக்கையைச் சட்ட ரீதியாகப் பரிசீலித்து நடைமுறைப்படுத்திட; நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழு அமைத்து, பரிந்துரை பெறலாம் என்று முதல்வர் கலைஞர் இன்று (26 1 2011) ஆணையிட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

புதன், 26 ஜனவரி, 2011

இம்மானுவேல்தேவேந்திரர்






மாவீரர் தியாகி இம்மானுவேல் சேகரனின் 86வது பிறந்த நாளில் அவர் ஆற்றிய சமுதாய பணி.தனி ஒரு மனிதனால் ஏற்படுத்தபட்ட மாற்றங்கள் .தேவேந்திர சொந்தங்களே தேவேந்திர குல வேளாளர் என்ற சமுதாயம் ஏதோ! நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல அது இந்த உலகம் தோன்றிய போதே தோன்றியது .கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய குடி தமிழ் குடி என்பார்கள். தமிழ் குடியில் முதல் குடி (பள்ளு) குடி என்பர். இந்த சமுதாயத்தை பல்வேறு பெயர்களின் மூலம் தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். முற்காலத்தில் இந்த நாட்டை ஆண்ட சமுதாயம் பின்பு படிப்படியாக ஜாதி வெறியாலும் குறு நில மன்னர்களாளும் அவர்களின் எடுபிடிகளாலும் தேவேந்திர குல வேளாளர் மக்களை விவசாய கூலிகளாகவும் பயன்படுத்தி நாளைடைவில் தாழ்த்தப்பட்டவர்களாக்கி ஆளுகின்ற அரசியல்வாதிகளின் அதிகாரத்தின் துணையோடு தீண்டத்தகாதவர்களின் பட்டியலில் சேர்த்தார்கள். தேவேந்திர குல மக்கள் இந்த நாட்டில் சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ முடியாத சூழ்நிலை பல நூறு வருடங்களாக நிலவி வந்தது.







இராமநாதபுரம் மாவட்டத்தின் காங்கிரஸ் கூட்டங்களை எல்லாம் 'தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டங்களாக' மாற்றிய பெருமை இம்மானுவேலைச் சாரும். மாவீரன் இம்மானுவேல் மேடைகளில் பேசினால் அனல்பறக்கும். கேட்பவர் இரத்தம் கொதிக்கும்; அந்த அளவிற்கு மேடைப் பேச்சிலேயே வீரஉணர்வூட்டுவார்.'நாய்கள் கூட குளத்தில் சுதந்திரமாக தண்ணீர் குடிக்கிறது. ஆனால்/ தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் குடிக்க முடிவதில்லை. இந்த இழிநிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது' என்று வீரமுழக்கமிட்டார்.அவர் காலத்தில் இருந்த அரசியல்வாதிகளைப் போல வார்த்தைஜாலங்களாலும் வெற்று ஆரவாரத்தாலும் பாமர மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேடவில்லை. எதையும் நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசுகின்ற நெஞ்சுறுதி அவரிடம் இருந்தது. அதே நேரத்தில் பிறரை அநாகரீகமாகவோ/ தரக்குறைவாகவோ பேசியதுமில்லை.இவருடன் எப்போதும் இளைஞர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்; கிராமங்களில் கூட்டம் நடத்தும் போது அவருடன் பல கிராமங்களுக்குச் சென்று வருவார்கள். குறிப்பாக அவருடன் பல ஊர்களில் மக்கள் பணி செய்தவர்கள்.



இம்மானுவேல் காண்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வசீகரத் தோற்றமுடையவர். எளிமையான வாழ்க்கையும்/ இனிய சுபாவமும் அவரை மக்களுடன் நெருக்கமாக பிணைத்தது. கணீரென்று சத்தமாகத்தான் எப்போதும் பேசுவார். எதற்கும் அஞ்சாதவர்/ பிரச்சனைகளை துணிச்சலுடன் அணுகும் மனோதிடம் அவரிடம் இயல்பிலேயே இருந்தது. குற்றமிழைத்தவர்கள் யாரானாலும் நேருக்கு நேர் சந்தித்து தவறை சுட்டிக் காட்டும் அஞ்சாநெஞ்சமுள்ளவர்.



1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.



இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.



"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார்.



ஒரு புரட்சியாளரை உருவாக்கிய வீடு.



இம்மானுவேல் சேகரனார் வாழ்ந்த வீடு இன்றளவும் பாழ் அடைந்த நிலையில் தான் மணல் மேடாக காட்சி அளிக்கிறது. அவரின் மறைவுக்குப் பிறகு யாரும் அந்த வீடு பக்கமே செல்லவில்லை. தேர்தல் நேரத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் ஓட்டுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பெயரளவில் மட்டுமே இம்மானுவேல் சேகரனாரின் பெயரையும் உருவ படங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.





தமிழகத்தில் சுமார் நூறுக்கும் மேற்ப்பட்ட தேவேந்திர குல சமுதாய அமைப்புகள் பல்வேறு தலைவர்களின் தலைமையின் கீழ் இயங்குகிறது. ஒரு கோடிக்கும் மேல் தேவேந்திரர்கள் இருந்தும் அவர் மறைந்து 53வருடங்களாகியும் அவர் வாழ்ந்த சிறு வீட்டை கூட நம்மால் பேணி நினைவுச் சின்னமாக பாதுகாக்க முடியவில்லை.



அவரது பெயரையும் உருவப் படத்தையும் பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் பணம் சம்பாதிப்பதற்காகவும் மக்கள் மத்தியில் ஆதரவு பெறுவதற்காகவும் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.சுய நல நோக்கத்தில் அரசியல் லாபத்திற்காக இந்த புரட்சியாளரைப் பயன்படுத்துகின்றனர்.



இந்த நிலை மாற வேண்டும். தேவேந்திர குல சமுதாய மக்களை அறியாமை என்னும் இருளில் இருந்து விழிப்படைய செய்ய வேண்டும். சுய நல சமுதாய போலி தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு இன்றைய இளைஞர்களின் கையில் தான் உள்ளது. தமிழகத்திலேயே பயமறியா இளைஞர்களை கொண்ட சமுதாயம் நம் சமுதாயம்.



ஆகவே நம்மால் அனைத்தும் சாத்தியமே. மாற்று அரசியல் கட்சிகளுக்கும் சுய நல அமைப்புகளுக்கும் பின்னால் அணி திரள்வதை விட்டு விட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சமுதாய உணர்வாளர்களையும் இளைஞகர்ளையும் ஒரு குடையின் கீழ் ஒற்றூமையாக அணி திரட்டி சமுதாய தியாகிகளின் கனவுகளை நினைவாக்குவோம்.



பல்வேறு சமுதாய தலைவர்கள் வாழ்ந்த வீடுகளை எல்லாம் அதை சார்ந்தவர்கள் நினைவுச் சின்னமாக பாதுகாத்து வரும் போது நமக்காக போராடி உயிர் நீத்த புரட்சியாளர் இமமானுவேல் சேகரனாரின் வீடு மட்டும் இன்றும் மணல் மேடாக செல்லூரில் காட்சியளிக்கிறது. இது ஒட்டு மொத்த தேவேந்திரர்களுக்கும் அவமானச் சின்னம்.

புரட்சியாளரின் வீட்டைக் கட்டி எழுப்பி அதை நினைவு இல்லமாக பாதுகாக்கவும் வருங்கால சந்ததியினருக்கு இவரின் வரலாற்றை அறியவும் வழி வகை செய்ய வேண்டும். தியாகி பிறந்த புனித இல்லத்தை ஒரு அழியா வரலாற்றுச் சின்னமாக கட்டி எழுப்ப வேண்டியது ஒவ்வொறு தேவேந்திரகளின் கடமை ஆகும்.

சனி, 22 ஜனவரி, 2011

தேவேந்திர குல மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கம் சிலை திறப்பு:எம்.பி. மீது வழக்கு!


தூத்துக்குடி அருகே சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் சுந்தரலிங்கம் சிலை திறந்த உ.பி., பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., பிரமோத் குரில் உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகேயுள்ள காசிலிங்கபுரத்தில் அக்கிராமக்கள் சார்பாக, கடந்த ஐந்து ஆண்டிற்கு முன், வீரன் சுந்தரலிங்கம் சிலை நிறுவப்பட்டது. சிமின்ட்டால் ஆன அந்த சிலையை நிறுவவோ, திறக்கவோ மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. அதைமீறி, அப்போது திறக்கப்பட்ட அச்சிலையை, அதிகாரிகள் சீல்வைத்து மூடினர். இதனையடுத்து தனியார் இடத்தில் உள்ள அந்த சிலை திறக்க அனுமதி வேண்டி கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் முயற்சித்து வருகின்றனர்.





மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம், துணைமுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி என பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். திருவைகுண்டம் இடைத் தேர்தலின்போது அக்கிராமத்திற்கு வருகை தந்த துணை முதல்வர் 'தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில் அரசு சார்பில் சிலை திறப்பு விழா நடத்தப்படும்' என அறிவித்தார். இதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஒருமுறை தமிழக முதல்வர் கருணாநிதியையும், இரண்டு முறை துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.



இந்நிலையில், பொங்கல் விழாவுக்காக இந்த கிராமத்திற்கு வந்த, உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி ராஜ்யசபா எம்.பி., பிரமோத்குரில், கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து அச்சிலையை திறந்துவைத்தார். அரசின் முறையான அனுமதி பெறாமல் சிலை திறக்கப்பட்டது குறித்து, சிங்கத்தாகுறிச்சி வி.ஏ.ஓ., பேச்சிமுத்து, புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக, பிரமோத் குரில் எம்.பி., பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலர் ஜீவன்குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்ட இளைஞர் செயலாளர் குபேந்திரன், காசிலிங்கபுரம் செல்வம், மகாராஜன், கந்தன்பெருமாள், அழகுதுரை, வக்கீல் அதிசயக்குமார் உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.











காசிலிங்கபுரம் வந்த ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரா, போலீஸ் ஏ.டி.எஸ்.பி.,ராஜராஜன், மணியாச்சி டி.எஸ்.பி. நாராயணன் ஆகியோர், அனுமதியின்றி சிலை திறக்கப்பட்டது தவறு என, கிராமத்தினரிடம் விளக்கினர். மக்கள் பெரும் திரளாக கூடி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





வெண்கல சிலை நிறுவி, மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதிபெற்று, அதன்பின் அச்சிலையை திறந்து கொள்ளுமாறு வலியுறுத்திய தாசில்தார் சந்திரா திறக்கப்பட்ட சிலை போலீஸ் பாதுகாப்புடன் துணிபோட்டு மூடப்பட்டது. சிலைக்கு சீல்வைக்கப்பட்டதைக்கண்டித்து, அக்கிராமத்தினர் அதன் அருகே அமர்ந்து தொடர் உன்னாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கிராமத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவுகின்றது.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கமுதி அருகே தேவேந்திரர்- மறவர்களிடையே மோதல்

கமுதி அருகே தேவேந்திரர்- மறவர்களிடையே மோதல்



கமுதி அருகே தேவேந்திரர்- மறவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன் அவர்கள் கடந்த 26ம் தேதி முதல் கட்சி பிரசாரக கூட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தி வருகிறார். இந்நிலையில், 30-12-2010 அன்று கமுதியிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் மண்டலமாணிக்கம் என்ற இடத்தைக் கடந்து பச்சேரி என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜான் பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், மண்டல மாணிக்கத்தைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கல், கம்பு போன்றவற்றால் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில், பதட்டத்தைத் தடுக்க போலீசார் தடியடி மற்றும் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். கமுதி டி.எஸ்.பி., தில்லை நடராஜன் தலைமையிலான போலீசார் இருதரப்பினருக்கிடையே சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பிப். 27ல் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்க மாநில மாநாடு

பிப். 27ல் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்க மாநில மாநாடு






அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்க மாநில மாநாடு மதுரையில் பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இது குறித்து சங்க நிறுவனத்தலைவர் பெ.ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-



தேவேந்திரகுல மக்களும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் அரசியல் அதிகாரத்தை முழுமையான அளவில் பெற்றிடவும், இந்த சமூக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கிலும், சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளாக பிரிந்து கிடக்கின்ற தேவேந்திரகுல இன அமைப்புகளும், தாழ்த்தப்பட்ட இன அமைப்புகளும், தலைவர்களும் ஒரே அணியில் சேர்ந்து நாம் தமிழ்சாதிகள் என்று தமிழக அரசுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது தேர்தலுக்கான கூட்டம் அல்ல? சிதறிக்கிடக்கும் அமைப்புகளை ஒன்று சேர்க்கும் பணியாகும். இந்த தலைவர்களை ஒருங்கிணைக்க ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் டாக்டர் கிருஷ்ணசாமி, பசுபதிபாண்டியன், திருமாவளவன் மற்றும் சில தலைவர்களை அழைத்து பேசுவோம். இதைத்தொடர்ந்து வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி மதுரையில் அகில இந்திய தேவேந்திர குலவேளாளர் முன்னேற்ற சங்கம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் அனைத்து அமைப்புகளின் தலைவர்களையும் அழைக்க உள்ளோம்.



சமுதாயத்திற்கு உரிய கொடியை முன்னோர்கள் 1805-ம் ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த கொடியை அரசியல் கொடியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் நேரத்தில் தான் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவுசெய்வோம். போட்டியிடுவது குறித்து கட்சி பொதுக்குழுவில் தான் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவு செய்வோம். தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.



மருத்துவ கவுன்சில் நுழைவுத் தேர்வை ரத்து செய்யவேண்டும். பெட்ரோல் விலை உயாவை ரத்து செய்யவேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும். அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது குறித்து தற்போது கருத்து சொல்ல விரும்பவில்லை. இதுகுறித்து முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவேன். ஸ்டெக்ரம் 2-ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் சாதி தடையில்லை. பள்ளமடை குளத்திற்கு தண்ணீ­ர் விட அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜனவரி 15-ந்தேதி பழனி கோவிலில் நடைபெறுகின்ற மண்டகபடி விழாவில் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கத்தினர் திரளாக கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன் மீது குண்டு வீசி தாக்குதல்

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன் மீது குண்டு வீசி தாக்குதல்













தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன். இவர் கடந்த மூன்று நாட்களாக கட்சி பிரசாரம் கூட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தி வருகிறார்.



இந்நிலையில், இன்று கமுதியிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் மண்டலமாணிக்கம் என்ற இடத்தைக் கடந்து கச்சேரி என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டது.





அப்போது, ஜான் பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், மண்டல மாணிக்கத்தைச் சேர்ந்த ஒரு சமுதாயத்தினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கல், கம்பு போன்றவற்றால் தாக்கிக் கொண்டனர்.







இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில், பதட்டத்தைத் தடுக்க போலீசார் தடியடி மற்றும் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். கமுதி போலீசார் இருதரப்பினருக்கிடையே சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் பதட்டம் நீடிக்கிறது.

ராமநாதபுரம்மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவி வருகிறது. சாதிக்கலவரம் நடக்காமல் இருக்க அங்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது



பஸ் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் ராமநாதபுரத்தில் இருந்து எந்த விதமான பஸ்சும் வெளிமாவட்டங்களுக்கு செல்லவில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்சும் ராமநாதபுரத்திற்கு வரவில்லை .



வன்முறை ஏதும் ஏற்படாமல் தடுக்க எல்லா இடத்திலும் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது. 1,000க்கும்அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அவர்கள் தொடர்ந்து ரோந்து பணியிலும்ஈடுபட்டு வருகிறார்கள்

உமாசங்கர் சஸ்பெண்ட்-உமாசங்கர் பிறந்த சமுதாயத்தின் எழுச்சி அரசை பின் வாங்க வைத்தது!

உமாசங்கர் சஸ்பெண்ட்-உமாசங்கர் பிறந்த சமுதாயத்தின் எழுச்சி அரசை பின் வாங்க வைத்தது!










'நாங்கள் ஆட்சியாளர்களுக்கு அடிமை இல்லை!' என்பதை நிரூபித்தவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர். அ.தி.மு.க. ஆட்சியில் சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்பதால், கருணாநிதி அரசு அள்ளி அரவணைத்தது. குடும்பச் சிக்கலால் உருவான அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் உள்ளிட்ட சில பொறுப்புகளில் உட்காரவைக்கப்பட்டார். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் காட்டிய அதே நேர்மையை இப்போதும் காட்டியதால், ஆளும் கட்சிக்கு எதிரியானார். விளைவு..? உமாசங்கர் சஸ்பெண்ட். முதல் எதிரியாக நினைத்த ஜெயலலிதாவே உமாசங்கருக்கு ஆதரவாக அனல் கக்கினார். மனித உரிமை ஆதரவாளர்களும், உமாசங்கர் பிறந்த சமுதாயத்தின் எழுச்சியும் அரசை பின் வாங்க வைத்தது!

இரும்பு மனிதன்! ---உமாசங்கர் ஐ.ஏ.எஸ்

இரும்பு மனிதன்! ---உமாசங்கர் ஐ.ஏ.எஸ்


நேர்மை ஐ.ஏ.எஸ்.,





இரும்பு மனிதன்! அதிகார அரசியலுக்கு வளைந்துகொடுக்கும் நாணல்களே அரசு அதிகாரிகள் என்பதைப் பொய்ப்பித்த உறுதி உமாசங்கரின் அடையாளம். 'நான் நன்றாகப் படித்து இருந்தால், ஐ.ஏ.எஸ்., ஆகி, அமைச்ச ரின் கார் கதவைத் திறந்துவிட்டுக்கொண்டு இருந்திருப்பேன்!' என்று ஓர் அமைச்சர் திருவாய் மலர்ந்த அதே சமயத்தில், முரண்டு பிடித்த தமிழக முதல் அமைச்சரைத் தன் வழிக்குக் கொண்டுவந்த 'சாமான்ய' ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அ.தி.மு.க-வின் 91-96 ஆட்சிக் காலத்தில் சுடுகாட்டுக் கொட்டகை ஊழலுக்குச் சிதை மூட்டியது உமாசங்கரின் முதல் ஹிட். தொடர்ந்த தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி தான் பிறந்த திருவாரூரைப் புதிய மாவட்டமாக அறிவித்தபோது, இவரைத்தான் அங்கு ஆட்சியராக அமர்த்தினார். அடுத்த அ.தி.மு.க ஐந்தாண்டு ஆட்சிக் காலம் முழுக்க சேலத்தில் அமைதி வாசம். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எல்காட், கேபிள் டி.வி. கார்ப்பரேஷன், சிறுசேமிப்புத் துறை போன்ற பந்தாட்டங்களைத் தொடர்ந்து, உமாசங்கரைத் தற்காலிகமாகப் பணிநீக்கியது தமிழக அரசு. 'வளைந்து கொடுக்காதது, இஷ்டத்துக்கு இயங்காதது' போன்றவை காரணங்களாக உலவின. உமாசங்கருக்கு ஆதரவாக சென்னை முதல் நெல்லை வரை ஆர்பாட்டங்கள், கருத்தரங்கங்கள் என்று ஆதர வுக் குரல்கள் அரசின் கழுத்தை நெரித்தன. 'தேர்தல் நேரம்' என்று தயங்கினார்களோ, 'நேர்மையாளன்' என்று உணர்ந்தார்களோ உமாசங்கருக்கு மீண்டும் பதவி தரப்பட்டது. சாதித்துக் காட்டினார் உமாசங்கர்!

திங்கள், 3 ஜனவரி, 2011

டிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சி வீர வணக்கம் -டாக்டர்.க.கிருஷ்ணசாமி வேண்டுகோள்

புதிய தமிழகம் கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-





இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும் சமுதாய பொருளாதார ஏற்ற தாழ்வுகள் நீக்கப்படவில்லை. பிறந்த நாட்டில் மூன்று செண்ட் வீட்டு மனையோ, ஒரு ஏக்கர் நிலமோ கூட சொந்தமாக இல்லாமல் இன்னமும் வறிய நிலையில் வாழ்வோர் எண்ணற்றோர்.





இந்த நிலை போக்க எத்தனையோ போராட்டங்கள் நடந்தி இருப்பினும். 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தஞ்சை மண்ணாம் கீழ வெண்மணியில் நடந்த துயர சம்பவத்தை யாராலும் மறக்க இயலாது.





உழைத்த உழைப்பிற்க்கு அரைப்பிடி நெல் கூடுதலாக கேட்டதற்காக முதியோர், பெண்கள், குழந்தைகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் 44 பேர் ஒரே குடிசையில் அடைத்து கொளுத்தப்பட்ட துயர சம்பவம் நடந்த நாள் அது.





தியாகம் புரிந்தவர்கள் விவசாய தொழிலாளர்கள் எனினும் அவர்கள் அனைவரும் வீரம் செறிந்த வேளாண் குடிமக்கள் என்ற சமூக அடையாளம் அறவே மறைக்கப்பட்டுவிட்டது.



அம்மக்களின் அளப்பரிய தியாகத்தை போற்றும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக எனது தலைமையில் கீழவெண்மணி கிராமத்தில் அவர்கள் நினைவிடத்தில் டிசம்பர் 25ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் அஞ்சலி நடைபெறும். அதேபோல அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதிய தமிழகம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சார்பாக நினைவஞ்சலி நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன்.