தி.மு.க.வின் மாநில, மாவட்ட மற்றும் மாநகர இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் கோவை சின்னியம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இளை ஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான இக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விமானம் மூலம் கோவை வந்த மு.க.ஸ்டாலின், கோவை குனியமுத்தூரில் உள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வீட்டுக்குச் சென்றார். பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் திருச்சியில் நடைபெறவுள்ள கட்சியின் 10-வது மாநில மாநாட்டுக்கான அழைப்பிதழை, கிருஷ்ணசாமியிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்சியில் நடைபெறவுள்ள தி.மு.க. மாநில மாநாட்டுக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து அழைக்க வேண்டுமென்ற தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளின்படி, வந்துள்ளேன். கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இதேபோல மாநாட்டுக்கு அழைப்பு விடுக் கப்படுகிறது என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து கேட்டபோது, தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி அமைக்கும் பொறுப்பு தே.மு.தி.க.விடமே உள்ளது. இது குறித்து அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். எங்களுடன் புதிய தமிழகம் கட்சி இணைந்து தேர்தலை சந்திக்கிறது என்றார்.
மதுரையில் தி.மு.க மன்றங்கள் கலைக் கப்பட்டு, நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனரே என்று கேட்டதற்கு, இதுகுறித்து பத்திரிகை களில்தான் செய்தி வந்துள்ளது. அதைப்பற்றி நான் பேச எதுவுமில்லை என்றார்.