“இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என் மீது வெறுப்புக் கொள்ளாது; வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட, நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்; பாராட்டாவிட்டாலும் இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மான வாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள் சரியாகவோ, தப்பாகவோ, நான் அதில் உறுதி கொண்டிருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும் மனக்குறையின்றி, நிறைமனதுடன் அனுபவிப்பேன் – சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகின்றேன். [பெரியார், ´தமிழர் தலைவர்´ என்னும் நூலில் இருந்து... பக்கம்:15] என்ற உறுதியோடு சமூகபோராளியாக வாழ்ந்து எழுத்தையும், சொல்லையும், செயலில் வெளிக்கொணர்ந்து 95-வயது வரை தமிழர்களுக்காக சளைக்காது போராடிய சமூகப் போராளி பெரியாரின் சொற்கள் என்றும் தமிழர்களை ஏமாற்றிய புரட்டு சொற்களாக இருந்ததில்லை. யாருக்கும் எதற்கும் அஞ்சாது சாகும்வரையில் உண்மையாய், கொண்ட கொள்கையின் மீது உறுதியாய் நின்று உரத்த சிம்மக் குரலாக இருந்த பெரியார் மீது, ´நான் பெரியாரின் பேரன்´ என்று சொல்லிக் கொண்டே அவதூறு சொற்களை கொட்ட ஆரம்பித்திருக்கிறார். சீமான்.[1]
“இல்லாத திராவிட இன உணர்வை நமக்குக்காட்டி அதற்காக அரசியல் செய்ய பல்வேறு இயக்கங்கள் இங்கே இருக்கின்றது. ஆனால் உண்மையிலேயே நீயும் நானும் திராவிடனா?” என்னும் கேள்வியை எழுப்புகிறார் சீமான்.
பெ.தி.க சமூக அமைப்பு சார்பாக நடைப்பெற்ற இருபதுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் ´நான் இனத்தால் திராவிடன்´[2][காண்க: 01:03 நொடியில்] என வீரமுழக்கம் செய்திருந்த சீமானுக்கு ´திராவிடன்´ குறித்து கேள்வி எழுப்பும் யோக்கியதை இருக்கிறதா? பெரியாரை விமர்சிக்கும் யோக்கியதை இருக்கிறதா?
நாளொரு தத்துவமும், பொழுதொரு உளறலுமாக ஓட்டு பொறுக்கியாகும் சீமானுடைய முன்னாள் திராவிடம் என்பது எது? இதற்கு என்ன விளக்கம் வைத்திருந்தார்/ வைத்திருக்கிறார்/ வைத்திருக்கப்போகிறார்?
சமீபத்தில் ´இந்தியன் ரிப்போர்ட்டர்´ செப்டம்பர், 2009-இதழில் கூட “திராவிடம் என்பது இப்போது திராவகம் ஆகிவிட்டது” என்ற கருத்தை வைத்திருந்தார்.
மொத்தத்தில் திராவிடம் பேசியே தமிழன் உருப்படாமல் போய்விட்டான் என்று புலம்பும் சீமானின் திராவிடம் குறித்த புரிதல் எந்த நிலையை கொண்டது?
´ஜனகணமன´ என வங்காள மொழியில் பாடப்படும் இந்திய தேசீயகீத பாடலை முழுவதுமாக பாடிப்பாருங்கள்.
சிந்துநதி பாயும் நாட்டைச் சிந்து என்றும், கங்கை நதி பாயும் நாட்டைக் கங்கா என்றும், யமுனை நதி பாயும் நாட்டை யமுனா என்றும், உத்திரபிரதேசத்தையும், பீகார் மற்றும் ஒரிசாவை உத்கல் என்றும், தான் பிறந்த தாயகமான வங்காளத்தை வங்கம் என்றும் எழுதிய உலகம் மதிக்கத்தக்க மேதையான ´இரவீந்திரநாத் தாகூர்´ தேசிய கீதத்தில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கன்னடம் மாநிலங்களை தனித்தனியாக வைத்து ஏன் தேசீயகீதம் இயற்றவில்லை. நான்கு மாநிலத்தையும் சேர்த்து திராவிடம் என்றே ஏன் இரவீந்திரநாத் தாகூர் எழுதி வைத்தார் தேசீயகீதத்தில்….
1922-இல் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் இருந்து 400-கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிந்து மாகாணத்தில், சிந்து ஆற்றின் அருகே தொல்லியலாளர்களால் ´மொகஞ்சதாரோ´ நகரம் கண்டிபிடிக்கப்பட்ட போது வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதன் மொத்த அளவு 53.000-மைல்கள். இதில் இராஜஸ்தானிலுள்ள ´கலிபங்கன்´ என்னும் இடத்திலும், குஜராத்திலுள்ள லோதால் என்னும் இடத்திலும் வாழ்ந்த பண்டைய மக்களை ஆராய்ச்சியாளர்கள் ´திராவிடர்கள்´ என்று குறிப்பிட்டிருக்கின்றனர். ´மொகஞ்சதாரோ´ கால மக்களை திராவிடர்கள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட என்ன காரணம்?[3]
“ஆரியர்- திராவிடர் உண்மை” என்ற நூலில் திராவிடர்கள் என்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியதை பெரியார் தொகுத்திருக்கிறார்.[4]
அம்பேத்கர் ´ஆரியர் திராவிடர்´ குறித்து பல நூல்களை ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறார்.
ஆனால் சீமானோ, “நான் தமிழனா? திராவிடனா? என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்” என்கிறார்.
இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால், திராவிடன் என்ற இனத்தை இல்லாத திராவிடமாகவோ, திராவகமாகவோ அறிவிக்க என்ன ஆதாரம் இருக்கிறது சீமானிடம் என்கின்ற கேள்வியை எழுப்பும் கடமை எமக்கிருக்கிறது.
வரலாறு தெரியாமல் பேசும் சீமானின் குழப்பவாதங்களுக்கு திராவிடமும், பெரியாரியமும் கேலிக்குரியதாக ஆக எம்மால் அனுமதிக்க முடியாது.
எப்போது ஒரு கருத்து குறித்து விமர்சிக்க முற்படுகின்றோமோ அவை குறித்து விரிவான விளக்கங்களையும் கொடுப்பதுதான் பண்பாளனின் நடத்தைக்கு அழகு.
நினைத்தால் “நான் திராவிடன் என்பதும், மற்றொரு முறை எவன் திராவிடன்? எங்கே இருக்கிறது திராவிடம்?” என்பதும், “சாதி ஒழிய வேண்டும்” என்பதும், “சாதியை மறந்து தமிழர்களாய் ஒன்றுபடுங்கள்” என்பதுமாக சகிக்க முடியாத வசனங்களுடன் தொடர்ச்சியான கருத்துத் தடுமாற்றங்களுடன் நிதானம் இல்லாமல் உளற ஆரம்பித்திருக்கிறார் தம்பி சீமான்.
கடைசியாக கனடா நாட்டிற்கு மாவீரர் தினத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த போது பேசிய வசனங்களில் விசாரணைக்கு கனடா நாட்டு போலீசாரால் உட்படுத்தப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்ற…
“சனியன் தலைவார ஆரம்பித்தால் சடை போட்டு பொட்டும், பூவும் வைக்காமல் போகாது” என்பது போல….
தமிழ்நாட்டுக்கு வந்த கையோடு, “என்னை கனடாவில் விலங்கு போட்டு கைது செய்து நாடு கடத்தினர் என அடுக்கடுக்காக பொய்யுரை பரப்பி அரசியல் நடத்த முயலும் சீமானுக்கு…
பெரியாரை விமர்சிக்க யோக்கியதை இருக்கிறதா? ஏற்கனவோ நாம் கனடா கைது குறித்து சீமானின் மோசடியை ஆடியோ கேசட் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருந்தோம்.[5][காண்க: 2:03 நொடியில் இவ்வாசகம் ஆடியோவில் வருகிறது]
இனி ´திராவிடம்´ குறித்து தம்பி சீமான் பேசுவதற்கு முன் வரலாறு குறித்து யோசிப்பாரா?
2
அண்மையில் பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு சீமான் மாலை போட்டதும், அது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “அந்த மக்களுக்காகப் போராடிய முத்துராமலிங்கத்தை ஏன் போராளியாக பார்க்க மறுக்கிறீர்கள்”" என அபத்தமான வாதத்தை முன்வைத்ததும் நாம் மறந்துவிட முடியாது. தற்போது மேலும் ஓர் அபத்தமான வாதத்தை வைத்திருக்கிறார்.
“குற்றப்பரம்பரைச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை மீட்கப் போராடியவரை போராளி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?” என்னும் கேள்வியை சமீபத்தில் கீற்று இணையதளத்தில் வைத்திருக்கிறார் தம்பி சீமான்.
பிழைப்புவாத அரசியல்போக்கு இப்படித்தான் திமிரான போக்குடன் வெளிப்படும்.
இதே இணையத்தளத்தில் தான் [கீற்று] முன்பு பசும்பொன் முத்துராமலிங்கம் குறித்து விமர்சனம் வைத்தபோது சீமான்….
“தம்பி திரைப்படத்தில் முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான் என்று கூழைக்கும்பிடு போட்டார்.[6]
இப்போதோ முத்துராமலிங்கத்தை ஏன் போராளியாக பார்க்க மறுக்கிறீர்கள் என்கிறார்.
இதற்காக மீண்டும் அறியாமல் செய்த பிழையென ´வசனம்´ பேசமாட்டார் என நம்புகிறோம்.
1957-சூலை, 10-அன்று திருப்புவனம் புதூரில் முத்துராமலிங்கம் பேசும்போது ‘காங்கிரசாரின் அராஜகம் எல்லை மீறிவிட்டது; காஷ்மீருக்குப் பதிலாக முதுகுளத்தூரில் இருந்துதான் மூன்றாம் உலகப் போரைத் தொடங்க வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார்.
காரணம் அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராசருடன் முரண்பாடுகள் இருந்தது.
முத்துராமலிங்கத்தின் வார்த்தைகள் எப்போதும் வன்முறையை தூண்டி சாதிச் சண்டையை உருவாக்கும் போக்காகவே இருந்திருக்கிறது என்பதற்கு இவை போன்ற வசனங்களே இன்றைய தலைமுறையினருக்கு சாட்சியாக இருக்கிறது.
இவைப்போன்ற ´சுயசாதி வன்முறையாளர்´கள் தான் போராளிகளா?
முதுகுளத்தூர் கலவரத்தின் வரலாறு தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் முத்துராமலிங்கத்தை ஒரு மனிதராக கூட கருதமாட்டார்கள் என்பதே நிதர்சனமாக இருக்கும் போது ஏன் போராளியாக பார்க்க வேண்டும் என்கிறார் சீமான்.
தேவரை போராளியாக பார்க்க வேண்டிய அவசியம் நமக்கெதற்கு? நாம் என்ன ஓட்டுப்பொறுக்கிகளா? ஓட்டு போடுகிறவர்களா?
ஜே.ஜீவபாரதி என்பவர் பல ஆதாரங்களுடன் எழுதிய நூல்களான,
-தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர்,
-பசும்பொன் தேவரின் கட்டுரைகள்,
-சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர்,
-பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும்,
-பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்,
-சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு,
போன்ற நூல்களில் ஆதாரங்களுடன் முத்துராமலிங்கத்தின் ஜாதிவெறி உணர்வை அம்பலப்படுத்தி இருக்கிறார். அவற்றை படித்தால் முத்துராமலிங்கம் போராளியா? ஜாதி வெறியரா? என்பதை நாம் உணர முடியும்.
யார் இந்த தினகரன்?
முஷ்டக் குறிச்சி கிராமத்தில் தேவர் சமுகத்தைச் சேர்ந்த தினகரன் அன்னியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு அய்ந்து ஆண்டுகள் சிறை தண்டனை அடைந்தவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கும் தினகரன் தன் பெயரில் ´தினகரன் நாளிதழை´ உருவாக்கி சமூக – அரசியல் விமர்சனங்களை எழுதியவர். அவர் சொல்கிறார்:
“கலகத்திற்கு வித்திட்ட வகுப்பிலும், நிலத்திலும் உதித்தவன் நான் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயந்தான்”
இந்த அறிவிப்பை 1957-இல் இமானுவேல் படுகொலை செய்யப்பட்ட பிறகும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சாதிப்போரில் ஏற்பட்ட பல உயிர் இழப்புக்களுக்கு பிறகு 1958-இல் ´முதுகுளத்தூர் கலவரம்´ என்னும் சிறு நூலை தினகரன் பல ஆதாரங்களுடன் எழுதினார்.
தம் சாதியைச் சேர்ந்தவர்களை முத்துராமலிங்கம் வன்முறையில் ஈடுபடுத்துவதும், ஆதிக்க உணர்வோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தினருடன் பகைமையோடு இருப்பதும், அவர்கள் மீது வன்முறையையும், அடக்குமுறையையும் கையாண்டதைக் கண்டு மனம் வெதும்பி கூறினார் தினகரன்.
´தினகரன் நாளிதழில்´ முதுகுளத்தூர் கலவரம் குறித்து தினகரன் எழுதிய தொடர்ச்சியான கட்டுரைகளுடன் முத்துராமலிங்கத்தை கிண்டல் செய்தும், கேலி சித்திரத்துடன் வந்துக் கொண்டிருந்த கட்டுரைகளைக் கண்டு தேவர் சமூகம் கொதிப்படைந்தது.
நம் சாதியைச் சேர்ந்த ஒருவன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பேசுவதோடு அல்லாமல் தேவரை கேலி செய்வதா? என ஆத்திரங்கொண்டு, தினகரனை பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தது.
இச்சம்பவம் 1958-இல் நடந்தது.
முதுகுளத்தூர் கலவரம் நூலில் தினகரன், முத்துராமலிங்கம் குறித்து கூறிய சம்பவங்களில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.
*முஸ்லிம் வீடுகளை தேவர்கள் தாக்கிய வழக்கில் தீர்ப்பு நகல் தனக்கு தரப்படாததால், முதுகுளத்தூர் சப் மாஜிஸ்திரேட் பிரம்மநாயகம் (பிள்ளை)யை படுகொலை செய்தார்.
*1928-இல் இருந்து அரசுக்கு வரி செலுத்தாததால், தான் அபகரித்த நிலத்தை ஏலம் விட்டதற்காக கமுதி உதவி தாசில்தார் சிதம்பர (முதலியார்) காலை வெட்டினார்.
*1937-இல் நடந்த தேர்தலில் ராமநாதபுரம் ராஜாவுக்கு தேர்தல் வேலை செய்ததற்காக கமுதி உதவி தாசில்தார் நாகராஜய்யரை தாக்கினார்.
மேலும் முத்துராமலிங்கம் தன் சாதி மக்களை பகுத்தறிவு சிந்தனையை நோக்கி கொண்டு செல்லாமல் வெட்டு, குத்து, கொலை, வன்முறை கொண்டு அடக்கு. அதுவே நமக்கு தீர்வு என பெரும்பான்மையான கல்வி அறிவு அற்ற சமூகத்தை தன் தேவைக்கேற்றபடி ஆட்டுவிக்கும் போக்கைக்கண்டு முத்துராமலிங்கம் மீது கண்டங்களை வைக்கிறார் தினகரன்.
3
முதுகுளத்தூர் கலவரம் ஏற்படக் காரணம் என்ன?
தினகரன் எழுதிய நூலில் இருந்து ஆதாரங்களுடன் சில சம்பவங்களை பாருங்கள்:
´காடமங்குளம்´ என்னும் இடத்தைச் சேர்ந்த ஒன்பது தாழ்த்தப்பட்டவர்கள் ஒரே இரவில் காணவில்லை என்பதும், அவர்கள் தேவர் இனத்தை சேர்ந்தவர்களால் தூக்கிச் செல்லப்பட்டு பத்ரகாளிக்கு பலி கொடுக்கப்பட்டதாக தொடங்குகிறது சம்பவங்கள்.
1957-இல் தாழ்த்தப்பட்ட மக்கள் பலிகொடுக்கப்பட்ட சம்பவம் தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பாக பேசப்பட வைத்தவர் இமானுவேல்.
நாயைக் காணோம், ஆட்டைக் காணோம், மாட்டைக் காணோம் என்பது போல் முத்துராமலிங்கத்திற்க்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் பேசினால் காணாமல் போய் கொண்டிருந்தார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களும் என்ன செய்வதென்று தெரியாமல் முத்துராமலிங்கத்தின் அராஜகத்திற்கு பொறுத்துக் கொண்டும், அனுசரித்துக் கொண்டும் இருந்த காலம்.[7][8]
கிட்டத்தட்ட 1925-இல் இருந்து 30-வருடங்களாக முத்துராமலிங்கத்திற்க்கு எதிராக ஒரு குரல் கூட கொடுத்திராத காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இமானுவேல் 1953-ஆம் ஆண்டில், “ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின்” தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு” நடத்தியதும், 1954-ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களை நடத்தியதும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குள் ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. நமக்கும் ஒரு தலைவன் இருக்கிறான் என்னும் போக்கு தங்கள் மீது அநீதி நடக்கும் போதெல்லாம் தட்டி கேட்க வைத்தது.
´காடமங்குளம்´ சம்பவமும் அப்படித்தான் இமானுவேலால் தட்டி கேட்கப்பட்டது. எம் இன மக்களில் ஒரே இரவில் 9-பேர்களை காணவில்லை. தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் தூக்கிச் சென்றார்கள் என்பதற்கு சாட்சிகள் உள்ளன. விசாரணை நடத்துங்கள்! என்று ராமநாதபுரம் ஆட்சித் தலைவரிடம் முறையிடு செய்கிறார்.
பஞ்சாயத்தில் பொதுமக்கள் முண்ணனியில் குற்றவாளியாக நிற்க வைக்கப்பட்டு முத்துராமலிங்கம் விசாரிக்கப்பட்டு அவரிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது.
பலநூறு ஆண்டுகளாக தங்களுக்கு அடிமை வேலைகளை செய்துக் கொண்டு தாழ்த்தி வைக்கப்பட்டிருந்த சமூகம் இன்று தங்கள் சமூகத்திற்கு எதிராக விசாரணைக்கு கொண்டு சென்று முத்துராமலிங்கத்தை குற்றவாளியாக நிற்க வைத்திருக்கிறதே என தேவர் சமூகம் கொதிக்கிறது.
இச்சம்பவம் நடந்து மறுநாள் 1957-செப்டம்பர் 11-இரவு ஒன்பதரை மணிக்கு பரமக்குடி பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் இமானுவேல் படுகொலை செய்யப்படுகிறார். அப்போது இமானுவேல் வயது 33.
இச்சம்பவம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தேவர் சமூகத்திற்கும் பெரும் மோதலை உருவாக்க காரணமாகியது.
முதுகுளத்தூர் கலவரம் குறித்து விடுதலை நாளேட்டில் (8.10.1957) விரிவாக கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பெரியாரும் காங்கிரசும் இருந்தது. காமராசரிடம் முத்துராமலிங்கம் கைது செய்ய வேண்டும் என்று பெரியார் குறிப்பிட்டிருக்கிறார்.[9][10][11][12][13]
இப்படி தாழ்த்தப்பட்டவர்களிடம் சர்வாதிகாரியாக இருந்தவர் எப்படி போராளியாக இருக்கக்கூடும்?
சீமான் சொல்கிறார், “குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கப் போராடிய முத்துராமலிங்கம் ஏன் போராளியாக இருக்கக்கூடாது” என்று.
குற்றப்பரம்பரை சட்டம் நீக்கப்பாடுபட்ட முத்துராமலிங்கம் தம் இன உயர்வுக்கு மட்டுமே அச்சட்டத்தை உபயோகப்படுத்த முற்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்களிடம் தொடர்சியான ஆதிக்க மனோபாவத்துடனே இருந்திருக்கிறார் என்பதற்கு முதுகுளத்தூர் கலவரம் சாட்சி. அவரை எதிர்ப்பவர்களுக்கெல்லாம் என்ன நடக்கும் என்பதற்கு தினகரன் படுகொலை சாட்சி!
இப்போது சொல்லச் சொல்லுங்கள் சீமானை….
குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கிய முத்துராமலிங்கம் போராளி என்றால் 1953-ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு” நடத்தியதும், 1954- ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களை நடத்தியதும் தம் இன மக்களின் விடுதலைக்கும், உரிமைக்கும் போராடிய இளைஞன் இமானுவேல் முழு நேர சமூகப் போராளியாக பாடுபட்ட போராளி இல்லையா?
சீமான், இமானுவேல் கல்லறைக்கும் மாலை போட்டு மரியாதை செய்கிறோம். முத்துராமலிங்கம் சிலைக்கும் மாலை போட்டு மரியாதை செய்கிறோம் என்கிறார். ஆனால் ஏன் முத்துராமலிங்கம் மட்டும் போராளி என்கிறார்? முத்துராமலிங்கம் போல் இமானுவேலும் போராளியே என்று சொல்ல வேண்டியது தானே!
சமீபத்தில் தோழர் கொளத்தூர் மணி இமானுவேல் சேகரனைக் கொன்ற “குற்றவாளிகளை கைது செய்து சிறையில் வைக்கவில்லையென்றால் நான் நேரடியாக போராட தெருவில் இறங்குவேன்” என்று அறிவிப்பு செய்திருக்கிறார்.[14]
இதை சீமான் ஆதரிப்பாரா?
அதேபோல் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தையும் பெ.தி.க நடத்த இருக்கிறது. தமிழின அமைப்புகள் ஈழ ஆதரவுப் போராட்டங்களில் பெரியார் திராவிடர் கழகத்தோடு இணைந்து போராடின. ஆனால் தமிழகம் முழுவதும் இரட்டை டம்ளரை எதிர்த்து பெரியார் திக போராடியபோது தமிழின அமைப்புகள் ஒன்றுகூட ஆதரவு தரவில்லையே ஏன்?
அந்த நிலைப்பாட்டை தான் சீமானும் எடுப்பார் என்றால் சாட்சாத் சீமான் ஓட்டுப்பொறுக்கியே என்பதில் சந்தேகம் இல்லை.
“முற்போக்குவாதிகள் என்று சொல்பவர்கள் காலகாலத்திற்கும் சாதிரீதியிலான பகையை வளர்க்க விரும்பும் பிற்போக்குவாதிகளா என்று இப்போராட்டத்தைக் குறித்து கேள்வி எழுப்புவாரா சீமான்?
கடைசியாக ஒன்று….
சிறைக்கு செல்லும் முன் பெ.தி.க அமைப்பு மேடைகளில் தன்னை பகுத்தறிவாதியாகவும், பெரியாரின் பேரனாகவும், நான் இனத்தால் திராவிடன் என்ற அடையாளத்துடனும், அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும், சாதிகள் ஒழிய வேண்டும், சமத்துவம் பெருக வேண்டும் என்றும், வசனம் பேசிக் கொண்டிருந்த சீமான் சிறையில் இருந்து வெளிவந்த பின் ஞானம் வந்து தன்னுடைய அமைப்பை அரசியல் கட்சியாக அறிவிக்கிறார். தன்னை திராவிடன் இல்லை என்கிறார். சாதிகளை வைத்துக் கொண்டு இன்னும் மாரடிக்க வேண்டுமா? அதை பேசாமல் இருந்தால் தானாக ஒழிந்துவிடுமென்கிறார். ஜாதி அரசியலுக்குள் நுழைகிறார், பெரியாரை விமர்சிக்கிறார், திராவிடத்தால் என்ன கிழித்தோம் என்கிறார்.
சீமான் ஓர் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெரியார் இறுதியாக நடத்திய நிகழ்வின் பெயர்
“தமிழர் சமூதாய இழிவு ஒழிப்பு மாநாடு” 08-12-1973-ல் சென்னை பெரியார் திடலில் நடத்தியது.
தமிழர் சமூதாய இழிவில் முக்கியமான சாதியை தவீர்த்து தமிழ் தேசியம் பேசுவது என்பது தமிழர் நலன் சார்புடையவை இல்லை. சந்தர்ப்பவாதிகளின் அரசியல் ஓட்டுபொறுக்கிகள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு களமாகத்தான் இருக்க முடியும்.
அதுவும் தேவர் ஜெயந்தி அன்று ஜெவில் இருந்து கருணாநிதி வரை தமிழக அரசியல்வாதிகள் மொத்தமும் தேவருக்கு மாலைப்போடுவது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களாகிய தேவர் சாதிகளின் ஓட்டுக்களை பொறுக்க நடக்கும் போட்டியே என்பது அனுபவமுள்ளவர்கள் அறியும் செய்தியே.
இந்த ஓட்டுப் பொறுக்கிகளுக்கு தான் சமுகப்போராளியான பெரியாரை விமர்சிக்க யோக்கியதை இல்லை என்கிறோம்.
1945-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் நாள் ´குடிஅரசு´ இதழில் கருப்புச்சட்டைப் படை அமைப்பு என்பதற்காக ஓர் அறிவிப்பை பெரியார் வெளியிட்டார். அப்போது கருப்புச்சட்டைப் படையின் முதல் தொண்டராக கலைஞர் தன்னைப் பதிவு செய்து கொண்டார். ஆனால் கருப்புச்சட்டை இன்று மஞ்சள் துண்டாகி போனது வேறு சங்கதியாக இருந்தாலும் அந்த கலைஞருக்கே பெரியாரை விமர்சிக்கும் தகுதி இல்லையென்கிறோம்.
இன்றைக்கு வந்த பிஸ்கோத்து எல்லாம் பெரியாரை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது என்று நாம் கேட்கவில்லை. பெரியாரை விமர்சிக்கலாம். ஆனால் பெரியாரின் வரலாற்றை முழுவதுமாக தெரிந்துக் கொண்டு புரட்டுத்தனம் பண்ணாமல் விமர்சனம் செய்யுங்கள் என்றுதான் கோருகிறோம்.
திராவிடத்தை மட்டும் பேசிவிட்டு செல்லவில்லை பெரியார். தமிழர்களுக்காக நடத்திய போராட்டங்களை ஒருமுறை வாசித்துவிட்டு உங்கள் கேள்விகளை எழுப்புங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக