ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 26 ஜூன், 2011

ஸ்டெர்லைட் கழிவுகளால் கோரம்பள்ளம் குளம் மாசுபடுகிறது: டாக்டர் கிருஷ்ணசாமி






புதிய தமிழகம் கட்சி நிறுவனரும் ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:





மக்கள் விரோத திமுக ஆட்சியை திரண்டெழுந்து விரட்டிய தமிழக மக்களுக்கு நன்றி கூறும் விதமாகவும், உள்ளாட்சி தேர்தல்களில் புதிய தமிழகம் போட்டியிடுவது குறித்தும் கட்சியின் மாநில மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக கட்சியின் மாநில பொதுக்குழு வரும் 25, 26ம் தேதிகளில் சங்கரன்கோவிலில் நடைபெற உள்ளது.





இதில், மாநிலம் முழுவதிலும் இருந்து 1200 பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். தற்போதைய வறுமைகோட்டிற்கு கீழுள்ளோர் உள்ளோர் பட்டியல் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும். புதிய அரசு அறிவித்துள்ள முதியோர், விதவை, உடல் ஊனமுற்றோர் சலுகைகளைப் பெற புதிதாக வறுமைகோட்டிற்கு கீழுள்ளோர் பட்டியல் எடுக்க அரசு உத்தரவிட வேண்டும்.





சமச்சீர் கல்வி அமலாக்குவதைவிட அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக கொண்டுவர அரசு முன்வர வேண்டும். உலக வெப்பமயமாதல் காரணமாக சீதோஷ்ணநிலை மாறி, மனிதர்கள் வாழ தகுதியில்லாததாகிவிட்டது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.





ஸ்டெர்லைட் ஆலை காற்று, நீர், நிலம் ஆகியவற்றை மாசுபடுத்துகிறது. புதுக்கோட்டை பகுதியில் ஸ்டெர்லைட் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் கோரம்பள்ளம் குளத்தின் தண்ணீர் மாசுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். நீர், நிலம், காற்று மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமைய வேண்டும்.





இத்தகைய தொழிற்சாலைகள் தங்கது தேவைக்காக நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. இதற்காக ஓட்டப்பிடாரம் தொகுதியில் எனது வேண்டுகோளுக்கு இணங்க அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இந்து பாரத் போன்ற தொழிற்சாலைகள் அரசின் அனுமதி கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளது.





மாவட்ட ஆட்சியர் இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று நான் வலியுறுத்தியுள்ளேன். 7.5 லட்சம் லிட்டர் தண்ணீருக்கு அனுமதி கேட்டு 7.5கோடி லிட்டர் தண்ணீரை அவர்கள் உறிஞ்சுகிறார்கள். தொழிற்சாலைகள் கடல்நீரை நன்னீராக மாற்றி தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.





தூத்துக்குடி-திருநெல்வேலி மாவட்டங்களுக்கு கழிக்கப்பட்ட பஸ்களே இயங்குகிறது. புதிய பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பஸ்கள் அறிவிக்கப்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்வதில்லை. தனியார் பஸ் நிர்வாகிகள் பயணிகளை அடியாட்கள் கொண்டு மிரட்டுகிறார்கள். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக