ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்!சாதி ஆதிக்கஅரசியல் ஒத்தூதும் அரசு!!

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!
இந்தியத் துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் அன்னியருக்கு எதிராக முதன்முதலாக ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டது சின்னமருதுதான். நான்கு மொழிகள் தெரியும்.கி.பி 1801- அக்டோபர் மாதம் 24ஆம்தேதி  பகல்பொழுது – இன்றைய சிவகங்கை மாவட்டம், திருப்பத்துர் நகரின் பேருந்து நிலையம், எதிர்புறம் நினைவுச்சின்னம் அமைந்துள்ள முச்சந்தியில் பெரியமருதுவும், அவரது தம்பி சின்னமருது என்று அழைக்கப்படுகிற சின்னப்பாண்டியனும் துக்கிலிடப்பட்டார்கள்.
அவர்களோடு சிறைப்பிடிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட அவரது உறவினர்களான நுற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். அன்றும் அதன் பின்னரும் பிரிட்டிஷாரால் கொலை செய்யப்பட்டவர்கள் மட்டும் சுமார் ஐநுறுபேர்களுக்கும் மேல் இருக்கும். தமிழக வரலாற்றில் அதற்கு முன்னரும், பின்னரும் நடந்திராத ஒரு கொடூர நிகழ்ச்சி அது.
24ஆம் தேதி துக்கிலிடப்பட்டு இரண்டு நாட்களாகத் தொங்கவிடப்பட்டிருந்த மருதிருவர்களின் உடல்கள் 27ஆம் தேதி கீழிறக்கப்பட்டது. அவர்களது தலைகள் துண்டிக்கப்பட்டு இன்று குருபூசை நடக்கிற காளையார்கோவில் கோவிலின் முன்பாக உள்ள சிறிய அறைக்குள் அடக்கம் செய்யப்பட்டது.
சற்று நேரம் நினைத்தாலுமே நெஞ்சைக் கீறிவிடுகிற இந்தத் துயரத்திற்கு அந்த மாவீரர்களை தள்ளிவிடக் காரணமாக இருந்தது இரண்டு விசயங்கள்.
  1. மருதிருவர்களின் விடுதலைப் போராட்டத் தன்மான உணர்வு.
  2. ஆங்கிலேய அடிவருடி புதுக்கோட்டைத் தொண்டைமான் கும்பலின் துரோகம். (ஆங்கிலேயருக்கு எழுதிய கடிதத்தில் சின்னமருதுவை நாய் எனத் திட்டுகிறான் துரோகி தொண்டைமான்.)
இந்தியத் துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் அன்னியருக்கு எதிராக முதன்முதலாக ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டது சின்னமருதுதான். நான்கு மொழிகள் தெரியும் அவனுக்கு. ஏழைமக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கும்பினியாரை எதிர்த்துப் போராடவேண்டும் என முழங்கியவன் அவன்.  உடம்பில் ஐரோப்பியரத்தம் ஓடாதவர்கள் எனது பேச்சைக் கேட்பார்களாக என்று அழைத்தான். ஆங்கிலேயருக்கு சேவகம் செய்பவர்கள் ஈனப்பிறவிகள் என்றான். கும்பினி ஆட்சி நமது நாட்டைப் பஞ்சத்திலும், பசியிலும் தள்ளிவிடும் என எச்சரித்தான். கும்பினியை இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே விரட்டியடிக்க சாதி மத பேதமின்றி ஒன்றுதிரள வேண்டும் என அறைகூவினான்.
தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றைப் படிக்க நினைப்பவர்கள் முதலில் சின்னமருதுவின் ஜம்புத்தீவுப் பிரகடனம் 1801-லிருந்து துவங்குகள். நீங்கள் அதை அவசியம் படிக்க வேண்டும். காரணம், வரலாறு மீண்டும் திரும்புகிறது. 1990ல் இந்தியா கையெழுத்திட்ட காட்-டங்கல் ஒப்பந்தம் தன்னைப் பன்னாட்டு நிறுவனங்களின் அடிமையாக ஒப்புக் கொடுத்துவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் நலன்களுக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற திட்டத்தை ஏற்றுக் கொண்டு இந்தியாவின் கதவுகளை அகலத் திறந்து வைத்து அள்ளிச் செல்லுங்கள் எனச் சொல்லி வீசும் எலும்பைக் கவ்வக் காத்திருக்கும் நாய்களைப் போல மண்டியிட்டுக் கிடக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.
அன்றைய காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய மருதிருவர்களின் தன்மானமும், வீரமும், நாட்டுப்பற்றும் இன்றும் நமக்குத் தேவைப்படுகிறது. அடிமைத்தனத்தை மாற்றம் (Change) வளர்ச்சி (Development) என்று சொல்லி, மறைத்துப் பேசும் கோழைத்தனம் கொண்டவர்களாக இந்திய இளைஞர்கள் வடிவமைக்கப்படும் இந்நேரத்தில் மருதிருவர்களின் வீரம் நமக்கு ஒரு வழிகாட்டியாகும் தகுதியுள்ளதாக இருக்கிறது. நம்மை தன்மானம் உள்ளவர்களாக மாற்றக் கூடிய சக்தியுள்ளதாகவும் இருக்கிறது.
ஆனால் இதற்கும் மருதுபாண்டியர் குருபூசைக்கும் மயிரளவும் தொடர்பில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் இந்த குருபூசைக் கலாச்சாரம் சிவகங்கையில் தொடங்கப்பட்டது. சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், சாதி உணர்வை, சாதிவெறியாக மாற்றவும் பசும்பொன்னில் குருபூசை நடைபெறுகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளின் உரிமைக்கான குரல் எழுப்புதலில் படுகொலை செய்யப்பட்ட இமானுவேல் சேகரனாரின் நினைவை ஏந்தி ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலை உணர்வைப் பிரதிபலித்து பரமக்குடியில் குருபூசை நடைபெறுகிறது. இவ்விரண்டும் சமப்படுத்த முடியாத குருபூஜைகள்தான்.
என்றாலும் மருதிருவர்களின் குருபூசை என்பது முழுக்க, ஓட்டுக்கட்சி அரசியலில் நுழைந்து பதவி சுகத்தை அனுபவிக்கவும் மக்கள் பணத்தைச் சுருட்டவும் முடியாமல் ஏங்கித்திரியும் சாதிய அமைப்புகளால் பரபரப்பாக நடத்தப்படுகிற குருபூசையாகும். தேர்தல் காலம் அல்லாததால் இம்முறை நடந்த விதம் இதை விளக்கமாக வெளிப்படுத்துகிறது.
துயரமான முடிவிற்கு மருதிருவர்களை வெகுவிரைவாக அழைத்துச்சென்ற புதுக்கோட்டை துரோகி தொண்டைமானின் துரோகத்தின் பங்காளிக்கூட்டத்தினர்தான் இன்று மருதிருவர்களின் குருபூசைக்கு அணிதிரளுகிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கம் படம் பொறித்த மஞ்சள் கொடிகளும், தேவர் வாழ்க! தேவர் படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா! பனமரத்துக்கே வவ்வாலா! தேவருக்கே சவாலா! என்கிற முழக்கங்களும் இம்முறை அகமுடையார் சாதியினரை விடவும் வெகு அதிகமாகவே வெளித்தெரிந்தன.
மருதிருவர்களின், தன்மானத்தையும், வீரத்தையும், நாட்டுப்பற்றையும் தூசி அளவுகூட சிந்தனையில் கொள்ளாத இந்த வெற்றுச் சாதி வெறி ஆரவாரகும்பல்தான் போதையிலே கூச்சலிடுகிறது, கும்மாளமிடுகிறது. ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த போலீசோ, கத்தி ஓய்ந்துபோன கும்பலை அடித்துவிரட்டுவதைப் போல பாவனை செய்து முறுக்கேற்றிவிடுகிறது. வழியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடங்கள் இல்லதாதால் ஒரு தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்தின் கண்ணாடிகள் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.
தனியார் பேருந்துகள் தங்களது போக்குவரத்தை நிறுத்திக் கொண்டாலும், அரசு பேருந்தின் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் பேருந்துகளை துணிச்சலாக எடுத்துச் சென்றனர். இருப்பினும் உடைக்கப்பட்ட பேருந்துகளைக் கொஞ்சமும் கவனியாமல் திரிந்தது போலீசு. இதனால் அதிருப்தி அடைந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இரவு 7மணிக்கு மேல் பேருந்துகளை எடுக்க மறுத்து முறையிட்டனர். கிராமங்களுக்குச் செல்லும் பலபேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. மதுரை போகும் தனியார் பேருந்துகள் மேலூர் வழியாகச் சென்றன. ஊர் திரும்ப முடியாமல் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பொதுமக்கள் பலரும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் போலீசும், அரசும் இது குறித்து கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
மேற்கே உசிலம்பட்டியைத் தாண்டியும், தெற்கே முதுகுளத்துரைத் தாண்டியும், கிழக்கே திருவாடனையைத் தாண்டியும், உள்ள கிராமங்களிலிருந்து நுற்றுக்கணக்கான இளைஞர்கள் வாகனங்களிலேயே வரவழைக்கப்பட்டிருந்தனர். தொடர் ஜோதி ஓட்டம் பலபகுதிகளிலிருந்தும் வந்தன. மஞ்சளும், பச்சையும், இணைந்த வண்ணங்களில் அவர்களின் சீருடைகள் இருந்தன. மூவேந்தர் முன்னேற்றக் கழக டாக்டர். சேதுராமனின் சங்கக் கொடியும், ஸ்ரீதர் வாண்டையாரின் சங்கக் கொடியும் கட்டிய வாகனங்கள் தான் அதிகமாகச் சென்றன. அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரசு கொடிகள் கட்டிய கார்கள் ஒன்றிரண்டே சென்றன. சென்ற வருடம் தேர்தல் காலம் ஆகையால் ஓட்டுக் கட்சிகளின் கொடிகள் கட்டிய கார்களும், ஒட்டுக்கட்சிகளின் தலைவர்களின் வருகையுமே மிக அதிகமாக இருந்தது.
நகரங்களில் நுழைந்தவுடன் சமீபத்தியச் சினிமா பாணியிலான ஆபாசக்  குத்தாட்டம் போட்டுக்கொண்டே இளைஞர்கள் ஊர்வலமாய் வந்தனர்.  ஆனால் ஊர்வலத்தில் மூ.மு.கவினரோ, முக்குலத்தோர் வாழ்க என கோசம் போட்டுக் கொண்டு ஆடினர்.
இந்தக் குருபூசையின் பேரைச் சொல்லி கோடிக்கணக்கான ரூபாய்கள் நன்கொடையாகத் திரட்டப்பட்டுள்ளது. அவற்றில் சிறிதளவு மட்டும் செலவு செய்யப்பட்டு (டீசல், உணவு, வாடகை, சாராயம்) மீதம் அப்படியே சுருட்டப்படுகிறது. பெரிய சங்கங்கள் முதல் கல்லுரி மாணவர்கள் வரை இதுதான் நிலை. சாதி, பிழைப்புவாதிகளுக்கான தொழிலாகப் பயன்படுவதை இதிலிருந்தும நாம் அறியலாம். சாதியின் பெயரால் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளுக்கான திருவிழாவாக மருதிருவர்கள் குருபூசை நடக்கிறது. அந்த வீரமிக்க   மருதுபாண்டியர்களை இதைவிடக் கேவலப் படுத்தக் கூடியது வேறு எதுவும் இல்லை
வரும் ஆண்டுகளில் முறுகல், மோதல் எனத் துவங்கி பின்னர் பெரிய கலவரங்களும் நடைபெறலாம். எதிர்காலத்தில் அப்படியொரு நிலையை உருவாக்க சாதிய அமைப்புகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியொரு பகைச் சூழ்நிலையும், பீதியும் மக்களிடையே நிலவவேண்டுமென்று ஆடு நனைவதைப் பார்த்து அழும் ஓநாய் போல அரசாங்கமும் ஆர்வத்தோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வருகிறது.
இதைத்தடுக்க மருதிருவர்களின் வரலாற்றை அறிந்து, அன்னியமோகம் எனும் அடிமைப்புத்தியைச் சுட்டெரித்து, மறுகாலனி ஆதிக்கத்திற்கு எதிராய் போராட, மருதிருவர்களின் பெயரால் மக்களை அழைக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக