தஞ்சை, மார்ச். 15-
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல பிரிவுகளாக உள்ள முத்தரையர் சங்கங்களை ஒன்று கூட்டி ஒரே அணியில் திரட்டி மக்களுக்கு, சமுதாயத்திற்கு தொண்டு செய்ய முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம் பாடுபட்டு வருகிறது. அவர்களுக்கு ஆலோசனை, அறிவுரை வழங்க வந்துள்ளேன்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம். அங்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஆளும் கட்சியால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அதனால் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
இடைத்தேர்தலில் தனித்து நிற்பது சாத்தியம் இல்லை. கூட்டணி சேர்ந்தால் தான் வெற்றி பெறும். தி.மு.க., ம.தி.மு.க. ஓட்டுக்கள் தான் வாங்கும். வெற்றி பெற முடியாது.
தமிழகத்தில் நிலவும் மின்தடைக்கு மத்திய அரசு தான் காரணம். கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் மின்சாரம் கொடுத்தது. ஆனால் அ.தி.மு.க. அரசுக்கு மத்திய அரசு உதவாமல் பாரபட்சமாக நடந்து வருகிறது. மத்திய அரசு கொடுத்தால் தான் மின் தடை நீங்கும். எனவே தமிழகத்தில் மின் தடையை நீக்க மத்திய அரசை கேட்பதோடு மட்டும் அல்லாமல் தமிழக மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியாவது தமிழக அரசு மின்தட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியில் என்கவுன்ட்டர்கள், பரமக்குடி சம்பவம் போன்றவை வருந்தத்தக்கது. பரமக்குடி சம்பவத்திற்கு அதிகாரிகள் திட்டமிட்டு செய்த சதி தான் காரணம். என்கவுன்ட்டர் நடத்தக்கூடாது. குற்றம் செய்தவர்களை நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.காவல்துறை துப்பாக்கிசூடு நடத்துவதை கண்டிக்கிறோம்.
இலங்கை தமிழர்களை அழித்த ராஜபக்சே அரசை கலைத்து விட்டு ராஜபக்சேவை சிறையில் வைக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். இதில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்க பொது செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக