ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஜூலை 24: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வ.புதுப்பட்டி கிராமத்தில் சுமார் 20
ஆண்டுகளாக இருதரப்பு மக்களிடையே நீடித்து வரும் மோதல் போக்கிற்கு தீர்வு
காண்பதற்கான சமாதானக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது. இந்த மோதல்களைத் தடுத்து நிறுத்தி இரு சமூக மக்களிடையே
நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியில் சமூகச் செயற்பாட்டாளர்கள்,
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள் அடங்கிய
அமைதிக் குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழு கடந்த ஒரு மாதமாக ஒடுக்கப்பட்ட
சமூக இயக்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியது. அதனடிப்படையில் இக் கூட்டம்
நடத்தப்பட்டது.யாக்கன் தலைமையிலான இந்தக் குழுவில் சென்னை உயர்
நீதிமன்ற வழக்குரைஞர் மற்றும் சாதி ஒழிப்பும் முன்னணி அமைப்பாளர்
ரஜினிகாந்த், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் மற்றும் அம்பேத்கர் மக்கள்
விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் தமிழ்இனியன், சென்னை உயர் நீதிமன்ற
வழக்குரைஞர் சத்திய சந்தீபன், தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன்,
குருஞானக் கல்லூரி பேராசிரியர் ஜெயகணேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.மேலும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தமிழக மக்கள்
முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டின், தியாகி இமானுவேல் பேரவையின் பொதுச்
செயலாளர் சந்திரபோஸ் மற்றும் குறிப்பிட்ட சமுதாயத்தின் வ.புதுப்பட்டி
பகுதி மக்கள் தலா இருவர் கலந்து கொண்டனர்.முடிவில் மூன்று தலைவர்களும் சேர்ந்து விடுத்த கூட்டறிக்கை:வ.புதுப்பட்டி
கிராமத்தில் பட்டியல் சாதியினராகிய பறையர், பள்ளர் சமுதாய மக்களிடையே
நீண்ட காலமாக நடந்துவரும் மோதல்கள் எங்களை வேதனையடையச் செய்துள்ளன. தொடர்
மோதல்களுக்குப் பின்னால், தீர்க்கவே முடியாத சிக்கல்கள் இருப்பதாகத்
தெரியவில்லை. சிறு பிரச்னைகளே கலவரங்களுக்கு அடிப்படைக் காரணங்களாக
அமைந்திருக்கின்றன. தொடர் மோதல்களினால், இரு சமுதாயத்தைச் சேர்ந்த
ஆண்கள், பெண்கள், மாணவர்கள் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள்
பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் இரு சமூக மக்களின் கல்வி, பொருளாதார
வளர்ச்சி பெரிதும் தடைப்பட்டுள்ளது.எனவே வ.புதுப்பட்டி கிராமத்தில்
வசிக்கும் பட்டியல் சாதி மக்கள், பழைய பகைமை உணர்வுகளை விட்டொழித்து, மோதல்
மனப்பான்மையைக் கைவிட்டு அமைதியாகவும், ஒற்றுமை உணர்வுடனும் வாழ வேண்டும்
என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இரு சமூக மக்கள் மீதும்
தொடரப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசையும்,
காவல் துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்கிறோம் என்று
கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் கலந்து கொண்ட
தென்காசி மக்களவை உறுப்பினர் பொ.லிங்கம், சட்டப் பேரவை உறுப்பினர்
வெ.பொன்னுப்பாண்டியன் உள்ளிட்டோரும் கையொப்பமிட்டனர்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக