ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

இமானுவேல் சேகரன், ஒண்டிவீரன் குருபூஜைகளுக்கு வெளியூரிலிருந்து வர அனுமதிக்க முடியாது

சென்னை: இமானுவேல் சேகரன், ஒண்டிவீரன் குருபூஜைகளில் கலந்துகொள்ள வெளியூர் களிலிருந்து வாகனங்களில் மக்கள் வர அனுமதிக்கக்  கோரி தொடரப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மறைந்த தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், சுதந்திரபோராட்ட தியாகிகள் போன்றவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் குரு பூஜைகள் என்ற பெயரில் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் உள்ள நெற்கட்டும் செவலில் பூலித்தேவனுக்கும், நெற்கட்டும் செவல் அருகே உள்ள கிராமத்தில் ஒண்டிவீரனுக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கும் குருபூஜைகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பூஜைகளில் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வருவார்கள். இந்த குருபூஜைகள் நடக்கும்போது இரு சமூகத்தினரிடையே சமீபகாலமாக மோதல் ஏற்படுவதும் நடந்து வருகிறது. இதையடுத்து, குருபூஜைகள் நடைபெறும் மாவட்டங்களுக்கு வெளி மாவட்டங்களிலி ருந்து வாகனங்கள் மூலம் ஆட்கள் வருவதை தடுக்க போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு குருபூஜை கள் நடைபெற திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

 இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெளியூரிலிருந்து வாகனங்களில் ஆட்கள் வருவதற்கு 144 தடை உத்தரவை அம்மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். இந்த பூஜையில் கலந்துகொள்வதற்காக கடலூர் மாவட்டத்திலிருந்து மக்கள் வாகனங்களில் வருவதற்கு அனுமதி வழங்குமாறு மாவட்ட நிர்வாகத் துக்கு உத்தரவிடக்கோரி கடலூரைச் சேர்ந்த விஜயா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இதேபோல், நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவல் அருகே உள்ள கிராமத்தில் ஒண்டிவீரனுக்கு குருபூஜை நடத்தும் நிகழ்ச்சியில் ராமநாதபுரத்திலிருந்து வாகனங் களில் மக்கள் வருவதற்கு அனுமதி அளிக்கக்கோரி தமிழ்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிவகுமார் என்பவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த இரு மனுக்களை யும் விசாரித்த நீதிபதி கிருபாகரன் தீர்ப்பைத் தள்ளிவைத்தார். இந்நிலையில், மதுரையிலிருந்து சென்னை உயர் நீதிமன்றம் வந்துள்ள நீதிபதி இந்த 2 வழக்குகளையும் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அரசுக்கு நோட்டீஸ்
இந்நிலையில் குருபூஜைகளுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், குருபூஜைகளின்போது, ஏற்கனவே சாதி அடிப்படையில் ஏற்பட்டிருக்கும் முன் விரோதங்களை தீர்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டு அதனால் பெரிய அளவில் கலவரம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. எனவே, சாதி அடிப்படையிலான குருபூஜைகள் நடத்த தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இம்மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர் வால், நீதிபதி சத்யநாராயணன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் தருமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.



உளவு விமானம் மூலம் கண்காணிப்பு
பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவு தினம் இன்று (செப்.11) அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி தென்மாவட்டங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரமக்குடி நகரின் முக்கிய இடங்களில் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து அண்ணா தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆளில்லாத உளவு விமானத்தை பரமக்குடிக்கு நேற்று கொண்டு வந்தனர். இந்த விமானத்தில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே போலீசார் கண்காணிக்க உள்ளனர். நேற்று மாலை போலீசார் முன்னிலையில் அண்ணா தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் உளவு விமானத்தை இயக்கி செயல்விளக்கம் அளித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 12 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டிஜிபி ராஜேந்திரன், தென் மாவட்ட எஸ்பிக்களுடன் மதுரையில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன் பின் அவர் பரமக்குடி சென்றார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக