ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 31 அக்டோபர், 2013

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கை சட்டசபையில் தாக்கல் ..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 11.9.2011 அன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 7 உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பற்றி விசாரிக்க நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை கமிஷன் அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–
ஆதிதிராவிடர் தலைவரான ஜான் பாண்டியன் 11.9.2011 அன்று பரமக்குடியில் உள்ள ஆதிதிராவிடர் தலைவரான இமானுவேல் சேகரன் சமாதிக்கு செல்வதாக இருந்தார். அப்போது 2 நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த சிறுவன் பழனிக்குமார், பிற ஜாதியைச் சேர்ந்தவர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டான்.
ஜான் பாண்டியன் பரமக்குடி செல்லும் வழியில் பச்சேரி கிராமத்துக்கு சென்று சிறுவனுடைய இறப்புக்கு வருத்தம் தெரிவிப்பதாக இருந்த பயணத் திட்டம் பற்றிய தகவல் காவல்துறைக்கு கிடைக்கப் பெற்றது. அவரது வருகை மற்றும் பேச்சு, இரு பிரிவினரிடையே மோதலை அதிகரிக்கும் என்பதால் ஜான் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதனால் அவரது ஆதரவாளர்கள் பரமக்குடியில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது இமானுவேல் சேகரனின் சமாதிக்கு சென்று வரும் வண்டிகளின் போக்குவரத்து தடைபட்டது. இந்த சமயத்தில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது டாக்டர் கிருஷ்ணசாமியும் வந்ததால் அங்கு பதட்டம் அதிகமானது. டாக்டர் கிருஷ்ணசாமி மட்டும் சமாதிக்கு செல்ல அனுமதிக்கப்படும்போது, ஜான் பாண்டியன் அனுமதிக்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். சாலை மறியல் தீவிரமானது.
கலவரக்காரர்கள் வண்டியில் இருந்த டாக்டர் கிருஷ்ண சாமியின் ஆதரவாளர்களை வெளியே இழுக்க முற்பட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது அடையாறு துணை கமிஷனர் செந்தில் வேலனின் சட்டையை கலவரக்காரர்களில் ஒருவர் பிடித்து இழுத்து அடிக்க முற்பட்டார்.
இது காவல் துறையினர் தடியடி நடத்த வழிவகுத்தது. கலவரக்காரர்கள் எல்லா திசைகளிலும் கலைந்து சென்று மீண்டும் கூடி போலீஸ் மீது கற்கள், செருப்புகள், மரக்கட்டைகள் கொண்டு தாக்கினர். இதைப்பார்த்த கமுதி தாசில்தார் சிவக்குமார் அவர்களை கலைந்து செல்லும்படி ஒலிபெருக்கி மூலம் ஆணையிட்டார்.
ஆனால் தொடர்ந்து அங்கு தகராறுகள் நடக்க தொடங்கியது. இந்த சூழ்நிலையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. பொது சொத்துக்ளுக்கு சேதம் ஏற்படுத்தினர். பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளும் தாக்கப்பட்டனர்.
நிலைமை கட்டுக்கு அடங்காமல் போனதால் போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்கச் செய்தனர். ஆனாலும் கலவரக்காரர்கள் கலைந்து செல்லாமல் வன்முறையில் ஈடுபட்டனர். பரமக்குடி பெண் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தவர்களை பூட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இதனால் வேறு வழியின்றி கமுதி வட்டாச்சியர் சிவகுமார் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார். இதன்படி துப்பாக்கி சூடு நடத்தினர். வன்முறையை கட்டுப்படுத்தவும், எதிர் ஜாதியினர் அதிக அளவு வசிக்கும் பகுதிகளுக்கு வன்முறை பரவாமல் தடுக்கவும் இந்த துப்பாக்கி சூடு முற்றிலும் அவசியம் என்று விசாரணை ஆணையம் கருதுகிறது.
துப்பாக்கி சூடு நடத்தாமல் இருந்திருந்தால் இப்பகுதியில் பேரழிவு ஏற்பட்டு இருக்கும். இது காவல்துறையின் தற்காப்பு குறித்த வழக்காகும். கலவரம் செய்தவர்களின் நடத்தை விலங்கு நடத்தையின் எல்லையை எட்டியதுடன் பண்பாட்டிற்கு முரணாகவும், எல்லை கடந்ததாகவும் உள்ளது. இது முற்றிலும் மன்னிக்கதக்கது அல்ல.
இத்தகைய சூழ்நிலையில் காவல்துறையினர் நடந்து கொண்ட மெச்சத்தக்க முறையை இந்த கமிஷன் பாராட்டுகிறது. துப்பாக்கி சூடு நடத்தும் முன்பு போலீசார் அளவற்ற பொறுமையை கடைபிடித்தனர். மரணம் அடைந்தவர்களை பொறுத்த வரையில் கலவரங்களில் ஈடுபட தவறான வழி நடத்தப்பட்டு பலியானவர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கருணை அடிப்படையில் தகுதிக்கேற்ப குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலையும், இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டதன் மூலம் அரசு அளவில்லா கருணை காட்டியுள்ளது.
காவல்துறை துணை தலைவரில் தொடங்கி கீழ் நிலை பதவிகளில் உள்ளவர்கள் பலர் கடுமையான காயம் அடைந்தனர். இது தொழில் சார்ந்த அபாயமாகும். அவர்களது மருத்துவ செலவை மாநில அரசு முறையாக ஏற்கும் என்று கருதப்படுகிறது.
இந்த சமயத்தில் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 10–ம் வகுப்பு மாணவன் சத்திய மூர்த்திக்கு காயம் ஏற்பட்டது. அவன் தன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று பரிந்துரைக்குமாறு ஆணையத்திடம் கேட்டுக் கொண்டான். சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டாம்.
இந்த கலவரத்தின்போது காவல் துறையினர் மிகவும் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் சில காவல்துறையினர் காவல்நிலை உத்தரவுகளுக்கு மாறாக கலவரத்துக்கு பிறகு சூழ்ந்து கொண்டவர்களை அடித்தது மனதுக்கு உகந்ததாக இல்லை என்று ஆணையம் கருதுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம் பரமக்குடி மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும், எப்படிபட்ட பாதுகாப்பு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளும் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை மொத்தம் 1500 பக்கங்களுடன் 3 புத்தகமாக தயாரிக்கப்பட்டு இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக