ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 10 ஜூலை, 2014

உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் ..?


மேற்கு உத்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள முசாஃபர் நகர் மாவட்டத்தில் முசுலீம்களுக்கு எதிராக ஜாட் சாதியினரைத் தூண்டிவிட்டு ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பல் நடத்திய கலவரத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதோடு, ஏறத்தாழ 40,000-க்கும் மேற்பட்டோர் தமது சொந்த கிராமங்களை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.  இந்த 40,000 பேரில் ஆகப் பெரும்பான்மையோர் முசுலீம்கள் என்ற புள்ளிவிவரத்திலிருந்து இக்கலவரத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.  மேலும், சாதி இந்துக்களை ஒன்றுதிரட்டி முசுலீம்களுக்கு எதிராக நிறுத்தும் “குஜராத் மாதிரி” உ.பி.யிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை இக்கலவரம் எடுத்துக்காட்டியிருக்கிறது.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள்
முசாஃபர்நகர் மாவட்டக் கலவரத்தின்போது ஈவிரக்கமற்ற முறையில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சிறுமிகள்
கடந்த ஆகஸ்டு 27 அன்று முசாஃபர் மாவட்டத்திலுள்ள கவால் கிராமத்தைச் சேர்ந்த ஷானவாஸ் என்ற முசுலீம் இளைஞர், மாலிகாபூர் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் மற்றும் கவுரவ் என்ற இரு ஜாட் சாதி இளைஞர்களால் கொல்லப்பட்டார்.  ஷானவாஸைக் கொன்றுவிட்டுத் தப்பியோட முயன்ற அவ்விருவரும் அக்கிராமத்தைச் சேர்ந்த முசுலீம்கள் சிலரால் துரத்திப் பிடிக்கப்பட்டு, பின் அடித்துக் கொல்லப்பட்டனர்.  இது போன்ற அடிதடிக் கொலைகள் அடிக்கடி நடக்கும் முசாஃபர் நகர் மாவட்டத்தில், இந்தக் கொலைகள் வெறும் புள்ளிவிவரமாக மறைந்து விடவில்லை.  இதனை ஜாட் சாதியினருக்கும் முசுலீம்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டிவிடுவதற்கான வெடிமருந்தாகப் பயன்படுத்திக் கொண்டது, ஆர்.எஸ்.எஸ்.
ஜாட் சாதியைச் சேர்ந்த அவ்விரு இளைஞர்களின் சகோதரியை ஷானவாஸ் பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்ததால்தான், அவர்கள் ஷானவாஸைக் கொல்லத் துணிந்ததாக ஒரு தரப்பும்; ஷானவாஸும் சச்சினின் சகோதரியும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததையடுத்து நடந்துள்ள ‘கௌரவ’க் கொலை இது என இன்னொரு தரப்பும்; இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதில் ஏற்பட்ட பிரச்சினையடுத்துதான் இக்கொலைகள் நடந்தது எனவும் இக்கொலைகளுக்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.  இவை எதுவுமே உறுதி செய்யப்படாத நிலையில் ஆர்.எஸ்.எஸ். கும்பலோ, “முசுலீம்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்துப் பெண்களை மயக்கித் திருமணம் செது கொள்கிறார்கள்; இதற்கான பயிற்சி மதரஸாக்களில் நடத்தப்படுகிறது” என இவ்விவகாரத்தை முசுலீம் தீவிரவாதத்தோடு முடிச்சுப் போட்டதோடு, முசுலீம்களுக்கு எதிராக ஜாட் சாதியினரைத் தூண்டிவிடும் சதித் திட்டத்தோடு, “ஜாட்கள் தமது பெண்களின் கௌரவத்தைக் காக்க வேண்டும்” எனப் பிரச்சாரம் செய்தது.
இறந்து போன ஜாட் இளைஞர்களின் சவ ஊர்வலம் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி அரசியல் ஊர்வலமாகவே நடத்தப்பட்டது.  அவ்வூர்வலத்தில், “பாகிஸ்தானுக்குப் போ, இல்லையென்றால் மயானத்திற்குப் போ”, “ஒரு உயிருக்கு நாங்கள் நூறு உயிரை எடுப்போம்”, “இந்து ஒற்றுமை ஓங்குக” என முழக்கங்கள் எழுப்பப்பட்டு, வெடிகுண்டின் திரி கொளுத்தப்பட்டது.  இச்சமயத்தில், “இரண்டு இளைஞர்களை ஒரு முசுலீம் கும்பல் கொலை செய்வது போன்ற” காட்சிப் பதிவை முகநூலில் பதிவேற்றம் செய்து வெளியிட்ட பா.ஜ.க.வின் சர்தானா தொகுதி எம்.எல்.ஏ. சங்கீத் சோம், “முசாஃபர் நகரில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.  தங்கள் சகோதரியின் மானத்தைக் காக்க முசுலீம்களுடன் போராடி உயிரிழந்த இந்து இளைஞர்கள் இவர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.  இந்தக் காட்சிப் பதிவு உண்மையில் 2010-இல் பாகிஸ்தானிலுள்ள சியோல் கோட் நகரில் பதிவு செய்யப்பட்டது எனப் பின்னர் அம்பலமானாலும், அதற்குள்ளாகவே இப்பொய்ச் செய்தி ஜாட்   சாதியினரை முசுலீம்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் வேலையைச் செய்து முடித்திருந்தது.
இன்னொருபுறமோ, முசாஃபர் நகரில் ஆகஸ்டு 30, வெள்ளியன்று மதியம் தொழுகை முடிந்த கையோடு, முசுலீம்கள் திடீரென ஓர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் நடத்தினர்.  இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காதிர் ரானா, எம்.எல்.ஏ. ஜமில் அகமது உள்ளட்டோர் கலந்து கொண்டனர்.  இவர்கள் முசுலீம்களை ஜாட்டுகளுக்கு எதிராகத் தூண்டிவிடும் வண்ணம் உரையாற்றியதாகக் கூறப்படுகிறது.
கலவரத்தில் காயமடைந்த சிறுமிகள்
முசாஃபர்நகர் மாவட்டக் கலவரத்தின்போது ஈவிரக்கமற்ற முறையில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சிறுமிகள்
இதற்குப் பதிலடி கொடுப்பது போல, ஆகஸ்டு 31 அன்று கொல்லப்பட்ட இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்ற பெயரில் ஜாட் சாதி பஞ்சாயத்துக் கூட்டத்தை நடத்தியது, பா.ஜ.க.  இதன் பின், செப்டம்பர் 5-ஆம் தேதி ஜாட்டுகளுக்கு ஆதரவாக மாவட்ட கடையடைப்புப் போராட்டம் பா.ஜ.க.வால் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது.  இந்தச் சூழலில் செப்.7 அன்று ஜாட் சாதி மகா பஞ்சாயத்துக் கூட்டம் நடத்தப்பட்டது.  இக்கூட்டத்திற்கு அண்டை மாவட்டங்களிலிருந்து மட்டுமல்ல, அண்டை மாநிலமான அரியானாவிலிருந்தும் ஜாட் சாதியினர் திரட்டப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.  இக்கூட்டத்தில் ஒரு இலட்சம் பேர் திரண்டிருந்ததும், அவர்கள் பல்வேறு ஆயுதங்களோடு கூட்டத்திற்கு வந்திருந்ததும் இக்கூட்டத்திற்கு “மகளை, மருமகளைக் காக்கும் மகா பஞ்சாயத்து” எனப் பெயரிடப்பட்டிருந்ததும், இக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ். திட்டப்படி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டதை அம்பலப்படுத்திக் காட்டின.  இது மட்டுமின்றி, முசுலீம்களுக்கு எதிரான கலவரமும் அன்றுதான் வெடித்தது.
ஆகஸ்டு 27 அன்று ஷானவாஸும், ஜாட் சாதியைச் சேர்ந்த சச்சினும் கவுரவும் கொல்லப்பட்டனர்.  இதன்பின் ஆங்காங்கே இந்து-முசுலீம்களுக்கிடையே மோதல்கள் வெடித்து வந்தாலும் செப்டம்பர் 7 அன்றுதான் முழு அளவிலான கலவரம் வெடித்தது.  இடைப்பட்ட நாட்களில் கலவரத்தைத் தடுத்து நிறுத்தவும், கலவரத்தைத் தூண்டும் நோக்கில் இரண்டு தரப்பிலும் செயல்பட்டவர்களைக் கைது செய்யவும் வாப்புகள் இருந்தும் அவை அனைத்தையும் சமாஜ்வாதி அரசு திட்டமிட்டே புறக்கணித்தது.  முசாஃபர் மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமலில் இருந்தும் ஜாட் சாதியினர் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களோடு பஞ்சாயத்துக்களை நடத்தவும், முசுலீம்கள் ஊர்வலம் நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.  இந்து மதவெறியைத் தூண்டிவிடும் திட்டத்தோடு சமூக வலைத் தளங்கள் பயன்படுத்தப்பட்டதைத் தடை செய்யவும் அரசு முன்வரவில்லை.  கலவரத் தீயில் குளிர் காயலாம் என்ற உள்நோக்கத்தோடு சமாஜ்வாதி அரசு செயல்பட்டது என்பதைத் தாண்டி, இந்த மெத்தனத்திற்கு வேறு காரணம் எதையும் கூற முடியாது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மைய ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற கனவோடு அலையும் பா.ஜ.க., குறிப்பாக பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து விட வேண்டும் என்ற வெறியோடு அலையும் நரேந்திர மோடி கும்பல், 80 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்திரப் பிரதேசத்தில் அதிகத் தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.  சாதி அரசியலில் ஊறிப் போன உ.பி.யில், ‘வளர்ச்சி’ அரசியலைப் பேசி மோடியை வெற்றிபெற வைக்க முடியாது என்பதைக் கண்டுகொண்டு விட்ட இக்கும்பல், முசுலீம்களுக்கு எதிராக சாதி இந்துக்களை ஒன்றுதிரட்டும் உத்தியைக் கையில் எடுத்திருக்கிறது.
குஜராத் முசுலீம் படுகொலையில் மோடியின் தளபதியாகச் செயல்பட்டவனும், குஜராத்தில் நடந்துள்ள பல்வேறு போலி மோதல் கொலை வழக்குகளில் தொடர்புடையவனுமான அமித் ஷா உ.பி.யின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அன்றே உ.பி.யில் பா.ஜ.க.வின் திட்டமென்ன என்பது வெளிச்சத்திற்கு வந்து விட்டது.  அமித் ஷா தேர்தல் பொறுப்பாளராக உ.பி.க்குச் சென்றவுடனேயே, அயோத்தி பாபர் மசூதி வளாகத்தினுள் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் ராமர் கூடாரத்திற்குப் போனதும், அதனைத் தொடர்ந்து விசுவ இந்து பரிசத் கோசி யாத்திரையை அறிவித்ததும் நரேந்திர மோடி கும்பல் இந்து மதவெறியைக் கிளறிவிட்டு ஓட்டுப் பொறுக்குவதில் எள்ளளவும் தயங்கப் போவதில்லை என்பதை எடுத்துக் காட்டின.  முசாஃபர் நகரில் அக்கும்பல் நடத்தியுள்ள கலவரத்தை இவற்றின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும்.  குறிப்பாக, இக்கலவரத்தின்பொழுது, “நரேந்திர மோடி ஒருவரால்தான் முசுலீம்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க முடியும்” எனத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது தற்செயலானது அல்ல.
மசூதியில் தஞ்சமடைந்துள்ள முஸ்லீம்கள்
ஜாட் சாதிவெறியும் மதவெறியும் கொண்ட கும்பலிடமிருந்து தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறி, ஜூல்லா கிராமத்திலுள்ள மசூதியில் தஞ்சமடைந்துள்ள முஸ்லீம்கள்
முசாஃபர் நகர் அமைந்துள்ள மேற்கு உ.பி. 18 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.  இப்பகுதியின் மொத்த மக்கள்தொகையில் ஜாட் சாதியினரும் முசுலீம்களும்தான் பெரும்பான்மையாக உள்ளனர்.  ஜாட் சாதியினர் மத்தியில் அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தள் கட்சியின் செல்வாக்கு சரிந்து விழுந்து விட்டதால், அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ள பா.ஜ.க. இறங்கியிருக்கிறது.  சமாஜ்வாதி கட்சி மேற்கு உ.பி.யில் கணிசமான இடங்களை வெல்ல முசுலீம் ஓட்டுக்களைத் தன்பக்கம் இழுக்கும் திட்டத்தில் இருக்கிறது.  இதுதான் முசாஃபர் நகர் கலவரத்தின் பின்னணி.
ஆர்.எஸ்.எஸ். கும்பல் பழைய பாணியில், அதாவது ராமர் கோவில், காஷ்மீர் பிரச்சினை, பாக். எதிர்ப்பு முசுலீம் தீவிரவாதம் எனப் பிரச்சாரம் செய்து இந்தக் கலவரத்தை நடத்தவில்லை.  மாறாக, சாதி அடையாளம் மற்றும் சாதி கௌரவத்தையும் முசுலீம் எதிர்ப்பையும் ஒன்றாக்கி இந்தக் கலவரத்தை நடத்தி முடித்திருக்கிறது.  பா.ம.க. ராமதாசு நாடகக் காதல் என்ற கதையை ஊதிப்பெருக்கி தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியைத் தூண்டிவிட்டதைப் போல, ஆர்.எஸ்.எஸ். லவ் ஜிகாத் என்பதை ஊதிப் பெருக்கி, அதன் மூலம் ஜாட் சாதி ஓட்டுக்களைக் கவர முயலுகிறது.  “ஜாட்டுகள், முதலில் நாம் இந்துக்கள் என உணரத் தலைப்பட்டுள்ளனர்.  இது போல மற்ற இந்து சாதிகளும் முசுலீம்களுடன் மோத ஆரம்பித்தால், பா.ஜ.க.விற்குப் பெரும்பலன் கிடைக்கும்” என ஆர்.எஸ்.எஸ்.-இன் வியூகத்தை நப்பாசையுடன் விவரிக்கிறார், சுயம் சேவக் ஒருவர்.
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி பதவிக்கு வந்த பின், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஏறத்தாழ 20-க்கும் மேற்பட்ட இந்து மதவெறிக் கலவரங்கள் நடந்துள்ளன.  மற்ற ஓட்டுக்கட்சிகளும் முதலாளித்துவ அறிஞர்களும், “சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் சமாஜ்வாதி அரசு தோற்றுவிட்டதை இக்கலவரங்கள் காட்டுவதாக”க் கூறி விமர்சித்து வருகின்றன.  ஆனால், சமாஜ்வாதி கட்சியோ இப்படிபட்ட கலவரங்களின்பொழுது முசுலீம்களுக்குச் சாதகமாக சில நடவடிக்கைகளை எடுப்பதாகக் காட்டிக் கொள்வதன் மூலம் தனது சிறுபான்மையினக் காவலன் நாடகத்தைத்  தொடர்ந்து நடத்த முடியும் எனக் கருதுகிறது.  இந்த விசயத்தில் பா.ஜ.க.வும் சமாஜ்வாதிக் கட்சியும், “நீ அடி, நான் அணைத்துக் கொள்கிறேன்” என இருப்பது, விசுவ இந்து பரிசத் அயோத்தியில் கோசி யாத்திரை நடத்த முயன்றபொழுதே அம்பலத்திற்கு வந்துவிட்டது.
பா.ஜ.க எம்.எல்.ஏ சங்கீத் சோம்
முசுலீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி விடும் நோக்கில் போலியான காட்சிகளை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ சங்கீத் சோம்
சிறுபான்மையினரான முசுலீம்களை அச்சத்தில் வைத்திருப்பதன் மூலம் அவர்களைத் தம் பக்கம் இழுப்பது என்ற இந்த தந்திரத்தின் அடிப்படையில்தான் முசாஃபர் நகரில் கலவரச் சூழலை உடனடியாகக் கட்டுப்படுத்தாமல் வளரவிட்டது, சமாஜ்வாதி அரசு.  ஆனால், நிலைமை கைமீறிப் போ, அக்கலவரம் சமாஜ்வாதிக் கட்சியையே பதம் பார்த்துவிட்டது.  கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசுலீம்கள் சமாஜ்வாதி அரசுக்கு எதிராக ஆத்திரத்துடன் இருப்பதைக் கண்டுகொண்ட பிறகுதான், கலவரத்தைத் தூண்டுவதில் முன்னணியில் நின்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களைக் கைது செயத் தொடங்கியது, அம்மாநில அரசு.
மேற்கு உ.பி. பகுதியில் முசுலீம்களுக்கும் ஜாட்டுகளுக்கும் மத்தியில் இதுகாறும் நிலவி வந்ததாகக் கூறப்படும் நல்லிணக்கத்தை இக்கலவரம் முற்றிலுமாகக் கலைத்துப் போட்டு விட்டது.  அகதிகளாக வெளியேறியிருக்கும் முசுலீம்கள், “நாங்கள் எந்த நம்பிக்கையில் சோந்த ஊருக்குத் திரும்ப முடியும்?” என அச்சத்துடன் வினவும்பொழுது, இந்து மதவெறி கொண்ட ஜாட்டுகளோ, “நாங்கள் அவர்களைத் திரும்பச் சொல்லி கெஞ்சப் போவதில்லை” எனத் திமிரோடு அறிவிக்கிறார்கள்.  முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த கிராமங்களிலிருந்து அவர்கள் துரத்தியடித்துவிட்டு, அவற்றை ஜாட்டுகள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ்.-இன் தீய உள்நோக்கம் இக்கலவரத்தின் மூலம் சாத்தியமாகியிருக்கிறது.
பீகாரில் யாதவ்-முசுலீம் முரண்பாட்டை ஏற்படுத்தி, நெவாடா மற்றும் பெட்டியாவில் ஏற்கெனவே கலவரங்களை நடத்தி முடித்திருக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.  மேலும் அசாமில் சில்சார், மத்தியப்பிரதேசத்தில் இந்தூர், ஜம்முவில் கிஷ்த்வர் ஆகிய இடங்களிலும் சமீபத்தில் முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறிக் கலவரங்கள் நடந்துள்ளன.  40 சதவீதம் முசுலீம் மக்கள் தொகை கொண்ட மேற்கு வங்கத்தில் இந்து மதவெறியைக் கக்குவதில் கைதேர்ந்தவனான வருண் காந்தி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறான்.  இவையனைத்தும் நாடாளுமன்றத் தேர்தல்களையொட்டி முசுலீம்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துவரும் வட மாநிலங்களில் இந்து மதவெறியைக் கிளறிவிட்டு, சாதி இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்துகொள்ளும் மோடி வித்தையில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் இறங்கியிருப்பதை எடுத்துக் காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக