முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா துவங்கிய நாளில் இருந்து
விழுந்துள்ள கொலைகளின் எண்ணிக்கை 11. படுகாயமடைந்துள்ளவர்களின் இறப்பில்
சேர உள்ள கணக்குகளின் எண்ணிக்கை இன்னும் 10 வரை இருக்கும் என
நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் பிறந்த தின விழாவில்
போலீசார் தாக்குதலில் 6தேவேந்திரகுல வேளாளர் பலியானார்கள்.
தலா 2 லட்சம் மட்டும் இழப்பீட்டுத் தொகை வழங்கிய தமிழக அரசு தற்போது
இறந்தவர்களின் ஆதிக்க சாதித் தகுதிக்கேற்ப 5 லட்சம் ரூபாய் பணம்
வழங்கியுள்ளது. இறந்தவர்களது குடும்பத்தினர் தங்களுக்கு 10 லட்சம் ரூபாய்
பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கோருகின்றனர்.
கலவரமான சூழலில் அரசு எந்திரம் தேவர் சாதிப் பிரமுகர்களை மாத்திரம்
கூப்பிட்டுப் பேசி அமைதி காண முயற்சிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களைக்
குறிவைத்து மொத்த அரசு எந்திரமும் தேவர் சாதிக்குப் பின்னால் வரிந்து
கட்டிக் கொண்டு நிற்கிறது. நவம்பர் 7 ஆம் நாள் தேவரின ஒருங்கிணைப்புக் குழு
பந்த் நடத்த அழைப்பு விடுத்தவுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தரச் சொல்லி உத்தரவிடுகிறார்.
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி மற்றும் நெல்லை
மாவட்டங்களில் பேருந்துகள் சரியாக இயங்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
எதிராக ஆதிக்க சாதியின் பொது மனநிலை நேர்த்தியாக இணைந்து செயல்பட
ஆரம்பித்துள்ளது.
கடந்த அக். 30 அன்று சிந்தாமணி ரிங் சாலையில் நடந்த தாக்குதலில்
விரகனூர் புளியங்குளத்தை சேர்ந்த தேவர் சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் வந்து
கொண்டிருந்த டாடா சுமோ மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. டாடா
சுமோவில் இருந்த தேவரின இளைஞர்கள் முழு போதையில் இருந்ததாகவும், எனவே தப்ப
முடியாமல் போனதாகவும் தெரிகிறது. தாக்க வந்தவர்கள் மஞ்சள் ஆடையுடன்
இருந்ததாகவும், தேவர் வாழ்க எனக் கோசமிட்டார்கள் என்றும் தெரிகிறது. இது
போலீசே திட்டமிட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தும் தாக்குதலா என்ற
அச்சம் தென் மாவட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடம் நிலவி வருகிறது. இந்த
தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவருமே 50 சதவீதத்திற்கும் அதிகமாக
தீக்காயமடைந்திருப்பதாக சட்டசபையில் ஜெயலலிதா தெரிவிக்கையில்
பெரிய பத்திரிகைகள் இந்த சம்பவத்தை அதுவரை குறிப்பிடாமல்
இருந்தது இந்த சந்தேகத்தை மேலும் அதிகரிக்க வைக்கிறது.
பரமக்குடி பாம்புவிழுந்தான் கிராமப் பகுதியில் தாழ்த்தப்பட்ட
மக்கள் கணிசமாக வசிப்பதால் அப்பகுதி வழியாக தேவர் ஜெயந்திக்கு
செல்ல போலீசு தடை விதித்திருந்த போதும் பார்த்திபனூர்
மேலப்பெருங்கரையைச் சேர்ந்த சிலர் வேனில் அப்பகுதி வழியாக
வந்துள்ளனர். அக்டோபர் 30 மதுரையில் போடும் கோசங்களை ஒத்த
அம்பேத்கர், கிருஷ்ணசாமி, இமானுவேல் சேகரன், ஜான் பாண்டியன் போன்றோரை
இழிவுபடுத்தும் கோசங்களை எழுப்பியபடியே அவர்கள் சென்றுள்ளனர்.
ஆத்திரமடைந்த கிராம மக்கள் தாக்க முற்பட்டவுடன் டிரைவரை
விட்டுவிட்டு மற்றவர்கள் ஓடியுள்ளனர். தாக்குதலில் டிரைவர்
சிவக்குமார் பலியானார்.
மற்றொரு சம்பவத்தில் தடைசெய்யப்பட்ட பொன்னையாபுரம் பகுதி
வழியாக திருப்புவனத்தை சேர்ந்த மலைக்கள்ளன் மற்றும் வீரமணி
போன்றோரும் இப்படி ஆத்திரமூட்டும் கோசங்களை எழுப்பியபடியே
தங்களது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இங்கும்
ஆத்திரமடைந்த மக்கள் தாக்கவே இருவரும் பலியானார்கள்.
மதுரை மறவர் சாதியினரும், தஞ்சாவூர் கள்ளர்களும் என இந்தக்
கூட்டணி தெளிவாக ஆதிக்க சாதியின் அடையாளமாக இருந்தாலும் தற்போதைய
தாராளமய காலகட்டத்தில் கட்டப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட்,
மீட்டர் வட்டி என தங்களது தொழிலை வளப்படுத்திக் கொண்டு விட்டனர்.
இதற்கு வாய்ப்பில்லாதவர்கள் ஏரியா ரவுடிகளாக வடிவேல் பாணியில்
நானும் ரவுடிதான் என மாநிலம் முழுக்க சுற்றி வருகிறார்கள். மதுரை
உள்ளிட்ட தென் மாவட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்களில் கணிசமானோர்
படித்து அரசு வேலை அல்லது ஐடி துறை வேலைகளில் மற்றும் வழக்குரைஞர்,
மருத்துவர் போன்ற வேலைகளில் அமர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக வழக்கறிஞர் போன்ற வேலைகளில் நிறைய தாழ்த்தப்பட்ட
இளைஞர்கள் இருப்பதும், அவர்களில் சிலர் நீதிபதியாகும் போது, கார்
கதவைத் திறந்து விடும் போலீசுக்காரனாகவே கள்ளர் சாதி இளைஞன்
இருப்பதும் ஆதிக்க சாதிக்கு உறுத்தலாகத் இருக்கிறது. எனினும்அரசு
எந்திரம் முழுக்க ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால்
தலித்துக்கள் மீதான வெறுப்பு என்பது அரசு எந்திரத்துக்கு இயல்பான ஒன்று.
எனவே திட்டமிட்ட முறையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தேவர் சாதி
வெறியர்களை வெறியேற்றி ஏவி விடுகிறது அரசு எந்திரம். அதன்
தொடர்ச்சியாக நடக்கவுள்ள ரத்தக்களறிக்கு முன்னோட்டமாக
கடந்த ஞாயிறன்று மதுரையில் தங்களது சவ ஊர்வலத்தை
கலவரமாகவே நடத்தி உள்ளனர் தேவர் சாதி வெறியர்கள்.
டாடா சுமோவில் வந்தவர்களை தாக்கியவர்கள்
தாழ்த்தப்பட்டவர்கள் தான் என்றால் அதனை கடந்த ஆண்டு நடந்த
படுகொலைக்கான பழிக்குப் பழியாகத்தான் பார்க்க வேண்டும். இந்தப்
பழிவாங்கும் உணர்ச்சியின் அடிப்படை என்ன? எந்த முகாந்திரமும் இன்றி காக்கை
குருவிகளைப் போல தாழ்த்தப்பட்ட மக்களை போலிசு கொன்றதும், இந்த அப்பட்டமான
படுகொலையை தேவர் சாதி வெறியர்கள் கொண்டாடியதும், ஒரு வடுவாக தாழ்த்தப்பட்ட
மக்களின் சிந்தனையில் பதிந்து விட்டது. இந்த சமூக, அரசியல் அமைப்பில்
தங்களுக்கென்று நியாயம் கிடைக்காது என்ற யதார்த்தமே அவர்களை இப்படி ஒரு
பழிவாங்குதலில் ஈடுபட வைக்கிறது. இந்தக் கொலைகளை நிறுத்த வேண்டுமென்றால்
ஒட்டு மொத்த சமூகமும் அரசு எந்திரமும் தாழ்த்தப்பட்ட மக்களை சமத்துவத்தோடு
நடத்த வேண்டும்.
எனிமும் வரவிருக்கும் நாட்களில் தேவர் சாதியும், அரசும் இணைந்து
நடத்தும் பதிலடி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான கொடுந்
தாக்குதலாக இருக்கும். இனி மக்கள் திரள் போராட்டங்கள் எதுவும் தென்
மாவட்டங்களில் நடப்பது அரிதாகும். கூடங்குளம் போராட்டத்தில்
பிரிந்திருந்த நாடார் சமுதாயமும், மீனவர் சமுதாயமும்
ஒன்றிணைந்துள்ளதைப் பார்த்த பிறகு அரசுக்கு சாதிக் கலவரம் குறிப்பிட்ட
அளவுக்கு தேவையாக இருக்கிறது.
தேவர் சாதியில் இருக்கம் உழைக்கும் மக்கள் சாதியின் பெயரால் வெறியை
வளர்க்கும் சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும். சாதி வெறி மட்டுமல்ல, சாதி
உணர்வும் கூட இன்றைய வாழ்க்கைப் பிரச்சினைகள் எதற்கும் தீர்வாகாது என்பதோடு
தீர்வுகளை நோக்கி நாம் ஒன்றிணைந்து போராடுவதற்கும் தடையாக இருக்கிறது.
இறுதியில் சாதி வெறி என்பது சில சுயநலசக்திகளின் சொந்த இலாபத்திற்கு
மட்டும் பயன்படும் ஒன்றாக இருக்கிறது.
கொடியங்குளம் கலவரம் தொட்டு சருகு போல காய்ந்திருக்கும் தென்
மாவட்டங்களை மீண்டும் ஒரு இரத்த சகதிக்குள் ஆழ்த்த ஆதிக்க சாதி வெறியர்கள்
விரும்புகின்றனர். இந்த வெறுப்பை ஒழிக்க வேண்டுமென்றால் தலித்துக்களின்
சுயமரியாதை மீட்கப்படுவதோடு, ஆதிக்க சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை
எடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இல்லையேல்
தென்மாவட்டங்களின் உயிரிழப்பு இன்றோடு முடியாது, தொடரும்.