தலைமை ஆசிரியர் கொலை வழக்கில் கிருஷ்ணசாமி
எம்.எல்.ஏ விடுதலையை எதிர்த்த அரசின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தலைமை ஆசிரியர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு
பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் கடந்த 15.9.1997 அன்று கொலை
செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பழிவாங்கும் வகையில், ராம்குமார் கொலை
செய்யப்பட்ட 4–வது நாளில்(19.9.1997) இன்னொரு சமூகத்தை சேர்ந்த தலைமை
ஆசிரியர் முத்துகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை
நடப்பதற்கு முன்பு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்
டாக்டர்.கிருஷ்ணசாமி(தற்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.யாக
இருந்து வருகிறார்), போலீசாரால் கைது செய்யப்பட்ட போது அந்த கட்சியின்
சார்பில் ‘பந்த்‘ அறிவிக்கப்பட்டதாம். ‘பந்த்‘ அன்று பள்ளியை மூடும்படி
கூறியும், தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன் பள்ளியை மூடவில்லையாம். இந்த
விரோதம் காரணமாகவும் அந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
விடுதலை
இந்த கொலை தொடர்பாக புளியம்பட்டி
போலீசார், டாக்டர்.கிருஷ்ணசாமி, சுரேஷ், ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு
செய்தனர். இந்த கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக கிருஷ்ணசாமி மீது
வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தின் போது ரமேஷ் மைனர் என்பதால் அந்த
வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. கிருஷ்ணசாமி உள்ளிட்ட 2 பேர் மீதான வழக்கு
தூத்துக்குடி செசன்சு கோர்ட்டில் நடந்தது.வழக்கை விசாரித்த கோர்ட்டு,
கிருஷ்ணசாமி, சுரேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டை போலீசார் நிரூபிக்கவில்லை
என்று கூறி அவர்கள் 2 பேரையும் விடுதலை செய்து 17.1.2005 அன்று
உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில், மதுரை ஐகோர்ட்டில்
அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனு நீதிபதிகள் கே.சுகுணா, ஆர்.மாலா
ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கிருஷ்ணசாமி உள்ளிட்ட 2 பேர்
தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம், வக்கீல் ஜி.தாழைமுத்தரசு
ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
அப்பீல் மனு தள்ளுபடி
மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின்
அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் தீர்ப்பில் கூறி
இருப்பதாவது:–இந்த வழக்கை பொறுத்தமட்டில், டாக்டர் கிருஷ்ணசாமி கொலைக்கு
சதி திட்டம் தீட்டினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதுபோன்று சதி
திட்டம் தீட்டியது தொடர்பாக எந்தவித ஆதாரத்தையும் போலீசார்
சமர்ப்பிக்கவில்லை. கிருஷ்ணசாமிக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளவர்கள்
முக்கிய சாட்சிகள் ஆவர்.ஆனால் அவர்களுக்கும், கிருஷ்ணசாமிக்கும் விரோதம்
இருப்பது தெரிகிறது. அந்த அடிப்படையில் தான் அவர்கள் சாட்சியம்
அளித்துள்ளனர். எனவே கிருஷ்ணசாமி உள்ளிட்ட 2 பேரையும் கீழ்கோர்ட்டு விடுதலை
செய்தது சரியானது தான்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக