கோவை அவினாசிலிங்கம் பல்கலைகழக பேராசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்:டாக்டர் .க .கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,வலியுறுத்தல்..ஆதரவு ..''கோவை, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை பிரச்னைக்கு ஒரு வார காலத்துக்குள் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் கல்வியாளர்களின் ஒத்துழைப்புடன் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்,'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரசு உதவி பெறும் சில கல்வி நிறுவனங்கள், 'அரசு உதவி பெறும் நிறுவனம்' என்பதையே வெளியில் தெரிவிக்காமல், தங்களது சொந்த நிறுவனம் எனக்கூறி, நடத்தி வருகின்றன. அத்தகைய நிலைதான், தற்போது கோவை, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் நிலவுகிறது.
வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், பெண்களின் மேம்பாட்டுக்காக, முன்னாள் கல்வியமைச்சர் அவினாசிலிங்கத்தால், 1957ல் இக்கல்லுாரி துவக்கப்பட்டது. கடந்த, 1988ம் ஆண்டு நிகர்நிலை பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டது.
ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் மனிதவள மேம்பாட்டு துறையால் வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள், 205 பேர், பணியாளர்கள், 99 பேர் பணிபுரிகின்றனர். மாணவியர், 5,334 பேர் பயில்கின்றனர். இந்த பல்கலையை, சுய உதவி கல்வி நிறுவனமாக மாற்றும் முயற்சி நடக்கிறது.
'பல்கலையை நிர்வகிக்கும் அறக்கட்டளை தலைவரோ, அறங்காவலரோ, அவர்களது உறவினரோ, வேந்தராக நியமிக்கப்படக்கூடாது' என்பது, யு.ஜி.சி., விதி.
அதற்கு மாறாக, அறக்கட்டளை தலைவரான மீனாட்சிசுந்தரம், ஐந்தாண்டாக வேந்தராக செயல்படுகிறார். இந்த விதிமீறலால், மூன்று மாதமாக பணியாளர் சம்பளத்தை, யு.ஜி.சி., நிறுத்தி வைத்துள்ளது.
தற்போதுதான், ஆசிரியர்களுக்கு பல்கலை நிர்வாகத்தின் முறைகேடு தெரியவந்துள்ளது.
மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட இக்கல்வி நிறுவனத்தை, வணிக நோக்கத்தில் மாற்ற இடம் தராமல், மனிதவள மேம்பாட்டுத்துறை, யு.ஜி.சி., இணைந்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர, ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அறக்கட்டளையிலுள்ள பணத்தை முடக்க வேண்டும். வேந்தர் தாமாக முன்வந்து, பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அல்லது மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்.
தவறும்பட்சத்தில், முற்றிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாநிலம் முழுவதும் அனைத்து கல்வியாளர்களையும் சந்தித்து, அவர்களது ஒத்துழைப்புடன் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.