ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

காலச்சுவடுகள் ..சனி 9, பிப்ரவரி 2013....


தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் உமரிக்காடு, நல்லூர், வாழவல்லான், குரங்கனி, ஏரல், முப்பிலிபட்டி, ஓசனூத்து, புதியம்புத்தூர், கவர்னகிரி, பாஞ்சாலங்குறிச்சி ஆகிய பகுதிகளில் தினந்தோறும் ஆயிரக் கணக்கான லாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு குடிநீர் என்ற போர்வையில் கடத்தப்பட்டு வந்தது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து, நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு, பொது மக்கள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை எழுந்தது. ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகளவு சுரண்டப்பட்டு, அபாய கட்டத்தில் உள்ளதாக மத்திய குடிநீர் வழங்கல் துறை எச்சரிக்கை விடுத்தது. பெரும்பாலான மக்களுக்கு சிறுநீரக கோளாறுகளும், சுகதாரமற்ற தண்ணீரால் பல நோய்களும் ஏற்பட்டது. சாலைகள் பாதிக்கப்பட்டு, விபத்துகள் அதிகளவில் நடந்து வந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் நிலத்தடி நீர் கொள்ளையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி சட்டசபையில் மூன்று முறை தனது தொகுதியில் நிலத்தடி நீர் சுரண்டலை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். ஆர்ப்பாட்டம், சைக்கிள் பேரணி, மறியல் போராட்டங்களை நடத்தினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய அரசியல் கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும், விவசாய சங்கங்களும் தொடர்ந்து நிலத்தடி நீர்க் கொள்ளையைக் கண்டித்து போராடினர். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நிலத்தடி நீர் கொள்ளைக்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழிற்சாலைகளுக்கு நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்க கோரி 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ”குடிநீர் லாரி உரிமையாளர் சங்கம்” என்று பெயர் வைத்து ஆழ்குழாய் கிணறு மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மீண்டும் நிலத்தடி நீர் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் ஓட்டப்பிடாரம் பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உருவானது.
இதையடுத்து ஓட்டப்பிடாரம் வட்டத்தில் தண்ணீர் லாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படுவதாக கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசன் உத்தரவிட்டுள்ளார். அவர் தண்ணீர் விற்பனை செய்கின்ற நபர்களுக்கு அளித்துள்ள உத்தரவில், "ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், குலசேகரநல்லூர், ஜம்புலிங்கபுரம், பசுவந்தனை, சிந்தலகட்டை, சில்லாநத்தம், வேப்பலோடை ஆகிய இடங்களில் பட்டா நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தனியார் தொழிற்சாலைகளுக்கு வணிக நோக்கில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
வறட்சி, விவசாயம் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் காரணமாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போராட்டங்கள் நடத்தினர். இதனால் ஓட்டப்பிடாரம் பகுதியில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தருவைக்குளம், புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் காவல் நிலையங்களில் இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதனால் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து வணிக நோக்கத்தில் விற்பனை செய்பவர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அவர்கள் கொடுத்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. இதனால் பொதுமக்களின் நலனுக்காக, சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133 ன் படி அனுமதியின்றி வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்வது நிரந்தரமாக தடை செய்யப்படுகின்றது. இந்த தடையை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நகல்கள் நிலத்தடி நீர் எடுக்கின்ற 37 பேருக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஓட்டப்பிடாரம் பகுதியில் தண்ணீர் லாரிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனை விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக