'தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமைக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி
செயல்படுகிறார். நாங்கள் நடத்தும் மாநாட்டை முடக்கப் பார்க்கிறார். மாநாடு நடக்க இருக்கும் கல்யாண மண்டப உரிமையாளரை அவர் கட்சியினர் மிரட்டுகிறார்கள்! நாங்கள் போலீஸில் புகார் கொடுத்தால், எங்களையும் அடக்கப் பார்க்கின்றனர்!'' என்று 'புதிய தமிழகம்' கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது அடுக்கடுக்காகப் புகார் வாசிக்கிறது, 'மத்திய, மாநில எஸ்.ஸி., எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு! இதனால் ராஜபாளையமே 'ரவுசு பாளையமாக' மாறி வருகிறது!
ஜான்பாண்டியனின் 'தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்', டாக்டர் கிருஷ்ணசாமியின், 'புதிய தமிழகம்', பசுபதிபாண்டியனின் 'தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு' ஆகிய மூன்று அமைப்புகளுக்குமே தென்தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மத்தியில் செல்வாக்கு உண்டு. சட்டசபைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறார். கோவைத் தொழிலதிபர் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையில் இருந்த ஜான்பாண்டியன், சமீபத்தில் விடுதலையாகித் தனது பங்குக்குக் கொங்குமண்டலம் தொடங்கி குமரி வரை மாவட்டந்தோறும் கட்சி மாநாடுகள் நடத்திப் பரபரப்பு கிளப்புகிறார். பசுபதிபாண்டியனும் தேர்தலை சந்திக்க, தனது கட்சிக்காரர்களைத் தயார்செய்து வருகிறார்.
இந்த நிலையில்தான், ''தேவேந்திர குலத்தார், பள்ளர், குடும்பன், காலாடி என்று பல பெயர்களால் அழைக்கப்படும் அனைவரையும் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் ஒருங்கிணைத்து அரசாணை வெளியிட வேண்டும்!'' என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பிப்ரவரி 20-ம் தேதி ராஜபாளையத்தில் கோரிக்கை மாநாடு நடத்த முடிவு செய்தது, 'மத்திய மாநில எஸ்.ஸி., எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு' என்ற அமைப்பு. இந்த மாநாட்டில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் அனைத்துத் தலைவர்களையும் பங்கேற்க வைக்கவும் முடிவு செய்தார்கள். அதுதான் இப்போது பிரச்னையாகி இருக்கிறது!
நம்மிடம் இது குறித்து கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராஜாராம் பேசினார். ''ஜான்பாண்டியன், பசுபதிபாண்டியன் ஆகியோர் எங்கள் மாநாட்டுக்கு வருவதாக வாக்குக் கொடுத்துள்ளார்கள். மள்ளர் இலக்கியக் கழகத் தலைவர் சுப.அண்ணாமலையும் வருவதாகச் சொல்லி இருக்கிறார். ஆனால், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மற்ற தலைவர்களை அழைத்தது பிடிக்கவில்லை. 'அதனால் நான் வரமாட்டேன்!' என்று சொல்லிவிட்டார். 'சரி, அவரு வராம மாநாட்டை நடத்துவோம்'னு முடிவு செய்தோம். மாநாடு நடத்துவதற்காக கல்யாண மண்டபத்துக்கு 'அட்வான்ஸ்' கொடுத்தோம். டாக்டர் கிருஷ்ணசாமியின் கட்சிக்காரர்கள் 'இந்த மாநாடு நடக்கக்கூடாது' என்று தடுக்கிறார்கள். அந்தக் கல்யாண மண்டப நிர்வாகியிடம் சென்று தகராறு செய்கிறார்கள்...'' என்றார்.
செயலாளர் விஜயகுமார் தொடர்ந்தார். ''தமிழகத்தில் எங்கள் எஸ்.ஸி., எஸ்.டி. மக்களுக்கு இட ஒதுக்கீடு உட்பட பல பிரச்னைகள் இருக்கின்றன. அ.தி.மு.க., தி.மு.க. என்ற இரண்டு திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சியில் உட்கார்ந்தாலும் எங்களுக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை. எனவே, சட்டசபைத் தேர்தல் வருவதால்... எங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி கோரிக்கை மாநாடு நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். டாக்டர் கிருஷ்ணசாமி, வேறு யாரையும் அழைக்கக் கூடாது என்று சொல்வதோடு இல்லாமல், ' சிவப்பு, பச்சை நிறக் கொடியையும் பயன்படுத்தக் கூடாது' என்று மிரட்டுகிறார். பிற ஆதிக்க சாதியினரிடம் இருந்து தாழ்த்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கிருஷ்ணசாமி, இப்போது தாழ்த்தப்பட்டவர்கள் மீதே ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாறிவிட்டார். எங்கள் மாநாட்டை முடக்குவதற்காக இன்னும் சில இடைஞ்சல்களையும் செய்து வருகிறார். மாநாட்டு நிர்வாகிகளுக்கு, அவரது கட்சியினர் போன் மூலம் மிரட்டல் விடுக்கிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாராட்டு விழா நடத்தினோம். அப்போது எங்களைப் பாராட்டியவர், இப்போது எங்கள் மீது கோபப்படுகிறார். ஆனாலும் ராஜபாளையத்தில் மாநாடு நடத்துவதற்கான வேலைகளைத் தீவிரமாக செய்து வருகிறோம். அதை நாங்கள் இவருக்காக நடத்தாமல் விடப்போவதில்லை!'' என்றார் ஆவேசமாக!
இது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்டோம். ''எனக்குத் தெரியாத விஷயத்துக்கு எல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன். இதுபற்றி எனக்கு எதுவுமே தெரியாது. வேறு எதுவும் கேட்காதீர்கள்...'' என்று மட்டும் சொல்லி, இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
ஈகோ பிரச்னை காரணமாக, ஒரு கட்சித் தலைவராக இருப்பவரே, சகோதரர்களின் உரிமைக்குரலுக்கு மதிப்பு தராமல் இருக்கலாமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக