ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

தமிழக மின்வாரியத்தில் பல கோடி நஷ்டம் வெள்ளை அறிக்கை கேட்கிறார் கிருஷ்ணசாமி

விழுப்புரம்: தமிழக மின்சார வாரியத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 2011ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பின், அப்போதைய முதல்வர் ஜெ., சட்டசபையில் பேசியபோது, கடந்த கால தி.மு.க., ஆட்சியின்போது நடந்த முறைகேடுகள் காரணமாக தமிழக மின்துறைக்கு, 400 கோடி கடன் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில், மின் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாத கட்டாய சூழ்நிலை உள்ளதாக விளக்கினார். தற்போது இரண்டாவது முறையாக 15 சதவீத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
நலிவடைந்த மின்துறையை மேம்படுத்த மின் கட்டண உயர்வை அமல்படுத்திய அ.தி.மு.க., அரசு, மின்துறைக்கு 700 கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியை விட அ.தி.மு.க., ஆட்சியில் இரு மடங்கு கடன் ஏற்பட காரணம் விளங்கவில்லை.
தமிழக மின்சார வாரியத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, ஆய்வு செய்ய அனைத்துக் கட்சி பிரநிதிகள் குழுவை அரசு அமைக்க வேண்டும். தமிழக மின்வாரிய செயல்பாடு, தற்போதைய நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு, புதிதாக மின் உற்பத்தி திட்டங்கள் எவ்வளவு துவக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளன. தினம் மாநிலத்தின் மின்தேவை, பற்றாக்குறை மற்றும் தனியாரிடம் எந்த விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு வழங்கப்படுகின்ற மின்சாரத்தின் அளவு ஆகியவற்றை வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் மின்கட்டண அளவீடு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்பதை மாற்றி, மாதந்தோறும் மின் கட்டணத்தை அளவீடு செய்து நிர்ணயிக்க முன் வர வேண்டும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் ரகுநாதன், திருச்சி மாவட்ட செயலாளர் அய்யப்பன், கடலுார் மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக