ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 14 ஜூலை, 2011

சுந்தரலிங்கம் குதித்த கிடங்கு



பாஞ்சாலங்குறிச்சியில் ஊரை விட்டு ஒதுங்கிய இடத்தில் சுற்றிலும் தென்னை மரங்கள்; பழஞ்செடிகள் அடர்ந்தபடி கிடக்கிறது, கிணறு மாதிரியான புராதனமான பகுதி. பக்கத்தில் செங்கற்கள் துருத்தியபடி இரண்டு சிதைந்த கல்லறைகள்.

மனித வெடிகுண்டுகள் இப்போது சாதாரணமாகிவிட்டாலும், இந்தியாவின் முதல் மனித வெடி குண்டாகத் தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட ஓரு வீரனின் வரலாறு தூசி போர்த்தியபடி கிடக்கிறது இந்த இடத்தில்.

கெவிணகிரி.

பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள சின்னக் கிராமம். இங்கு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் சுந்தரலிங்கம். தேவேந்திரகுல வேளாளர் குலத்தில் பிறந்த சுந்தரலிங்கத்தின் வீரம் அந்தக் கிராமம் தாண்டி பாஞ்சாலங்குறிச்சி அரண்மனை வரை பரவியிருந்தது. இதையடுத்து வீரபாண்டிய கட்டபொம்மனின் ஒற்றர் படைத் தளபதியானான். பிறகு அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தான். தானியக் கிடங்குகள், வெடிமருந்துக் கிடங்குகள் எல்லாம் அவன் வசத்தில் இருந்தன.

கட்டபொம்மன் பிரிட்டிஷ் அரசுக்கு வரி கட்டாததால் ஆங்கிலேய அரசின் நெருக்கடி அதிகரித்திருந்த நேரம். அப்போதுதான் கட்டபொம்மனைப் பல நாட்கள் அலைய வைத்து ராமநாதபுர அரண்மனையில் சந்தித்தார் ஆங்கிலேய அதிகாரியான ஜாக்சன் துரை. அந்தச் சந்திப்பே கலவரமாக மாறியது. அப்போது பாதுகாப்புக்காகச் சென்றிருந்த சுந்தரலிங்கத்தின் வாள் வீச்சில் பல வெள்ளைச் சிப்பாய்கள் உயிரிழந்தனர். ஜாக்சன் துரைக்கு நெருக்கமான லெப்டினென்ட் கிளார்க் அதில் பலியானது ஆங்கிலேயப் படைக்கு எரிச்சலை உண்டாக்கியது.

இதையடுத்து, 1799இல் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை அடியோடு தகர்க்கத் திட்டமிடப்பட்டது. வெள்ளையரின் படைகள் நெருங்கி போர் நடந்தபோது சுந்தரலிங்கம் முன்னணியில் போராடி கட்டபொம்மனுக்குப் பக்கபலமாக நின்றான்.

ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து சற்றுத் தூரத்திலிருந்த கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் எல்லாம் தயாராக இருந்தன. பொருத்தமான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள்.

அந்த நேரத்தில் தன்னுடைய முறைப்பெண்ணான வடிவுடன் சேர்ந்து ஆடு மேய்ப்பவர்களைப் போல ஆட்டு மந்தையுடன் வெள்ளையர்களின் வெடிமருந்துக் கிடங்குப் பகுதிக்குப் போனான் சுந்தரலிங்கம். படைவீரர்கள் மறித்தார்கள். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்திருக்கிறார்கள். பலத்த வெடிச்சத்தம்; கந்தகச் சிதறலுடன் 1799 செப்டம்பர் 8ஆம் தேதி. அதற்கு மறுநாள் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை வெள்ளையர்களின் கையில் சிக்குகிறது.

சுந்தரலிங்கத்தின் இந்தத் தாக்குதலை மறுக்கிற ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் நாட்டுப்புறக் கதைப் பாடல்களில் இன்றும் தவிர்க்க முடியாத பாத்திரமாகப் பதிந்து போயிருக்கிறான் சுந்தரலிங்கம். இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் நிற்கிறது, தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொண்ட வீரனின் விசுவாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக