ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

சாதிய தீயை பரப்பும் அரசியல் தலைவர்கள்..: ராமதாஸ் மீது ஜான்பாண்டியன் காட்டம் ....

சிதம்பரம்: தமிழகத்தில் சாதிய பிரச்சனைகள் குறைந்துவரும் நிலையில் சில அரசியல் தலைவர்கள் சாதிய தீயை பரப்புகின்றனர் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை மறைமுகமாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் சாடியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் சில பகுதிகளில் குறந்துள்ளது, சில பகுதிகளில் அதிகரித்துள்ளது. தற்போது. சாதிய பிரச்சனைகள் தமிழகத்தில் குறைந்துள்ளன. ஆனால் சில அரசியல் கட்சித்தலைவர்கள் சாதிய தீயை பரப்பி வருகின்றனர். இந்தத் தலைவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும். வன் கொடுமை சட்டத்திற்கு திருத்தம் செய்வது தவறாகும். அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

புதன், 23 ஜனவரி, 2013

முதல்வர் அவர்களுக்கு நன்றி


  கரிகால்சோழமள்ளர் அவர்களுக்கு நமது முதல்வர் அவர்கள் மணி மண்டபம் கட்ட ஆணையிட்ட முதல்வர் அவர்களுக்கு நன்றி ......
தேவேந்திர வேளாளர் முன்னேற்றப்பேரவை , கோயம்புத்தூர்  (காந்திமநகர் ) சார்பாக  மள்ளர்களின் குலப்பெரராசர் கரிகால்சோழன் அவர்களுக்கு  நமது முதல்வர் அவர்கள் மணி மண்டபம் கட்ட ஆணையிட்ட முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டி கோயம்புத்தூர்  முழுவதும் ஒட்டியுள்ளனர்.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

பள்ளரே பாண்டிய மரபினர்



பள்ளரே பாண்டிய மரபினர்
பேராசிரியர். சு. சண்முக சுந்தரம் (மறவர்)

        இவர் 'ஐந்து கதைப் பாடல்' என்ற நூலில் கள்ளரும், மறவரும் 'பாண்டியர் மரபினர்' அல்லர் என்றும், இவர்கள் பாண்டிய அரசிற்கு பகை ஆற்றலாகவே விளங்கி வந்தனர் என்றும், 'பள்ளர்களே பாண்டியருக்கு துணையாய் இருந்து வந்தனர்' என்றும் கண்டுள்ளார். அந்த கதைப் பாடல்களில் சில பாடலடிகளை இங்கே காண்போம்:


"கள்ளநாட்டார் ஒன்று கூடி 
களவு செய்ய புறப்பட்டார்கள்"
...........................................
"தென்னாடு போகணுமே
தீவட்டிக் கொல்லைப் போடணுமே
கன்னக்கோல் ஆக்கணுமே
கையருவாள் வல்லயமும்
குத்துகம்பு வல்லையமும்
கொடுக்கருவாள் சமுதாடும்
பூட்டை மெல்ல முறிக்கணுமே
போய் களவு செய்யணுமே
கன்னமது போட வேண்டும்
களவு செய்து திரும்ப வேண்டும்
பதிமூன்று பேர் கள்ள நாட்டார்
பக்குவமாய் புறப்பட்டார்கள்"
.............................................
"களவுக்குத் தலைவன் அண்ணே
கருப்புசாமி வந்தேன் அண்ணே
காஞ்சிபுரம் கருப்பநென்றால்
கடவுளுக்கும் அஞ்சமாட்டான்"
..........................................
"களவு செய்ய இடமுமில்லை
கன்னம் போட வழியுமில்லை
இரும்பு ஊசி களவு போனால்
ஏற்ற தங்க ஊசி வாங்கிடுவேன்
ஆனால் ஒரு துப்பதுதான்
அருமையுடன் சொல்லக்கேளும்
கோபாலசமுத்திரத்தில்
குடியிருக்கார் குடும்பக்கமார்
நாகநல்ல குடும்பனென்றும்
கனக நல்ல குடும்பனென்றும்
பள்ளருட தாவளத்தில்
பணம் அதிகம் இருக்குதய்யா
ஏழுகிடாரத் திராவியந்தான்
இருக்குதய்யா அங்கேதான்
ஆயக்காலில் தொங்குதய்யா"
................................................
"கண்டார்கள் கட்டிடத்தை
கல்லறைத்தான் துளைக்கும்
கன்னக்கோலை எடுத்தார்கள்
செங்கல்லைத் துளைக்கும்
சிறு ஆக்கரவைத்தான் எடுத்தார்
அத்தசாம நேரத்தில்
ஆளரவம் இல்லா வேளையிலே
கன்னமது போடலுற்றார்
கதவுகளைத்தான் திறந்தார்
கீழ்த்தாளை மேல்த்தாளை
கிருபையுடன் துறக்கலுற்றார் 
வெண்கலக் கதவுதன்னை
வேகமுடன் திறக்கலுற்றார் 
தங்க நல்ல களஞ்சியத்தைத்
தான் பார்த்தார் கள்ளநாட்டார்" 
....................................................
"கள்ளருக்குத் தலைவன் தானே
கருப்பசாமி தேவராவார் -- 
'கலங்காதிங்கோ மயங்காதிங்கோ
காவலுக்கு ஒருவரில்லை' என
ஏழு கிடாரத் திரவியத்தை
ஏகமுடன் வாரலுற்றார் 
வயிரங்களும் முத்துக்களும்
வாரி வாரி கட்டலுற்றார்'
..............................................
"குலவைச் சத்தம் காதில் கேட்டார்
குழந்த மெச்சும் பெருமாள் பாண்டியனும்
வண்ணாத்தி வீடு விட்டு
வாராரே பாண்டியரும்
காச்சிநாயும் பூச்சிநாயும்
கடுமையுட வருதய்யா
கள்ளருட குலவை சத்தம்
காச்சி நாயும் கேட்டிடுமாம்
வீமானென்ற நாயுதுதான்
துள்ளி ஓடி வருதய்யா
நாயுடனே பின் தொடர்ந்தார்
நலமான பாண்டியரும்"
...................................................
"தொட்டிபாலம் தான் கடந்து
துளசிமாடம் தான் கடந்து
தாம்பிற வன்னிதான் கடந்து
தானே பாளையங்காலும் கடந்து
நாகக் குடும்பனுட வளவதிலே
நலமான பாண்டியரும்
பள்ளர்களை எழுப்பியல்லோ
பாண்டியரும் ஏது சொல்வார்
கனகக் குடும்பா நீ கேளு
களஞ்சியங்கள் எங்கே போச்சி
நாகக் குடும்பா எனது
நாட்டாண்மை எங்கே போச்சி
ஏழுகிடாரத் திரவியந்தான்
இருக்குதோ பாருமென்றார்
பூமியிலே போட்டிருந்தால்
பூதங்க்கொண்டு போகுமென்று 
ஆயக்கால் போட்டு வைத்தாய்
அருமையான திரவியத்தை
வடநாட்டு கள்ளர் வந்து
வாரிக் கொண்டு போய்விட்டார்
கருங்காட்டு ஊரதிலே
கண்டேனே கள்ளர்களை
ஓடவிட்டு தலையறுத்தேன்
உங்கள் திரவியத்தை நான் காத்தேன்"

                கள்ளரும்,மறவரும் பாண்டிய நாட்டின் பகைக் கூட்டத்தினர் என்பதுவும், குடும்பர் குலப்பட்டம் கொண்ட பள்ளர்களே பாண்டியர்களின் உறவினரும், மரபினரும் ஆவர் என்பதுவும் மேற்கண்ட கதைப்பாடல் ஆய்வுகள் கண்டு காட்டும் உண்மையாகும்.

               தஞ்சைப் பகுதியை சேர்ந்த கள்ளர் மரபினரில் சிலர் தங்களை சோழர் பரம்பரையினர் என்றும், இராசராச சோழனின் வழி வந்தவர்கள் என்றும் அண்மைக் காலங்களில் உரிமை பாராட்டி வருகின்றனர். ஆனால் அவர்களின் வரலாறோ, அரச மரபிற்கும், குடிமக்களுக்கும் நேர் எதிராக உள்ளது குறிப்பிடத் தக்கது.

மள்ளரே பள்ளர் எனக்கூறும் அறிஞர்களின் கூற்று



    தமிழ் இலக்கியங்கள் யாவிலும் ஏர்த்தொழிலையும், போர்த்தொழிலையும் குலத்தொழிலாகக் கொண்ட மருத நிலக் குடிகளான மள்ளர்களே மரபு பிறழாமல் பண்டையக் குலத்தொழிலோடும், பண்பாட்டு வழக்காறுகளோடும் மரபறியும் வகையில் தடம் பதித்து வாழ்ந்து வருகின்ற பள்ளர்கள் என்பதைப் பல்வேறு அறிஞர் பெருமக்கள் ஆய்ந்தறிந்து கூறியுள்ளனர். அவ்வறிஞர் பெருமக்களின் கூற்றுகள் உரைக்கும் உண்மைகள் வருமாறு:

  • முனைவர் வின்சுலோ
          "இன்று தென்னகத்தில் வேளாண்மைத் தொழில் புரிந்து வரும் பள்ளர், மள்ளர் என்பதின் உச்சரிப்பு வேறுபாடு ஆகும்" என்கிறது வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி (Dr.Winslow Dictionary pp.174).

  • டி.கே.வேலுப்பிள்ளை
          "பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் மள்ளர் பிற்காலத்தில் பள்ளர் என வழங்கலாயினர்" என்கிறார் டி.கே.வேலுப்பிள்ளை. (T.K.Veluppillai, Travancore State manual 1940)

  • முனைவர் சி.ஒப்பார்ட்
          "மள்ளர் பள்ளர் ஆனது உச்சரிப்பு வேறுபாடாகும்" என்கிறார் மேலை நாட்டு அறிஞரான சி.ஒப்பார்ட் (Dr.G.Hobart, Dravidians, The Original inhabitants of India, pp.101)

  • ஞா.தேவநேயப் பாவாணர்
           "பள்ளர் என்பவர் மள்ளர், மருதநிலத்தில் வாழும் உழவர்" என்கிறார் மொழி ஞாயிறு பாவாணர் (செந்தமிழ்ச் செல்வி 1975 ஏப்ரல் வெளியீடு)

  • ந.சி.கந்தையாப் பிள்ளை
          "பள்ள என்பது மள்ள என்பதன் உச்சரிப்பு வேறுபாடாகும். பண்டைய மள்ளரே இன்றைய பள்ளர்" என்கிறார் ந.சி.கந்தையா பிள்ளை (தமிழர் சரித்திரம் பக்.206 ). இக்கருத்தினைப் பண்டித சவரியாரும் வலியுறுத்துவார். இவ்விருவரும் யாழ்ப்பாணத்து அறிஞர்களாவர்.

  • சேலம் மாவட்டக் குடிக் கணக்கு
          1961 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேலம் மாவட்டம் கணக்கன்கிரி ஊர் பற்றிய கையேட்டில் "பள்ளர் என்பவர் மருத நில மக்களாகிய மள்ளர்" எனக் கண்டுள்ளது.  (1961 Census of India, Vol.IX, Madras Part VI, Village Survey Monograph, Kanakkangiri Village, Salem District)

  • கேரளா பண்பாட்டு வரலாற்று நிகண்டு - II 
            எசு.கே.வசந்தன் என்பவரால் எழுத்தப்பட்டு,திருவனந்தபுரம், கேரள மொழிப் பயிற்சியகம் வெளியிட்ட கேரளப் பண்பாட்டு நிகண்டு பாகம் 2 பக்கம் 123 இல் பள்ளர் என்பவர் சங்க இலக்கியங்களில் மள்ளர் என அறியப்படுவதைத் தெளிவுபடுத்துகிறது. மலையாளத்தில் உள்ளவாறு.....
(விரைவில் அந்த பக்கம் இங்கே ஸ்கேன் செய்து பிரசுரிக்கப் படும்)

பள்ளன்
    "தெக்கன் திருவிதாங்கூரில் காணுன்னா தமிழ் கர்சகத் தொழிலாளிகள் யுத்தம் தொழிலாகிய கூடியான. அதினால் மள்ளர் என்னும் பறையும் - சங்க சகாத்தியத்திலே மள்ளர். இவர் மக்கத்தாயிகளான. வளரப்பெயர் கிருத்தவ மதம் சிவிகரிச்சு. பீர்மேடு பாங்களிலும் இவரக் காணும்."

இதன் தமிழாக்கம் வருமாறு....
பள்ளன்

    "தெற்குத் திருவிதாங்கூரில் காணப்படும் தமிழ் வேளாண் தொழில் மக்கள், போர்த் தொழிலையும் இனைந்து மேற்கொண்டதால் மள்ளர் என்றும் அழைக்கப் படுகின்றனர் -- சங்க இலக்கியங்களில் மள்ளர்கள், இவர்கள் தந்தை வழி நிலத்திற்கு உரிமையுடையவர்கள். இவர்களில் பெரும்பாலோனோர் கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டனர். பீர்மேடு பகுதிகளில் இவர்களைக் காணலாம்" என்கிறது கேரள பண்பாட்டு வரலாற்று நிகண்டு.

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலும், மள்ளர்களின் நாற்று நடவு திருவிழாவும்



    சேர மன்னர்களின் ஆட்சிக் கட்டிலாக இருந்த பெருமை கோவைக்கு உண்டு. பின்னர்சோழர்களின் ஆட்சிக்கு இந்த கொங்கு மண்டலம் சில காலம் கை மாறியது. கரிகால்சோழன் காலத்தில்தான் பேரூர் கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. (Ref: http://tamilnadu-tourism.blogspot.in/2008_12_01_archive.html)

    பேரூரில் நான்கு வகைப் பள்ளர்கள் உள்ளனர். அவர்கள் முறையே கொங்குப் பள்ளர்கள், கடையப் பள்ளர்கள், சோழியப் பள்ளர்கள், பாண்டியப் பள்ளர்கள் என வழங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வகையினருக்கும் பதினெட்டு குடும்புகள் (ஊர்,நாடு, பட்டி, பதி, பாளையம்,வட்டகை) உண்டு. அப்பதினெட்டு குடும்பிற்க்கும் ஒரு பட்டக்காரர் என் நான்கு வகுப்பாருக்கும் சொந்தமானது பேரூர் நாட்டுத் தேவேந்திர குல வேளாளர் சமூக மடம். இம்மடத்தின் தூண் ஒன்றில் களிறின் சிற்பமும், மற்றொரு தூணில் மீன் சின்னமும் பொறிக்கப் பட்டுள்ளது. இந்த மடம் ஏறத்தாள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.(நேர்காணல்: பு.வே.அசோக் பண்ணாடி, கோவை)

நாற்று நடவுத் திருவிழா

    மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா.

    நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.

(விரைவில் இணைக்கப்படும்: கோவை - நாற்று நடவுத் திருவிழா புகைப்படம்)

    தேவேந்திரர் குல வேளாளர் பெண்கள் அவர்களது மண்டபத்தில் முளைப்பாரி வைத்து இருப்பார்கள்.தினந்தோறும் பட்டீஸ்வரர் மற்றும் பச்சைநாயகி அம்மன் உடன் சென்று முளைபாரிகளுக்கு தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி, தொடர்ந்து மகா தீபராதனை நடைபெறும்.மாலை பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் ரிஷப வாகனத்தில் நாற்றுகள் வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குப் புறப்படும் போது நந்தியிடம் “நாற்று நடும் நிகழ்ச்சிக்கு செல்கிறோம். சுந்தரமூர்த்தி கேட்டால் தகவல் கூற கூடாது“ என கூறும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சுவாமிகள் ரதத்தில் மண்டபத்திற்கு சென்றனர்.

    கோயில் வாயிலில் காளை மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, ஏர் கலப்பைக்கு பொன்னேர் பூஜை நடைபெறும்.சுந்தரமூர்த்தி நந்தியிடம் சென்று சிவபெருமான் எங்கு சென்று உள்ளார். என கேட்டதற்கு நந்தி பதில் கூறாமல், தலையை தெற்கு புறமாக சாய்த்து, நாற்று நடவு மண்டபத்தில் சுவாமிகள் உள்ளதை மறைமுகமாக தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.தொடர்ந்து பட்டத்து யானை முன்னே செல்ல தாரை தப்பட்டை மற்றும் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக பட்டீஸ்வரர் மண் வெட்டியுடன், பச்சை நாயகி அம்மன் நாற்றுகள் எடுத்து கொண்டு நாற்று நடவு மண்டபத்தில் எழுந்தரும் முன்னதாக வயலில் தண்ணீர் நிரப்பப்பட்டு, கலப்பையால் உழவு செய்யப்படும்.தேவேந்திர குல தம்பதியினர் வேடத்தில் சுவாமிகள் வயலில் இறங்கி, சுவாமி மண் வெட்டியால் வெட்ட, அம்மன் நாற்றுகளை நடும்போது பெண்கள் குலவை சத்தம் எழுப்பி, போட்டி, போட்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாற்றுகள் நடுவார்கள்.அப்போது அங்கு வந்த சுந்தரமூர்த்தி பட்டீஸ்வரரை சந்தித்து,  “திருப்பணிக்கு பொன், பொருள்கள் கேட்டு பாடல்கள் பாட அதற்கு சுவாமிகள் “இங்கு முக்தி கிடைக்கும் என கூறி பொன் பொருளுக்கு சேரமானை சந்திக்க ஓலை கொடுக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து சுவாதி திருவீதி உலா.சுந்தரமூர்த்தியிடம் தகவல் கூறிய நந்தியின் தாடையை மண்வெட்டியால் சுவாமி வெட்டும் நிகழ்ச்சியும் மகாதீபாரதனையும் சிறப்பாக நடைபெறும். (Ref: http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_10.html)

(விரைவில் இணைக்கப்படும்: வெள்ளி மண் வெட்டி தூக்கி பள்ளர்களுடன் வயலுக்கு செல்லும் சிவன்)

    பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது.

பேரூர் புராணம் கூறும் மள்ளர் தடங்கள்

 இயற்றியவர் கச்சியப்ப முனிவர், காலம் 18 ஆம் நூற்றாண்டு
திருநகரப்படலம் - 2 செய்யுள் 12
வில்லம்பு கொண்ட மள்ளர்
        "வாளொடு பரிசைகை வாங்கு மீளிகள்
         தோளொடு தூணிவிற் றுதைந்த மள்ளர்கள்
         நாளொடு வேல்கதை நயக்கும் வீரர்கள்
         தாளொடு போர் பயில் சாலை யெண்ணில"

    "வாளோடு கேடயமும் கைகளில் பிடித்த வலிமை மிக்க மள்ளர்கள், தோளோடு உள்ள அம்புக்கூடுகளில் வில்லம்புகள் நிறைந்த மள்ளர்கள், நல்ல நாட்களில் வீரக் கதைகள் பேசும் மல்லர்களுக்கு உழைப்போடும் போர்ப்பயிற்சிகள் கற்றுத் தரும் பாடசாலைகள் பல இருந்தன" என்பதை மேற்கண்ட செய்யுளடிகள் உணர்த்துகின்றன.

15 சுமதி கதிபெரும் படலம்
செய்யுள் 54
மல்லர்களுடைய கற்பு நெறி
        "வருணமு மொழுக்கமு மல்லற் கற்பொடும்
         ஒருவியன் பனைச் செகுத் துலப்பி றீங்குமுன்
         மருவின மின்னுநம் மாட்டு ளாரினும்
         வெருவுறு கொலைப்பழி மேவற் பாலதோ"

    "மரபும், மரபு ஒழுக்கமும், மள்ளர்களின் கற்பு நெறியோடு கேடுகள் செய்யும் ஒருவனைக் கொன்று நீக்கித் தீமைகள் பலவற்றை முன்னே எதிர்த்துப் போராடினோம் இன்னும் தீயவர் பலர் நம்முள்ளே உள்ளாராயினும் அவர்களைக் கொன்றால் கொலைப்பழி வந்து சேராதோ?" என்று தீயவர்களைக் கொள்ளத் தயங்கும் மல்லர்களின் மனநிலை குறித்து மேற்கண்ட பாடலடிகள் தெரிவிக்கின்றன.

பள்ளுப் படலம்
செய்யுள் 26
        "இந்திரன் பிரம னாரணன் முதலா மிமையவர் நு கமல மேழி
         வெந்திறந் கொழுவார் கயிறுகோல் பகடு வித்துநா றனைத்துமாயங்கு
         வந்தனர் பயில வன்கண நாத ரேவல்செய் மள்ளராய் விரவி
         முத்துறும் பட்டிப் பள்ளனை யடுத்து மொழி வழி வினை தொடங்கினரால்"
    இந்திரன், பிரமன்,திருமால் முதலாகவுள்ள தேவர்கள் நுகம்,கலப்பை,மேழி,கொழுவு,கயிறு,தார்க்கோல்,இடுபொருட்கள் ஆகியவற்றுடன் வந்தார்கள். மள்ளராய் முன்னே செல்லும் பட்டிப் பள்ளனாகிய சிவ பெருமானைத் தொடர்ந்து விரைந்து வந்து அவரின் ஏவல்படி வேளாண் தொழில் செய்யத் தொடங்கிய செய்தியை மேற்கண்ட செய்யுளடிகள் விளக்குகின்றன.

செய்யுள் 27
பள்ளச் சிறாரான விநாயகனும் முருகனும் வயலில் மீனும் அமையும் எடுத்து விளையாடுதல்
"கடலிடைத் துளபக் கடமுடன்பிடித்த காமுகக் கடவுளு மீனின்
              தடமுலைச் சுவைப்பால் பருகிய மணிவேற் சாமியும் பள்ளனற் சிறாராய்
              இடனகல் வயலிற் கமடமு மீனு மெடுத்தெடுத்திரும்பணைப் புறத்துத்
              திடரிடத் துரத்திக் குறுகுறு நடந்து சிறுவிளை யாட்டையர்ந் தனரால்"

    திருப்பாற் கடலிலே மாமன் திருமாலாகிய ஆமையை முன்பு பிடித்துக் கொண்டு வந்து கைலாசப் பள்ளர் பால் சேர்ப்பித்த யானை முகக் கடவுளும், மதுரை மீனாட்சி பள்ளத்தியாரின் பருத்த முலைப்பால் சுவைத்த முருகக் கடவுளும் பள்ளருடைய நல்ல மக்களாய் அகன்ற இடத்தையுடைய வயலிலே உள்ள ஆமைகளையும், மீன்களையும் எடுத்து எடுத்து வயற்புறங்களில் வீசிக் குறுகுறு என நடந்து சிறு குறும்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

பேரூர் கோவில் பற்றிய சிறு குறிப்பு

மூலவர்         : பட்டீஸ்வரர்
அம்மன்/தாயார்        : பச்சைநாயகி, மனோன்மணி
தல விருட்சம்         : புளியமரம், பனைமரம்
ஊர்                : பேரூர்
மாவட்டம்         : கோயம்புத்தூர்
மாநிலம்         : தமிழ்நாடு
திருவிழா:
     திருவாதிரை முக்கிய திருவிழா. பங்குனியில் பிரம்மோற்ஸவ தேரோட்டம், ஆனியில் நாற்றுநடும் உற்சவம்.

தல சிறப்பு:
     சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். கோயிலின் முன்பு "பிறவாப்புளி' என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது.

தலபெருமை
இறைவன் பள்ளர் சாதியில் பிறந்து திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம்.
(ஆதாரம்: http://temple.dinamalar.com/New.php?id=460)

தேவேந்திர மடத்தில் உள்ள கல் சிற்பங்கள்




இந்த வீடியோ பதிவில் நிமிடம் 11.30 -12.20 வரை 'பேரூர் கோயில் குருக்கள்' மள்ளர்/பள்ளர் வரலாற்றை பேசுவதை காணலாம்.

பழனி முருகன் கோயிலும், பழன மக்களான மள்ளர்களும்



    'பழனம்' என்றால் 'வயல்' என்று பொருள். வயல் சூழ்ந்த ஊருக்கு 'பழனி' என்று பெயர் ஏற்ப்பட்டது. 

        பள் > பள > பழ > பழனம் > பழனி

    'பழன மள்ளர்' என்று பேரூர்ப் புராணம் - திருநாட்டுப் படலம் செய்யுள் 38 கூறுவது காண்க.

பழனமள்ளர்

        "மலைபடு வயிரஞ் செம்பொன் மருப்புநித் திலஞ்சந் தாதி
        அலையினிற் கவர்ந்து கொள்ளை யாயர்தம் புறங்கண் டன்னோர்
        விளையிழு தழுதந் துயித்து மேற்சொலப் பழன மள்ளர்
        குலைதொறும் பறைக ளார்ப்பக் கொம்மென வெதிர்சென் றாரால்"

        (குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திர குல வேளாளர்,ப.76 )




    "மலைகளில் இருந்து வைரமும், செம்பொன்னும், யானைக் கொம்புகளும் முத்துக்களும், சந்தனம் முதலான பொருட்கள் ஆற்று நீரால் அடித்துக் கொண்டு வரப்பட்டு முல்லை நில இடையர்களைப் புறம்கண்டு, அவர்களின் விலை மிக்க பொருளாகிய பால்,வெண்ணை இவைகளை உண்டு, மேலே பெருக்கெடுத்து வர வயல்களுடைய மள்ளர்கள் கரைகள் தோறும் பறைகள் முழங்க விரைந்து எதிர் சென்று வரவேற்றனர் என்கிறது மேற்கண்ட செய்யுள்.

    தென் பழனிப் பள்ளியின் அழகு குறித்து வையாபுரிப் பள்ளு செய்யுள் 3 கூறுவது காண்க. 

        "மஞ்சள் மணம் வீசிய மெய்யும்
         கெஞ்சிப் பேசி யாடிய கையும்
             மலைமுலையுஞ் சுமையினா னையும்
             மருங்கலகுப் பையும்
         பஞ்சிளைக் கொண்டைகளென விழியும்
         கிஞ்சுகவாய்ப் பசுங்கிளி மொழியும்
             பாக்குத் தான் தின்றபல் லொளியும்
             படர் ரோம விழியும்
         ரஞ்சித மிஞ்சிய கொண்டைச் சொருக்கும்
         மஞ்சனப் பின் புரஞ்சரிந்திருக்கும்
             நாடினவர் மணத்தை யுமுருக்கும்
             நடை செல்லுஞ் செருக்கும்
         செஞ்சந்தனப் பொட்டொளி மின்ன
         அஞ்சன மா மட மயிலென்னத்
             தென்பழனிப் பள்ளியும் வந்து
             தோன்றினாளே "

    இப்படியாகப் பழனி ஊருக்கும், பள்ளர் குலத்தாருக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகள் சிறப்பு வாய்ந்ததாகும்.(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திர குல வேளாளர்,ப.67 )

    பழனி முருகன் கோயில் 'தேவேந்திர குல வேளாளருக்குச் சொந்தமானது' என்கிறார் பீபிகுளம் செல்வராசு. தமிழ் தேசியச் சிந்தனையாளரான இவர் மறவர் குலத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. 'நம் வேர்கள்' (சுறவம் 2037 - பிப்ரவரி 2006 பக்கம், 12 ,13 ) மாத இதழில் அவர் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ள செய்திகள் வருமாறு:

    "சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு அரசாண்ட பரம்பரை இன்றும் மாற்றானிடம் அடிமைப்பட்டு கிடக்கிறது. தமிழன் கி.பி.1528 வரை தமிழகத்தை ஆண்டு வந்தான் என்பதற்கான வரலாற்றுச் சான்றை பழனி முருகன் கோயில் கி.பி.1528 ஆம் ஆண்டு செப்புப் பட்டையம் உறுதி செய்கிறது.

வரலாறு கூறுவது என்ன?



    மாறவர்மன் குலசேகரப் பாண்டியனுக்குப் (கி.பி.1272 - 1311 ) பின்னர் ஏற்ப்பட்ட பதவிப் போட்டியால் பாண்டியப் பேரரசு சிதைவுக்கு உட்பட்டது. அலாவுதீன் கில்சியின் போர்த்தளபதியான மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றினான். அதே காலத்தில் சேரப் பேரரசை ரவி வர்ம குலசேகர பாண்டியன் (கி.பி.1299 - 1311 ) சேர நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு பின் சேர பேரரசு சிதைந்து சிற்றரசுகளாக தோற்றம் பெற்றன.
    இந்நிலையில் தில்லி சுல்தானாகிய கியாசுதீன் துக்ளக்கின் மகனான (பின்னால் முகமது பின் துக்ளக்) உலூப்கான் பாண்டிய நாட்டை 1323 ஆம் ஆண்டு கைப்பற்றினான். இதுவே தமிழகத்தில் அமைந்த வட இந்தியர் ஆட்சியாகும். இவ்வந்தேறி ஆட்சி 1351 வர நீடித்தது.
    விசய நகர பேரரசை கிருட்டின தேவராயர் (கி.பி.1509 - 1529 ) ஆண்டு வந்தபோது பாண்டிய நாட்டை சந்திர சேகரப் பாண்டியன் ஆண்டு வந்தான். இச்சந்திர சேகரப் பாண்டியனை சோழ அரசன் படையெடுத்து விரட்டி விட்டான். விரட்டப் பட்ட சந்திர சேகர பாண்டியன் கிரிட்டின தேவராயரிடம் போய் முறையிட்டான். அவன் நாகம நாயக்கன் என்பவனை மதுரைக்கு ஏவி மதுரை அரசை மீட்டுப் பாண்டியனிடம் ஒப்படைக்கச் சொன்னான். மதுரையைக் கைப்பற்றிய நாகம நாயக்கன் பாண்டியனிடம் ஒப்படைக்காததால் சந்திர சேகர பாண்டியன் மீண்டும் கிருட்டின தேவராயனிடம் ஓடினான். கிருட்டின தேவராய நாகம நாயக்கனை அடக்க, அதே நாகம நாயக்கனின் மகனான விசுவநாத நாயக்கனை ஏவினான். இவ்விசுவநாத நாயக்கன் அவனுடைய அமைச்சனான தளவாய் அரியநாத முதலியார் என்னும் கயவனின் துணையுடன் 1529 ஆம் ஆண்டில் தமிழ் வளர்த்த மதுரையில் நாயக்கர்களின் வந்தேறி ஆட்சியை நிறுவினான்.
    அக்கால கட்டத்தில் சேரப் பேரரசின் சிற்றரசுகளில்  ஒன்று கரூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தது. இக்கால கட்டத்தில் மைசூர் நாட்டு கன்னடர்களின் படையெடுப்புகள் கிழக்கே சேலம் வரையில், தெற்க்கே பழனி வரையிலும் பரவியது. பழனி முருகன் கோயில் பறிக்கப் பட்டது. இக்கால கட்டமாகும். மதுரையில் நாயக்கர் ஆட்சி தோன்றிய காலம் கி.பி.1529 . கன்னடர்களின் படையெடுப்பு விரிந்த பகுதி தெற்கே பழனி முருகன் கோயில் தமிழர்களிடம் (பள்ளர்களிடம்) இருந்தது. இதனை கி.பி.1528 ஆம் ஆண்டைய பழனி முருகன் கோயில் செப்புப் பட்டயம் உறுதி செய்கிறது " என்கிறார். (நம் வேர்கள், அரிமா வளவன் ,பிப்ரவரி 2006 ,ப.12 -13 )

(பழனி செப்புப் பட்டயத்தின் தகவல்கள் http://mallarchives.blogspot.in/2012/11/blog-post.html)


    பழனி முருகன் கோயிலில் பள்ளர் குலத்தவர்களுக்கு இருந்த உரிமைகள் வடுகராட்சி ஏற்பட்ட பின் படிப்படியாகப் பறிக்கப்பட்டு முற்றிலுமாக இக்கோயிலில் இம்மக்களுக்கு இருந்த தொடர்புகள் அறுக்கப்பட்ட நிலையில் 1990 களில் குருசாமி சித்தரால் இப்பட்டையம் வெளிக்கொணரப் பட்டதால் மீண்டும் வரலாறு திரும்பியது. அக்கால கட்டத்தில் பெ.ஜான் பாண்டியன் தலைமையிலான அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் முன்னெடுத்த 'இழந்த உரிமைகளை மீட்கும் போராட்டத்தில்' பள்ளர் குலத்தவர்களுக்கு உரிமையுடைய பழனி முருகன் கோயில் சொத்தான நெல் விளையும் வயல்களும் மீட்கப் பட்டது. அவ்வாறே பிள்ளை சாதியினரால் பறிக்கப் பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்திர்க்குச் சொந்தமான மடமும் மீட்கப் பட்டது. இப்போராட்டத்திற்க்குப் பின் தொடர்ந்து இன்றளவும், பழனி முருகன் கோயிலில் பள்ளர்களுக்கு முதல் மரியாதையும், மண்டகப் படி உரிமையும் வழங்கப் பட்டு வருவது என்பது வரலாற்றுச் சிறப்பாகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா


    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்பது பாண்டிய வேந்தர்கள் கட்டியதாகும். இக்கோயிலுக்கு உரிமையுடைய அனுப்பானடித் தெப்பக்குளத்தில் தை மாதம் தெப்பத் திருவிழா பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் போது அனுப்பானடி ஊர்க்குடும்பனுக்கு முதல் மரியாதை வழங்கும் மரபு தொன்று தொட்டு இன்றும் இருந்து வருகிறது. மதுரை அனுப்பானடி பள்ளர்கள் குல மக்கள் தனித்தன்மையோடு வாழும் பேரூர் ஆகும். முதல் நாள் கதிர் அறுப்பு விழாவாக மீனாட்சி அம்மன் திருவிழா நடைபெறுகிறது. வைகை ஆற்றில் இருந்து முதல் மடை திறக்கப்பட்டு வாய்க்கால் வழியாக வரும் நீர் இவ்விழாவிற்க்காகவே அனுபபானடிப் பள்ளர்கள் உழவு செய்கின்ற வயலில் பறித்து, அதனை நட்டு, நெல் விளைவித்து அறுவடைக்காகக் காத்திருக்கும் பள்ளர்கள் வயலில் இறங்கிக் கதிர் அறுக்கப் பள்ளத்தியராக மீனாட்சி தேரில் ஏறி வருகிறாள். மீனாட்சியும் வயலில் இறங்கி நெற்கதிர்களை அறுக்கிறாள். ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து பள்ளர்களின் இவ்வேளாண் தொழிற் காட்சியினைக் கண்டு களிப்படைகின்றனர். முதல் நாள் பள்ளர் வயலில் நெற்கதிர் அறுத்துக் கதிர் அறுப்பைத் தொடங்கி வைத்த மீனாட்சி, அடுத்த நாள் தெப்பக் குளத்திலிருந்து வந்து மள்ளர் குல மன்னன் சோமசுந்தர பாண்டியருடன் தெப்பத் தேரில் அமர்கிறார். மதுரை அனுப்பானடி ஊர்க் குடும்பன் அறிவிப்பின் பேரில் அனுபபானடிப் பள்ளர்கள் ஒன்று திரள மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர். தெப்பக்குள வந்து சேர்ந்த பள்ளர் குலப் பெருமக்களின் ஊர்வலத்தக் கோயில் அறங்காவலர்களும், அரசு அதிகார்களும் எதிர் நின்று வரவேற்கின்றனர். படகு ஒன்றின் மூலம் ஊர்க்குடும்பனும் இன்ன பிற பள்ளர்களும் தெப்பக்குள நடுமண்டபத்திர்க்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தெப்பக்குளத்தில் எதிர் எதிர்  பக்கங்களில் இரண்டு வடங்கள் இருக்கின்றன. ஒரு வடம் தெப்பக்குள நடுமண்டபத்திலும், மற்றொரு வடம் தெப்பக்குள வெளிப் பக்கத்திலும் இருக்கிறது. (நேர்காணல், முனைவர் சு.பாண்டியன், மதுரை)



(1919 ஆண்டு தோற்றம்)







    நடுமண்டபத்தில் உள்ள வடம் பள்ளர் குலத்தாரின் கைகளில் மட்டுமே உள்ளது. வெளிப்பக்கம் உள்ள வடம் பள்ளர் குலத்தாரால் தொட்டு கொடுக்கப்பட்ட பின் அங்கே கூடியிருக்கும் பல்வேறு சாதியைச் சேர்ந்த மக்களின் கைகளிலும் கொடுக்கப் படுகிறது. இருபுறமும் வடம் இழுக்கப்பட்டு மீனாட்சி அமர்ந்திருக்கும் படகுத் தேர் தெப்பத் தண்ணீரில்  இருமுறை நடு மண்டபத்தைச் சுற்றி வளம் வருகிறது. அன்று இரவு மீண்டும் ஒரு முறை தேர் நடு  மண்டபத்தைச் சுற்றி வருகிறது. அதன் பிறகு அருகில் உள்ள மூர்த்தீஸ்வரர் கோயிலில் அனுப்பானடி ஊர்க்குடும்பானுக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்படுகிறது (நேர்காணல்: சு.ப.மாரிக்குமார், மதுரை). தற்போது ஒரு சில அரசு அதிகாரிகளுக்கும் பரிவட்டம் கட்டும் முறை புகுத்தப்பட்டுள்ளது. குல அடிப்படையில் பள்ளர்களுக்கே பரிவட்டமும், முதல் மரியாதையும், வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது அக்கினி வீரன் என்ற பள்ளர் குல இளைஞர் அனுப்பானடி ஊர்க்குடும்பனாக உள்ளார். கோயிலுக்கு உரிமையுடைய நிலங்களும் சொத்துகளும் இப்போதும் பள்ளர்களுக்கே சொந்தமாக உள்ளது. (நேர்காணல்: முனியசாமி, அனுப்பானடி, மதுரை)


மதுரை தெப்பத் திருவிழா மற்றும் கதிர் அறுப்பு விழாவின் வரலாற்று சுருக்கம்:
    "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில், தை பூசத்திற்கு முதல்நாள் கதிர் அறுப்புத் திருவிழா நடக்கிறது. இதற்காக பள்ளனான சுந்தரேசுவரரும், பள்ளத்தியான தடாதகைப் பிராட்டியும் மீனாட்சி அம்மன் கோயிலிருந்து புறப்பட்டு அனுப்பானடிக்கு அருகே மருதநிலப் பகுதியான சிந்தாமணி (முன்பு இது வயல்பகுதியாக இருந்த இடம். இப்போது இப்பகுதியில் அதிக கட்டிடங்கள் உருவாகிவிட்டன) என்ற பகுதிக்கு வருகை தருகிறார்கள். இந்த நிலப்பகுதியானது ‘கிருதுமால் என்ற ஆற்றின் கரையில் இருந்தது. தற்காலத்தில் இந்த ஆறு மறைந்துவிட்ட நிலையில், மதுரையின் உட்பகுதியில் மட்டும் இந்த ஆற்றின் சில பகுதிகள் இன்றும் உள்ளது. சிந்தாமணி என்ற பகுதியில் வைகை நதியின் கிளைநதியான இந்த கிருதுமால் நதியின் முதல் மடை அமைந்துள்ளது. அதன் வழியாக வரும் நீரில் விளைந்த நெல்லை அறுவடை செய்யும் நிகழ்வே விழாவாகிறது. 

    மீனாட்சி அறுவடை செய்யும் வயல் அனுப்பானடியைச் சேர்ந்த மடைவாரியர் குடும்பத்திற்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கொடுக்கப்பட்டது. இந்த வயலை மடைவாரியர் குடும்பத்தினர் பராமரித்து வருவது தொன்றுதொட்டு வந்த வழக்கம். மடைவாரியர் என்பது நெல் நாகரிக மக்களில் கண்மாய்ப் பாசனத்தை நிர்வகிக்கும் பள்ளனுக்குரிய பெயர் ஆகும். கிருதுமால் நதியைப் பற்றி இங்கு வாழ்ந்த முன்னோர்கள் குறிப்பிடுகையில், ‘நதியின் குறுக்கே மிருகங்கள்கூட கடந்து செல்லமுடியாத அளவிற்கு ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது என்று குறிப்பிடுகிறார்கள். தற்காலத்தில் அந்த இடத்தில் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி வயலாக மாற்றுகின்றனர். வேறு இடத்தில் இருந்து எடுத்து வந்த விளைந்த நெல் கதிரை தற்காலிமாக உருவாக்கப்பட்ட அந்த இடத்தில் நட்டு வைக்கிறார்கள். பின்பு மீனாட்சி அம்மன் கதிர் அறுக்கும் சடங்கு நடைபெறுகிறது

(தற்காலிக வயல்)
அந்த விழாவில் கோயில் குருக்கள் கதிர் அறுக்கும் அரிவாளுடன் தற்காலிக வயலில் கதிர் அறுப்பு நிகழ்வு நடக்கும் பிறகு,

 மாரியம்மன் கோயில் அருகேயுள்ள வண்டியூர் தெப்பக்குளத்திற்கு (உண்மை) மீனாட்சியும், சுந்தரேசுவரரும் கதிரறுப்புத் திருவிழா முடிந்து, தெப்பத்தில் அமர்ந்து உழவின் வெற்றியை அடையாளப்படுத்தும் விதமாக மக்களுக்கு காட்சி அளிக்க வருகிறார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று நடைபெருகிறது

     இந்த தெப்பவிழாவில் அனுப்பானடிக் கிராமத்தில் வசிக்கும் பூர்வீகக் குடிகளான பள்ளர்களுக்கேவடம்தொட்டுக் கொடுக்கவும், வெள்ளை வீசி தெப்பத் திருவிழாவைத் துவக்கி வைக்கும் உரிமையும் தரப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பானடியைச் சேர்ந்த ஊர்க்குடும்பனார் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு மாரியம்மன் கோயில் சென்று வணங்கி ஊர்வலமாகத் தெப்பத்திற்கு வருகிறார்தெப்பக்குளத்தில் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இவரை வரவேற்கிறார்கள். பின்புமீனாட்சியம்மன் கோயில் குருக்கள் அனுப்பானடி ஊர்க்குடும்பனாருக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு பின்பு பரிவட்டம் கட்டி, தெப்பத்திருவிழாவைத் துவக்கி வைக்க வேண்டுகிறார். அதன்பின் அனுப்பானடிக் குடும்பனார் தெப்பத்தின் வடத்தைத் தொட்டு வணங்கி, வெள்ளை வீசத் தெப்பத் திருவிழா தொடங்குகிறது. தெப்பத்தின் வெளி வடத்தை அனுப்பானடி மள்ளர்களும் மற்றும் பொதுமக்களும், உள்வடத்தை அனுப்பானடி மள்ளர்கள் மட்டுமே வடம்பிடிக்கும் உரிமை உள்ளது. பின்பு காலை இருமுறையும் மாலை ஒரு முறையும் தெப்பம் வலம் வருகிறது. அதன்பின்பு சுந்தரேசுவர பள்ளரும், மீனாட்சி மள்ளத்தியும் தங்களுடைய வாகனத்தில் வந்து அமர்கிறார்கள். இந்த பெரிய தெப்பமானது 17 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது என்பது உண்மையே. அதற்கு முன்பு இதே சடங்குகள் கிருதுமால் நதியில் நடத்தப்பட்டது. இந்தக் குளம் உண்டான பிறகு இங்கு நடத்தப்படுகிறது."

மேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளின் ஒட்டுமொத்த வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும், பள்ளர் குலத்தாரின் பரிவட்ட முறையும்


    மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றத்தில் 'முருகன் கோயில்' என்று தற்போது வழங்கப்படும் கோயில் பாண்டிய அரசன் நெடுஞ்சடையப் பராந்தகன் காலத்தில் அவனது படைத்தலைவனான சாத்தான் கணபதியால் கலியாண்டு 3874 இல் (கி.பி.773 ) தோற்றுவிக்கப் பட்ட மிக அழகியதோர் குடைவரைக் கோயிலாகும்.(அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.22 ) பாண்டியர் குடைக் கோயில்களுள் சிற்ப அமைப்பிலும், செறிவிலும் இக்கோயில் ஈடு இணையற்றது ஆகும்.

    பாண்டிய நாட்டின் சிறப்பு வாய்ந்த நகரங்களுள் ஒன்றாகப் பரங்குன்றம் திகழ்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 1050 அடி உயரத்தில் இருக்கும் இவ்வூரில் உள்ள மலை சுமார் 300 மீட்டர் உயரம் கொண்டதாகும். இவ்வூர் மதுரையை அடுத்து விளங்குவதால் பழங்காலம் முதற்கொண்டே பெருமையுற்றுத் திகழ்கிறது. (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.6 ) மலையடிவாரத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலின் பெரும் பகுதி மலையின் வட பகுதியில் இணைந்துள்ளது. மேற்கு பகுதியில் இருந்து மலையின் நடுப்பகுதி வரை ஏறிச் செல்லச் சிறிய படிக்கட்டுகள் செங்குத்தான பாறையில் அமைக்கப் பட்டுள்ளன. மலை மீது ஒரு குகையும் அதற்குள் ஆறு கற்படுக்கைகளும் உள்ளன. அதில் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் பொறிக்கப் பட்டுள்ள செய்திகள் வருமாறு.
        "எருக்காட்டூர் ஈழக் குடும்பிகன் போலாலயன் செய்த
         ஆய்சதன நெடுஞ்சாதனம்" 

(குருசாமி சித்தர், தே.ஞானசேகரன், மீண்டெழும் மள்ளர் வரலாறு,ப.39 )


    என்று ஈழக் குடும்பிகன் என்ற ஈழ நாட்டுப் பள்ளர் குலத்தவன் செய்வித்த கற்படுக்கை கொடை பற்றி மேற்கண்ட பொறிப்புகள் தெரிவிக்கின்றன.இக்குகையில் பல ஆட்கள் தங்குவதற்கு இடமுண்டு.இந்த குகை 'பஞ்ச பாண்டவர்' குகை என்று இப்போது அழைக்கப் படுகிறது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.13 ).மலை உச்சியில் சுனை ஒன்று உள்ளது. இச்சுனையில் உள்ள மீன்கள் வனப்பு வாய்ந்தவை. மலை உச்சியில் இசுலாமியர் வழிபடக்கூடிய 'பள்ளி வாசல்' ஒன்றும் உள்ளது. இந்த மலையை 'சிக்கந்தர் மலை' என்றும் இசுலாமியர்கள் அழைத்தனர் போலும். தமிழகத்தில் வாழ்கின்ற இசுலாமியர்கள் பெரும்பாலும் பள்ளர்களே என்பது அறிந்ததே. இக்கோயிலில் பள்ளர்களுக்கு உரிய உரிமை மறுக்கப் பட்ட போது இம்மக்கள் இசுலாத்திற்கு மாறித் திருப்பரங்குன்றத்திற்கு மேலேயே பள்ளிவாசலை கட்டியிருக்க வேண்டும்.

    ஆண்டிற்கு ஒருமுறை புரட்டாசித் திங்கள் மலைக்கு மேல் முருகனைப் பல்லக்கில் கொண்டு சென்று விழா நடத்தப் படுகின்றது. 'உலகெல்லாம் வாழ, மழை பெய்ய வேண்டி'  இவ்விழா நிகழ்வதாக மக்கள் கருதுகின்றனர். இதனால் இவ்விழாவானது இந்திரா விழாவின் எச்சமாக விளங்குகின்றது என்பது தெளிவு.

    இக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் பாண்டியன் மாறஞ்சடையன் ,சோனாடு கொண்ட சுந்தர பாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கருவறை மேல்நிலையிலுள்ள கிரந்த எழுத்துக் கல்வெட்டில் கலி ஆண்டு 3874 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. வட்டெழுத்துக் கல்வெட்டில் "சாத்தன் கணபதி திருத்துவித்தது திருக்கோயிலும், சிறீ தடாகமும்" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.22 ).

    திருப்பரங்குன்றத்து தென்பாகத்தின் உட்பாகத்தில் உள்ள சுந்தர பாண்டிய ஈசுவர முடையாருக்கு வேண்டும் நிலபந்தங்களுக்கும், திருப்பணிகளுக்கும், வீரநாராயணக் குளக்கீழ் புளியங்குன்றூர் ஆன சுந்தர பாண்டிய புத்துக் கண்டுழவான ஒரு பக்கமுடைய மலைக்குடி கோலால் பெரும் பூவும், குருவையும் விளையும் நிலத்திலே ஆறு மாவும் ஆக, அரையே இரண்டு மாவை மழவராயனுடைய வேண்டுகோளின்படி அளித்துள்ளதையும், திருபுவனச் சக்கரவர்த்தி குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டு குறிக்கிறது. 'மழவர்' என்பது மருத நில மள்ளரை குறிக்கும் பெயர் என்பது மீண்டும் இவ்விடத்து நினைத்தற்குரியதாகும்.

    முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் 15 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று 'பூவின் கிழத்தி' என்ற மெய்க்கீர்த்திப் பகுதியோடு தொடங்குகிறது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.23 ). கிழவன்,கிழத்தி என்பது மருத நிலத் தலை மக்களான மள்ளர் குலத்தோரின் பெயர்களே என்பதையும் இங்கனம் எண்ணல் வேண்டும். திருப்பரங்குன்றம் உடையார் கோயில் நிர்வாகத்தினரான குலசேகரபுரத்தார்க்கு நிலம் விற்பனை செய்ததையும் கல்வெட்டுக் (ARE 240 /1941 -1942 ) குறிப்புக் கண்டு உணர்த்துகிறது. குலசேகரபுரம் என்ற ஊர்ச்சபையினரால் கோயிலுக்கு நிலம் திருவுண்ணாழிகை நல்லூர் என்ற ஊர் வழிபாட்டிற்காக வழங்கப் பட்டமையும் கல்வெட்டால் (ARE 245 1941 - 1942 ) அறியப்படும் செய்தியாகும் (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.24 ).

    "தேவேந்திரன் தன் பகைவனாகிய சூரபன்மனை அழித்து விண்ணுலக அரசாட்சியை மீண்டும் அளித்தருளிய முருகப் பெருமானுக்குத் தன மகள் தெய்வானையைத் திருமணம் செய்விக்க விரும்புகிறார். நாரதர்,நான்முகன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் வேண்டிக் கொள்ள முருகப் பெருமான் தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொள்கிறார்" என்ற செய்தி புராணங்கள் மூலம் அறியப்படும் உண்மைகளாகும். மேலும், கருவறையில் உள்ள யானை தேவேந்திரனின் ஐராவதம் என்றும், தெய்வானையைப் பிரிய மனமில்லாமல் முருகனுக்குத் தொண்டு புரிய வந்தது என்றும் புராணங்கள் கூறுகின்றன (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.27 ). 'ஐராவதம்' என்னும் பெயரில் மதுரை மாநகருக்குள் 'ஐராவத நல்லூர்' என்ற பள்ளர் ஊர் ஒன்று உள்ளதென்பதை இங்கே நினைவில் கொள்வதென்பது வரலாற்றைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும்.

    நக்கீரர் இயற்றிய முருகாற்றுப்படை பத்துப்பாட்டில் முதற்ப்பாடலும்; மருதநில நாகனார் எருக்காட்டூர் தாயங்கண்ணார் இயற்றிய அகநானூறு பாடல் 149 ; மருத நிலா நாகனார் பெருங் கடுங்கோன் இயற்றிய கலித் தொகை பாடல் 27 ,93 ; சங்கப் புலவர்கள் இயற்றிய பரி பாடல் 6 ,8 ,14 ,17 ,18 ,19 ,21 ; மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி பாடல் 262 முதல் 270 வரை; திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம் (திருவிடை மருதூர் பதிவகம்) பாடல் 165 ; சுந்தரர் இயற்றிய தேவாரம்; மாணிக்க வாசகர் இயற்றிய திருக்கோவையார் பாடல் 11 ,144 , 178 ,292 , 299 ; சேக்கிழார் இயற்றிய திருவிளையாடற்ப் புராணம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் பலவும் திருப்பரங்குன்றத்தின் சிறப்பினை எடுத்தியம்புகின்றன.
    சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய பதிகம் பாடல் 11 இல் இடம் பெற்றுள்ளன.
        "உலகாண்ட மூவேந்தர் முன்னே
         மொழிந்த..."

 (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.30 )

    என்ற அடியால் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களும் இவ்விடத்தில் கூடிக் கோலோச்சியுள்ளனர் எனத் தெரிகிறது. நக்கீரர் திருமுருகாற்றுப் அப்டியில் திருப்பரங்குன்றத்தைப் பற்றிக் கூறும் போது 'மலையின் அடிவாரத்தே வளமான வயல்கள் உள்ளன. நீர் நிறைந்த பொய்கை உள்ளது. சுனைகளில் பல மலர்கள் நிறைந்துள்ளன' என்பன போன்ற மருத நில மாட்சிகளைக் காட்சிப் படுத்துகிறார். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க முற்காலப் பாண்டியர் காலத்தில் குடைவரைக் கோயிலாகத் தோற்றம் பெற்ற திருப்பரங்குன்றம் கோயில், பிற்கால பாண்டியர் காலத்தில் சிறந்து விளங்கியது. பாண்டியராட்சி முடிவுற்று வடுகராட்சி நிலவி வந்த காலகட்டங்களில் இக்கோயிலில் பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கு இருந்து வந்த பல்வேறு உரிமைகளும் மறுக்கப் பட்டன. இதன் எச்சமாகப் பள்ளர் குலத்தார்க்குப் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யும் முறை இக்கோயிலில் இப்போதும் நடைபெற்று வருவதென்பது கண்கூடு. இந்த உண்மை வரலாறு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் போது தற்போதைய கோயில் நிருவாகத்தினரால், பாண்டிய மண்ணை ஆண்ட மரபினரான பள்ளர் குலத்தார்க்குப் 'பரிவட்டம்' கட்டி முதல் மரியாதை செய்யும் முறையிலிருந்து உலகத்தார்க்கு உணர்த்தப்பட்டு வருகிறது.

    முருகன் தெய்வானை திருமண விழா நடைபெற்ற பின்னர் இப்பரிவட்டம் கட்டும் விழா நடைபெறுகிறது. தெய்வானை தேவேந்திரனின் மகள் என்பதால் முருகன் தெய்வானை திருமணம் முடிந்த பின் 'மறு வீட்டிற்கு அழைத்தல்' விழாவானது திருப்பரங்குன்றத்தில் உள்ள 'தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்திற்கு' அழைத்து வந்து விழா நடத்தப் படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவானது ஆண்ட மரபினரின் அடிச்சுவட்டியானை அறிய உதவுகிறது. (நேர்காணல், ச.நாகராசு, சுந்தராம்பட்டி, திருமங்கலம்)

    முருகன் தெய்வானை 'தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்திற்கு' மறு வீடு வருதல் நிகழ்வு முடிந்த பின், அருகேயுள்ள காவல் தெய்வமான கருப்பசாமி கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்னர் பரிவட்டம் கட்டும் விழா தொடங்குகின்றது.

    மதுரை மாடக்குளம் மரபு வழி ஊர்க்குடும்பனாருக்குத் திருப்பரங்குன்றம் கோயில் நிருவாகத்தினரால் முறைப்படி முதல் மரியாதையோடு 'பரிவட்டம்' கட்டப் படுகிறது

பின்னர் மாடக்குளம் ஊர்க்குடும்பனார் திருப்பரங்குன்றம் விளாச்சேரி,பழங்காநத்தம்,அனுப்பானடி, மாடக்குளம், அவனியாபுரம் ஆகிய ஐந்து பள்ளர் ஊர்களைச் சேர்ந்த ஊர்க் குடும்பனார்களுக்குப் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெறுகிறது.

    தற்போது  மதுரை மாடக்குளம் ஊர்க்குடும்பனாகத் தொழிலதிபர் வி.கே.துரை,உதயகுமார் என்பவரும், திருப்பரங்குன்றம் ஊர்க்குடும்பனாராக தவமணி, ஆதிமூலம், தனபால் ஆகியோர் ஆண்டிற்கு ஒருவர் என்ற சுழற்சி முறையிலும், விளாச்சேரி ஊர்க்குடும்பனாராகப் பெரிய குடும்பனார் தவமணி என்பாரும், பழங்காநத்தம் ஊர்க்குடும்பனாராக முத்து என்பாரும், அனுப்பானடி ஊருக்குடும்பனாராக அக்கினி வீரன் என்பாரும், அவனியாபுரம் ஊர்க்குடும்பனாராக பால சுப்பிரமணியன் என்பாரும் பதவி வகிக்கின்றனர். இவ்வூர்க் குடும்பனார் பதவி என்பது வாரிசுரிமைப் படி வழங்கப் படுகிறது. இம்முறையானது பாண்டிய மரபினர்கள் பள்ளர்களே என்பதை மெய்ப்ப்கின்றது. (நேர்காணல், ப.ராம்குமார்,வத்தலகுண்டு)

    பள்ளர் குலத்தாரின் 'பரிவட்டம்' மரபுரிமை முறையானது பாண்டியர் மரபு வழி அரசுரிமை கொண்டாடும் முடிசூட்டும் விழாவின் தொன்று தொட்டுப் தொக்கி நிற்கும் நிகழ்வென்பது இங்ஙனம் உறுதி செய்யப் படுகின்றது. இதம் மூலம் மதுரை மாடக்குளம் பாண்டியராட்சியின் போது நிருவாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்ததென்பது தெரிய வருகின்றது. பாண்டியர் காலச் செப்பேடுகளில் 'மதுரை மாடக்குளம்' இடம் பெற்றுள்ளது என்பது இவ்வரலாற்றுக் கருதுகோளுக்குக் கூடுதல் வலுச் சேர்க்கும் சான்றாதரமாகும்.

    திருப்பரங்குன்றம் கோயில் முன் பகுதியில் கிழக்கு திசையில் பள்ளர் தெரு உள்ளது. தற்போது இங்கே 100 வீடுகள் உள்ளன. இதில் 25 குடும்பங்கள் நிலக்கிழார்களாக உள்ளனர். இன்றளவும் இக்கோயில் நிலங்கள் ( 4 ஏக்கர் ௦௦ 0.7 சென்ட்) (சர்வே எண்: 348 - 1 , 348 - 5 ) பள்ளர்களுக்கு உரிமையுடையதாக உள்ளது. இந்நிலங்கள் காயாம்பு,வரதாரம் (348 /1 இல் 1 -91 ஏக்கர்), அருணாச்சலம் (348 /5 இல் 0 - 53 ஏக்கர்), இருளன் (348 /1 இல் 1 - 06 ஏக்கர்), மலையடியான் (348 /5 இல் 0 - 53 ஏக்கர்) என ஐந்து பள்ளர்களின் பெயர்களில் உள்ளது. இந்நிலங்களை இவ்வுரிமையாளர்களில் ஒரு சாரார் கமுக்கமாக 27 .07 .1955 அன்று துரைச்சாமி பிள்ளை மகன்கள் முத்தையா பிள்ளை,கந்தசாமி பிள்ளை ஆகியோருக்கு விற்று விட்டனர். இதனை அறிந்த மற்றொரு சாரார் வழக்கு தொடுத்து (வழக்கு எண்: பிரிவு 8 (2 )(1 ) பி-யின் கீழ் 348 /1 பாகம் 0 -32க்கு சட்டம், பிரிவு 21 8 (2 ) (11 ) - இன் கீழ்) நிலத்தை மீட்டனர். பண்ணைப் பள்ளனான நிலக்கிழார் ம.மணி என்பவர் மலையடிவாரத்தில் உள்ள கருப்பசாமி கோயில் பூசகராகவும் விளங்குகின்றார். இவர் பூணூல் தரித்துள்ளார். இஃது தமிழர் மரபாகும்.

    திருப்பரங்குன்றம் கோயில் மதுரை மீனாட்சி சுந்தர பாண்டியன் கோயிலின் துணைக் கோயிலாக உள்ளதென்பதைக் கோயில் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. திருப்பரங்குன்றத்தில் பெரிய தேரோட்டும் உரிமையை இடைக்காலத்தில் பள்ளர்கள் இழந்துள்ளனர். சிறிய தேரோட்டும் போது பள்ளர்கள் முதல் மரியாதை பெற்று தேரோட்டுகின்றனர்.

    ஆண்டிற்கு இரு முறை கார்த்திகை தை மாதங்களில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. கோயில் ஆவணங்களில் பதிவு பெற்றுள்ள 'பண்ணைப் பள்ளன்' மிராசு (நிலக்கிழார்) கந்தக் குடும்பன் மகன் மலையடியான் என்பாரது மகன் மணி என்னும் பள்ளர் குலத்தவர் 'வெள்ளை வீச' தேவேந்திரர்களின் தேர் தெரு வீதிகளில் உலா வருகிறது. திருப்பரங்குன்றம் பள்ளர் தெருவில் சாவு விழுந்தால் கோயில் வாயிலுக்கு மேள தாளத்துடன் சென்று இறந்தவர் ஆணாக இருந்தால் ஒரு வேட்டியும், மாலையும், பெண்ணாக இருதால் ஒரு மாலையும், சேலையும் பெற்றுக் கொண்டு பின்னரே இறந்து போன பள்ளர்-பள்ளத்தியரின் உடலங்கள் சவ அடக்கம் செய்யப் படுகிறது. இவ்வழமை இன்றளவும் நடைமுறையில் உள்ளது. பாண்டியர்களால் கட்டப் பட்ட திருப்பரங்குனறம் கோயிலுக்கு பள்ளர் குல மக்களுக்குமான உறவுகள் இவர்களே பாண்டியர் மரபினர் என்பதை உறுதி செய்கின்றன.


இராசபாளையம் பள்ளர் குல மக்களின் சித்திர வெண்கொற்றக்குடைத் திருவிழா



    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் என்று அழைக்கப்படும் பேரூரின் வரலாற்றுப் பழம் பெயர் பள்ளர் பாளையம் என்பதாகும். இவ்வூர் 'பழைய பாளையம்' என்றும் அழைக்கப் படுகிறது. 1965 ஆம் ஆண்டைய வருவாய்த்துறை ஆவணங்களும், பதிவேடுகளும் இதற்க்குச் சான்று பகர்கின்றன. பிற்காலத்தில் ஏற்ப்படுத்தப் பட்ட வடுகக் குடியேற்றங்களின் போது 'இராசூக்கள்'  என்ற தெலுங்கர்கள் வந்த பின் பள்ளர் பாளையம் என்பது இராசபாளையம் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. பள்ளர் பாளையத்தில் பேருந்து நிலையத்தை ஒட்டியே பள்ளர்கள் வாழக்கூடிய ஏழு பெரும் தெருக்கள் உள்ளன. இம்மக்களின் நிருவாக வதிக்காக இவர் தம் முன்னோர்களால் கட்டி எழுப்பப்பட்ட பழமையான தேவேந்திர குல வேளாளர் சமூகக் கூடம் ஒன்று பேருந்து நிலையம் அருகிலேயே இப்போதும் இருப்பதைக் காணலாம். இந்நகரில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் பள்ளர் குலப் பெருமக்களால் வெண்கொற்றக்குடைத் திருவிழா நடத்தப் பெறுவது வழக்கம்" (நேர்காணல், தே.இராசசேகரன், திருவில்லிபுத்தூர்)






    பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டுத் தனது கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டிய கற்புக்கரசி கண்ணகியின் பெருமையை உணர்த்தும் வகையில் 300 ஆண்டுகளுக்கும் மேலாகச் சித்தரைப் பிறப்பன்று வெண்குடைத் திருவிழாவைப் பள்ளர் குல மக்கள் கொண்டாடி வருகின்றனர். கண்ணகியின் கால் சிலம்பு, தாலிக்கயிறுடன் வெண்கொற்றக்குடை  ஏந்தி பள்ளர்கள் உலா வருவது வழக்கம். பறையர் குலப் பெண்ணின் தாலிக் கயிற்றை பள்ளர் குலத் தலைவனான குடும்பனாரின் இடது காலில் கட்டி விடுவதும், அதனைப் பறையர்கள் அவிழ்க்க வருவதும், அதனால் பள்ளர், பறையர் சாதிய மோதல் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. இது தமிழ் சாதியினரைப் பிரித்தாளும் வந்தேறிகளின் வடுகச் சூழ்ச்சி என்பதனையும், வலங்கை, இடங்கைப் பிரிவின் நீட்சி என்பதனையும் அறிய முடிகிறது.

    இராசபாளையம் அருகேயுள்ள சுந்தரராசபுரத்தைச் சேர்ந்த பள்ளர்களுக்கு வழிவழியாக வெண்கொற்றக்குடை பிடித்து ஆடும் இவ்வுரிமை இருந்து வந்தது. சுந்தரராசபுரம் என்பது சுந்தரபாண்டியனின் பெயரைத் தாங்கிய ஊர் என்பதுவும் இவ்விடத்தே குறிப்பிடத்தக்கதாகும். இவ்வூரைச் சேர்ந்த செம்புலிச் சித்தன் என்பவரும், அதன் பின்னர் அவரின் மகன் கந்தக் குடும்பனும், அதன் பின்னர் கந்தக் குடும்பனின் மகன் பிள்ளையார் என்பவரும் குடை பிடித்து ஆடி வந்தனர். பிள்ளையார் என்பவருக்கு அகவை 70ஐ தாண்டியதால் அவரால் குடை பிடித்து ஆட முடியவில்லை. அதனால் 2010 ஆம் ஆண்டு இராசபாளையம் செல்லம் வடக்குத் தெரு என்னும் குமரன் தெருவைச் சேர்ந்த அதிவீரப்புலவர் என்னும் பள்ளர் குலத்தவரும் வெண்கொற்றக்குடை பிடித்து ஆடினர்.

    காலையில் தொடங்கிய விழாப் பேரணி பெரிய கடை வீதி, சுரைக்க்காயபட்டித் தெரு வழியாக முடங்கியார் சாலை சென்று இராசூக்கள் கல்லூரி அருகேயுள்ள நால்வாய்க் குறடு சென்றடையும், விழாக் குழுவினராக விளங்கக் கூடிய முகமையான ஊர்க் குடும்பனார்கள் முன் செல்வர். அவர்களோடு ஒப்பனை செய்யப் பட்ட யானை உடன் செல்லும். (நேர்காணல்: தா.வெள்ளையப்பன், இராசபாளையம்)


    யானையின் மீது பள்ளர் குல மக்களின் சமூகக் கொடியான சிவப்பு,பச்சை வண்ணக் கொடி பறக்கும். விழாவில் ஆலியாட்டம்,கரகாட்டம்,கோலாட்டம் உறுமி மேளம் இடம் பெறுவது வழக்கம். (நேர்காணல், மாடசாமி ,திருவில்லிபுத்தூர்)


    நால்வாய்க்குறடு சென்றபின் அங்கிருந்து பூசகர்கள், அருளாடிகள், ஊர்க்குடும்பனார்கள் மட்டும் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள நீர்காத்த ஐயனார் கோயிலுக்குச் செல்வர். அங்கேயுள்ள சின்ன ஒட்டக்காரன், பெரிய ஒட்டக்காரன், வனப்பேச்சி,மாடத்தி,ஏழு கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களை வணங்கி, சிறப்புப் பூசை நடத்தக் குடமுழுக்கு நீர் எடுத்து, மீண்டும் நால்வாய்க்குறடு வந்தடைவர். அன்று மாலை நகருக்குள் வரும் வழியில் ஊரணி வளாகத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் வழிபட்டு விட்டு, வட்டாட்சியர் வளாகத்தில் உள்ள ஐயனார் கோயிலை வணங்கி விட்டு, முடைங்கியார் சாலை வழியாக மீண்டும் தேவேந்திர குல வேளாளர் ஊர்ச் சாவடிக்கு வந்து சேர்வர். மறுநாள் பூபால்பட்டி தெருவில் உள்ள பெரிய வீடுவரை சென்று வருவது வழக்கம். (நேர்காணல், தே. இராசசேகரன், திருவில்லிபுத்தூர்)


    கடந்த ஆண்டு 322 ஆவது வெண்கொற்றக்குடைத் திருவிழா கொண்டாடப் பட்டுள்ளது. இது பள்ளர் குல மக்களின் வரலாற்றுப் பெருமையை உணர்த்துவதாய் உள்ளது.