தமிழ் இனத்தின் மீது யுத்தத்தின்போது சர்வதேச சட்டங்கள் அத்தனையும் மீறி தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளை வீசி அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்தது ராஜபக்ச அரசுதான்.
பள்ளிக் கூடங்களையும், மருத்துவமனைகளையும் இலக்கு வைத்து ரசாயன ஆயுதங்களை ஏவியது ராஜபக்ச அரசுதான்.
கொடுரமான செயலை செய்து இன்று சர்வதேசத்தின் முன் போர் குற்றவாளியாக நிற்கும் ராஜபக்சவை ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற அனுமதித்திருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இப்படி ஈவு, இரக்கமற்று லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல் ஐ.நா. மன்றத்தின் தீர்மானத்தை மதிக்காமல், காலில் போட்டு மிதித்து விட்டு ஐ.நா. விசாரணை குழுவை நாட்டிற்குள் செல்ல அனுமதி மறுத்து வரும் ராஜபக்சவை ஐ.நா. பொதுச் சபையில் பேச அழைத்திருப்பது ஐ.நா. மன்றத்திற்கு அவமான செயலாகும்.
அப்பாவிகளை, ஆயுதம் ஏந்தாத பொதுமக்களை படுகொலை செய்த ராஜபக்சவை குற்றவாளி கூண்டில் நிறுத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும். இன்று வரை தமிழக மீனவர்களை கொடுரமாக தாக்குவது, உடைமைகளை பறிப்பது, அழிப்பது என்றும், கைது நடவடிக்கை என்ற பெயரில் சித்தரவதை செய்வது, பிடிக்கப்பட்ட படகுகளை பழைய இரும்புக்கு விற்பது என்று எண்ணற்ற கொடுஞ்செயல்களை செய்து வரும் ராஜபக்சவை பேச அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இந்திய மத்திய அரசும், ராஜபக்சவை ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.