பன்னெடுங்காலமாக நடத்தப்பட்டு வரும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன். தனது கல்லூரி வாழ்க்கையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இந்திய போலிச் சுதந்திரத்தை நம்பி தன் வாலிபப் பருவ கனவுகளுடன் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசத்திற்கான தன் சேவையை வழங்கச் சென்றார் 1950-ல் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவருக்கு தனது கற்பனையும் நிகழ்கால வாழ்க்கைமுறையும் வேறு வேறாக இருப்பது தெரிகிறது. இவரின் சமூக மக்களின் மீதான பிள்ளைமார் சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு தனது இராணுவ வேலையைத் துறந்தார். சொந்த அனுபவம் கேட்பதைக் காட்டிலும் பெரிதல்லவா! அதனால் “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.
அன்றைய நாளில் முக்குலத்தோர்களால் ஒடுக்கப்பட்டோர்களில் நாடார் சாதியினரும் இருந்தனர். இவர்களையும் இணைத்துக் கொண்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர். ஆதிக்க சாதியினரின் சொல்லொன்னா வன்முறைகளைத் தாங்க முடியாது படை திரட்டி எதிர்த் தாக்குதல்களையும் நடத்தினார். காமராஜர் இவரைச் சந்தித்து பாராட்டுக்களைத் தெரிவித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இமானுவேல் காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். ஓட்டுக் கட்சிகளுக்கேயுள்ள பார்பனியத் தன்மை இவரை இதிலிருந்து வெளியேறச்செய்து விடுகிறது. 1957களில் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த முத்துராமலிங்கத் தேவரின் அடியாட்களால் கொலை செய்யப்பட்டார் இமானுவேல் சேகரன்.
இக்கொலைக்காக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்ததால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பார்வார்டு பிளாக் என்ற கட்சிக்குத் தாவி அக்கட்சியையும் தேவர் சாதிக் கட்சியாக மாற்றியவர் இந்த முத்துராமலிங்கத் தேவர். நான்கு வர்ணங்களைக் கூறி தனது பிறப்பையும் தன் சாதி மீது திணிக்கப்பட்டுள்ள பார்பனியத்தின் தீண்டாமையையும் எதிர்த்து போராடியவர் அல்ல இவர். அதனை தனது முதுகில் சுமந்துகொண்டே பிறசாதிகளின் மீது தீண்டாமையை திணித்தவர். இவரின் சாதிய ஆதிக்கத்திமிரை புதுப்பிக்கவே தேவர் குரு பூசை நடத்தப்படுகிறது. ஒடுக்கப்படுவதற்கு எதிராக போராடுவதும் ஆதிக்கத்திமிரை நிலைநாட்டப் போராடுவதும் ஒன்றாக முடியுமா? தேவர் பூசை நடத்தப்படும் 3 நாட்களும் தாழ்த்தப்பட்டோர் மட்டுமின்றி அனைத்து மக்களும் என்ன நடக்குமோ என்று பயபீதியுடன் இருக்கும்படியான சூழ்நிலையை உருவாக்கித் தேவர் பூசை நடத்தப்படுகிறது. போக்குவரத்தை தடை செய்தல், திறந்திருக்கும் கடைகளை உடைத்தல், செல்லும் வழியெல்லாம் தாழ்த்தப்பட்டோரை தரம் தாழ்ந்த சொற்களால் வம்புக்கிழுத்து கலவரம் செய்தல் ஆகியன இப்பூசைக்கான பொருள்களாக உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சண்முகையா பாண்டியன் இராமநாதபுரத்தில் நடத்திய தனது தேவர் சாதிய மாநாட்டிற்கு வாகனங்களில் வந்தவர்கள், வரும் வழியில் பரமக்குடிக்கருகில் உள்ள சரசுவதி நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஒரு வயதான மூதாட்டி, ஒரு குழந்தை மற்றும் சில பசுமாடுகளை வெட்டிக் கொன்றதால் ஆத்திரம் அடைந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்வினையாக மாநாட்டுக்கு வந்த வாகனங்களை மறித்து தேவர் சமூகத்தினர் சிலரை கொலை செய்தனர். இச்சம்பவத்திற்குப் பிறகுதான் தேவர் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களைக் கண்டு அஞ்சினார்கள் என்று சொன்னாலும் மிகையில்லை.
“நாய், பன்றிகளுக்குக்கூட இரத்தம் சிவப்பாகத்தான் உள்ளது. அதற்காக அதுகளுடன் உறவு வைத்துக்கொள்ளவா முடியும்” என்று தேவர் சாதியத் திமிரைக் கக்கியவன் இந்த சண்முகையா பாண்டியன். இன்றும் அவரது பொதுக்கூட்டங்களிலும் கிராம நிகழ்ச்சிகளிலும் இது ஒலிபெருக்கியில் ஒலிபரப்படுகிறது. காமம் தலைக்கேறி தாழ்த்தப்பட்ட பெண்களை பெண்டாளும்போது (வன் புனர்வு)மட்டும் நாயும் பன்னியும் புனிதமடைந்த மனிதப் பிறவியாகத் தெரியுதாமோ?
இமானுவேல் சேகரனின் கொலைக்குப் பிறகு உடன் நடந்த கலவரத்தில் தேவர் சாதியினர் 8 பேர் காமராஜர் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவிடமான தூவல் என்ற ஊரில், கொல்லப்பட்டவர்களுக்கு கட்டைப்பஞ்சாயத்து ரவுடியும் தேவர் சாதி வெறியனுமான பி.டி.குமார் கடந்த ஆண்டு நினைவஞ்சலி செலுத்தியப் பின் “இதற்குப் பழிக்குப் பழிவாங்கியேத் தீருவோம்” என்று உறுதி மொழி எடுத்தான். அதற்கான திட்டமிடலும் செய்து வந்தான். அதனாலேயே அவனை தேவர்குரு பூசைக்கு செல்லும் வழியில் தாக்கத் தாழ்த்தப்பட்ட மக்கள் திட்டமிட்டனர். ஆனால் அவன் சற்று பின் தங்கியதால் முன் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி அடையாளமறியப்படாமல் தாக்கப்பட்டுவிட்டார்.
ஆனாலும் இதற்குப் பழிவாங்க சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் வின்சென்ட் என்பவர் பேரூந்து நிறுத்தத்தில் தேவர் சாதி வெறியர்களால் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார். வெள்ளையன், கணேசபாண்டியன், செல்லத்துரை மைக் செட் ஊழியரான அறிவழகன் என்று கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கொலைப்பட்டியல் நீண்டு கொண்டேதான் உள்ளது. இதற்கு எதிர் வினையாகத்தான் பள்ளர் அல்லது தேவேந்திர குல தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை மற்றும் கலவரங்களில் ஈடுபடுகின்றனர்.
தான் கைகாட்டிய இடத்தில் ஓட்டுப் போட்டது, தானே ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக ஓட்டுப் பெட்டியை நிரப்பியது, காலில் உள்ள செருப்பையும் தோளில் உள்ள துண்டையும் கையில் எடுத்துக் கொண்டு “அய்யா” என்று கைகட்டி கூலியற்ற சேவகம் செய்யவைத்தது இன்னும் பிற பிற ஒடுக்குமுறைக்கெல்லாம் உட்பட்டிருந்தவர்கள் அதனை மறுத்தால் சும்மா விட்டுவிட முடியுமா?
திருவாடானைக்கருகில் உள்ள கப்பலூர் கிராமத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரசு எம்.எல்.ஏ.வாக இருந்த தேவர் சாதியைச் சேர்ந்த கரியமாணிக்கம் என்பவர் காலத்தில் ஓட்டுச் சாவடி எப்படியிருந்தது என்றுகூடப் பார்த்ததில்லை. இன்று அவரது மகன் இராமசாமி எம்.எல்.ஏ. காலத்தில் சற்று முன்னேறி ஓட்டுச்சாவடி உள்ளே சென்று பார்க்கும் அறிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் ஓட்டுக்களைப் பதிவு செய்வது இராமசாமி அவர்களின் அடியாட்கள். “நானும் இந்நாட்டின் ஒரு குடிமகன்” என்ற உணர்வை ஒடுக்கப்பட்டோர் புதுப்பித்துக் கொள்ள ஆடடித்து, பட்டைச் சாராயம் கொடுத்து கருணைமிக்க விருந்து கொடுக்கப்பட்டுவிடும். தேர்தல் அதிகாரிகளின் சூட்கேசுகளும் பூத் ஏஜென்ட்டுகளின் பைகளும் நிரப்பப் பட்டுவிடும்.
சாதிய ஏற்றத் தாழ்வற்ற சகோதரத்துவ கொள்கையுடைவர்கள் நாங்கள் என்று கூறும் இசுலாமியர்களும் நாட்டுக்குள்ளேயே ஒரு நாடுவைத்து அரசாளும் இவர்களுக்கு துணைபோவதும் நாட்டுநடப்பாகத்தான் உள்ளது.
அம்மாவிற்காக ஒரு பேரூந்தை எரித்ததால் தேர்தலிலே சீட்டுக் கிடைத்து இளையான்குடித் தொகுதியில் வ.து.நடராஜன் வெற்றி பெற்றது எப்படித் தெரியுமா? ஆனந்தூர் மற்றும் இராதானூர் பகுதியைச் சுற்றியுள்ள ஒடுக்கப் பட்டோர்களுக்கெல்லாம் வெறும் மிச்சர் பொட்டலம் கொடுத்து “உங்கள் ஓட்டுக்களை எல்லாம் நாங்கள் போட்டுக் கொள்கிறோம்” என்று திருப்பி அனுப்பப் பட்டதால்தான்
இவ்வாறெல்லாம் ஜனநாயகம் செழிப்பாக இருந்த இடத்தில் இன்று எதிர்த்து போராடினால் கையைக் கட்டிக்கொண்டு அவர்களால் வேடிக்கைப் பார்க்க முடியுமா? அதனால்தான் தேவர் குரு பூசை அவரின் நினைவிடமான, பசும்பொன் பகுதி மக்களால் மட்டும் கொண்டாடபட்டு வந்த நிலையில் அரசியல் கட்சிகளில் உள்ள தேவர் சாதியத் தலைவர்களாலும் தேவர் சாதிய அமைப்புகளாலும் தனது ஆதிக்கம் பறிபோவைதைச் சகிக்க முடியாமால் அதனைத் தடுக்க தமிழகம் தழுவிய விழாவாக மாற்றி சாதிய உணர்வை கடந்த பத்தாண்டுகளாக நெருப்பு மூட்டி வளர்க்கின்றனர்.
ஜெயலலிதா, கருணாநிதி,மு.க. ஸ்டாலின், புதிய அரசியல் அவதாரம் விஜயகாந்த், சரத்குமார் மற்றும் முன்னணி நடிகை நடிகர் பட்டாளம் என விதி விலக்கின்றி அனைவரும் தேவர் பூசையில் தவறாமல் கலந்து கொள்கின்றனர். ஆனால் இமானுவேலின் நினைவு நாளைப்பற்றி வாயைக்கூட திறப்பதில்லை.
ஓ. பன்னீர் செல்வத்தை தன்னுடை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுத்தபோது “நான் பிறந்தது வேறு சமூகமாக இருந்தாலும், வளர்ந்ததும் என்னை வளர்த்ததும் தேவர் சமூகமே. அதனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்குவதில் பெருமையடைகிறேன்” என்று கூறி தனது சாதிய அரசியலை பகிரங்கமாக கூறுவதற்கு ஜெயலலிதா தயக்கம் காட்டியதே இல்லை.
போலீசின் மாட்சிமையையும் அறிந்துக் கொள்ளாமல் ஜனநாயகத்தின் வலிமையை புரிந்துகொள்ள முடியாது. “நாயுடனும் பன்னியுடனும் உறவு கொள்ள முடியுமா” என்ற தேவர்சாதி வெறியன் சண்முகையா பாண்டியனின் பேச்சு ஒலி நாடா அவரது பொதுக்கூட்டங்கள் தோறும் ஒலிபரப்பப்படுகிறது. இராமநாதபுரத்தில் இவர் நடத்திய மாநாட்டிற்கான சுவர் விளம்பரத்தில் ஒரு மனிதனின் தலையை வீச்சரிவாளால் வெட்டுவது போலவும் அதிலிருந்து இரத்தம் சொட்டுவது போலவும் வரைந்திருந்தனர். ஓட்டுப் போடாதே புரட்சி செய் என்ற கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் முழக்கத்தை எழுதினாலே பயங்கரவாதம், தீவிரவாதி என்று வழக்குப் போட்டுச் சித்திரவதை செய்யும் போலிசிற்கு இச்சுவரெழுத்தும் பேச்சும் வன்முறையைத் தூண்டுவதாகத் தெரியவில்லை. கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றனர்.
தேவர் பூசைக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து அவர்களின் வெறிக்கூச்சலையும் கடை உடைப்புக் கலவரங்களையும் கைகட்டி வேடிக்கையும் பார்க்கும் போலீசு, இமானுவேல் சேகரனின் நினைவு நாளன்று நினைவிடத்துக்கு வருபவர்களை வழிமறித்து “சோதனை” என்ற பெயரில் பயபீதியூட்டி முடிந்தவரை தடுக்கப்பார்க்கிறது. இவ்வாண்டு இவ்வாறு பார்திபனூரில் போலீசு தடுத்ததால் கண்ணீர் புகைக் குண்டு வீசுமளவுக்கு கலவரம் ஏற்பட்டது. அவ்வாறு ஆதிக்க சாதியினர் தடுத்து கலவரம் செய்யும் பொழுதும் பாதுகாப்புத் தராமலும் கலவரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மறுக்கிறது.
ஜனநாயக அரசாங்கங்களும் தேவர் பூசையை அரசு விழாவாகக் கொண்டாடி மகிழ்சியடைகிறது. அரசு எந்திரமான போலீசு தனது அறிவிக்கப்படாத கொள்கையாக் கொண்டு ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்துக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது.
ஆனால் “காலச் சக்கரம்” இதனை தொடராக அனுமதிக்க முடியாததல்லவா! முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் தடுத்துவிட முடியாது! பல ஆண்டுகளாக சிறு அளவில் நடத்தப்பட்டு வந்த இமானுவேல் சேகரனின் நினைவு நாள் விழாவும் கடந்த 3 ஆண்டுகளாக மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தேவர் பூசைக்கு எதிராக அதே பார்பனியச் சடங்குகளுடன் நடத்தப்பட்டாலும் ஒடுக்கப்பட்டோரின் எழுச்சியை வெளிப்படுத்துவதாகவே இவ்விழா உள்ளது. இவர்களிடையேயுள்ள பார்பனியக் கலாச்சார பழக்கமும், சொத்துடைத்த பணக்கார வர்க்கமும் பார்பனியக் கலாச்சாரப் பாதையில் இழுத்துச் செல்லும் சமூகச் சூழ்நிலையாக உள்ளது.
அதனால் இன்று ஓட்டுக்கட்சிகள் பலவும் தலைவர்கள் செல்லாமல் பகுதியிலுள்ள எம்.எல்.ஏக்களையோ அல்லது இரண்டாம் மூன்றாம் மட்டத் தலைவர்களையோ இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் பங்கேற்கச் செய்கின்றனர். ஆனால் தங்களுடைய தலைவர்களின் படத்துடன் இமானுவேல் சேகரனின் படத்தையும் அச்சிட்டு பேனர்களாக நிறுத்தியுள்ளனர். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக வேடமிடுகின்றனர்.
தம் தொகுதிகளில் ஆதிக்க சாதியுணர்வைத் தூண்டி ஓட்டுக்களை அறுவடை செய்யும் ஓட்டுக் கட்சியிலுள்ள ஆதிக்க சாதியின் தலைவர்கள், சாதிய ஒடுக்கு முறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக ஒருவார்த்தைக் கூடச் சொல்லாமல் போராடி கொலையுண்டு தன்னுயிரை தியாகம் செய்த இமானுவேல் சேசகரனின் கல்லரையில், மலர் வளையம் வைத்த கையின் மணம் மாறாமல் கொலை செய்தவனின் கல்லரையிலும் மலர் வளையம் வைத்து சாதி ஆதிக்கத் திமிரை புகழ்வதும் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கொலை செய்தவனே கொலை செய்யப்பட்டவனின் நினைவு தினத்தை கொண்டாடும் அதிசயமல்லவா இது! சாதிய ஒடுக்குமுறைக்குக் கட்டுப்பட்டு ஓட்டுப்போட்டது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் பரிமாணத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாலும், அனைத்து கட்சிகளுமே பணத்தை அள்ளி வீசுவதாலும் இப்படிப்பட்ட செண்டிமென்டல் கபட நாடமும் ஓட்டுக் கட்சிகளுக்குத் தேவையாக உள்ளது.
ஓட்டுக் கட்சிகளின் கபட நாடகங்களையும் தன் ஜாதிக்குள்ளேயே உள்ள நவீன பணக்கார வர்கத்தின் சூழ்ச்சியையும் உணர்ந்து கொள்ளாது “ஆட்டை பலி கொடுத்தவன் அதனையே சாமிக்கும் படைப்பதுபோல்” ஒடுக்கப்பட்ட மக்கள், முளைப்பாரி எடுப்பது வேல் குத்துவது போன்ற பார்பனிய கலாச்சாரதிலும், சீரழிவுக்குக் கலாச்சாரத்திலும் மூழ்கடிக்கப்பட்டு சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான அரசியல் போராட்ட உணர்வுகளை இப்படித்தான் ஏட்டிக்குப் போட்டியாக வெளிப்படுத்துகின்றனர். இமானுவேல் சேகரனின் தியாகம் பார்பனியத்தின் காலடியில் அடகு வைக்கப்படுகிறது.DECORAM போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தம் பங்கிற்கு களமிறங்கி சோறு தருகிறோம் பால் தருகிறோம் என்று அரசியல் உணர்வற்றவர்களாக மாற்றுகிறது.
சாதிய ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட பசும்போன் தேவரின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவித்துக் கொண்டாடுவது என்னவகை நியாயம்? இது ஜனநாயக அரசாங்கமா? அல்லது மனு தர்ம அரசாங்கமா? இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பதும் தேவர் பூசையை அரசு விழாவிலிருந்து நீக்குவதுமே ஜனநாயக நடவடிக்கையாக இருக்கமுடியும். சும்மா அம்பேத்காரைப் போற்றுவதும் பெரியாரின் வாரிசுகள் என்று வாய் கிழிய கத்துவதும் கதைக்குதவாது.
பன்னெடுங்காலமாக சாதிய ஒழிப்பைத்தான் ஒடுக்கப்பட்டோர் வேண்டுகின்றனர். சாதிய ஒடுக்குமுறையை நிலைநாட்டுபவர்கள் ஆதிக்க சாதியினரே. ஓட்டுக் கட்சிகளின் புதிய அவதாரமான சமரசப் போக்கெல்லாம் சாதிய ஒழிப்பைத் தராது. அதனால் ஒடுக்கப்பட்டோர் தம்மிடமும் உள்ள பார்பனியக் கலாச்சாரங்களைக் களைந்து பிற சாதிய உழைக்கும் மக்களுடன் சாதியம் பாராமல் ஒன்றிணைந்து முற்போக்கு ஜனநாயக சக்திகளின் தலைமையின் கீழ் ஆதிக்க சாதிய வெறியர்களுக்கெதிராகப் போர்குணமிக்க அரசியல் போராட்டங்களை நடத்தாமல் முளைப்பாரி எடுப்பதும் மொட்டை அடிப்பதும் சாதி ஒழிப்புக்கு தீர்வாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக