ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

வன்கொடுமைகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றம் வேண்டும்

பரமக்குடி-பத்தானிதோலாவுக்கு நீதிகோரும் இயக்கம் [இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி] சார்பில் 18-08-2012 அன்று மதுரையில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். கருத்தரங்கிற்கு ஒடுக்கப்பட்ட விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் அ.சிம்சன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில், தியாகி இமானுவேல் சேகரன் பேரவை பொதுச்செயலாளர் பூ.சந்திரபோஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்தியக்கமிட்டி உறுப்பினர் கவிதா கிருஷ்ணன், மாநிலச்செயலாளர் பாலசுந்தரம், எஅய்சிசிடியு மாநிலச்செயலாளர் (டாக்டர் அம்பேத்கர் மின்வாரிய பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கம்) பாலசுப்பிரமணியன், எழுத்தாளர் இளம்பரிதி பேசினர். இகக மாலெ மதுரை மாவட்டச் செயலாளர் மதிவாணன் வரவேற்புரை ஆற்றினர். வழக்கறிஞர் வேல்முருகன் நன்றி கூறினார்.
2011 செப்டம்பர் 11ல் தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளில் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறிபிடித்த போலீஸ்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி ஆறு பேரை கொன்று ஓராண்டு ஆகப்போகிறது. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றச்சாட்டு கூட பதிவு செய்யப்படவில்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்ட சம்பத் கமிஷன் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. தியாகி இமானுவேல் சேகரன் பேரவை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ), இடதுசாரி அமைப்புகள், முற்போக்கு வழக்கறிஞர்கள், ஜனநாயகசக்திகள் பெருமுயற்சியால் மத்திய புலனாய்வு விசாரணைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் விசாரணை துரிதமாக நடைபெறவில்லை. எனவே விசாரணையை துரிதப்படுத்தி, அன்றாட அடிப்படையில் கண்காணித்து, குற்றவாளிகளை தண்டிக்க உயர்நீதிமன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. போராடும் ஒடுக்கப்பட்ட அமைப்புகள், இடதுசாரிகள், சாதி ஆதிக்கம் மற்றும் அநீதியை எதிர்க்கும் முற்போக்கு, ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தவேண்டுமென கருத்தரங்கம் அழைப்பு விடுக்கிறது.
பரமக்குடியில் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்களை ‘கலவரக்காரர்கள்’, ‘வன்முறையாளர்கள்’ என்று சித்தரித்து துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி பேசிய முதல்வரின் ஆபத்தான பேச்சை திரும்பப் பெற வேண்டும் என்று கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
1. 06-08-2012 அன்று மதுரை, சின்ன உடைப்பு பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு, கவுரவத்தை சிதைக்கும் நோக்கத்துடனும் தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளில் திரளும் பட்டியல் இன மக்களை தடுத்து அவர்களது கோரிக்கையை எழ விடாமல் செய்யும் திட்டத்துடனும் டாக்டர் அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகளை சிதைத்த சாதிவெறி விஷமிகளைக் கருத்தரங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு தழுவிய அளவில் எதிர்ப்புக்குரல் எழுப்பிய பிறகும் இதுவரைக் குற்றவாளிகளைக் கைது செய்யாத காவல்துறையையும் அதிமுக அரசையும் கருத்தரங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.
2. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு நிகழ்வாக அறிவிக்க வேண்டும், மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டுமென்ற ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டுமென்றும் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
3. 1996 ஜூலை 11ல் பீகார் பத்தானிதோலாவில் 23 பேர்களை படுகொலை செய்த ரன்வீர் சேனா குற்றவாளிகளை பீகார் உயர்நீதி மன்றம் விடுதலைசெய்ததை கருத்தரங்கம் நிராகரிக்கிறது. உச்சநீதிமன்றம் வழக்கை விரைந்து மறு விசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிப்பதோடு பீகார், தமிழ்நாட்டில் கொடியங்குளம், தாமிரபரணி உள்ளிட்டு நாடு முழுவதும் பட்டியலின, பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை மறு விசாரணை செய்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டுமென்று கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
4. காரைக்குடி பர.அழகனுக்கு மன்னர் சேதுபதி காலத்தில் வழங்கப்பட்ட நில உரிமையை உயர்நீதிமன்றமும் அரசாங்கமும் உறுதிசெய்தபிறகும் மேல்சாதி ஆதிக்க சக்திகள் ஆக்கிரமிப்பை அகற்ற மறுத்து வருகின்றனர். சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை உரியவர்களுக்கு ஒப்படைக்கவேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
5. மதுரை கச்சைகட்டியில் நரபலி கொடுக்கப்பட்ட ராஜலட்சுமி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரை கைது செய்து வழக்கை விரைவாக நேர்மையாக விசாரித்து தண்டிப்பதோடு அயூப்கான், கூட்டாளிகளுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
6. தமிழ் நாட்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை, விசாரிக்கப்படுவதில்லை, தண்டிக்கப்படுவதில்லை. அதிகாரிகள், அரசியல்வாதிகள் தலையீட்டில் வழக்குகள் கைவிடப்படுகின்றன. விரைவு தனி நீதிமன்றம் அமைத்து அனைத்து வழக்குகளையும் ஓராண்டுக்குள் விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
7. தமிழ்நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் தொட்டில் முதல் சுடுகாடுவரை பல்வேறுவிதமான பாரபட்சங்களுக்கும் அநீதிகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். தீண்டாமைச்சுவர்கள், கோவில் நுழைய மறுப்பு, பொதுச்சொத்துகளிலிருந்து விரட்டப்படுவது, பஞ்சமர் நிலங்கள் அபகரிக்கப்படுவது, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பணிசெய்யப்படவிடாமல் அச்சுறுத்தப்படுவது, பெண்கள் பாலியல்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது, கவுரவக்கொலைகள் செய்யப்படுவது போன்ற கடுங்குற்றங்களை தடுத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, சமத்துவம், கவுரவம் காக்கப்பட உயரதிகாரம் கொண்ட சிறப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
8. ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பஞ்சமர் நிலங்களை மீட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட பஞ்சமர் நில மீட்பு ஆணையம் ஏற்படுத்திட வேண்டும். கோவில், மடம்,அறக்கட்டளை நிலங்களை கையகப்படுத்தி நிலமற்றவர்களுக்கு வழங்கிட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டுமென்றும் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
9. மேற்கண்ட கோரிக்கைகளுக்காக தொடர் இயக்கங்கள், போராட்டங்கள் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இயக்கங்களுக்கு இடது, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள், சக்திகள் ஆதரவு தரவேண்டுமென கருத்தரங்கம் அழைப்பு விடுக்கிறது.

(மதுரை, நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி-விருதுநகர், கரூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏறத்தாழ 250 பேர் கலந்து கொண்டனர்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக