ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

புதிய தமிழகம் கோரிக்கைகள் அதிமுக., அரசு புறக்கணிப்பு

கடையநல்லூர் : எங்களது கோரிக்கைகளை அதிமுக., அரசு நிறைவேற்றவில்லை எனவும், சங்கரன்கோவில் அதிமுக வெற்றிக்கு புதிய தமிழகம் தான் முக்கிய காரணமாக இருந்தது எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சியின் 15ம் ஆண்டு விழா சிறப்பு மாநாடு கடையநல்லூரில் நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.,தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் அய்யர், நிலக்கோட்டை எம்.எல்.ஏ., ராமசாமி, மாவட்ட செயர் சுப்பிரமணியன் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் எம்எல்ஏ., கிருஷ்ணசாமி பேசியதாவது: கட்சி துவங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது என்றால் அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கட்சியின் மாநாடுகளை பல்வேறு மாவட்டங்களில் புதிய தமிழகம் நடத்தி காட்டியது. யாரிடமும் நிதி கேட்டு செல்லும் கட்சியாக ஒருபோதும் இருந்ததில்லை. கொள்கை அடிப்படையில் தான் புதிய தமிழகம் செயல்பட்டு வருகிறது. எவ்வித பிரதிபலன்களை எதிர்பார்க்காமல் ஏழை, எளிய மக்களுக்காக உருவான இயக்கம் தான் புதிய தமிழகம். பதவியை நோக்கியும் கட்சி ஆரம்பிப்பார்கள், வெற்றியை எதிர்பார்த்தும் கட்சியை ஆரம்பிப்பார்கள். ஆனால் புதிய தமிழகம் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு கொள்கை அடிப்படையில் உருவான கட்சியாக திகழ்ந்து வருகிறது. காங்., ஆட்சிக்கு பின் தொடர்ந்து தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி, மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில் புதிய தமிழகம் மக்கள் நலனுக்காக அரசியல் இயக்கங்களில் ஈடுபட்டு தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்ற கட்சியாக செயல்பட்டு வருகிறது. மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்னைக்கு முதலில் குரல் கொடுத்த கட்சி புதிய தமிழகம் தான். அன்றைய தினம் 150 ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டுமென்ற கருத்தை இன்று பல்வேறு கட்சிகள் சட்டசபையில் கூறி வருகின்றனர். கடந்த தேர்தலில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து அதிமுகவிடம் புதிய தமிழகம் தேர்தல் கூட்டணி அமைத்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை ஆஸ்பத்திரியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் முதல்வர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தையும் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியாக மாற்றுவதற்கு உத்தரவிட்டார். அப்படியிருக்கும்போது புதிய தமிழகம் முன்வைத்த கோரிக்கைகளை மட்டும் ஏன் யோசிக்க வேண்டும். புதிய தமிழகத்தை பொறுத்தவரை ஆதரித்தாலும் முழுமையாக ஆதரிக்கும், எதிர்த்தாலும் முழுமையாக எதிர்த்து செயல்படும். சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு புதிய தமிழகம் ஆதரவு அளித்தது. அப்பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் 40 ஆயிரம் வாக்குகளை கூட்டணியில் இடம் பெற்ற அதிமுகவிற்கு பெற்று தந்தோம். ஆனால் அதன்பிறகும் கூட எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஜனநாயக நாட்டில் மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை ஓட்டுரிமைதான். எனவே சட்டசபை தேர்தலில் ஒரு முடிவு, பார்லி., தேர்தலில் ஒரு முடிவு என்ற சூழ்நிலையை அதிமுக அரசு புதிய தமிழகத்திற்கு ஏற்படுத்தும் சூழ்நிலை தரவேண்டாம். இரண்டு ஆண்டுகளாக எத்தனை முறைதான் எங்கள் கோரிக்கை குறித்து குரல் கொடுப்பது. தமிழகத்தில் புதிய தமிழகம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி முதல் துவங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வேளாண்குடி மக்களை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அழைத்திட அரசாணை பிறப்பிக்கவும், ஆதிதிராவிடர் என்ற பெயராலும், ஆதிதிராவிடர் நலத்துறை எனவும் இதுவரை தமிழக அரசு பிறப்பித்துள்ள அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்து அட்டவணை மக்கள் அல்லது பட்டியல் இன மக்கள் என பொதுவாக அழைத்திட வேண்டுமெனவும், தமிழகத்தில் உள்ள உள் இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்திடவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கடையநல்லூர் புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் குமார், தொகுதி பொறுப்பாளர் சுடலைத்துரை, மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆறுமுகச்சாமி, நகர செயலாளர் முருகையா, கவுன்சிலர்கள் மகேஸ்வரி, ராஜா, நகர துணை செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக புதிய தமிழகம் கட்சி சார்பில் நலிந்தோருக்கு நலத்திட்டங்களை கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக