ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 24 டிசம்பர், 2012

இன்று கீழவெண்மணி போராளிகள் நினைவு தினம் ..... dec..25



டிசம்பர் 25ம் நாள். ஏசுகிறிஸ்து இந்த உலகில் பிறந்த நாள் என்பதாக கடைபிடிக்கப்படும் நாள். யூத மன்னர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட யூத மக்களுக்காக, ஏசு நாதர் பாடுபட்டார் என்பதாக படிக்கின்றோம். அடிமைகளை விடுதலை செய்து, நல்வாழ்வை அவர்கள் எய்துவதற்காக பாடுபட்ட காரணத்தினால், ஏசு நாதர் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையை சுமந்து செல்லும் ஏசு நாதரை, இருபுறமும் கூடி நின்ற அடிமை மக்கள், ஆர்ப்பரித்து ஆதரவு தந்தனர். சாதி ஒடுக்கு முறையில் தவிக்கின்ற இந்தியாவிலும், ஒடுக்கப்படும் மக்கள் விடுதலை பெறுவதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றனர். சாதிய ரீதியான ஒடுக்கு முறைகளில், கூடுதலான சுமையை சுமப்பவர்கள், தீண்டத்தகாத மக்களாக ஆதிக்க சாதிகளால் அவமானப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான்.
மதம் மாறினாலும் இந்த நாட்டில் சாதி மாறுவதில்லை என்பதை சாதித்து வருவது நிலப்பிரபுத்துவத்தின் குணமாகயிருக்கிறது. அப்படித்தான் இதே நாளில் அந்த வெண்மணி நிகழ்ச்சி நடந்தது.

இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம், நேற்றைய கிழக்கு தஞ்சையாக இருந்தது. அதில் நாகப்பட்டினம் ஒரு வட்டாட்சியாக நிர்வகிக்கப்பட்டது. அதற்கு உட்பட்ட கிராமம் தான், கீழவெண்மணி கிராமம். கீழத்தஞ்சை முழுவதுமே, பெருவாரியான மக்களாக இருக்கும் தலித் மக்கள், கூலி, ஏழை விவசாயிகளாக இருந்து வருகிறார்கள். அவர்கள் மத்தியில், கீழதஞ்சையில், குறிப்பாக நாகப்பட்டினம் வட்டாரத்தில், நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற பெயரில், ஆதிக்கசாதிப் பண்ணையார்கள் உருவாக்கிய அமைப்பிற்கு, கோபால கிருஷ்ணநாயுடு தலைவராக இருந்தார். அவர் தான் அந்த வட்டாரத்தின் கூலிப் போராட்டத்தை ஒடுக்குவதில் பெயர் பெற்றவர். அரைப்படி நெல்லை உயர்த்திக் கேட்டதற்காக, கூலி விவசாயிகள் அங்கே ஒடுக்கப்பட்டார்கள். அறுவடை கூலியாக காசுக்கு பதில், நெல் கொடுப்பது தான் அங்கேயிருந்து வந்த பழக்கம். உச்சக்கட்டத்திற்கு போராட்டம் சென்ற போது, பண்ணையார் கோபால கிருஷ்ணன், காவல் துறையுடன் சேர்ந்து கொண்டு, கீழவெண்மணி கிராமத்து போராடும் மக்களை ஒடுக்குவதற்காக உள்ளே நுழைகிறார். தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அழைக்கப்படும் தலித் மக்கள், அந்த கிராமத்தின் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர்.

கூலி உயர்வு போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்ததாக, அந்த மக்கள் மீது ஆதிக்கச்சாதி பண்ணையார் ஆத்திரம் கொள்கிறார். தன்னுடன் வந்த குண்டர் படையினை, கிராமத்து மக்கள் மீது ஏவிவிடுகிறார். அடிக்குப் பயந்து ஓடிய மக்களில் ஒரு சிலர், ஒரே குடிசைக்குள் புகுந்து ஒளிந்துகொள்கின்றனர். அவர்களை அப்படியே அந்த குடிசையோடு பூட்டி, பண்ணையார் கட்டளைப்படி, குண்டர்கள் குடிசைக்கு தீ வைத்துக் கொளுத்துகின்றனர். கொளுத்தப்பட்ட குடிசைக்குள் இருந்த தலித் கூலி விவசாயிகளில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் அடக்கம். அனைவரும் அந்த பெருந்தீயில் வெந்து மடிகின்றனர். 44 பேர் அன்று நெருப்பில் கொல்லப்பட்டவர்கள். உலகின் மனச்சாட்சிக்கு, நெஞ்சமே வெடித்தது. கூலி உயர்வு போராட்டத்திற்கு, தலைமை கொடுத்து வந்த மார்க்சிஸ்ட் கட்சி அதிர்ச்சியடைந்தது.

இது நடந்தது 1968ம் ஆண்டு. அதே நேரத்தில் சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம், கேரளாவில் நடந்து கொண்டிருந்தது. அந்த கூட்டத்திலிருந்து பி.டி.ரணதிவே, ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி ஆகியோர் திருச்சிக்குப் பறந்து வந்து, மறுநாளே வெண்மணியை அடைந்தனர். நடந்து முடிந்த கோரத் தாண்டவ கொலையைக் கண்டு பொறுக்காத, 1 லட்சம் வரையிலான கூலி விவசாயிகள் அணிதிரண்டு விட்டனர். அணிதிரண்டவர்களின் இலக்கு முழுவதும் பண்ணைஆதிக்கச் சக்தியை, பழிவாங்க வேண்டும் என்ற துடிப்பில் இருந்தது. ஆனால் அங்கே கோபாவேசத்தோடு பேசிய பி.ராமமூர்த்தி, தனது நீண்ட உரையின் மூலம் பண்ணையார்களின் கொடூரங்களை அம்பலப்படுத்தினார். அவர்களது செயல்கள் சட்டவிரோதமானவை என்பதை ஆணித்தரமாக மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். அன்றைய முதல்வர் அண்ணா, 2 நாட்களாக உணவருந்தாமல் வெண்மணிப் படுகொலையால் நொந்து போயிருந்ததை, எடுத்துச் சொன்னார். கோபாவேசத்தில் பண்ணையாரை பழிதீர்த்துவிட்டால், பிரச்சனை தீர்ந்து விடுமா என்ற கேள்வியைக் கேட்டு, மக்களை சிந்திக்க வைத்தார்.

சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து, நீதிமன்றத்தின் மூலம் பண்ணையாருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று, நெருப்புப் பறக்கப் பேசினார். தலித் கூலி மக்களும் உணர்ச்சிகளை தலைகவிழ வைத்தனர். அன்றைக்கு அந்த பண்ணையார் தப்பித்து விட்டார். வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. அமர்வு நீதிமன்றம் பண்ணையார் கோபால கிருஷ்ணனுக்கு, 10 ஆண்டுகள் கடும் சிறை என தீர்ப்புக் கொடுத்தது. திருச்சி மத்தியசிறையில், மற்ற தஞ்சை மாவட்ட கூலி விவசாயப் பின்னணி கொண்ட, கைதிகள் மத்தியில், கோபால கிருஷ்ணன் பீதியில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தான். மேல் முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றது.

நீதியரசர்கள் பெருந்தன்மையோடு தீர்ப்புக் கொடுத்தனர். மன்னிக்கும் மனம் படைத்தவர்களாக, கோபால கிருஷ்ணனை விடுதலை செய்தனர். இத்தனை பெரிய பண்ணையார், காவல் துறையுடன் சேர்ந்துக் கொண்டு, தலித் கிராமத்திற்குள் நுழைந்து குடிசைக்கு நெருப்பிடுவார் என்பது நம்பமுடியாத குற்றம் என்று விளக்கமும் கொடுத்தார். பி.ராமமூர்த்தி எதிர்பார்த்த தண்டனையை, நீதிமன்றம் கொடுக்கத் தயாராயில்லை. அதை நம்பி தாங்கள் தரயிருந்த தண்டனையை, தள்ளிப்போட்ட கூலி விவசாயிகள் விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்டனர். சி.பி.எம்.கட்சி வெண்மணி தியாகிகளுக்கு, அதேயிடத்தில் நினைவு இல்லம் கட்டியது. 12 ஆண்டுகள் உருண்டோடின. 1980ம் ஆண்டில் டிசம்பர் மாதம் வந்தது. 3வது வாரம் தொடங்கும் போதே, கமுக்கமாக பணியாற்றிவந்த தலைமறைவு புரட்சியாளர்களான, நக்சல்பாரி இயக்க கொரில்லாக்கள், கோபால கிருஷ்ணனை தியாகிகள் நினைவிடம் அருகிலேயே வெட்டிச் சாய்த்தனர். வினோத் மிஸ்ரா வாழ்க என தங்கள் தலைவர் பெயரில் துண்டறிக்கைகளை எறிந்து சென்றதாக காவல்துறை குற்றஞ்சாட்டியது. தமிழ்நாடெங்கும் பாதிக்கப்பட்ட மக்கள் இனிப்புக் கொடுத்தனர்.

இதுதான் வரலாற்றில் பதிவான ரத்தசாட்சியங்களின் தழும்புகள். நீதிமன்றம் நீதிகொடுக்க தவறிவிட்டால், மக்கள் மன்றம் தன் கையில் எடுத்துக்கொள்ளுமோ என்ற கேள்வியும் கூட இங்கே படிப்பினையானது. சட்டத்தின் முன்னே அனைவரும் சமம். ஏழையென்றும், எளியரென்றும் சட்டம் வளையாது. நாம் அந்த தாரகமந்திரத்தை உச்சரித்துக் கொண்டேயிருப்போம்.

1 கருத்து:

  1. (தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அழைக்கப்படும் தலித் மக்கள்)(நீக்கவும்), தேவேந்திர குல வேளாளர் தலித் அல்ல, சூழ்ச்சியால் ஒடுக்கப்பட்ட உயர் குலத்தவரானா தேவேந்திர குல வேளாளர் என குறிப்பிடவும்

    பதிலளிநீக்கு