ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 27 ஜனவரி, 2014

''ஜெயலலிதா பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?'' டாக்டர் கிருஷ்ணசாமியின் அதிரடி பதில்..

  • ''ஜெயலலிதா பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?''  டாக்டர் கிருஷ்ணசாமியின் அதிரடி பதில்



''தி.மு.க. ஆட்சியின் மீது பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. அதற்கு மாற்றாக அ.தி.மு.க. அமையும் என்றுதான் அந்தக் கூட்டணியில் புதிய தமிழகம் அங்கம் பெற்றது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் எதையும் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகப் புகார் கிளம்பியது. இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் மணல் கொள்ளை தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது? அ.தி.மு.க. ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை. தி.மு.க. ஆட்சியைவிட பல மடங்கு மோசமாகிவிட்டது''- நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணியை உறுதிசெய்திருக்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்தபோதுதான் இப்படி ஆரம்பித்தார்.
 ''அ.தி.மு.க-வைவிட தி.மு.க. பரவாயில்லை என்பதால்தான் தி.மு.க-வுக்குப் போனீர்களா?''
''அப்படிச் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் சில கொள்கைகளும் கோட்பாடுகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். புதிய தமிழகத்துக்கும் அப்படித்தான். தென் தமிழகத்தில் பிரதானமாக உள்ள பள்ளர்கள் எனும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், தங்களை தேவேந்திர குல வேளாளர்கள் என அழைத்திட வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தேர்தல் கூட்டணிக்கு முன்பாக ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் வலியுறுத்தினோம். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும் ஜெயலலிதா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு முன்பாக புதிய தமிழகத்தின் ஆதரவு தேவை என அ.தி.மு.க. தலைமை அழைத்து கேட்டபோதுகூட, 'ஏற்கெனவே தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால் தென் தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன். 'தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தால் அதை இப்போது நிறைவேற்ற முடியாது. தேர்தல் முடிந்தவுடன் அறிவிக்கிறேன்’ என்று சொன்னார். அந்த நம்பிக்கையில்தான் சங்கரன்கோவில் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்தோம். அவரை வெற்றிபெற வைத்தோம். அதற்குப் பிறகும் எங்கள் கோரிக்கையை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அப்புறம் எப்படி அவர்களுடன் கூட்டணியைத் தொடர முடியும்?
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைவதன் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு விதமான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியும். தென் தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும்.''
''நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனைத் தொகுதியில் உங்கள் கட்சி போட்டியிட வாய்ப்பு இருக்கிறது?''
''தி.மு.க. கூட்டணியில் நாங்கள் மட்டும் இல்லாமல் இன்னும் பல ஜனநாயக சக்திகளை இணைத்து, இந்தக் கூட்டணியை வலுவான வெற்றிக் கூட்டணியாக மாற்ற நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, எண்ணிக்கை பற்றியெல்லாம் இப்போது பேச முடியாது. எங்கள் கட்சி பொதுக்குழுவில் இதுபற்றி விவாதித்து முடிவெடுக்கப்படும்.''
''திருமாவளவனும் நீங்களும் ஒரே அணியில் இடம்பெற்றுள்ளீர்கள்...''
(கேள்வியை முடிப்பதற்கு முன்பே குறுக்கிட்டு...) ''நாங்கள் அன்றும் ஒன்றாகத்தான் இருந்தோம். இன்றும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். பார்ப்பவர்களின் பார்வைதான் இரண்டாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து சந்திக்கிறோம். பேசுகிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் எப்போதும் இருந்ததே இல்லை. இப்போது ஒரே அணியில் இருக்கிறோம். விரைவில் ஒரே இயக்கமாகவும் மாறுவோம்.'
''தி.மு.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், அவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளீர்கள். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?''
''இந்தியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத எந்தப் பிரதான கட்சிகளும் இல்லை. பாரதிய ஜனதா கட்சி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிதான் முன்பு ஆட்சியை இழந்தது. ஊழல் குற்றச்சாட்டு என்பது வேறு; குற்றம் நிரூபிக்கப்படுவது என்பது வேறு. கட்சியில் இருக்கும் சிலர் மீது புகார் கிளம்பும். வழக்குப் பதிவுசெய்யப்படும். நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும். பிறகு, விடுதலை ஆவார்கள். இது தொடர்கதைபோல நடக்கும் விஷயம். ஆனால், ஒரு கட்சியையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது!''
''ஜெயலலிதா பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?''
''இந்திய அளவில் மாற்றம் வேண்டும் என அவர் நினைக்கிறார்; பேசுகிறார். அவர் நினைக்கும் மாற்றத்தை முதலில் தமிழக அளவில் நிகழ்த்தியிருக்க வேண்டும். அந்த மாற்றம் இந்திய அளவிலான மாற்றத்துக்கு வலு சேர்த்திருக்கும். தமிழகத்திலேயே எந்த மாற்றத்தையும் உருவாக்காதபோது, எப்படி இந்திய அளவில் மாற்றத்தை உருவாக்கிவிட முடியும்? 'கூரை ஏறி கோழிப் பிடிக்க முடியாதவன், எப்படி வானம் ஏறி வைகுண்டம் போகப்போறான்?’ என்று கிராமத்துப் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள். ஜெயலலிதா சொல்வதும் அப்படித்தான் இருக்கிறது!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக