ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 13 ஜனவரி, 2014

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது தஞ்சையில் ஜான்பாண்டியன் பேட்டி..



பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று தஞ்சையில் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறினார்.
பொதுக்குழு கூட்டம்
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பிரிசிலாபாண்டியன் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுகின்றனர். கைது செய்யப்படுகின்றனர். இலங்கை அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதுடன் மீனவர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களை கொன்று குவித்து இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க சர்வதேச நாடுகள் வருகிற மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும். ஈழம் குறித்து ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி கருத்தறிந்து அதன் மூலம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்.
ரத்து செய்ய வேண்டும்
மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதும், இடிந்தகரை பொதுமக்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்பபெற வேண்டும். கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் போட்டியிட தொகுதிகளை தேர்வு செய்வது, கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அல்லது தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் போட்டியிட்டு தேர்தல் களத்தை சந்திப்பதா? என எந்த முடிவாக இருந்தாலும் முடிவு எடுக்கும் அனைத்து அதிகாரத்தையும் ஜான்பாண்டியனுக்கு பொதுக்குழு ஏகமனதாக அளிக்கிறது.
களப்பணியாற்றுவோம்
கூட்டணியோ, தனித்தோ தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்தித்தே ஆக வேண்டும் என்பது பொதுக்குழுவில் பங்கேற்ற அனைவரின் விருப்பம். தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தல் களப்பணியாற்றுவோம். தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் வெற்றித்தேர்தலாக பாராளுமன்ற தேர்தலை மாற்றிட உறுதியேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டணி இல்லை
முன்னதாக மேற்கண்ட தீர்மானங்களை விளக்கி நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறினார். அப்போது அவர், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றும் அந்த கட்சி இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக