சசிகலா குடும்பத்தின் முழுநீள ஜாதகம் இது! இப்போது அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பெயர் சிவப்பு நிறத்தில் உள்ளது. மொத்தம் 16 பேர் நீக்கப்பட்டுள்ளார்கள். இதில் 'மிடாஸ்' மோகன் மட்டுமே சசிகலா குடும்பத்துக்கு வெளியே உள்ள ஒரே நபர். சசிகலா, திவாகரன் மற்றும் சகோதர, சகோதரிகளான சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி ஆகியோரது வாரிசுகளில் சிலரும், எம்.நடராஜனின் சகோதரர்கள் இருவரும்தான் இப்போது விலக்கப்பட்டுள்ளார்கள். அடுத்து வரும் பக்கங்களில் ஒவ்வொருவரைப் பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன....

செல்லப்பிள்ளை தினகரன்!

1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய குளம் தொகுதி வேட்பாளர் யார் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க... தினகரனைக் களமிறக்கினார் ஜெய லலிதா. 'அம்மா வீட்டு வேட்பாளர்’ என்பதால், தேனி மாவட்டக் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது, தென்மாவட்ட நிர்வாகிகள் பலரும் இவருக்காக ஓடியாடி வேலை செய்து அமோக வெற்றியைத் தேடித் தந்தனர். அடுத்தடுத்து, இவருக்கு ஏறுமுகம்தான். கட்சியில் மாநிலப் பொருளாளர் பதவி தேடி வந்தது. பெரியகுளம் எம்.பி-யாக இருந்த போது, தனது தொகுதி மக்களுக்கு கேட்டதை எல்லாம் கொடுக்க... தேனி மாவட்டத்தினர், 'மக்கள் செல்வன்’ என பட்டத்தைச் சூட்டினார்கள்.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அறிவிக்கப்படாத அதிகார மையமாக தினகரன் மாறினார். 'அடுத்த வாரிசு’ என்றும் இவரைச் சொன்னார்கள். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் இடி. 40 தொகுதி களையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்ற... தினகரனும் தோல்வியைத் தழுவினார். தினகரனின் அரசியல் பயணத்தில் வேகம் குறைந்தது.
இவர் குறித்துப் பேசும் கட்சியினர், ''நாடாளுமன்ற வேட்பாளராக தினகரன் பெரியகுளத்தில் காலடி வைத்தபோது, கட்சியில் சீனியரான ஓ.பன்னீர் செல்வத்தின் அடக்கத்தில் ஐக்கியமான தினகரன், அவரது தம்பி வீட்டில் குடியேறினார். ஓ.பி.எஸ்-சிடம் பணிவையும் தாண்டிய நம்பகத்தன்மையை உணர்ந்தவர், ஓ.பி.எஸ்-சை அம்மாவிடம் தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தினார். இதுவே ஒ.பி.எஸ்-சை முதல்வர் நாற்காலி வரை கொண்டு சென்றது. தினகரன் தேனிக்கு வரும் போதெல்லாம் சாரதியாக இருந்த தேனி முன்னாள் எம்.எல்.ஏ-வான ஆர்.டி.கணேசன், தினகரனின் செயலாளராக இருந்த போடி முன்னாள் எம்.எல்.ஏ-வான ராமதாஸ், ஆண்டிபட்டி முன்னாள் ஒன்றியச் செயலாளர் லோகிராஜன் ஆகியோர் தினகரனால் வளர்ந்தவர்களில் முக்கியமானவர்கள்'' என்கிறார்கள்.
''ஒன்றுபட்ட மதுரை மாவட்டச் செயலாளர் சேடபட்டி முத்தையா, ஆண்டிபட்டி முத்துவெங்கட்ராமன், தற்போதைய போடி நகர்மன்றத் தலைவர் பழனிராஜ், முன்னாள் தேனி நகரச் செயலாளர் ராமராஜ், ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் பால்பாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ-க்களான போடி பன்னீர்செல்வம், தேனி ஜெயராமன், பெரியகுளம் டாக்டர் சலீம், கோபாலகிருஷ்ணன், பெரியவீரன், கம்பம் சுப்புராயர், முன்னாள் எம்.பி. ராமசாமி, ஆர்.டி கோபால் ஆகியோர் தினகரனை எதிர்த்ததால் வீழ்ந்தவர்கள்'' என்றும் சொல்கிறார்கள். தினகரனால் அடையாளம் காணப் பட்ட ஒ.பி.எஸ்-க்கு பின்னர் தினகரன் வகித்த பொருளாளர் பதவி கிடைத்ததும் கடந்த 5 ஆண்டு களாக 'அமைதிப்புறாவாக’ தினகரன் மாறிவிட்டதும் எதிர் பாராத திருப்பங்கள். ''தப்பு செய்தவங்களோட சேர்த்து, 'சும்மா’ உட்கார்ந்து இருந்த அண்ணனையும் நீக்கிட்டாங்க'' என்று தினகரன் ஆட்கள் புலம்புகிறார்கள்!
சினிமா டு தொழில்

சுதாகரன் திருமணத்தின்போது ஆஜானுபாகுவாக இருந்தவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திடீரென்று உருவம் இளைத்து சிக்கென்று வந்து நின்றார். ''என்னப்பா... சர்க்கரை ஜாஸ்தியா... இப்படி இளைச்சுப் போயிருக்கியே...'' என்று உறவினர்கள் கரிசனத்தோடு குசலம் விசாரிக்க, ''சினிமாவுல நடிக்கப் போறேன்... அதுக்காக தினம் அஞ்சு மணி நேரம் எக்சர்சைஸ் செஞ்சு கஷ்டப் பட்டு உடம்பை இளைக்க வச்சிருக்கிறேன். என்னைப் பார்த்து வியாதிக்காரன்னு சொல்றீங்களே'' என்று சிரித்திருக்கிறார். ''டைரக்டர் பூபதி பாண்டியனிடன் பேசிட்டு இருக்கேன். சீக்கிரமா ஆக்ஷன் ப்ளஸ் காமெடி ரோல் செய்யப் போறேன்'' என்று சொன்னபடியே விதவிதமான கெட்டப்பில் பாஸ்கரன் கொடுத்த அசத்தலான போட்டோக்களைப் பார்த்து உறவினர்களே வாய் பிளந்தார்கள்.
''கருணாநிதி குடும்ப வாரிசுகள் உதயநிதி, துரை தயாநிதி, அருள்நிதி போன்றவர்கள் சினிமாவை ஆக்கிரமித்தார்கள். இதனால் தான் கடந்த ஆட்சிக்கே கெட்ட பெயர். இந்த நேரம் நீ சினிமாவில் நடிக்கப் போறேன்னு விளம்பரம் கொடுத்து, எங்களுக்கும் அம்மாவுக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கதே...'' என்று சிலர் அட்வைஸ் செய்யவே, கலைத்தாகத்தை அடக்கிக் கொண்டாராம். அம்மா வனிதா மீது மிகுந்த பாசம் கொண்ட பாஸ்கரனுக்கு, தாயின் திடீர் மறைவு பேரிடியாய் அமைந்து போனதாம். அதனால், சினிமா கனவை மூட்டைக் கட்டிவிட்டு, குவாரி தொழிலில் முழு கவனம் செலுத்தி வருகிறாராம்.
பிள்ளையார் சுழி போட்ட சுதாகரன்

இந்தியாவே வாய்பிளக்கும் அளவுக்கு பிரமாண்டமாக சுதாகரனுக்குத் திருமணம் செய்துவைத்து, அதுவே தேர்தலில் தோல்விக்குக் காரணமாகவே, சுதாகரனை விரட்டியடித்தார் ஜெய லலிதா.
அதன்பிறகு தி.மு.க. ஆட்சியில் 'சின்ன எம்.ஜி.ஆர்.’ என்று அடைமொழியை சூட்டிக்கொண்டு ஆடம் பரத்தோடு வலம் வந்தார். 2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுமே சுதாகரனின் தி.நகர் வீட்டிலும் அபிராமபுரத்தில் உள்ள அலுவலத்தில் அதிரடியாக நுழைந்த போலீஸ் 88 கிராம் ஹெராயினைப் பறிமுதல் செய்து கைது செய்தது. துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாகவும் வழக்கு கடுமையாக்கப்பட்டது. 108 நாட்கள் சிறையில் இருந்தார் சுதாகரன். வழக்கு விசாரணை இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.
அதன்பிறகு பெண் திரைப்படத் தயாரிப்பாளர் பிரியா நாயருடன் ஆபாசப் பேச்சு, புலித்தோல் விவகாரம் என்று பல்வேறு விஷயங் களில் சிக்கினர். சிறுதாவூர் நில விவகாரத்தில் தொடர்புடையதாக பேசப்பட்ட பரணி ரிசார்ட்ஸ் நிறுவனத்திலும் சுதாகரன் பங்குதாரர். சுதாகரன் என்கிற பெயரை 'சுதாகர்’, 'விவேக சுதாகர்’ என்றெல்லாம் மாற்றிப் பார்த்தார். ஜெயலலிதா அடுத்தடுத்து வழக்கு களைப் பாய்ச்சிய போதும், அவருக்கு எதிராக சுதாகரன் ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை.
இரண்டு வாரம் முன்பு சுதாகரன் பெங்களூரு கோர்ட்டில் ஆஜர் ஆனபோது, சசிகலா மற்றும் இளவரசிக்கு நடுவில் உட்கார்ந்து பேசியதுதான் இன்றைய சசிகலா பிரச்னைக்கு ஆரம்பம் என்கிறார்கள்!
'பாஸ்’ என்ற திவாகரன்!

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக மன்னார்குடியில் இருந்து நம்பகமான ஆட்களை அனுப்பி வைத்தார் திவாகரன். அன்று முதல், ஜெ-வின் அபிமானத்துக்கு உரியவர்களில் ஒருவராகிப் போனார். இவரும் கார்டனில் சில காலம் இருந்தார். பின்னர், ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், சசிகலா உறவு வட்டாரத்தில் யார் யார் போயஸ் கார்டனில் வலம் வரலாம் என அனுமானிக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவர் திவாகரன். சென்னைக்குப் போகாமலே காரியம் சாதிக்கும் ஆற்றல் பெற்றவர். இவரைக் கட்சிகாரர்கள் 'பாஸ்’ என அழைப்பார்கள். டெல்டாவில் இவர் கைகாட்டும் நபரே சட்டமன்ற வேட்பாளர் மற்றும் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்! அதனால் இவரின் வீட்டின் முன் காலையிலேயே அ.தி.மு.க கரை வேட்டிகள் திரண்டு நிற்கும்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இவரின் கையே மேலோங்கி இருந்தது. முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம் கொண்ட டெல்டாவில், ஸ்ரீதர் வாண்டையாரின் பிரிவு அ.தி.மு.க-வுக்கு பின்னடைவு என கருதப்பட்ட நிலையில், மூ.மு.க-வை உடைத்து வாண்டையாரை கலங்கடித்தவர் திவாகரன். 'பணக்காரர்களை தன் அருகில் வைத்துக்கொள்வதும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தன்னுடைய விசுவாசிகளுக்கு கட்சிப் பதவி பெற்றுத் தருவதும் திவாகரனின் ராஜதந்திரம்!
திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க-வின் முன்னாள் செயலாளர் எஸ்.காமரஜுக்குத்தான் மன்னார்குடி தொகுதியில் ஸீட் கிடைக்கும் என அனைவரும் நம்பிக் கொண்டு இருந்த சூழலில், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சிவா.ராஜமாணிக்கத்தை அ.தி.மு.க-வுக்கு அழைத்து வந்து ஸீட் வாங்கித் தந்தார்.
தனது தீவிர விசுவாசியான ஆர்.காமராஜைத் தொடர்ந்து 15 வருடங்களாக திருவாரூர். மாவட்ட அ.தி.மு.க செயலாளராக நீடிக்க வைத்தவரும் திவாகரனே! அவருக்கு நன்னிலம் தொகுதிக்கு ஸீட் வாங்கிக் கொடுத்தவரும் திவாகரன்; அங்கு வெற்றி பெற்ற ஆர்.காமராஜை, உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக்கியதும் திவாகரனே! சசிகலா குடும்பம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதால், ஆர்.காமராஜ் பதவிக்கு வெடி காத்திருக்கிறது. இருந்தாலும், 'திரும்பவும் ஒண்ணா சேர்ந்துடுவாங்கப்பா’ என அ.தி.மு.க. கரை வேட்டிகள் கூட்டம் திவாகரன் வீட்டு வாசலில் காத்திருப்பது தொடர்கிறது.!
முதல்வர் உஷா ராகி, மன்னார் குடி வகையறா அத்தனை யையும் வாட்ச் பண்ணுகிறார் என்று தெரியாமல் போனிலும் நேரிலு மாக தன்னை தொடர்பு கொண்ட அதிகாரிகளுடன் எல்லாம் இவர் பாட் டுக்கு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்க... அப்படி பேசியவர்கள் பட்டியலை எல்லாம் தோட்டத்துக்குக் கொடுத்தது உளவுத் துறை. அந்த அதிகாரி கள் நிலைமை என்னாகுமோ, தெரியவில்லை!
'பிரமாண்டம்’ டாக்டர் வெங்கடேஷ்

தினகரன், மகாதேவன் ஆகியோர் ஓரம் கட்டப்பட்ட பிறகு, வெங்கடேஷை உள்ளே கொண்டு வந்தார் சசிகலா. மகாதேவன் வீட்டுக்கு அருகில்தான் வெங்கடேஷ் வீடும் தஞ்சாவூரில் இருந்தது. அண்ணன் தம்பிகளாக பழகி வந்தவர்கள் காலப்போக்கில் எதிரிகளாக மாறியது தனிக்கதை.
மகாதேவன் போன பிறகு தினகரன் மீண்டும் கார்டனில் கால் பதிக்க நினைத்தார். அது நடக்காமல் போனாலும் வெங்க டேஷ§க்கு ஆதரவுக் கரம் நீட்டினார். ஏனென்றால் தினகரனின் மனைவியும் ஜெயா டி.வி-யின் எம்.டி-யுமான அனுராதாவின் சகோதரர்தான் வெங்கடேஷ். இவரது திருமணத்தை நடத்தி வைத்தது, ஜெயலலிதாதான்.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என்று வெங்கடேஷின் கை ஓங்கியது. ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப் பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு மாநில செயலாளராகவும் ஆக்கப்பட்டார். வெங்கடேஷ§க்கு ஆதரவாக தினகரன், அனுராதா, கலியபெருமாள் ஆகியோரின் ஆசியும் கிடைக்கவே மளமளவென உயர்ந்தார். அவருக்குக் கட்சியில் கிடைத்த வரவேற்பு, வேறு யாருக்கும் கிடைக்காத வகையில் படுபிரமாண்டமாக இருந்தது. அதனாலோ என்னமோ இவரும் ஓரம் கட்டப்பட்டார். கடந்த சட்டசபைத் தேர்தலில் தனக்கு வேண்டியவர்களுக்கு இடம் வாங்கிக் கொடுப்பதில் இவர் கவனமாக இருந்தார். தனக்குப் பிடிக்காதவர்கள் மீது அவதூறு கிளப்பி ஒழிப்பதில் வெங்கடேஷ் கில்லாடி என்கிறார்கள். அப்படி முடக்கப்பட்டவர்களில் ஒருவர் கலைராஜன் எம்.எல்.ஏ.!
ராவணனின் ராஜ்ஜியத்திலே...

''சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் மருமகன் இவர். குடும்ப விஷயங்களில் மிகவும் பற்றுதலாகவும் பண விவகாரங்களில் நேர்மையாகவும் நடந்து கொண்டதால், சசிகலா ஆசிர்வாதத்துடன் மிடாஸ் நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்புக்கு வந்தார். அதன்பிறகு நம்பிக்கையான நபராக தோட்டத் துக்குள் நுழைந்தவர்தான் ராவணன். கொடநாடுக்கு ஜெயலலிதா ஓய்வு எடுக்க வந்த நேரங்களில், சிறப்பான உபசரிப்புகள் செய்து குட்புக்கில் இடம் பிடித்தார்.
மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடைய செயல்பாடுகள் குறித்து ரிப்போர்ட் எடுத்து அம்மாவிடம் ஒப்படைப்பார். இவர் மீது வைத்த நம்பிக்கை காரணமாக, இவர் சொன்னதை அப்படியே அம்மா நம்பினார். அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ராவணன், 'அம்மாவுக்குப் பிடிக்கலை’ என்று சொல்லியே, தனக்கு ஆகாத ஆட்களை எல்லாம் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். ராவணனைப் பத்தி புகார் எழுதி கார்டனுக்கு அனுப்பினால், அது நேரடியாக ராவணன் கைக்கே வந்துவிடும். புகார் எழுதினவரையே கூப்பிட்டு, அந்தத் தபாலை கையில் கொடுத்து தன்னுடைய பவரை காண்பிப்பார்.
கே.பி.ராமலிங்கம், ஆனந்தன், எடப்பாடி பழனிச் சாமி, தாமோதரன், வேலுமணி ஆகியோரை அமைச்சர் ஆக்கிக் காட்டிய ராவணன், செ.ம.வேலுசாமி, நீலகிரி மாவட்ட முன்னாள் செயலாளரான மறைந்த செல்வராஜ், ஊட்டி நகரச் செயலாளராக இருந்த கோபால கிருஷ்ணன் போன்றவர்களை விரட்டவும் செய்தார். அறிமுகமே இல்லாத புத்திசந்திரன் அமைச்சரானதும், அவர் பதவி பறிபோனதுக்கும் இவர்தான் காரணம். சண்முகவேலுவின் அமைச்சர் பதவி பறிப்பு, மலரவனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு, பொள்ளாச்சி ஜெயராமன் அமைச்சர் ஆகமுடியாமல் போனது எல்லாமே ராவணன் மகிமைதான்.
எந்த ஒரு எம்.எல்.ஏ-வும் தன்னுடைய தொகுதிக்கு சுயமா ஒரு திட்டத்தைக் கொடுக்க முடியாது. அத்தனையும் ராவணனோட கவனத்துக்கு வந்து, அவர் சொல்லக்கூடிய கான்ட்ராக்டர் வழியாத்தான் செயல்பாட்டுக்கு போக முடியும்.
சசிகலா டீமில் முதன்முதலில் அம்மாவோட கோபத்துக்கு ஆளானது ராவணன்தான். அம்மா வின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் அத்தனை அமைச்சர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது ராவணனின் பழக்கம். அதில் செங்கோட்டையன் மட்டும் கட்டுப்படாமல் இருந்தார். அதன் விளைவுதான் வேளாண்மைத் துறை அமைச்சராகவும் அதுக்குப் பிறகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் டம்மி யாக்கப்பட்டார்.
அதனால் ராவணன் மீது பெரும் ஆதங்கத்தில் இருந்த செங்கோட்டையனுக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அம்மாவிடம் மனம் விட்டுப் பேசும் ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைத்ததாம். அப்போது, ராவணன் சொத்து விவகாரங்களும் கட்சியில் அவரது பிடியும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டதாம். அதன் விளைவாகத்தான் ராவணன் வெளிநாடு போயிருந்த நேரத்தில், அறிவிக்கப்படாத ரெய்டு அவர் வீட்டில் நடந்தி ருக்கிறது. (இதை அப்போதே கழுகார் பகுதியில் சொல்லி இருந்தோம்!)
கிடைத்த தகவல்களைக் கண்டு அதிர்ந்துபோன அம்மா, ராவணனையும் சசியையும் அழைத்து இது பற்றி விசாரணை நடத்தினார். சசிகலா தலை குனிந்து அமைதியாக நிற்க, ராவணன் ஏதோ விளக்கம் கொடுக்க முன் வந்தாராம். உடனே டென்ஷனான அம்மா, ' போன ஆட்சியில மணல் எடுத்தவனே இப்பவும் பிசினஸ் பண்றான். கேட்டா, 'ராவணன் சாருக்கு தெரியும்னு’னு பதில் வருது. என்ன நடக்குது?’னு சீறியிருக்காங்க. அப்பவே ராவணனுக்கு நிலைமை புரிஞ்சுடுச்சாம். இப்போ நடந்திருக்கிறது நல்ல விஷயம். ஆனா, அவர் ரீ-என்ட்ரி ஆகாம இருந்தாத்தான் கட்சிக்காரங்க சந்தோஷம் நிலைக்கும்'' என்று சொன்னார்கள்.
உஷார் ராமச்சந்திரன்...

கார்டனுக்குள் அவர் கால் பதித்ததும், கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் தரும் மனுவைப் பரிசீலிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா கொடநாடு தங்குவதாக இருந்தால், ஒரு வாரத்துக்கு முன்னரே போய் தயார் செய்வது இவர் பணி.
சென்னை மயிலாப்பூர் ராஜரா ஜேஸ்வரி திருமண மண்டபத்துக்கு எதிரே இருக்கும் ஜே.பி. அவென்யூவில்தான் ராமசந்திரனுக்கு வீடு. அந்த அப்பார்ட்மெண்டில் தனக்காக தனியாக ஒரு லிப்ஃட் அமைத்திருந்தார் ராமச்சந்திரன். அந்த லிப்டில் யார் ஏறினாலும் அது ராமச்சந்திரன் வீடு இருக்கும் ஃபுளோரில்தான் நிற்கும். வெளிநாடுகளில் இருப்பது போலவே, லிப்ஃட்டைப் பயன்படுத்த ஆக்சஸ் கார்டு அமல்படுத்தப்பட்டது. அந்த அளவுக்கு டெக்னிக்கல் திறமையும், உஷார்தனமும் நிரம்பியவர்.
கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு போன்றவற்றில் ராமச்சந்திரன் கை ஓங்கியிருந்தது. பேச்சுவார்த்தை நடந்து கொண் டிருக்கும் போதே தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியல் வெளியான விவகாரத்துக்குப் பின்னாலும் இவருடைய கைங்கரியம் இருந்ததாம். எம்.நடராஜனை எப்படி 'எம்.என்’ என்று அழைக்கிறார்களோ அது போல ராமச்சந்திரனை அ.தி.மு.க-வினர் 'எம்.ஆர்’ என்றுதான் விளிக்கிறார்கள்.
'கார்டன் மாப்பிள்ளை’ ராஜராஜன்

திருமணம் முடித்த கையோடு சிங்கப்பூர் சென்று தொழில் செய்து வந்த ராஜராஜன், கடந்த ஒரு வருடம் முன்புதான் சென்னைக்குத் திரும்பினார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓடியாடி வேலை செய்த நேரத்தில் கட்சியினருக்கு அறிமுகம். திருச்சி மேற்கு இடைத்தேர்தல் நடந்தபோது, தலைக்கு 15 லட்சம் வீதம் மந்திரிகளிடம் வசூல் பண்ணி நிலைமையை சமாளித்து, வெற்றிக் கொடி கட்டியதால் போயஸ் கார்டனில் பவர்ஃபுல் மனிதராகிப் போனார். சமீபத்தில், பெங்களூரு கோர்ட்டுக்கு சசிகலா, இளவரசி சென்ற நேரத்தில் இவர்தான் ஒத்தாசைக்குச் சென்றார். தி.நகர் பத்மநாபா தெருவில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார்.
தடாலடி மகாதேவன்

தஞ்சாவூரில் விநோதகன் மருத்துவ மனை, டி.வி.எம். பேருந்துகள்.. ஆகியவை இவருக்கு சொந்தமான உள்ளன. அதிக ஆன்மீக ஈடுபாடு உண்டு. நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருக்கிறார். யாருமே இவரை எளிதில் அணுக முடியாது. எப்போதாவது சென்னைக்குச் சென்று சசிகலாவைச் சந்திப்பது உண்டு. திவாகரனுக்கு அடுத்து தஞ்சாவூரில் செல்வாக்குடன் இருப்பவர். இவருக்கும் தமிழக நகர்புறம் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கத்துக்கும் ஆகாது. அதனால் அவருக்கு ஏதாவது குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார் என்கிறார்கள். தஞ்சாவூர் நகராட்சித் தேர்தலில் தன் ஆதரவாளர்கள் சிலருக்குக் கவுன்சிலர் சீட் வாங்கிகொடுத்ததோடு, நிறுத்திக் கொண்டார். இப்போதைய அ.தி.மு.க ஆட்சியில், அடக்கியே வாசித்து வருகிறார். 'கட்சிப் பொறுப்பு களுக்கோ, டெண்டர் விஷயமாகவோ இங்கே யாரும் வரவேண்டாம்’ எனச் சொல்லி இருந்தாராம். தன்னுடைய தம்பி தங்கமணியையும் அடக்கி வாசிக்கச் சொல்லி இருக்கிறார். அதனால்தான், முதலில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பட்டிய லில் மகாதேவன் பெயர் இல்லை. என்ன நடந்ததோ அடுத்த சில மணி நேரத்தில் மகாதேவன், தங்கமணி பெயரும் பட்டியலில் இடம் பெற்றது.

அ.தி.மு.க-வின் அறிவிக்கப்படாத மத்திய மண்டலப் பொறுப்பாளராக இயங்கிக் கொண்டிருந்தவர் கலிய பெருமாள். இவர், சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தி. திருச்சி கே.கே.நகர் பகுதியில் வசிக்கும் இவர், ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர். திருச்சியில் முக்கியப் பதவிகளில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பலரும் இவரது சிபாரின் பேரில் உச்சத்துக்கு வந்தவர்கள்தானாம்.
கலியபெருமாள் பொது இடங்களில் அதிகம் தென்படுவது இல்லை. அதேபோலவே தனது வீட்டுக்கு கட்சிக்கொடி தாங்கிய வாகனங்கள், கரை வேட்டி, துண்டு அணிந்த நபர்கள் வருவதையும் விரும்ப மாட்டார். நம்பிக்கையான போலீஸ் அதிகாரி மூலம் கட்சி ஆட்களை உளவு பார்ப்பது, அவர்களுக்கு வருமானம் வரும் வழிகளைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றார் போல் பணிகளை கச்சிதமாகச் செய்து வந்தாராம்.

சசிகலாவுடன் நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் கடைசி இடம் பிடித்தவர் தங்கமணி. சசிகலாவின் அண்ணன் விநோதகனின் இளைய மகன். மகாதேவனின் தம்பி. தஞ்சாவூரில் தன் அம்மாவுடன் வசித்து வரும் தங்கமணி, இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கட்சி ஆட்களுடன் உலா போவது, நேரடியாக கட்சி விவகாரத்தில் தலையிடுவது ஆகியவை இவருக்குப் பிடிப்பது இல்லை. தஞ்சாவூர் பகுதிகளில் தன் முன்னால் கொண்டுவரப்படும் பஞ்சாயத்துகளை மட்டும் செய்து, தன் தடாலடி அதிகாரத்தைக் காட்டிக்கொள்வார். இந்த முறை அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகும், 'எங்கே தங்கமணி?’ என கட்சிக்காரர்களே கேட்கும் அளவுக்கு பதுங்கித்தான் இருந்தார். சசிகலா புயலில் இவரும் சிக்கி, வெளியே தள்ளப்பட்டு விட்டார்.

'பாதுகாப்பு’ பழனிவேலு
நடராஜனின் சகோதரர்தான் பழனிவேலு. சசிகலா உட்பட 14 பேர் அதிரடியாக நீக்கப்பட்ட 4வது நாள், பழனிவேலுவையும் கட்டம் கட்டினார் ஜெயலலிதா. போலீஸ் துறையில் வேலை பார்த்த பழனிவேலுவை, 1991-ல் ஜெயலலிதா முதல்வரானதும், அவருடைய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துக் கொண்டார். இதன் பிறகே இவர் மீது வெளிச்சம் படர்ந்தது. அதன்பிறகு இவருடைய நடவடிக்கை வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும், உள்ளுக்குள்ளே காய்களை நகர்த்தி வந்தாராம். எம்.என்., எம்.ஆர். போல இவரை 'எம்.பி.’ என்றே அழைக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
மர்ம மோகன்!
சசிகலா குடும்பத்திற்கு வேண்டப்பட்டவர்களால் நடத்தப்படும் மிடாஸ் நிறுவனத்துக்கும், 'மிடாஸ்’ மோகனுக்கும் என்ன தொடர்பு என்று ஆதாரங்களைத் தேடினால் கண்டிப்பாக கிடைக்காது. ஆனால், அடைமொழியில் மட்டும் மிடாஸ் இருக்கும். எந்த ஒரு விவகாரமானாலும், திரைமறைவில்தான் இயங்குவார். சசிகலாவின் உறவு முறைக்குள் வராதவர். மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்றாலும் வேறு ஒரு சமுதாயத்தவர். இவரை, 'அடையார்’ மோகன் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் அழைக்கிறார்கள்.
தென் சென்னையில் சுமார் 45 பார்கள் நடப்பது இவர் கண் அசைவில்தான். எந்த விவகாரமானலும், மிடாஸ் மோகனின் வலது, இடது கரங்களாக விளங் கும் இருவர்தான் தலையிடுவார்கள். வலதுகரம் - வடபழனி பஸ் நிலையம் எதிரில் ஒரு ஆபீஸ் நடத்தி வருகிறார். டவுன் பஸ்ஸில் போய்க்கொண்டு இருந்தவர் இன்று விமானத்தில் பறக்கிறார். ஒரு முறை சசிகலா தன்னிடம் இருந்த ஃபோர்டு ஐகான் காரை இவருக்கு விற்றார். அ.தி.மு.க. பிரமுர்களிடம் அந்தக் காரை காட்டி, 'சின்னம்மாவே எனக்குக் கொடுத்தார்' என்று பிளேட்டை மாற்றி தனது இமேஜை உயர்த்திக்கொண்டவர். அரசு வக்கீல் நியமனம், போலீஸ் டிரான்ஸ்ஃபர், கட்சிப் பதவி, உள்ளாட்சிப் பதவி என்று ஒவ்வொன்றுக்கும் இவரது தலையீடு உண்டாம்.
'மிடாஸ்’ மோகனின் இடதுகரம் - முன்னாள் அமைச்சரின் பி.ஏ. ஒருவராம். அரசாங்க ஃபைல்களை நுணுக்கமாக டீல் பண்ணும் விஷயத்தில் படு கில்லாடி. தற்போதைய மந்திரி களில் மூன்று பேர்களுக்கு அறிவிக்கப்படாத பி.ஏ-வாக இவர் செயல்படுகிறார். கடந்த சில மாதங்களாகவே 'மிடாஸ்’ மோகன் மற்றும் அவரது வலது, இடதுகளின் செயல்பாடுகள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகின்றனவாம்.
கில்லாடி குலோத்துங்கன்
'மிடாஸ்’ நிறுவனத்தின் உயர் அதிகாரி. எம். நடராஜனின் சகோதரி மகன் இவர். தற்போது தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்காக சுமார் 10 மதுபான தொழிற்சாலைகளிடம் இருந்து சரக்குகளை வாங்குகின்றனர். இதில் நம்பர் 1 மிடாஸ் நிறுவனம்தான். இப்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து டாஸ்மாக் வாங்கிய கொள்முதல் வழக்கத்தைவிட கன்னாபின்னாவென்று அதிகமாம். இதனால் மற்ற நிறுவனங்கள் அடைந்த வயிற்றெரிச்சல் கொஞ் சநஞ்சமல்ல என்கிறார்கள். தன்னை மறைத்துக் கொண்டு வேலை செய்வதில் பலே கில்லாடியாம்.