WD |
யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது உயிர்த்தோழியான சசிகலா, அவரது கணவர் நடராஜன் உள்பட 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அண்மையில் ஜெயலலிதா நீக்கியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 19ஆம் தேதி சசிகலாவுக்கு எதிரான தனது அதிரடி நடவடிக்கையை இன்று வரை தொடர்ந்து வருகிறார் ஜெயலலிதா. சசிகலாவின் உறவினர் கலியபெருமாள், பழனிவேல் ஆகியோரை இன்று கட்சியில் இருந்து நீக்கியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, அவர்களுடன் கட்சி உறுப்பினர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பெங்களூருவில் நடந்து வரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைப்பது உறுதியானால் முதலமைச்சர் பதவியை தனது உறவினர் அல்லது தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்துவிடலாம் என்ற நினைப்பில் காய் நகர்த்தி வந்த சசிகலா, அவரது கணவர் நடராஜன் ஆகியோரின் தந்திரம் ஜெயலலிதாவுக்கு தெரியவரவே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
கட்சியில் மட்டுமின்றி ஆட்சி அதிகாரத்திலும் பகிரங்கமாக தலையிட்ட சசிகலா, தற்போது போயஸ் தோட்டத்தில் இருந்தே விரட்டப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் பட்டியலை தற்போது தயாரித்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்களை முதலில் களையெடுத்து வருகிறார்.
முதல் கட்டமாக சசிகலா உள்பட 14 பேரை கட்சியில் இருந்து நீக்கிய ஜெயலலிதா, சசிகலாவின் அண்ணி இளவரசி, அவரது சம்பந்தி கலியபெருமாள், டிடிவி தினகரனின் மனைவி அனுராதா ஆகியோர் மட்டும் நீக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது கலியபெருமாளையும் அ.தி.மு.க.வில் இருந்து ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக