ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 5 டிசம்பர், 2011

பரமக்குடி விவகாரத்தை மத்திய புலனாய்வுத் துறை தான் விசாரிக்க வேண்டும்



பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பரமக்குடி துப்பாக்கிச்சூடு எதிர்ப்பு குழு விசாரணை அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், பேராசிரியர் தீரன், சமத்துவப்படை தலைவர் சிவகாமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
பரமக்குடி துப்பாக்கிச்சூடு எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் பொது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் நிகழ்வு சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விசாரணைக்குழுவின் நடுவர்கள் வே.வசந்திதேவி, ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கருப்பன், ஆர்.ஜெ.ராஜ்குமார், வி.கிருஷ்ணா ஆனந்த், சேவியர் செல்வ சுரேஷ் ஆகியோர் குழுவின் அறிக்கையை வெளியிட்டனர். அதனை பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
பரமக்குடி துப்பாக்கிச்சூடு எதிர்ப்பு குழுவினர் சேகரித்த விசாரணை குழுவின் அறிக்கை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்க இருப்பதாக, இந்த குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மொத்தம் 500 பக்கங்கள் கொண்ட பொது விசாரணை அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன:
* பரமக்குடியில் மக்கள் மீது தடியடி பிரயோகம் மற்றும் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கு முரணானதாகவே உள்ளது. இவை பல கேள்விகளை எழுப்புகிறது.
* அமர்ந்து கொண்டிருந்த கூட்டத்தினர் மீது திடீரென்று தடியடி நடத்தியதும், கலைந்து ஓடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்துவதும் கண்டனத்திற்குரியது.
* ஜான்பாண்டியனை கைது செய்தது மற்றும் அவரை குரு பூஜையில் கலந்துகொள்ள முடியாமல் தடை செய்தது தேவையற்றதும், கலவரத்தை தூண்டியதுமாகும். குரு பூஜைக்கு சென்ற பட்டியலிடப்பட்ட சாதியினர் அனைவரும் அமைதியான முறையில் ஆயுதங்கள் எதுவுமின்றி சென்றனர். அவர்களுக்கு எதிராக பலப்பிரயோகம் நீதிக்கு புறம்பானது. ஆகவே துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்த முடியாது.
* பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய மருத்துவ வசதி, உதவித்தொகை இழப்பீடு மற்றும் மறு சீரமைப்பு முயற்சிகள் செய்யப்படவில்லை என்று நடுவர் குழு கருதுகிறது. ஆகவே சிறப்பு மருத்துவ முகாம்கள் அனைத்து மருத்துவ வசதிகளுடன் பரமக்குடியில் ஒரு மாதத்திற்கு முகாமிட வேண்டும். தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் காயமுற்றவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
* பரமக்குடி, சிந்தாமணி மற்றும் இளையான்குடி துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் தலையீடற்ற, சுதந்திரமான விசாரணையை நடத்த இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகளை விசாரிக்க தனிச்சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். இதில் நீதிபதியாக இருப்பவர்கள் இதற்கு முன்பு தலித்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக அறியப்பட்டு நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த பொது விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக