பரமக்குடி துப்பாக்கிச் சூடு - வாக்குமூலங்கள்
துப்பாக்கிச் சூட்டில் பலியான தீர்ப்புக்கனியின் (வயது 22, கீழக்கொடுமலூர்) தகப்பனார் வேலு அளித்த வாக்குமூலம் :
"எனது மகன், தீர்ப்புக்கனி, வயது 22, டி.எம்.ஈ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தான். துப்பாக்கிச் சூடு நடந்த அன்று, நானும் இம்மானுவேல் சேகரன் குருபூசைக்குப் போயிருந்தேன். எனக்கு முன்பே தீர்ப்புக்கனி வேன் மூலம் அங்கு சென்றுவிட்டான். திடீரென கலவரம் வந்தவுடன், எல்லோரும் ஓடி ஒளிந்தார்கள். நானும் ஒளிந்தேன். 4.30 மணியிருக்கும். பரமக்குடி டவுனை ஒட்டியுள்ள ரயில்வே கேட் அருகே, நான் ஒரு கடையில் ஒளிந்திருந்தேன். அப்போது, போலிஸ்காரர்கள், எனது மகன் தீர்ப்புக்கனியையும், செந்தில் என்ற இன்னொரு பையனையும் சரமாரியாக அடித்து இழுத்துச் சென்றனர். இதை நான் பார்த்தேன். அதன் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து நான் வீடு வந்து சேர்ந்தேன். இரவு 10 மணிக்கு மேல், எனது மகன் தீர்ப்புக்கனி, இளையாங்குடி ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் சொன்னார்கள். நானும் எனது இன்னொரு மகன் திருநாவுக்கரசும் இளையாங்குடி ஆஸ்பத்திரிக்குப் போனோம். அங்கிருந்து தீர்ப்புகனியை மதுரைக்கு கொண்டு சென்று விட்டதாகச் சொன்னார்கள். அங்கிருந்து மதுரை வந்தோம். மதுரை ஆஸ்பத்திரியில், எனது மகன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, கை கால் எலும்புகள் நொறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தான். பார்த்து கதறி அழுதேன். சம்பவம் நடந்த அன்று, 5 மணிக்குப் பிறகுதான் போலிஸ் துப்பாக்கியால் சுட்டு, எனது மகனை கொன்றிருக்க வேண்டும்.''
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பன்னீர் என்பவரின் மகள் ரெபேக்காள் (வீரம்பல்) அளித்த வாக்குமூலம் :
"பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் குருபூசைக்கு எனது தகப்பனார் சென்றிருந்தார். நான் பரமக்குடி பொன்னையாபுரத்தில் திருமணம் செய்து, அங்கேயே எனது கணவருடன் வாழ்ந்து வருகிறேன். துப்பாக்கிச் சூடு நடந்த அன்று மதியம் 12 மணிக்கு, அப்பா என்னோடு பேசினார். பரமக்குடியில் அஞ்சு முக்கு ரோட்டில் போலிஸ் துப்பாக்கியால் சுட்டு, நினைவிடத்திற்கு செல்லவிடாமல் விரட்டியடிக்கின்றார்கள் என்றும், என்னை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் சொன்னார். அதற்குப் பிறகு, மதியம் 2 மணிக்கு நான் அப்பாவை மதிய உணவுக்கு அழைக்க வேண்டும் என்று நினைத்து, அவருக்கு போன் செய்தேன். அப்போது அவரது போன் "ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. மறுபடியும் மறுபடியும் அழைத்துப் பார்த்தேன். "லைன்' கிடைக்கவில்லை. மாலை 7 மணிக்கு, என் அப்பா செல்போனிலிருந்து ஒருவர் என்னிடம் பேசினார். என்னைப் பற்றி விவரம் கேட்டார். நான் அங்குதான் திருமணம் செய்துள்ளதாகக் கூறினேன். அப்போது ராமநாதபுரம் மருத்துவமனையில், என் அப்பாவை வைத்துள்ளதாகச் சொல்லிவிட்டு, மீண்டும் "ஸ்விட்ச் ஆப்' செய்துவிட்டார். பேசியது யார் என்றுகூட எங்களுக்கு அவர் சொல்லவில்லை. ராமநாதபுரம் மருத்துவமனையில் போஸ்ட் மார்டம் முடித்து, எனது தகப்பனார் உடல் இருந்தது. நெற்றியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பின்புறத் தலை வெடித்துச் சிதறிக் கிடந்தது. உடலை வாங்கி வந்து புதைத்தோம். "போலிஸ் ரெய்ட்' என்று சொல்லி ஒரே பதற்றமாக இருக்கிறது. மக்கள் எல்லோரும் காடுகரைகளில் ஓடிப் பதுங்குகிறார்கள்.''
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஜெயபாலின் (வயது 20, மஞ்சூர்) தந்தை பாண்டி அளித்த வாக்குமூலம் :
"எனது மகன் ஜெயபாலைத்தான், போலிஸ் முதலில் சுட்டுக் கொன்றுள்ளது. எந்த வம்பு தும்புக்கும் அவன் போனதில்லை. சுட்டுக் கொன்று, கால்களை இருவர் பிடித்துக் கொண்டு, இடுப்பில் கட்டையை கொடுத்து இரண்டு போலிஸ்காரர்கள் தூக்கி வருவதை டி.வி.யில் தான் முதலில் பார்த்தேன். அவன் போட்டிருந்த சிவப்புச் சட்டையை பார்த்தவுடன் அது எனது மகன்தான் என்பதை உறுதி செய்து கொண்டேன். ராமநாதபுரத்திற்கு 10 ஆம் தேதி காலையில் சென்று, அரசு மருத்துவமனையில் இருந்த எனது மகன் உடலைப் பார்த்தேன். வலது பக்க மார்பில் துப்பாக்கிக் குண்டு துளைத்து, இடது பக்கமாக வெளிவந்தது. இடது பக்க முதுகிலும் துப்பாக்கிச் சூடு இருந்தது. குண்டு பாய்ந்த இடத்தை நான் தொட்டுப் பார்த்தபோது, சதை பிய்ந்து வெளியே வந்தது. வலது தொடையில், துப்பாக்கியின் பின் புற கட்டையால் அடித்து, சிதைத்திருந்தார்கள். எனது மகன் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டை கழட்டிப் பார்த்தேன். தொடை வெள்ளரிப் பழம் பிளந்தது போல் மூன்று பாளமாகப் பிளந்து கிடந்தது. வெள்ளைக் கறி வெளியில் தெரியும்படி உடலைச் சிதைத்திருந்தார்கள். எனது மகனை அடித்துக் கொன்று, பின்னர் துப்பாக்கியால் சுட்டார்களா அல்லது சுட்டுக் கொன்ற பின்னர், உடலை அடித்துச் சிதைத்தார்களா என்று தெரியவில்லை. உடலை வாங்கிக் கொண்டு வந்து புதைத்துள்ளோம். இன்னமும் போலிஸ் விரட்டுகிறது. நான் பையனைப் பறிகொடுத்துவிட்டு, போலிசுக்குப் பயந்து ஓடுகிறேன். நிம்மதியாக வாழ முடியவில்லை.''
காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட வெள்ளைச்சாமி (வயது 54, காக்கனேந்தல்) என்பவரின் அண்ணன் மனைவி மங்களேஸ்வரி அளித்த வாக்குமூலம் :
"அவர் (வெள்ளைச்சாமி) குருபூசைக்குச் செல்வதற்காக பரமக்குடிக்குப் போகவில்லை. எங்கள் உறவினர் திருமணத்திற்காக மதுரைக்குப் போகத்தான் பரமக்குடி வந்தார். துப்பாக்கிச் சூடு நடந்த அன்று மாலை 4.30 மணி இருக்கும். பரமக்குடி வந்து எனக்கு போன் பண்ணினார். பரமக்குடி வந்திருப்பதாகவும், திருமணத்திற்கு வரும்படியும் என்னிடம் சொன்னார். நான், சமையல் வேலைகளை முடித்துவிட்டு வருகிறேன்; அதுவரை பரமக்குடியிலேயே இருக்கும்படி சொன்னேன். மீண்டும், வெள்ளைச்சாமி போன் பண்ணி, பரமக்குடியில் இரண்டு பேரை போலிஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டனர் என்று சொன்னார். நான் பதில் சொல்லுவதற்குள் போன் "கட்' ஆகிவிட்டது. அதற்குப் பிறகு வெள்ளைச்சாமியிடமிருந்து போன் வரவில்லை. நானும் அவரது போனுக்கு போன் பண்ணினேன். "ஸ்விட்ச் ஆப்' ஆகிவிட்டது. பிறகு என்ன நடந்ததோ என்பதை அறிந்து கொள்ள, நான் பரமக்குடி அஞ்சு முக்கு ரோட்டுப் பக்கம் போனேன். அப்போது 7 மணி இருக்கும். போலிஸ்காரர் ஒருவர், சிமெண்ட் பைப்பை எடுத்து வைத்துக் கொண்டு ரோட்டில் நின்று கொண்டிருந்த காரை, அடித்து நொறுக்குவதைப் பார்த்தேன். இன்னும் சில போலிசார், அந்த வழியாக வந்த பையனை ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து விரட்டினர். அந்த பையன் அவர்களிடம் சிக்கிக் கொண்டான்.
"அப்போது, துப்பாக்கிக் குண்டு நெற்றியில் சொருகியிருந்த ஒருவர், பதற்றமாக அந்தப் பக்கம் ஓடிவந்தார். நான் ரயில்வே கேட் தாண்டி நின்று கொண்டிருந்தேன். என்னிடம் வந்து, அவர் நெற்றியில் சொருகி நின்று கொண்டிருந்த குண்டை எடுத்துவிடும்படி சொன்னார். நான் உருவி எடுத்தேன். அது ரப்பர் குண்டு போலிருந்தது. பின்னர் அவர் ஓடிவிட்டார். நானும் வீட்டிற்கு வந்துவிட்டேன். அப்போதும், அஞ்சு முக்கு ரோட்டுப் பகுதியில் போலிசார் துப்பாக்கியை ஏந்தியபடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். ரயில்வே கேட் அருகே உள்ள மொட்டை மாடிகளில் ஏறி, போலிசார் துப்பாக்கியால் சுடுவதைப் பார்த்தேன். இரவு 12 மணிக்கு, இளையாங்குடி அரசு பொது மருத்துவமனையில் வெள்ளைச்சாமி இருப்பதாக தகவல் வந்தது. பிறகு மதுரையில் இருப்பதாகச் சொன்னார்கள். பிறகுதான் சக்திவேல் போய் மதுரையில் பார்த்தான்.''
வெள்ளைச்சாமியின் மகன் சக்திவேல் (30) அளித்த வாக்குமூலம் :
"நாங்கள் 12 ஆம் தேதி காலையில், மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் எனது தகப்பனாரின் இறந்த உடலைப் பார்த்தேன். பின்னந்தலையில் பலத்த காயம். தலைக்கு கீழே ரத்தம் திரண்டு கிடந்தது. இடது கை நசுக்கி, ஒடிக்கப்பட்டுக் கிடந்தது. உடம்பு முழுவதும் தடியால் அடிக்கப்பட்ட தடம் இருந்தது. உடம்பை நசுக்கினால் எப்படி இருக்குமோ அப்படி கிடந்தது. உடம்பில் துணியில்லாமல் எங்களுக்கு காட்டினார்கள். பல பேர் சேர்ந்து அடித்துக் கொன்றிருக்கிறார்கள். பிறகு, உடலை வாங்கிக் கொண்டு வந்து புதைத்தோம்.''
முத்துக்குமாரின் மாமியார் லட்சுமி அளித்த வாக்குமூலம் :
"எனது பெயர் லட்சுமி. எனது மகள் பாண்டீஸ்வரியை முத்துக்குமார் திருமணம் செய்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்த அன்று, இரவு 10 மணிக்கு, முத்துக்குமார் உடல் இளையாங்குடி மருத்துவமனையில் உள்ளதாகவும், உடனே வந்து உடலை வாங்கிக் கொள்ளும்படியும் போனில் செõன்னார்கள். உடனே அங்கு ஒடினோம். அங்கு போய்ப் பார்த்தால் மதுரைக்கு கொண்டு போய்விட்டதாகச் சொன்னார்கள். இரவோடு இரவாக மதுரைக்கு வந்தோம். மறுநாள் காலையில் தான் உடலைப் பார்த்தோம். வலது விலாவில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, இடதுபுறம் வழியாக வெளியே வந்துள்ளது. கை கால்கள் ரப்பரைப் போல் கிடந்தன. எலும்புகளை அடித்து நொறுக்கியிருந்தார்கள். வாய் வழியே ரத்தம் வெளியேறிக் கிடந்தது. மதுரையிலிருந்து உடலை வாங்கிக் கொண்டு வந்து புதைத்தோம்.''
மதுரை மருத்துவமனையில், சிசிக்சை பெற்று வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், பலர் வாக்குமூலங்கள் அளித்தனர்.
வி. பாண்டி, த/பெ. வீரபத்திரன் (வயது 34) அளித்த வாக்குமூலம் :
"நான் மரக்கடையில் வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. சம்பவம் நடந்த அன்று, நான் குருபூசைக்கு பரமக்குடிக்குச் சென்றேன். எனது சொந்த ஊர் பரமக்குடியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள மருந்தூர். 11.9.2011 அன்று காலை 11 மணிக்கு, அஞ்சு முக்கு ரோட்டில் சிலர் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். ஜான் பாண்டியனை விடுதலை செய்யச் சொல்லி கோசம் எழுப்பினர். அப்போது அந்த இடத்தில் பத்து நூறு பேர் இருந்தார்கள். அப்போது 2000 போலிசுக்கு மேல் அங்கு இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் போலிஸ். 12 மணிக்கெல்லாம் போலிசார் திடீரென தடியடி நடத்தினர். அதனால் எல்லோரும் கலைந்து ஓடினார்கள். நானும், என்னோடு சேர்ந்து கொஞ்சம் பேரும் ஒரு வீட்டிற்குள் ஓடி ஒளிந்து கொண்டோம்.
ரோட்டில் கல் வீசும் சத்தமும், துப்பாக்கியால் சுடும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. இரண்டு மணி வரை நாங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அதன் பிறகு ஒருவர் பின் ஒருவராக, மெல்ல வீட்டை விட்டு வெளியேறினர். எனக்கு பயமாக இருந்ததால் நான் வெளியே வரவில்லை. கடைசியில் எல்லோரும் போய்விட்டனர். நான் ஒருவன் மட்டுமே இருந்ததால், மாலை 4.30 மணிக்கு வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்து வீட்டைவிட்டு வெளியே வந்தேன். வந்தவுடன் போலிசார் என்னைப் பார்த்து விட்டனர். விரட்டி வந்து, என்னைச் சுற்றி நின்று கொண்டு 15 போலிசார் என் மீது தடியடி நடத்தினர். தலையில் அடித்ததால் ரத்தம் ஒழுகி மயக்க நிலையில் கீழே விழுந்தேன். ஆனாலும் அவர்கள் விடவில்லை. சாதிப் பெயரைச் சொல்லித் திட்டிக் கொண்டே அடித்து நொறுக்கினர்.
துப்பாக்கியின் கைப்பிடிக் கட்டையைக் கொண்டு அடித்து, இடது கால் எலும்பை அடித்து நொறுக்கினார்கள். நான் மயக்கமாகி கீழே விழுந்த பிறகும், சிலர் அடித்துக் கொண்டே இருக்க, இரு போலிசார் எனது கால்களைப் பிடித்துத் தரையில் கிடந்த என்னை தரதரவென இழுத்துச் சென்றனர். அதனால் உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டது. வலது கை விரல்களின் எலும்புகள் நொறுங்கி விட்டன. இழுத்துக் கொண்டு வந்து அஞ்சுமுக்கு சாலையில் போட்டனர். ஏற்கனவே எனக்கு முன்னர் பலர், அங்கே கிடந்தனர். 4.30 மணி இருக்கும் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றினர். ஏற முடியாதவர்களை அடித்தனர். சிலரை தூக்கி வீசினர். பின்னர் 5 மணிக்கு பரமக்குடி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அப்புறம், மதுரை அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். இங்கு வந்து ஒரு வாரம் ஆகிறது. எலும்புகள் நொறுங்கி விட்டன என்று மருத்துவர் சொன்னார். போலிஸ் வாகனம் எதையும் நான் தீ வைக்கவில்லை. கற்கள் வீசவில்லை. கலவரம் என்று தெரிந்ததும், வீட்டிற்குள்ளேயே பதுங்கிக் கிடந்த என்னை அடித்து நொறுக்கியது ஏன்?''
தனிக்கொடி, த/பெ. முத்துக்கருப்பன், எஸ். காவூர் (வயது 35) போர்வெல் மிஷின் உரிமையாளர் அளித்த வாக்குமூலம் :
"பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்த அன்று, தியாகி இம்மானுவேல் சேகரனின் குருபூசை நடந்தது. நான் பரமக்குடி வசந்தபுரத்தில் ஆழ்துளை கிணறுக்கு பைப் பதிக்க வேண்டியிருந்ததால், அங்கு போயிருந்தேன். வேலையை முடித்துவிட்டு திரும்பி வந்தபோது, அஞ்சு முக்கு சாலையில் போலிசார் தடியடி நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது மணி 12 இருக்கும். என்னைப் பார்த்ததும் 15 போலிசார் சுற்றி நின்று கொண்டு சரமாரியாக அடித்தனர். முதல் அடியே தலையில்தான் விழுந்தது. மண்டை உடைந்து, ஏராளமான ரத்தம் வெளியேறியது. ஆனாலும் தலையிலேயே அடித்தார்கள். நான் அணிந்திருந்த வெள்ளைச் சட்டை, சிவப்புச் சட்டைபோல் ஆகியது. ரத்தம் ஏராளமாக வெளியேறியதால், நான் அரை மயக்கத்திற்குப் போய்விட்டேன்.
கீழே விழுந்து கிடந்த என்னை இடது காலைப் பிடித்து, தரையில் தேய்த்தபடி தரதரவென இழுத்துச் சென்றனர். அஞ்சு முனைச் சந்திப்பில் ஏற்கனவே பத்து, இருபது பேர் அடிபட்டு குற்றுயிராகக் கிடந்தனர். ஒருவர் மேல் ஒருவரை தூக்கி வீசியிருந்தார்கள். என்னையும் அந்த மனிதக் குவியல் மீது போலிசார் தூக்கி வீசினார்கள். மதியம் 2 மணிக்குப் பரமக்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்கள். அங்கேயே இரவு 10.30 மணி வரை வைத்திருந்தார்கள். பலத்த காயங்களுடன் நாங்கள் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்திலேயே கிடந்தோம். 10.30 மணிக்கு வேனில் ஏற்றினார்கள். ராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே புதன் வரை இருந்தேன். வியாழக் கிழமை (15.9.2011) தான் மதுரைக்கு கொண்டு வந்து, அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார்கள். தலையில் இரண்டு இடங்களில் தடியடிபட்டு மண்டை உடைந்து, தையல் போட்டுள்ளனர். வலது கையில் எலும்பு உடைந்துள்ளது.''
சிவா (வயது 19) த/பெ. ரவிச்சந்திரன் (உடைச்சியார் வலசை) அளித்த வாக்குமூலம் :
"நான், தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூசை நாளன்று, வேடிக்கை பார்ப்பதற்காக பரமக்குடி போயிருந்தேன். நான் ரோட்டின் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். 12 மணி வாக்கில், போலிஸ்காரர்கள் திடீரென "லத்தி சார்ஜ்' செய்தார்கள். எல்லோரும் சிதறி ஓடினார்கள். "லத்தி சார்ஜ்' நடப்பதற்கு முன்பு யாரும் கல்லெறியவோ, போலிசை தாக்கவோ இல்லை. "லத்தி சார்ஜ்' நடந்தவுடன் எல்லோரும் சிதறி ஓடினார்கள். நானும் ஓடினேன். நாங்கள் சிதறி ஓடும்போதே போலிஸ் துப்பாக்கியால் சுட்டது. எனது வலது காலின் பின் பகுதியில், முட்டுக்கு மேலே, துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னரும், தப்பித்து ஓடினேன். போலிஸ் பொன்னையாபுரம் வரை விரட்டி வந்தனர். தொலைவில் நின்று பார்த்தபோது, வஜ்ரா வண்டியும், தீயணைப்பு வண்டியும் அஞ்சு முக்கு ரோட்டில் வந்து நின்றது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அது தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. வண்டி தீ பிடிக்கும்போது, ரோட்டில் போலிஸ்காரர்கள் மட்டுமே நின்று கொண்டு, துப்பாக்கியால் நாலாபுறமும் சுட்டுக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கிச் சூடு நடந்தபோது, தலையில் யாரெல்லாம் சிவப்பு பச்சை துண்டு கட்டியிருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் குறிவைத்துச் சுட்டது போலிஸ்.''
ராஜ்குமார், வயது 22, த/பெ. தவமணி (மணிநகர், பரமக்குடி) அளித்த வாக்குமூலம் :
"நான் சென்னையில் "எல் அண்டு டி' கம்பெனியில், சிமெண்ட், மணல் லேபில் வேலை பார்த்து வருகிறேன். போன ஞாயிற்றுக்கிழமையன்று (11.9.2011) காலை, சென்னையிலிருந்து பரமக்குடி வந்து சேர்ந்தேன். நான் வரும்போது நேரம் 12.30 இருக்கும். மக்கள் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். போலிஸ் அவர்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தார்கள். என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை. அஞ்சு முக்கு ரோட்டிலிருந்து பலர் நான் நின்று கொண்டிருந்த பக்கம் ஓடி வந்தார்கள். அவர்களை விரட்டி வந்த போலிசார் என்னைப் பார்த்ததும், என் பக்கம் திரும்பி ஓடிவந்தனர். நான் பயந்து ஓடவில்லை. அருகில் வந்தவுடன் என்ன ஏது என்றுகூட கேட்கவில்லை. சரமாரியாக அடித்தனர்.
ஒரு போலிஸ், துப்பாக்கியின் பின்புறக் கட்டையைக் கொண்டு எனது பின்னந்தலையில் அடித்தான். ரத்தம் கொட்டி, சட்டையெல்லாம் நனைந்தது. என் கையிலிருந்த பையைப் பிடுங்கிக் கொண்டார்கள். அதில் ரூ. 5000 பணமும், ஆடைகளும் இருந்தன. எனது செல்போனைப் பிடுங்கிக் கொண்டார்கள். உங்களுக்கெல்லாம் குருபூசையா என்று சொல்லி, சாதிப் பெயரைச் சொல்லி அடித்தனர். உடம்பெல்லாம் தடியால் அடித்ததில் ரத்தக் காயம் ஏற்பட்டது. வலது கணுக்காலின் மேல் பகுதியில், துப்பாக்கிக் கட்டையைக் கொண்டு அடித்ததில், எலும்பு முறிந்தது. வேண்டாம் என்று சொல்லித் தடுத்ததில், வலது ஆட்காட்டி விரலின் நுனிப்பகுதி உடைந்து தொங்கியது. காலில் எலும்பு முறிந்ததால் என்னால் நடக்க முடியவில்லை. தரையில் தேய்த்துக் கொண்டே இழுத்து வந்தனர். வரும்போதே அடி. பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்தனர். அப்படியே இழுத்துக் கொண்டு வந்து, அஞ்சு முக்கு ரோட்டில் போட்டனர். தரையில் உரசியதால், உடம்பெல்லாம் ஒரே ரத்த காயம்.''
செந்தில்குமார் (வயது 30) த/பெ. நாகு (வெங்காலூர்) அளித்த வாக்குமூலம் :
"சம்பவம் நடந்த அன்று, பரமக்குடிக்கு வேடிக்கை பார்ப்பதற்காகச் சென்றேன். அஞ்சு முக்கு ரோட்டில் நூறுக்கும் குறைவானவர்கள் சாலையில் நின்று கொண்டும், சிலர் அங்குமிங்கும் உட்கார்ந்து கொண்டும் ஜான் பாண்டியனை விடுதலை செய்யச் சொல்லி கோஷம் எழுப்பினர். சிலர் விசிலடித்தனர். அங்கு ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்களைவிட போலிஸ் அதிகமாக இருந்தது. செந்தில்வேலன் எஸ்.பி. எல்லாவற்றையும் படம் எடுக்கச் சொல்லி, ஒருவர் படம் எடுத்துக் கொண்டிருந்தார். 12 மணி இருக்கும். திடீரென "லத்தி சார்ஜ்' செய்தனர் போலிசார். எல்லோரும் சிதறி ஓடினர். என்னை விரட்டி வந்து பிடித்து, சுற்றிலும் நின்று கொண்டு போலிஸ்காரர்கள் கால், கைகளில் அடித்தார்கள். இடது கையில் பலமான அடி விழுந்ததும் எலும்பு நொறுங்கியது. தலையின் பின்புறத்தில் துப்பாக்கிக் கைப்பிடி கட்டையால் இடித்துத் தள்ளினர். அப்போதே போலிசார் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். சிதறி ஓடியவர்கள் மீது கற்களைக் கொண்டு எறிந்தனர். பதிலுக்கு போலிசும் கற்களைக் கொண்டு எறிந்தனர்.
துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவர் உடலை, போலிஸ் ஜீப்பில் ஏற்றியதைப் பார்த்தேன். அந்த ஜீப்பில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இன்னொரு உடலும் இருந்தது. எத்தனை பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அரை மயக்கத்தில் கிடந்தேன். துப்பாக்கிச் சூடு நடத்தும்போது, பல போலிஸ்காரர்கள் கைலி, துண்டு சட்டை போட்டிருந்ததையும், அவர்கள் துப்பாக்கியால் சுடுவதையும் பார்த்தேன். இரவு7 மணிக்குதான் என்னை இளையாங்குடி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். எலும்புகள் பல இடங்களில் நொறுங்கியுள்ளதால், இளையாங்குடியிலிருந்து மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.''
சிங்கத்துரை (வயது 32) த/பெ. முத்து (பரமக்குடி, பர்மா காலனி) அளித்த வாக்குமூலம் :
"தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளன்று பரமக்குடி அஞ்சு முக்கு சந்திப்பில், மாலை 4 மணி இருக்கும், 30 போலிசாரிடம் நான் சிக்கிக் கொண்டேன். காலையிலிருந்தே பதற்றமாகத்தான் இருந்தது. போலிஸ் வேண்டுமென்றே கெடுபிடி செய்தனர். நடு மதியம் தொடங்கிய துப்பாக்கிச் சூடு, நான்கு மணி வரையிலும் கேட்டுக் கொண்டிருந்தது. பரமக்குடி அஞ்சு முக்குச் சாலையில் மட்டுமல்ல பரமக்குடி முழுவதிலும், போலிஸ் கண்ணில் பட்ட எல்லோரையும் அடித்துச் சித்ரவதை செய்தது. சாதிப் பெயரைச் சொல்லிக் கொண்டே அடித்தனர். முதுகு முழுவதும் லத்தியால் அடித்துத் தள்ளினர். துப்பாக்கிக் கட்டையின் பின்புறத்தைக் கொண்டு, முகத்தில் இடித்தனர். வலது கை பெருவிரல் எலும்பு முறிந்துள்ளது. என்னை போலிசார் அடித்தபோது, அந்தக் கூட்டத்தில் பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரும் இருந்தார். வலது கால் கணுக்கால் பகுதி எலும்பு முறிந்து விட்டது. ஒரு போலிஸ், கிட்னி இருக்கும் பகுதியில், துப்பாக்கிக் கட்டையைக் கொண்டு வேகமாக இடித்தார். இதனால் கிட்னி பெரும் பாதிப்படைந்தது. சிறுநீர் ரத்தம் கலந்து வந்தது. 5 மணி இருக்கும், அஞ்சு முக்குச் சாலை சந்திப்பில், என்னைப் போலவே அடிபட்ட பதினைந்து பேர்களை வண்டியில் ஏறும்படி கெட்ட வார்த்தைகளால் பேசியபடி அடித்துக் கொண்டே வேனில் ஏற்றினர். ஏற முடியாதவர்களை, கை கால்களைப் பிடித்துத் தூக்கி, வண்டிக்குள் வீசினார்கள். அங்கிருந்து, இளையாங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். பின்பு சிவகங்கை கொண்டு சென்று, கடைசியில்தான் மதுரை கொண்டு வந்தனர்.''
எம். மாணிக்கம் (வயது 47) த/பெ. மெய்யன் (பரமக்குடி, ராஜுநகர்) அளித்த வாக்குமூலம் :
" நான் தினமும் காலையிலேயே பரமக்குடி டவுனுக்கு செல்வது வழக்கம். சம்பவம் நடந்த அன்று, அஞ்சுமுக்கு ரோட்டில் கும்பல் கூடியிருந்தது. கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் போலிசாருக்கும் வாக்குவாதம் நடந்தது. ஜே.பி.யை விடுதலை செய்யச் சொல்லி கோசம் போட்டனர். நான் ஓரத்தில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே, போலிஸ் தடியால் அடித்து விரட்டினர். கூட்டமாக இருந்தவர்கள் சிதறி ஓடினர். நானும் ஓடினேன். அடுத்த நொடி, எனக்குப் போலிசார் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அப்போது மணி 12.30 இருக்கும். இன்னும் கொஞ்ச தூரம் ஓடி, நின்றேன். எனக்கும் போலிசார் நின்று கொண்டிருந்த இடத்திற்கும் கொஞ்ச தொலைவுதான் இருந்தது. ஓரமாகத்தான் நின்று கொண்டிருந்தேன். திடீரென நான் இருந்த பக்கம் திரும்பி, ஒரு போலிஸ் சுட ஆரம்பித்தார். குண்டு வந்து என் நெற்றியில் பாய்ந்தது. உள்ளே போகவில்லை. நெற்றியிலேயே நின்று விட்டது. அப்படியே மயங்கி விழுந்து விட்டேன். பக்கத்திலிருந்தவர்கள், தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார்கள். பரமக்குடி மருத்துவமனையிலிருந்து உடனே மதுரைக்கு கொண்டு வந்தனர். அன்று இரவே குண்டை வெளியே எடுத்தனர். போலிசார் திட்டம் போட்டுத்தான் செய்தனர். இனிமேல் இம்மானுவேல் சேகரன் குருபூசையை நடத்தவிடக் கூடாது என்பதுதான் அவர்கள் திட்டம்