ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 2 நவம்பர், 2011

வெறுப்புணர்வை கொலைகள் மூலம் நிரூபிக்கின்றனர்

சிம்சன் – ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர். இவர், சி.பி.அய். (எம்.எல்.) கட்சியில் இருந்து இருபதாண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். 1990–களில் சிறுவாச்சி, தேவகோட்டை பகுதிகளில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியவர். சிறுவாச்சி கோயில் நுழைவுப் போராட்டம், இரண்டாவது வைக்கம் போராட்டம் எனப் பெயர் பெற்றது. இப்போராட்டச் சூழலில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில், அய்ந்தரை ஆண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்தவர். இவ்வழக்கின் குற்றவாளிப் பட்டியலில் முதலாமவர்தான் மாடக்கோட்டை சுப்பு. பொதுவுடைமைக் கட்சியில் இருந்து கொண்டு சாதி ஒழிப்பிற்காகத் தொடர்ந்து பணியாற்றி வந்த சிம்சன், சாதியை ஒரு பிரச்சனையாகக் கருதாத அக்கட்சியோடு முரண்பட்டு 2006 இல் வெளியேறினார்.
சிம்சனின் தந்தை அடைக்கலராஜ், இம்மானுவேல் சேகரனின் சம காலத்தவர்; அவரோடு இணைந்து செயல்பட்டவர். ஒவ்வொரு ஆண்டும் தியாகி இம்மானுவேல் குரு பூசையில் பங்கேற்கும் வழக்கம் கொண்ட சிம்சன், இம்முறை நடைபெற்ற காவல் துறை அத்துமீறலின் நேரடி சாட்சியாகக் களத்தில் இருந்தார். தனது நெடிய களப்பணி அனுபவங்களிலிருந்தும், ஆழ்ந்த அரசியல் புரிதலிலிருந்தும் பரமக்குடி படுகொலைகளை முன்வைத்து ‘தலித் முரசு'டன் விவாதிக்கிறார்.
சந்திப்பு : மீனா மயில்
ஒவ்வொரு ஆண்டும் குருபூசையில் பங்கேற்பவர் என்கிற அளவில் உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்.
என்னுடைய சொந்த ஊர் காரைக்குடி. ஆனால், ஆண்டுதோறும் குருபூசையில் கலந்து கொள்ளச் செல்வேன். ஒவ்வொரு ஆண்டும் இன்று நடந்திருப்பதைப் போன்ற படுகொலையோ, கலவரமோ நடக்கும் என்ற அச்சம் எனக்கிருந்தது. எனக்கு மட்டுமல்ல, அங்குள்ள மக்களுக்கும் இருந்தது. குறிப்பாக, 2007 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட தேவர் நூற்றாண்டு விழாவிற்குப் பின்னர் இந்த அச்சம் தீவிரமடைந்தது. காரணம், 2007 இம்மானுவேல் சேகரனின் பொன்விழா ஆண்டு என்பதால், முதுகுளத்தூரை அரசியல் ரீதியான எழுச்சி மய்யம் கொண்ட காலகட்டமாகக் குறிப்பிடலாம். 2005 ஆம் ஆண்டு தேவேந்திர குல சங்கத்தினர் எடுத்த முயற்சியின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இது, அப்பகுதியை சேர்ந்த சாதி இந்துக்களுக்கு கடும் எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கியது. எப்படியேனும் இந்த எழுச்சியை அடக்கிவிட அவர்கள் திட்டமிட்டனர்.
"திட்டமிட்டனர்' என்ற வார்த்தையை குறிப்பிடுவதற்கான காரணங்கள் இருக்கின்றனவா?
நிச்சயமாக! இம்மானுவேல் சேகரனின் பொன்விழா ஆண்டிற்கு பிறகான ஒவ்வொரு ஆண்டும், முதுகுளத்தூர் பகுதியில் குருபூசைக்கு சில நாட்களுக்கோ, சில மாதங்களுக்கோ முன்பு தொடர்ச்சியாக நடைபெற்ற படுகொலைகள்தான் இதற்கான ஆதாரம். 2008 ஆம் ஆண்டு வீரம்பலை சேர்ந்த குட்டி என்ற வின்சென்ட் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு அவருடைய மைத்துனர் சாதி இந்துக்களால் வெட்டி சாய்க்கப்பட்டார். 2010இல் கொந்தகையைச் சேர்ந்த அரிகிருஷ்ணனும், 2011இல் சிறுவன் பழனிக்குமாரும் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளில், சுவற்றில் முத்துராமலிங்கத் தேவரை பற்றி தவறாக எழுதியதாக சிறுவன் பழனிக்குமார் கொலையானது மட்டுமே பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்கு காரணம், பரமக்குடி படுகொலை நிகழ்வு. காவல் துறையின் அத்துமீறலால் துப்பாக்கிச் சூட்டிற்கு இத்தனை பேர் பலியாகாமல் போயிருந்தால், மற்றவற்றை போலவே பழனிக்குமாரின் கொலையும் கவனத்தை ஈர்க்கத் தகுதியற்ற சாதாரண குற்றச் செய்தியாகக் கடந்து போயிருக்கும். குரு பூசையை முன்னிட்டே மறவர்கள் இந்த கொலைகளைச் செய்தனர். கலவரம் நடந்தால், இம்மானுவேல் சேகரன் குரு பூசையை அரசு தடை செய்யலாம்; அல்லது தலித் மக்கள் மேல் "கலவரக்காரர்கள்' என்ற பழி விழலாம் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. தேவருக்கு இணையாக தலித் மக்கள் இம்மானுவேல் சேகரனுக்கு விழா எடுப்பதை அவர்கள் வெறுக்கின்றனர். அந்த வெறுப்புணர்வைதான் கொலைகள் மூலம் அவர்கள் நிரூபிக்கின்றனர்.
தேவர் நூற்றாண்டு விழா நடத்தக் கூடாது என 2007இல் வழக்குப் போட்டீர்கள் அல்லவா? அதன் நோக்கம் என்ன?
தேவர் குருபூசை என்பது வெறுமனே காந்தி ஜெயந்தியை போன்ற தேசத் தலைவரின் கொண்டாட்ட நிகழ்வல்ல. தலித் மக்கள் மீதான வெறுப்புணர்வை பிரகடனப்படுத்துவதற்கும், தங்களின் சாதி ஆதிக்கத்தைப் பறைசாற்றுவதற்குமான தருணமாகவே தேவர் பூசை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குரு பூசை நடத்தப்படும் விதமே இதற்கு சாட்சி. தமிழகம் முழுவதும் உள்ள தேவர் சமூகத் தினர், அந்நாளில் ஓர் ஆதிக்கக் கிளர்ச்சியை பரப்புகிறார்கள். இந்நிலையில் தேவர் நூற்றாண்டு விழா, பெரும் கலவரச் சூழலை உண் டாக்கும் என்பதாலேயே அதற்கு தடை கோரி வழக்குத் தொடர்ந்தேன். ஆனால், தேவர் குரு பூசையை அரசு விழா என்றும், அரசின் கொள்கையை தடை செய்ய முடியாது என்றும் சொல்லி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசின் எந்தக் கொள்கையும் மாற்றக் கூடாதது அல்ல. வீரன் சுந்தரலிங்கம் பெயர் வைத்ததும் உண்டான எதிர்ப்பைத் தொடர்ந்து, தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டுவது நிறுத்தப்பட்டது. இது போல, அரசின் கொள்கைகள் எதுவும் மக்கள் நலனுக்காக மாற்றப்படக் கூடியவையே. குறிப்பாக, அமைதிச் சூழலை குலைக்கும் எனத் தெரிந்தால், அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் கடமை அல்லவா?
பரமக்குடிக்கு அருகே அமைந்திருக்கும் கீழக்கன்னிச்சேரியை சேர்ந்த தலித் மக்களுக்கும், கீழத்தூவலை சேர்ந்த மறவர்களுக்குமிடையே 1957இல் போடப்பட்ட ஒப்பந்தம் ஒன்று இன்றும் நடைமுறையில் உள்ளது. இம்மானுவேல் சேகரனைக் கொலை செய்தவர்கள் கீழத்தூவலைச் சேர்ந்தவர்கள் என்பதால், கீழக்கன்னிச்சேரி மக்களுக்கு அவர்கள் மீது வெறுப்பு அதிகம். இம்மானுவேல் சேகரன் கொலையை தொடர்ந்து நடந்த கலவரத்தின்போது – அரசு சார்பில் இந்த இரண்டு கிராமங்களுக்குமிடையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒருவர் மற்றவரின் சாலையை பயன்படுத்தக் கூடாது. அதாவது, கீழக்கன்னிச்சேரி தலித் மக்கள் பரமக்குடிக்கு வர வேண்டுமானால், கீழத்தூவலைத் தாண்டி 15 கிலோ மீட்டர் பயணம் செய்தாலே போதும். ஆனால், 70 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி செல்லூர் வழியாகவே இன்றும் பரமக்குடி வருகிறார்கள். அதே போல கீழத்தூவல் சாதி இந்துக்கள், கமுதிக்கு வர வேண்டுமானால் கீழக்கன்னிச்சேரி வழியை தவிர்த்து சுற்றித்தான் வர வேண்டும்.
ஏறக்குறைய அய்ம்பது ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தத்தை தேவர் நூற்றாண்டு விழாவின்போது பி.டி. குமார் மீறினார். இதனால் ஆத்திரமுற்ற தலித் மக்கள், பி.டி. குமாருடன் வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அப்போதைய தலைவரான கிருஷ்ணசாமியை ஈட்டியால் குத்தினார்கள். கிருஷ்ணசாமி இல்லாமல் தேவர் சமூகத்தை சேர்ந்த வேறு யார் வந்திருந்தாலும், அன்று பெரும் கலவரமே வெடித்திருக்கும். குறிப்பிட்ட இந்த இரண்டு கிராமங்களுக்கிடையே இருக்கும் பகையை முடிவுக்குக் கொண்டு வர, இதுவரையிலும் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அய்ம்பதாண்டு கால வெறுப்புணர்வு, தலைமுறைகள் கடந்தும் வளர்த்தெடுக்கப்படுகிறது. ஆனால், இந்த வெறுப்புணர்வை விதைத்தவருக்கு விழா எடுப்பதை கொள்கையாக வைத்திருக்கிறது அரசு.
சிறுவன் பழனிக்குமார் கொலை செய்யப்பட்டதும், இப்படியொரு வன்முறை நடப்பதற்கான சூழல் தென்பட்டதா?
இம்மானுவேல் சேகரன் அவர்களின் வெண்கலச் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள காலை எட்டரை மணிக்கு பரமக்குடியை அடைந்தேன். தியாகி இம்மானுவேல் பேரவையின் தலைவர் சந்திரபோஸ் தலைமையில், சுப. அண்ணாமலை அவர்கள் சிலையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சி முடிந்ததும், 11.30 மணிக்கு எனது மைத்துனரின் வீட்டிற்கு உணவருந்தக் கிளம்பினேன். ஜான் பாண்டியனை கைது செய்துவிட்டதாக, அய்ந்து முக்கு சாலையில் அப்போது பதற்றம் கிளம்பியது. 50லிருந்து 100 பேர், பெரும்பாலும் இளைஞர்கள் அமர்வதும் எழுந்து நிற்பதுமாக இருந்தார்கள். ஏற்கனவே அவ்விடத்தில் சுமார் 200 போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஜான் பாண்டியனை விடுவிக்கக் கோரி அவர்கள் மறியல் செய்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் நூற்றுக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர்.
பரமக்குடியின் மேற்கு பகுதியில், இளையான்குடி சாலையில் முதுகுளத்தூரை நோக்கி காவல் துறை வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அந்த சமயத்தில்தான் கூட்டத்தில் கல் விழுந்தது. அதை யார் எறிந்தார்கள் என யாருக்கும் தெரியாது. சின்ன சலசலப்புதான், சரியாகிவிடும் என்றுதான் அப்போது நினைத்தேன். என்னை அழைத்துச் செல்ல வந்தவர், முதுகுளத்தூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகில் என்னை இறக்கி விட்டார். அப்போதுதான் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அய்ந்து முக்கு சந்தில் திரண்டிருந்த மக்கள் முதுகுளத்தூர் சாலையில் ஒடி வந்தனர். 12.45 மணிக்கு தொடங்கி 5 மணி வரையில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அப்பகுதியின் எல்லா திசைகளிலும், எல்லா தெருக் களிலும் காவலர்கள் குவிந்திருந்தனர்.
ஜான் பாண்டியன் கைது செய்தி கேட்டு மக்கள் பதற்றமடையத் தொடங்கியதும், சந்திரபோஸ் அவர்கள் டி.அய்.ஜி.யை சந்தித்து, விழா சிறப்பாக நடக்க உதவி செய்யுங்கள் என்று கோரினார். அதற்கு டி.அய்.ஜி., நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். ஜான் பாண்டியன் கைதுதான் மக்களின் பதற்றத்திற்கு காரணம் என்று சொல்லி அவரை உடனே விடுவிக்குமாறு கேட்டார். "அதற்கு வாய்ப்பில்லை, நீங்கள் கிளம்புங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறி டி.அய்.ஜி. கிளம்பிவிட்டார். இதற்கிடையில்தான் மூவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக தகவல் வந்தது. அவர்கள் யாரென தெரியாத நிலையில், பதற்றம் கூடிக் கொண்டே போனது.
காவல் துறையின் திட்டமிட்ட படுகொலை இது என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள் ஏதேனும் கிடைத்தனவா?
நிச்சயமாக, இது திட்டமிட்டப் படுகொலைதான். தலித் மக்களுக்கு எதிரானவர் என பெயர் பெற்ற காவல் துறை கண்காணிப்பாளரான செந்தில் வேலன், ஒரே ஒரு நாள் பணியில் பரமக்குடிக்கு வந்தார். குருபூசைக்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெறும் அமைதிக் கூட்டத்தில் மூன்று மாவட்ட டி.அய்.ஜி.களும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள். அந்த கூட்டத்தில் எஸ்.பி. செந்தில் வேலன் கலந்து கொள்ள வில்லை. அமைதிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஒருவரை, குருபூசைக்கு சிறப்பு அதிகாரியாக எப்படி நியமிக்கலாம்? இதில் உள்ள நோக்கம் வெளிப்படையானதே.
மக்களைவிட போலிசாரின் எண்ணிக்கை அதிகமிருந்தது. குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர் குருபூசைக்கு வரும் மக்களை பரிசோதித்தே அனுப்பிக் கொண்டிருந்த நிலையில், கற்களையோ, தடிகளையோ யாரும் எடுத்து வந்திருக்க முடியாது. பதற் றத்தை உண்டாக்கவே ஜான் பாண்டியனை கைது செய்தனர். அத்துமீறலில் ஈடுபட்டார்கள் என்பதை நிரூபிக்கவே கல் வீசப்பட்டது. கல் வீசி காவலர்களை தாக்கினார்கள் என்ற சாக்கை உருவாக்கி, துப்பாக்கிச் சூட்டை நடத்தி முடித்தார்கள். இந்த துப்பாக்கிச் சூடு யாரை திருப்திப்படுத்த என்பதற்கான காரணமும் வெளிப்படையானதே!
கீழக் கொடுமளூரைச் சேர்ந்த தீர்ப்புக் கனி மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட அய்ந்து இளைஞர்களை காவல் துறையினர் அடித்து, வேனில் ஏற்றிச் சென்றதை பலரும் பார்த்திருக்கிறார்கள். இது நடந்தது நான்கு மணியளவில். அய்ந்து முக்கு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட தனது பைக்கை எடுக்க வந்தவர் தீர்ப்புக் கனி. அவரையும் முத்துக்குமாரையும் காவலர்கள் கூட்டிச் சென்று முதுகுளத்தூர் பாலமருகே சுட்டுக் கொன்றனர் என கிராம மக்கள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பவர்களை இளையான்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வகையில், காவல் துறை வாகனம் காலையிலேயே அந்த சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படியே குண்டடி பட்டவர்களை மதுரைக்கோ, ராமநாதபுரத்திற்கோ கொண்டு செல்லாமல் இளையான்குடிக்கு கொண்டு சென்றனர்.
மாலை ஆறு மணியளவில் பரமக்குடி காவல் நிலையத்திற்கு அருகே உள்ள விலக்கில் 25 இளைஞர்கள் மறியலில் ஈடுபட்டனர். உள்ளூர் இன்ஸ்பெக்டரான கஜேந்திரன், கூட்டத்தை கலைக்காமல், எடுத்தவுடனே துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதில் பதினோறாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். காலையில் இருந்து 200 – 300 பேர் அட்டூழியம் செய்ததாகவும் அதனாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இன்ஸ்பெக்டர் கூறினார். ஆனால், கிராம மக்கள் போலிசாரே மறியல் இடத்தில் கற்களை அடுக்கி புகைப்படம் எடுத்ததாகத் தெரிவித்தனர். இப்படியாக பல சந்தேகங்களையும் ஆதாரங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
கடந்த ஆட்சியில் அமைதியாக நடந்த இம்மானுவேல் சேகரனின் குருபூசை, அ.தி.மு.க. பொறுப்பேற்றதும் சீர்குலைந்தது ஏன்?
அ.தி.மு.க. ஆட்சி என்பது தேவர் சாதியினரின் ஆட்சிதான். இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்கும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. 2007க்கு முன்பு வரையிலும் குருபூசை ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்தது. முளைப்பாரி எடுப்பது, காவடி தூக்குவது போன்ற விசயங்கள் பொன்விழா ஆண்டில்தான் தொடங்கின. இதை சாதி இந்துக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் அரசு விழாவாகவும் அறிவிக்கப்பட்டால், சம உரிமை கிடைத்துவிடும் என்பதாலேயே எப்படியேனும் குருபூசையை சீர்குலைக்க, சாதி இந்துக்கள் காத்திருந்தனர். வின்சென்ட் கொலைக்கு பழி வாங்கும் விதமாக, சாதி இந்து ஒருவரை தலித் மக்கள் கொலை செய்தபோது, "எங்கள் ஆட்சி வரும், அப்போது கவனித்துக் கொள்கிறோம்' என வெளிப்படையாகவே கூறினார்கள். தேவர் குருபூசைக்கு போட்டியாகவே இம்மானுவேல் சேகரனின் குருபூசை நடத்தப்படுவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது வெறுமனே போட்டியல்ல; சம உரிமைப் போராட்டம். ஒடுக்கப்படுவோர் பக்கமிருந்துதான் இதை நாம் அணுக வேண்டும். ஆனால், அரசு ஒடுக்குவோரின் பக்கம் நின்று கொண்டு அதிகார வன்முறையால் சாதியத்தை நிறுவுகிறது.
ஜான் பாண்டியன் கைதானதும் இளைஞர்கள் பெரும் பதற்றமடைந்ததை நீங்கள் பார்த்ததாகக் கூறினீர்கள். இந்த இளைஞர்களின் எழுச்சியை, சாதி ஒழிப்பிற்கு என சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறை எதுவும் இல்லையா?
போராட்டக் குணம் இந்த மக்களின் மண்ணோடு மண்ணாக, ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்திருக்கிறது. அதற்கான வலுவான வரலாற்றை அவர்கள் சுமந்திருக்கிறார்கள். ஆனால், இந்த போர்க் குணத்தை வழிநடத்தும் இயக்கங்கள் அங்கே வேரூன்றவில்லை. இளையான்குடி வரைக்கும் சி.பி.எம்., சி.பி.அய். வந்தன. இந்த மக்களின் தலையாயப் பிரச்சனை சாதிய முரண்பாடுதான். கிளர்ந்து நிற்கும் இந்த மக்களை கையாள முடியாமல் பல அமைப்புகள் தோல்வியுற்றன. வீரம் செறிந்த போராளிகள் என்பதையே பள்ளர்கள் தங்களின் அடையாளமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதற்காக, யாருக்காகப் போராட வேண்டும் என்ற வழிகாட்டுதல் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஜாதி ரீதியாக தான் மேலானவன் என்பதை சண்டையில்தான் நிரூபிக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர். சாதி இந்துக்களோடு சரிக்கு சரி மோதி நின்றாலும், நிலமற்றவர்களாகவும் கூலிக்கு உழைக்கிறவர்களாகவுமே அவர்கள் இருக்கின்றனர். கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
சிறுவன் பழனிக்குமாரின் மண்டல மாணிக்கம் பஞ்சாயத்தில் ஏழு கிராமங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றில் மட்டுமே பள்ளர்கள், சுமார் 700 குடும்பங்கள் உள்ளன. அனைவருமே நிலமற்றவர்கள். குத்தகைக்கு நிலமெடுத்து வாரச் சாகுபடி செய்கிறார்கள். யார் எதிரியோ அவர்களிடமே கூலி வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம். இந்த படுகொலைகளுக்கு பின்னர் யாரும் வேலைக்கு போக முடியவில்லை. நான்கு அருந்ததியர் குடும்பங்கள் இருக்கின்றன. தனித் தொகுதி என்பதால், சாதி இந்துக்கள் இதில் ஒரு குடும்பத்தை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்தனர். துணைத் தலைவராக சாதி இந்து ஒருவர் பொறுப்பில் இருக்கிறார். மண்டல மாணிக்கத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் நடைமுறையில் உள்ள சாதிய அடக்குமுறைகளை தாங்க மாட்டாமல், 70 குழந்தைகளை ஆனைக் குளத்திற்கு படிக்க அனுப்புகிறார்கள்.
சாலை வசதி கேட்டு 30 ஆண்டுகளாகப் போராடுகின்றனர். சாலை அமைக்க வேண்டிய இடம் சாதி இந்துக்களுக்கு சொந்தம் என்பதால், நிதி ஒதுக்கப்பட்டும் சாலை அமைக்கப்படவில்லை. வாழ்வியல் உரிமைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு வாழ்கிறவர்களின் கோபம் மிக இயல்பானது. யாருக்கும் தாழ்ந்தவர்களில்லை என்று நிரூபிக்க வேண்டியது ஒன்றே அவர்களது லட்சியம். அதற்காக அவர்கள் சாகவும் தயார். சாதி இந்துக்களுக்கு எதிரான இந்த கோபத்தை சாதிய கட்டமைப்பிற்கு எதிரானதாக திசை திருப்ப வேண்டியது அவசியம். இதுவரையிலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. சிறிதளவு நடந்த முயற்சிகளும் தோல்வியுற்றன.
எங்களது களப் பணியின்போது, சாதி இந்துக்கள் குறிப்பாக பெண்கள், "இந்த கொடுமையை எப்படி தாங்கிக் கொள்கிறீர்கள்' என படுகொலை குறித்து வருத்தப்பட்டனர். இதை ஏன் சொல்கிறேன் என்றால், யாரோ ஒரு சிலரின் ஆதாயத்திற்காகத்தான் அத்துமீறல்கள் தூண்டப்பட்டு படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. சாதி இந்துக்களோடு இருக்கும் முரண்பாட்டையும் வெறுப்புணர்வையும் அழிக்கும்போது, சாதி ஒழிப்பை நோக்கி இந்த எழுச்சி கூர் தீட்டப்படும்.
தியாகி இம்மானுவேல் சேகரன் தொடங்கி வைத்த உரிமைக் குரல் வலுவாக ஒலிக்கிறது. ஆனால், தலித் விடுதலை என்னும் கூரையின் கீழ் இவர்களை நிறுத்த முடியவில்லையே!
இம்மானுவேல் அவர்கள் நடத்திய தீண்டாமைக்கு எதிரான மற்றும் உரிமைப் போராட்டங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. இந்த போராட்டங்களில் ஓர் ஒழுங்குமுறை இருந்தது. ஒடுக்கப்பட்டோர் இயக்கத்திற்கு ஊருக்கு ஊர் கிளை அமைப்பு இருந்தது. பள்ளர்கள் என்பதை விடவும் ஒடுக்கப்பட்டோர் என்ற குடையின் கீழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவே இம்மானுவேல் போராடினார். ஆனால், அவருக்கு பின்னர் அந்த மக்களை வழிநடத்த தலைவர்களில்லை. அரசும், ஆதிக்கவாதிகளும் இணைந்து ஓர் அமைப்பை அழிக்கும்போது, அடுத்த தலைமை உருவாகாதவாறே அதை செய்வார்கள். இம்மானுவேல் சேகரனுக்குப் பின் அப்படியொரு தலைமை அங்கு உருவாகவே இல்லை.
1950களில் மறவர் – நாடார் பிரச்சனைதான் உச்சத்தில் இருந்தது. இம்மானுவேல் அவர்கள் சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்துகிறார். தேவர் பார்வர்டு ப்ளாக்கில் இணைந்து, இரண்டு எம்.பி. சீட்களை பெற்று போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றதும் தனக்கு வாக்களிக்காத தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறார். இதற்கான அமைதிக் கூட்டத்தில் கலந்து கொள்ள தேவர் வந்தபோது, எல்லோரும் எழுந்து நிற்க, இம்மானுவேல் அவர்கள் மட்டும் அமர்ந்திருந்தார். அதைத் தாங்க முடியாமல்தான் சாதி இந்துக்கள் அவரை கொலை செய்தனர். அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் தலித் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தாலும், அவர்கள் ஓர் இயக்கமாகத் திரளவில்லை.
தமிழ்த் தேசிய அமைப்புகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் சாதியை கண்டுகொள்ளாததன் மூலம் தலித் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கின்றன. "தீண்டாமை ஒழிப்பு முன்னணி' என்ற பெயரில் தீண்டாமையை ஒழிக்க மட்டுமே அவை முயல்கின்றன. பரமக்குடி பச்சேரி கிராமத்தில் 80 விழுக்காடு தலித்துகளுக்கு நிலமில்லை. தலித் மக்களின் நில உரிமைக்காக இந்த கட்சிகள் போராடுவதில்லை. நில உரிமை என்ற அதிகாரமே சுயமரியாதையை பெற்றுத் தரும் எனும் போது, அதற்காக இவை களமிறங்குவதில்லை. அரசியல் ரீதியாக பயிற்றுவிக்கப்பட வேண்டியதுதான் இதற்கான ஒரே தீர்வு. அம்பேத்கர் அவர்கள் வலியுறுத்துவதைப் போல, உள்ளாட்சி அதிகாரத்தை ஒடுக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதியில் காவல் துறையில் பெருமளவில் சாதி இந்துக்களே நிறைந்திருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களை இது எப்போதும் அச்சத்தில் வைத்திருக்கிறது. தலித் மக்களுக்கு சம அளவிலான பிரதிநிதித்துவம் இருக்குமானால், இந்நிலை மாறும்.
இம்மக்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்க நடந்த முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்தன?
தலித் கட்சி மற்றும் இயக்கங்களின் தமிழ்த் தேசிய அணுகுமுறை மக்களுக்கு பிடிப்பை உண்டாக்கவில்லை என்பதுதான் உண்மை. இம்மானுவேல் பேரவை, புதிய தமிழகம் கட்சிகள் வேரூன்ற முடியாமல் போனது அதனாலேயே. 1988இல் இம்மானுவேல் பேரவை சார்பில் நடந்த ஊர்வலத்தில் முப்பதாயிரம் பேர் குவிந்தனர். இம்மானுவேல் சேகரன் அவர்கள் படுகொலைக்குப் பின்னர் மக்கள் திரண்ட பெரும் நிகழ்வு இது! 1991இல் இந்நினைவிடத்தை சுத்தப்படுத்தி மாநாடு நடத்துகிறார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி. இம்மானுவேல் சேகரனை மீட்டெடுத்ததாக கிருஷ்ணசாமி சொல்லிக் கொண்டாலும், மாஞ்சோலை போராட்டத்தின் கசப்புகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின. ஜான் பாண்டியன் பெரும் தாக்கத்தை உண்டாக்கினார். மக்களின் போராட்டக் குணத்தை மேலெழச் செய்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு என்றாலும், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அவரை மாறி மாறி சீரழித்தன; சீரழிக்கின்றன.
சிலர் "மள்ளர்' என்ற பெயரில் மக்களைத் திரட்ட முயல்கின்றனர். மள்ளர் என்றால், சங்க காலப் பெயர் என்றும் ஆண்ட பரம்பரை என்றும் அதற்கு அர்த்தம் கூறுகிறார்கள். மள்ளர்கள் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறார்கள். ஆண்ட பரம்பரைக்கு எதற்கு இடஒதுக்கீடு என்பது அவர்கள் வாதம். இதுதான் பிரச்சனை. பாருங்கள், என்ன மாதிரியான சமூக அறிவோடு இந்த இயக்கங்கள் மக்களை வழிநடத்துகின்றன? ஆண்ட பரம்பரை என்றால், ஆறு பேரை ஏன் படுகொலை செய்கிறது அரசு? இப்படித்தான் மக்களின் உணர்வுகளை தவறாகக் கிளறிவிட்டு, அரசியல் செய்கிறார்கள்.
இம்மானுவேல் அவர்கள் தேவேந்திர குல சங்கத்தை அமைத்திருந்தாலும் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் கீழ் – பள்ளர்களை மட்டுமல்லாது, ஒடுக்கப்பட்ட எல்லோரையும் ஒன்றிணைக்கவே விரும்பினார். இம்மானுவேல் பேரவையின் சந்திரபோஸ் அந்த முயற்சியை எடுத்தபோது, "இம்மானுவேல்' என்ற பெயர் அதற்கு தடையாக அமைந்தது. தலித் கட்சிகள் தோல்வியுற்ற இந்த இடத்தை தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அரசியல் நேரத்தில் பயன்படுத்தி வருகின்றன. சாதி இந்துக்கள் அதிகாரத்தால் ஒன்றிணைந்து தவிர்க்க முடியாத வாக்கு வங்கியாக நிற்கும்போது, இன்றும் சாராயத்திற்கு ஓட்டுப் போடுகிறவர்களாக தலித் மக்கள் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.
இம்மானுவேல் அவர்களின் குருபூசையை அரசு விழாவாக அறிவித்தால், அது தலித் மக்களின் கோபத்தை ஆற்றுப்படுத்தி, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறீர்களா?
 நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல இது போட்டியல்ல. சம உரிமைப் போராட்டம். தேவரை தேசியத் தலைவராக வும், இம்மானுவேலை சாதியத் தலைவராக வும் பார்ப்பது, சாதிய உளவியலின் உச்சம். இம்மானுவேல் சேகரன் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். மத்திய அரசு தேவரைப் போலவே இம்மானுவேல் அவர்களுக்கும் அஞ்சல் தலை வெளியிட்டிருக்கிறது. தேவரை தேசியத் தலைவராக திட்டமிட்டு உருவாக்கினார்கள். இத்தனைக்கும் அவர் காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டவர். மக்கள் கேட்கும் அளவிற்கு விட்டிருக்காமல், ஒடுக்கப்பட்டோர் பக்கம் நின்று இம்மானுவேல் குருபூசையை அரசு விழாவாக அரசே அறிவித்திருக்க வேண்டும். சாதி இந்துக்கள் கேட் காமல் கொடுத்ததை, தலித் மக்கள் கேட்டும் கொடுக்கவில்லை. சார்பு நிலை கொண்ட அரசுகள்தான் நம்மை ஆள்கின்றன என்பதற்கு இதுவே போதும். அரசின் வன்முறை மக்களால் எதிர்கொள்ள முடியாதது. ஒவ்வொரு முறையும் சாதி இந்துக்களின் பக்கம் நின்று, ஒடுக்கப்பட்ட மக்களை பலிகொள்வதையே எல்லா அரசும் செய்கின்றன. இந்நிலையில் அரசு விழாவை அறிவித்துவிட்டால், தலித் மக்களை அது ஆற்றுப்படுத்துமே ஒழிய, அதற்குப் பிறகு சண்டை முடிவுறுமா என்றால் அதுதான் இல்லை. சாதியை ஒழிக்கின்ற வரை எதிர்வினையாற்றுதல்கள் தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக