ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 18 நவம்பர், 2011

தொடரும் ஆதிக்க சாதி மனநிலையும், நமது மௌன வன்முறையும்...



பெரியார் தி.க. விடுதலை ராஜேந்திரன்:
இந்திய அரசே தன் அடிப்படையில் சாதியத்தை கட்டிக்காக்கும் அரசாக உள்ளது. ஏனெனில் இந்த அரசை வழி நடத்துபவர்கள் மேல் சாதிக்காரர்களே. எனவே இந்த அரசே மேல் சாதி மனப்பான்மையுடன்தான் நடந்து கொள்கிறது.
viduthalai_rajendran_360தேசிய இனங்களுக்கிடையே சாதியம் இருக்கும் வரை அவர்கள் தங்களுக்குள் ஒரு இனமாக ஒன்றுபட மாட்டார்கள். தேசிய இன விடுதலை பற்றி சிந்திக்க மாட்டார்கள். எனவே இந்தியா சாதியத்தையும், மதத்தையும் சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் கட்டிக் காக்கிறது.
இதற்காகவே இந்தியாவில் “பழக்க வழக்க சட்டம்” என்ற சட்ட விதிகள் 13, 19, 25, 26, 372(1) ஆகியவை உள்ளன. இந்த விதிகள் மதப்பழக்க வழக்கங்கள் மற்றும் சாதிய பழக்க வழக்கங்கள் இன்றும் தொடர அனுமதிக்கின்றது. இது சட்டப்படி மதமும், சாதியும் உயிர்ப்புடன் இருக்க உதவுகிறது.
சமூகத்தில் சாதியத்தின் படிநிலையானது கூம்பு விளையாட்டை ஒத்துள்ளது. இதில் கீழ்மட்டத்திலுள்ளவர்கள் பெரும்பான்மையாக உள்ளவர்கள். இவர்கள் தங்களது தோள்களை மற்றவர்களுக்கு நிற்பதற்கு தருகின்றனர். அவர்களின் தோள் மேல், அடுத்த சாதி நின்றபடியே, தமது தோள்களையும் தம்மை விட உயர்ந்த சாதி நிற்க அனுமதிக்கின்றது. இப்படி செல்லும் இந்த கூம்பு வடிவ விளையாட்டில் உச்சத்தில் பார்ப்பனியம் நின்று கொண்டிருக்கிறது. அவர்கள் கையில்தான் ஆட்சியும், அதிகாரமும் உள்ளது.
இதில் ஒவ்வொரு சாதியையும் தாம் இன்னொரு சாதியை விட மேல் என்ற எண்ணத்தை கைவிடாதவரை மாற்றம் நிகழப் போவது இல்லை. இவ்வளவு அறிவியல் வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் கிராமத்தில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தெரு தேவைப்படுகிறது. சாதியை மீறி காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் நகரத்திற்கு வர வேண்டியுள்ளது.

தென் மாவட்டங்களில் தொடர்ந்து சாதிநிலை இறுக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதனால்தான் அங்கு படுகொலைகளும், துப்பாக்கிச் சூடுகளும் தொடர்ந்தபடியே உள்ளன.
இராணுவத்தில் பணியாற்றிய இமானுவேல் சேகரன் அவர்கள் தன் சொந்த ஊருக்கு திரும்பிய பொழுது தனது இன மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பார்த்து அவற்றை போக்க கிராமந்தோறும் சென்று "சாதிய ஒழிப்பு இயக்கம்" நடத்தினார். அருப்புக் கோட்டை சட்டமன்ற தனித்தொகுதி தேர்தலில் முத்துராமலிங்க தேவர் அவர்கள் நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக இமானுவேல் அவர்கள் ஒரு தலித் வேட்பாளரை நிறுத்தினார். இமானுவேல் அவர்கள் நிறுத்திய வேட்பாளர் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தை அடக்க சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
1957 செப்டம்பர் 10-ல் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தேவர் வந்தபோது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். இமானுவேல் எழுந்து நிற்கவில்லை. மேலும் தேவருடன் தமது இன மக்களுக்காக சரி நிகர் சமானமாக இமானுவேல் அவர்கள் வாதாடினார். அதற்கு மறுநாளே இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 33.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் படுகொலைகள் நடந்தபடியேதான் உள்ளன. இந்த வருடம் துப்பாக்கி சூடு வரை நடந்துள்ளதால் அது நமக்கு தெரிகிறது.
இது குறிப்பிட்ட இரு சாதிக்கு இடையில் மட்டும் நடைபெறவில்லை. பல்வேறு காலங்களில் பல்வேறு சாதிகளுக்கிடையே நடைபெறுகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிராக மட்டும் போராடாமல், மொத்தமாக சாதிக்கும், தீண்டாமைக்கும், பார்ப்பனியத்திற்கும், மதத்திற்கும் எதிராக நாம் போராட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக