மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம்,இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் விற்பனை மையங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு சட்டப்படியாக 22.5சதவீதம் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் 2008 முதல் 2011 முடிய உள்ள காலங்களில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் 5,000 ‘விற்பனை’ மையங்களை புதியதாக தொடங்கியிருக்கிறது. இதில் 22.5 சதவிகிதமான 1,200 விற்பனை மையங்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 7 நபர்களுக்கு மட்டுமே இக்குறிப்பிட்ட விற்பனை மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து முறையான விசாரணை செய்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகின்றது.
மேலும் பரமக்குடியில் செப்டம்பர் 11இல் இமானுவேல் சேகரனின் நினைவுநாளன்று காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமெனவும், உயிரிழந்த 9 பேர் குடும்பங்களுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகையான ரூ.5 லட்சமும்,அக்குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசுத் துறையில் வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
மேலும், தமிழ்நாட்டில் ‘77 ஜாதிகள் அடங்கிய பட்டியல் இன மக்களை ஆதிதிராவிடர்’என அறிவிப்பது சரியானது அல்ல. இதை மாற்றும் அதிகாரம் மத்திய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு (national shedulde caste commission ) மட்டுமே உண்டு. அதேபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ள உள் ஒதுக்கீட்டை மாற்றும் அதிகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற் குத்தான் (national shedulde caste commission )உள்ளது. எந்தவொரு மாநில அரசுக்கும் இந்த அதிகாரம் கிடையாது.
அப்படி இருக்கையில் கடந்த ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மாற்றி அமைத்தது முற்றிலும் தவறு. தற்போதுள்ள அரசு தாழ்த்தப்பட்டோருக்கு உண்டான உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும்.
மேலும், 1957ஆம் ஆண்டு சமூக நீதிக்காக போராடி உயிரிழந்த தியாகி இமானுவேல் சேகரன் அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவுநாளை அரசுவிழாக்களாக அறிவிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட 6 கோரிக்கைகளை வலியயுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மும்முனைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, வரும் டிசம்பர் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தன்று,சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய தமிழகம் கட்சி மேற்கொண்டுள்ள மும்முனைப் போராட்டம் குறித்து, கீழ்கண்ட தேதிகளில் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகளுடைய ஆலோசனைக் கூட்டம் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, வருகிற 10ஆம் தேதி துவங்கி 14ஆம் தேதி வரை 10 மாவட்டங்களிலும் சுற்றுப் பிரயாணம் செய்யவிருக்கிறேன்.
டிசம்பர் 10 காலை தூத்துக்குடி, மாலை விருதுநகர்
11 காலை தென்காசி, மாலை நெல்லை
12 காலை தேனி, மாலைதிண்டுக்கல் மற்றும் மதுரை
13 காலை ராமநாதபுரம் மாலை திருமயம்
14 காலை திருச்சி.
பிற மாவட்டங்களில் சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் பின்னர் அறிவிக்கப்படும்.சென்னையில் டிசம்பர் 6 அன்று எனது தலைமையில் நடைபெற உள்ள உண்ணாவிரத்தில், தமிழகமெங்குமிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக