தமிழர் வரலாற்றுத் திரிபுவாதமும்
தமிழுணர்வாளர்களும்
———————————— மருத்துவர் பொருநை —————————————–
ஆரியர், த்யஸ், –பிருத்வி, அதிதி, திதி, வருணமித்ர, உஷஸ், சாவித்திரி, சரஸ்வதி முதலிய பல சிறு தெய்வங்களைக் கலந்து இந்துமதம் என்னும் கலவை மதத்தை உருவாக்கினார்கள் எனப் பாவாணர் கூறுகிறார்.
வரலாற்றை மீட்டெடுப்பதன் மூலமும், பாவானரின் துணைகொண்டும், மதத்துறையிலிருந்து பிராமணரை விலக்கிவிட முடியும்.
கி.பி.17ஆம் நூற்றாண்டில் தெலுங்கர்கள், முகம்மதியர்கள் படையெடுப்புக்குப் பின்னர் ஏராளமான பள்ளுநூல்கள், மள்ளர்களை பள்ளர்களாக மாற்றுவதற்காகவே எழுதப்பட்டது.
காடுகெட ஆடுவிடு, ஆறுகெட நாணலிடு, ஊருகெட நூலைவிடு என்பது பழமொழி. அதாவது காட்டைக் கெடுக்க வேண்டுமென்றால் அதற்குள் ஆட்டை மேயவிட வேண்டும்; ஆற்றைக் கெடுக்க வேண்டுமென்றால் அதற்குள் நாணலைப் பயிரிட வேண்டும்; அதுபோல ஊரைக் கெடுக்க வேண்டுமென்றால் அதற்கேற்ப நூல்களைத் தயாரிக்க வேண்டும்.
எனவே, முக்கூடற்பள்ளு, திருவாரூர்பள்ளு, வையாபுரிப்பள்ளு, தஞ்சைப்பள்ளு, செங்கோட்டுப்பள்ளு, விநாயகர்பள்ளு, தென்காசிப்பள்ளு முதலிய எண்ணிலடங்காத பள்ளுநூல்கள் இயற்றப்பட்டன. இவற்றிலெல்லாம் மள்ளர்களை வெள்ளாளனின் பண்ணையில் கூலி வேலை பார்க்கும் அடிமைகளாகச் சித்தரிக்கும் ஒரே கதையைத் திரும்பத் திரும்பச் சொல்லிவந்தன. இதையே அனைத்துக் கிராமங்களிலும் நாடகம்போட்டு நடத்தியும் பரப்பி வந்தனர்.
தமிழர்கள் பல தொழில் செய்யும் பல குலத்தைச் சார்ந்தவர்களாக வாழ்ந்த போதிலும் நாயக்கர்கள் மற்ற எல்லாச் சமூகத்தையும் விட்டுவிட்டு மள்ளர் குலத்தை மட்டும் வீழ்த்த வேண்டிய தேவை என்ன?
தமிழகம் பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு மள்ளர்கள் கைவசமிருந்த நிலங்களெல்லாம் அபகரிக்கப்பட்டன. போரில் நேரடியாக எதிர்கொள்ளத் துணிவில்லாதவர்கள் இது போன்ற நூல்கள் மூலமாக (தமிழர்களை) மள்ளர்களை வீழ்த்தத் தலைப்பட்டனர். இதனால் மள்ளர்களும் வீழ்ந்தனர். தமிழகமும் வீழ்ந்தது. தமிழினமும் வீழ்ந்தது.
ஆரியர்களும், திராவிடர்களும் இன்றுவரையிலும் மக்களைப் பிரித்து வைத்து ஆளுகின்ற (Divider Rule) ஆட்சிமுறையைப் பயன்படுத்தித்தான் தமிழரை வீழ்த்துகிறார்கள். எல்லாத்திராவிடக் கட்சிகளுமே ஆட்சிக்கு வந்தவுடன் தாங்களே சாதிக்கலவரங்களைத் தூண்டிவிட்டு, மோதவிட்டு தமிழர்களை ஒருக்காலும் ஒன்றுபடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
அதிலும், முதுகுளத்தூர், கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி போன்ற பல கலவரங்கள் மள்ளர் குலத்தை ஒடுக்குவதற்காகவே நடத்தப்பட்டதுதான். தற்போது மதுரையில் இமானுவேல் சேகரனின் சிலை உடைப்பும் இதேகதைதான்.
எதிரிகளுக்கு யாரை ஒடுக்கவேண்டும், யாரைக் காப்பாற்றவேண்டும் என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது. யாருடன் இணைந்து வேலையைச் செய்யவேண்டும் என்பதும் மிக நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால், தமிழர்களாகிய நமக்குத்தான் நண்பன் யார்? எதிரி யார்? என்று தெரியவில்லை. அதனால்தான், எதிரியை நண்பனாக்குகிறோம், நண்பனை எதிரியாக்குகிறோம்.
ஆரியக் கருத்தைப் போற்றும் ஒருநூலில் சத்ரியனாகயிருப்பவன் போரில் தோற்றால் சூத்திரனாகிவிடுவானாம். அதனால்தான் இராசராசன் சிலையை தஞ்சைப் பெரியகோவிலுக்கு வெளியே வைத்துள்ளார்களாம். பொய், பித்தலாட்டம், சூது என எதையாவது செய்து பிறரைத் தாழ்த்த வேண்டும் என்னும் கருத்தைக் கொண்டதுதான் ஆரியமும் திராவிடமும். ஆரியர்களும் திராவிடர்களும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதற்கு அரிய எடுத்துக்காட்டு எதுவென்றால், ஆரியர்கள் அன்று தமிழ்மொழியை நீசபாசை என்றார்கள். திராவிடர்(கள்) ஈ.வே.ராமசாமிநாயக்கர் இன்று, தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்கிறார். அதோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழ் வேந்தர்கள் முட்டாள்கள் என்றும், அவர்கள் பார்ப்பனர்களுக்கு (ஆரியர்களுக்கு) உதவினார்கள் என்றும் கூறினார். அதோடு, ஒரு மாநாட்டில் மள்ளர் ஒருவர் தேவேந்திரர் குலவேளாளர் என்பது பற்றிக் கேள்வி கேட்டதற்கு, ‘வெளக்குமாத்துக்குப் பட்டுக்குஞ்சம் என்று பெயர்வைத்தால் என்ன? வைக்காமல் போனால் என்ன?’ என்றும் கூறியிருக்கிறார். இதிலிருந்தே தெரிகிறது, ஆரியர்களும் திராவிடர்களும் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள் என்று.
உலக வரலாற்றிலேயே நேர்மையுடன் நாடாண்டவர்கள் தமிழ் மன்னர்கள்தான். தான் அறியாமல் கொன்ற பசுங்கன்றுக்காக தன் சொந்தமகனையே தேர்க்காலில் வைத்துக் கொன்றவர்கள்தான் சோழ மன்னர்கள்!
உயிர்காக்கும் பொருளான நீரைத் தேக்கிவைத்து உயிர்த்தேவைக்கும், உணவுத்தேவைக்கும், பயன்படுமாறு காவிரியில் கல்லணையைக் கட்டியவர்கள் சோழர்கள். அதேபோல், 1141-1173 காலகட்டத்தில் கன்னட நாட்டை ஆண்டுகொண்டிருந்த நரசிம்மன் என்பவன் காவிரியின் குறுக்கே அணயொன்றைக் கட்டி தமிழகத்திற்குத் தண்ணீர் இல்லையென்று சொன்னான். அப்போது ராசேந்திரசோழன் ஆண்டுகொண்டிருந்தான், தண்ணீரைக் கேட்டுப் பார்த்தான், நரசிம்மன் இல்லையென்று சொன்னதும் பெரும் படையொன்றைக் கிளப்பிக் கொண்டுபோய் அணையை உடைத்தான். காவிரியில் தண்ணீரைக் கொண்டு வந்தான்.
சோழர்களின் வரலாறு இப்படி இருக்கும்போது, சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் அதைச் செய்தார்கள், இதைச் செய்தார்கள் 1800 ஆண்டுகளாக அடிமையாக இருந்தார்கள் என்று எப்படிக் கூறுகிறார்கள்? உங்களுக்கு யார் மீது கோபம்? சோழமன்னர்கள் மீதா? அவர்கள் ஆட்சியின் மீதா? ஆட்சியின் மீதென்றால் திருத்திக்கொள்ளலாம். ஆனால், சோழமன்னர்கள் மீதென்றால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. காரணம், இது பொறாமையின் வெளிப்பாடு. நீங்கள் ஆட்சி செய்யவில்லையென்ற கொதிப்பு. இப்பொழுதும் கூட ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. நீங்களே இப்போதும் ஆட்சிக்கு வரலாமே?
பொதுவாகவே, மூவேந்தர்களும் போரில் நேர்மையைக் கடைப்பிடித்தவர்கள். ஆனால், மேலைநாட்டினர் தங்களது காலனியாதிக்க நாடுகளில் உள்ள எளிய மக்களிடமிருந்தும் பிடுங்கித் தின்றவர்கள். தமிழர்கள் தாங்கள் போரில் வென்ற நாடுகளில் கூடத் தமிழைத் திணிக்கவோ, தமிழர்களைக் குடியேற்றி அந்த நாடுகளை அடிமைப்படுத்தவோ செய்யவில்லை. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்றே அவர்கள் வாழ்ந்தார்கள். இன்று இது பிறர் கண்களுக்கு மடமையாகத்தான் தெரியும். ஏனென்றால், இன்றும் நாடு, சமூகம் என்று பேசுபவர்களை பைத்தியக்காரர்களென்றும் பொழைக்கத் தெரியாதவர்களென்றும் தானே கூறுகிறார்கள். அதேபோல்தான் அன்று வாழ்ந்த தமிழர்களை இன்றும் இவர்கள் கொச்சைப்படுத்தப்படுவது ஒன்றும் வியப்பொனது இல்லை.
மதப்பற்று, மறம், அடுத்தாரைக் காத்தல், ஈகை, விருந்தோம்பல், நடுவுநிலைமை, நன்றியுணர்வு, மானம், உண்மையுரைத்தல், பொய்பேசாதிருத்தல், நுண்ணறிவு முதலியன தமிழர்க்கே உரிய சிறந்த பண்புகளாகும்.
தமிழர்கள் நுண்ணறிவுடையவர்களாக இருந்தபோதிலும் தமது உள்ளத்தில் கள்ளமிள்ளாத தன்மையின் காரணமாக வஞ்சகரை நம்பி எளிதில் ஏமாந்து விடுபவர்களாக உள்ளனர். இது மன்னர்கள் உட்பட அனைத்துத் தமிழர்களுக்கும் இருக்கின்ற பொதுவான பண்பாகும். (ஆதாரம்: ஒப்பியன் மொழி நூல் – பாவாணர்)
அதேபோல பல்லவர்களைப்பற்றி பலர் எழுதுகின்றனர். அதில் மகேந்திர வர்மப்பல்லவன் வடமொழியில் ஓர் நூல் எழுதியதாகவும் எழுதியுள்ளனர். மூவேந்தர்களும் மள்ளர்குடியினர் என்பதால் பல்லவர்களையாவது வடநாட்டினராகக் காட்ட முற்படுகிறார்கள். கலைநயம் மிக்க மாமல்லபுரச் சிற்பங்களையும் குடைவரைக்கோயில்களையும் செதுக்கியது யார்? இந்திக்காரனா?
மகேந்திரப் பல்லவனுடைய மகன் நரசிம்மப் பல்லவன் தமிழகத்திற்குள் புகுந்து அட்டூழியம் செய்த புலிகேசியின் படைகளை வாதாபிவரை விரட்டிச்சென்று வீழ்த்தியவன். அவன் மணந்தது பாண்டியநாட்டு இளவரசியை, அதுமட்டுமல்லாமல், தனது மகளையும் சோழநாட்டு இளவரனுக்கு மணம் செய்து கொடுத்தார். இதெல்லாம் எதைக்காட்டுகிறது? பல்லவர்களும் தமிழர்கள்தான் என்பதைத்தானே!
பண்டைக்காலம் முதலே தமிழர்கள் கலப்புமணம் செய்வதுண்டு. அதிலும் தமிழர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்காவே தமிழ் மன்னர்கள் பிற குலத்துப் பெண்களையும் மணப்பது உண்டு.
அடையாளப்படுத்துவதில் ஆளுமை தொடங்குகிறது என்றும், அடையாள அழிப்பில் ஆதிக்கம் நிலவுகிறது என்றும் அறிவுரைகளைப் பொழிந்துவிட்டு தமிழர்கள் 1800 ஆண்டுகளாக அடையாளம் தெரியாத அடிமையினமாக வாழ்ந்தார்கள் என்று அடையாளப்படுத்தலாமா?
தமிழர்களே!, தமிழுவாணர்களே! சிந்தியுங்கள்! இனியும் உங்கள் தமிழ் முன்னோர்களான சேர, சோழ, பாண்டியர்களைக் கொச்சைப்படுத்தி எழுதுவதை இனியாவது நிறுத்திக்கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக