ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 3 பிப்ரவரி, 2014

சட்டசபை கூட்டம்: புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி புறக்கணிப்பு!


தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தை புதிய தமிழகம் கட்சியும், மனித நேய மக்கள் கட்சியும் புறக்கணித்துள்ளது.

இதுகுறித்து, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா எம்.எல்.ஏ. கூறும்போது, ''நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் முஸ்லீம் சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவம், செவிலியர் பயிற்சி மாணவிகள் போராட்டம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது உள்பட பல்வேறு பிரச்னைகளை பேசலாம் என்றிருந்தோம். ஆனால், சட்டசபையில் பொதுமக்கள் பிரச்னைகளை பற்றி பேச போதிய அவகாசம் தருவதில்லை.

இதற்கு முன்பு நான் 12 நிமிடம் தான் பேசியிருப்பேன். ஆனால், நான் 28 நிமிடம் பேசிவிட்டதாகவும், இனிமேல் பேச நேரம் ஒதுக்க முடியாது என்றும் கூறி பேச அனுமதி மறுத்து விட்டனர். அமைச்சர்கள் குறுக்கீடு அதிகம் இருப்பதால் எங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை.

முஸ்லீம்கள் இடஒதுக்கீடு பிரச்னை, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு என பல்வேறு விசயங்கள் குறித்து முழுமையாக விவாதிக்க முடியாததால் இன்று சட்டசபைக்கு செல்லாமல் புறக்கணித்துள்ளோம்'' என்றார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறும்போது, ''‘‘கவர்னர் உரையின் மீது ஆளுங்கட்சி உறுப்பினர் பேசும் போது, சம்பந்தமில்லாமல் அவையில் இல்லாதவர்களை பற்றி பேசுகிறார். இதற்கு பதில் கூற தி.மு.க. முற்பட்டபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏற்கனவே அவையை புறக்கணித்துள்ளனர். இதேபோல் தே.மு.தி.க.வும் அவையை புறக்கணித்துள்ளது.

சட்டசபையில் மக்கள் பிரச்னைகளை பேச மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எங்களால் மக்கள் பிரச்னைகளை பற்றி முழுமையாக பேச முடியவில்லை. நாங்கள் எதுவும் பேசினால் உடனே அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார்கள். ஒரு ஆரோக்கிய விவாதமாக பேச முடியவில்லை. எனவே புதிய தமிழகம் கட்சி இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகளை புறக்கணித்துள்ளது'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக