தென்காசி மக்களவைத் தொகுதியில் 5-ஆவது முறையாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்- தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் பேரவைத் தொகுதிகளும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேரவைத் தொகுதிகளும் உள்ளன.
கடந்த ஜனவரி 10-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையின்படி, இத் தொகுதியில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 136 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 76 ஆயிரத்து 615 பெண் வாக்காளர்கள், 28 பிற வாக்காளர்கள் என மொத்தம் 13 லட்சத்து 49 ஆயிரத்து 779 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 1957ஆம் ஆண்டுமுதல் இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் கட்சியும், அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரு முறையும், தமாகா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன.
கடந்த 1998 மற்றும் 99ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முருகேசன் வெற்றிபெற்றார். அதன்பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரு முறை வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தொகுதியில் கடந்த 1998 முதல் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். 98-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 1 லட்சத்து 23 ஆயிரத்து 350 வாக்குகள் பெற்றார். அதையடுத்து 99-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமாகாவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்த கிருஷ்ணசாமி 1 லட்சத்து 86 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.
தொடர்ந்து 2004 மற்றும் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு முறையே 1 லட்சத்து ஆயிரம் வாக்குகளும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 685 வாக்குகளும் பெற்றார்.தற்போது முதல்முறையாக திமுக கூட்டணியில் இணைந்து தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
இத் தொகுதியில் தானே போட்டியிடப்போவதாக அறிவித்து இருப்பதன்மூலம், அவரது மகள் போட்டியிடப்போவதாக வெளியான தகவல்களுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக