தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தென்காசி தொகுதியில், அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
டாக்டர் கிருஷ்ணசாமி
தமிழகத்தில் 2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி சார்பில், ஒட்டப்பிடாரம் தொகுதியில், அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், புதிய தமிழகம் கட்சி இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு தென்காசி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
கடந்த தேர்தல்..
கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், இதே தென்காசி தொகுதியில் தனித்து நின்ற டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 685 வாக்குகள் பெற்று 3–வது இடம் பிடித்தார். அப்போது, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் பொ.லிங்கம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 174 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெள்ளைபாண்டி 2 லட்சத்து 46 ஆயிரத்து 497 வாக்குகள் பெற்று 2–வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
விரைவில் பிரசாரம்
புதிய தமிழகம் கட்சியின், மாநில அரசியல் உயர்நிலை குழு கூட்டத்தில், தென்காசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி, தென்காசியில் நான் போட்டியிடுகிறேன். விரைவில் தென்காசி தொகுதியில் பிரசாரம் தொடங்குவேன். மேலும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதால், எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய கால அவகாசம் உள்ளது. எனவே உடனடியாக ராஜினாமா செய்ய தேவையில்லை. தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால், நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். மெகா கூட்டணி அமைய ஒத்துழைப்பு கொடுப்போம். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியில் தி.மு.க. கூட்டணி முதல்நிலை கூட்டணியாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
கட்சிக்கு கவுரவம் வேண்டும்
அ.தி.மு.க. கூட்டணியில் பங்கேற்கும் கட்சிகளுக்கு எந்த அளவுக்கு மரியாதை இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சிக்கு என்று கவுரவம் வேண்டும். அந்த கவுரவத்தை கொடுப்பதில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஈடு இணை யாரும் கிடையாது. தென்காசி தொகுதியில் வெற்றி பெற்று தென் தமிழகத்தின் மக்களுக்காக குரல் கொடுப்பேன். விரைவில் புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
டாக்டர் கிருஷ்ணசாமி குடும்பத்தில் அனைவருமே டாக்டர்கள்தான். அவரது மனைவி சந்திரிகா, மகள் சங்கீதா ஆகியோர் டாக்டர்கள். இதேபோல், அவரது மகன் ஷியாம், மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.
எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா?
வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில், தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். ஆனால், அவர் தற்போது ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள இம்மாதம் 29–ந்தேதிக்குள், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
ஆனால் இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பு டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை. ஆனால் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில், உடனடியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக