ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

144 தடைஉத்தரவு: பணம் விநியோகிக்க சாதகமாகி விட்டது...


தேர்தல் ஆணையம் பிறப்பித்த 144 தடை உத்தரவானது, அதிமுகவினர் பணம் விநியோகம் செய்ததற்கு சாதகமாக அமைந்து விட்டது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி புகார் தெரிவித்தார்.
தென்காசி (தனி) மக்களவைத் தொகுதி வேட்பாளரான கிருஷ்ணசாமி, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி. தமிழகம் மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் எங்களது கூட்டணி வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில் அதிமுகவினர் தாராளமாக பணம் விநியோகித்தனர். தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை.
தென்காசி தொகுதிக்குள்பட்ட புளியங்குடி நகராட்சித் தலைவரிடமே ரூ.1 கோடி சிக்கியது. தொகுதி முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் விநியோகிக்க வைத்திருந்தனர். இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இது ஆளும்கட்சியினருக்கு ஆதரவாகி, இருவர் இருவராகச் சென்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கக் காரணமாக அமைந்து விட்டது. அவற்றைத் தடுக்க 4 பேராகச் சென்றால் தடை உத்தரவு பாயும். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுப்பதாகக் கூறி வாகனச் சோதனை நடத்தி அப்பாவி வியாபாரிகளிடம் இருந்துதான் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையும் வாக்குப்பதிவுக்கு முந்தைய 4 நாள்களிலும் நடைபெறவில்லை. சோதனைச் சாவடிகளில் எந்த வாகனச் சோதனையும் நடைபெறவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த பாரபட்ச நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைக் கொண்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்டப் போராட்டம் குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றார் கிருஷ்ணசாமி. பேட்டியின்போது, திமுக எம்எல்ஏ மைதீன்கான் உடனிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக