இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் விதிமுறைகளை மாற்றவேண்டும். ஏனென்றால், மக்களிடம் போதிய அளவில் வாக்கு சதவீதம் பெற்ற பல தலைவர்களால் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற முடியவில்லை. சமீபத்தில் நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் 39 சதவீதம் வாக்குகள் பெற்ற பாரதிய ஜனதா, மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. 25 சதவீதம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஜே.டி.யு., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போய்விட்டது. தமிழகத்திலும் இதே நிலைதான். 43 சதவீதம் வாக்குகள் பெற்ற அதிமுக 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 19சதவீதம் வாக்கு மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், 25 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக கூட்டணிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. அதிக வாக்குகள் பெற்றும் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடுகிறது.
எனவே, இத்தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.அந்தந்த கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்திற்கு ஏற்ப, பிரதிநிதிகளை தேர்வுசெய்ய வேண்டும். இந்நடைமுறை நார்வே, ஸ்பெயின், டென்மார்க், ஸ்வீடன்,சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நேபாளம் உள்ளிட்ட 89 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இம்முறையை அமல்படுத்தும்போது, உண்மையான ஜனநாயகம் காக்கப்படும்.இது, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும்
இத்தேர்வு முறை வேண்டும் என திமுக 1999ம் ஆண்டே குரல் கொடுத்தது. இந்த எண்ணம் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோரை ஒன்றுசேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய தேர்தல் முறையில் மாற்றம் பற்றிய பிரசார நிறுவனம் என்ற அமைப்பு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் தலைவர் எம்.சி.ராஜூ இந்தியா முழுவதும் சென்று தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவர், இன்று கோவையில் என்னை சந்தித்து ஆதரவு கோரினார்.
நாங்கள் ஒன்றுசேர்ந்து, முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழக தலைவர்களை ஒன்றுதிரட்டி கருத்தரங்கு நடத்த உள்ளோம். மிக விரைவில் தேதி, இடம் அறிவிக்கப்படும். பின்னர், தேசம் தழுவிய இயக்கமாக இதை விரிவுபடுத்துவோம்.
இவ்வாறு டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக